Monday, July 14, 2014

திருக்குறள் - காதலர் இல்லாத மாலை

திருக்குறள் - காதலர் இல்லாத மாலை


காதல ரில்வழி மாலை கொலைக்களத் 
தேதிலர் போல வரும்.



 சீர் பிரித்த பின் 

காதலர் இல் வழி மாலை கொலைக் களத்து 
ஏதிலர் போல வரும் 

பொருள் 

காதலர் = காதலர் 

இல் வழி = இல்லதா நேரம் 

மாலை = மாலை நேரமானது 

கொலைக் களத்து = கொலை களத்தில் உள்ள  

ஏதிலர் போல வரும் = அன்பும் அருளும் அற்றவர்கள் போல வரும், ஏதிலார் என்ற சொல்லுக்கு, அருள் அற்றவர், அன்பு அன்றவர், அயலவர் என்று பொருள் .
 
 
காதலர் இல்லாத மாலை கொலைக் களத்தில் உள்ள கொலைஞரைப் போல வரும். 

அவ்வளவுதான் அர்த்தம். 

இருந்தாலும், வள்ளுவர் அப்படி சாதாரணமாக எழுதுபவர் அல்ல. உள்குத்து ஏதாவது இருக்கும். பார்க்கலாம்.


போர்க்களம் - கொலைக் களம்.

போர்க்களம் என்றால் இரண்டு எதிரிகள் இருப்பார்கள். ஒருவரோடு ஒருவர் சண்டை போடுவார்கள். இருவரிடமும் ஆயுதங்கள் இருக்கும்.

கொலைக் களம் என்றால் கைதிகளை கொலை செய்யும் இடம். இங்கே கைதி போராட முடியாது. உயிர் போகப் போகிறது என்று தெரியும். இருந்தும் ஒன்றும் செய்ய முடியாது.

போர்க்களத்தில் ஒருவரை ஒருவர் தாக்கும் போது ஒரு பகைமை இருக்கும்.

கொலைக் களத்தில் அப்படி இருக்காது. இருவரிடமும் பகைமை இல்லை.

போர்க் களத்தில் சண்டையிட முடியவில்லை என்றால் தப்பி ஓடி விடலாம். கொலைக் களத்தில் அது முடியாது.

காதலனைப் பிரிந்த காதலிக்கு மாலை நேரமானது அருள் அற்றவர்கள் இருக்கும்  கொலைக்  களம் போல  .
 
மாலை எல்லோருக்கும் ஒன்றாகத்தான் வருகிறது. இன்னும் சொல்லப் போனால், காதலனோடு இருக்கும் போதும் இதே மாலைதான் வந்தது. அப்போது இந்த மாலை இப்படி இரக்கமற்றதாகத் தெரியவில்லை. இப்போது என்னடா என்றால்  உயிரை எடுக்க வரும் கொலையாளி போல இருக்கிறது.


இதில் இன்னொரு சிறப்பு என்ன என்றால், தவறு செய்யாத ஒருவனை அரசன் கொல்லும்படி கட்டளை இடுகிறான். அந்த மனிதன் வெட்டப் படப் போகிறான். ஒரு தவறும் செய்யாதவன். அவன் நிலை எப்படி இருக்கும். தன்னை வெட்டப் போகும் அந்த கொலையாளியைப் பார்க்கிறான். அவன் முகத்தில் ஒரு துளி அருளும் இல்லை. நேற்றுவரை தனக்கு எதிரியாக இல்லாதவன் இன்று தன் உயிரை எடுக்கும் யமனாகி நிற்பதைப் பார்க்கிறான்.

அது போல, நேற்று வரை நட்பாக இருந்த இந்த மாலைப் பொழுது இன்று உயிரை எடுக்கும்  கூற்றாக வந்து நிற்கிறது.

கொலைக் களத்தில் இருக்கும் கொலையாளி.

கொல்லப் படப் போகும் கைதி.

காதலி

மாலை நேரம்

சிந்தித்துப் பாருங்கள்.




1 comment:

  1. அருமையான விளக்கம். இந்த விளக்கம் இல்லாவிட்டால் இதெல்லாம் படிப்பவர்க்குத் தோன்றியிருக்காது. நன்றி.

    ReplyDelete