இராமாயணம் - பெண்ணின் அன்பின் வலிமை
மனைவியின் பிரிவு ஒரு கணவனை எவ்வளவு பாதிக்கும் என்று கம்பர் இராமன் வாயிலாக காட்டுகிரார்.
இராமனுக்கும் சீதைக்கும் இடையே உள்ள அந்த பாசப் பிணைப்பை படம் பிடிக்கிறார் கவிச் சக்கரவர்த்தி.
இப்படியும் கூட அன்பு செய்ய முடியுமா என்று வியக்க வைக்கும் அன்பு. அப்படி ஒரு அன்பு கிடைக்காதா என்று எங்க வைக்கும் அன்பு. கணவன் மனைவி என்றால் இப்படி அன்யோன்யமாக இருக்க வேண்டும் என்று நினைக்கத் தூண்டும் அன்பு.
சீதையை பிரிந்து இராமனும், அவன் கூட இலக்குவனும் சவரி காட்டிய வழியில் ரிஷ்ய முக மலைக்கு செல்கிறார்கள்.
செல்லும் வழியில் கவந்தன் என்ற அரக்கன் வருகிறான். மிக பிரமாண்டமானவன். அவன் கையில் இருவரும் சிக்கிக் கொள்கிறார்கள். கை என்றால் ஏதோ நம் மாதிரி அல்ல அவன் கைகள். ஒரு காட்டை அப்படியே கைக்குள் .கொள்வான்.
அவன் கையில் சிக்கிக் கொண்ட இராமன் சொல்கிறான் இலக்குவனிடம் ..." சீதையை சென்று கொடுமை செய்யும் இராவணனின் ஊர் இங்குதான் இருக்கிறது போல் இருக்கிறது. விலங்குகள் எல்லாம் துன்பத்தில் அலறுகின்றன...இராவணனை அழித்து நம் துன்பம் தீர்க்கலாம் "
பாடல்
இளவலை நோக்கினன்
இராமன், 'ஏழையை
உளைவு செய் இராவணன்
உறையும் ஊரும், இவ்
அளவையது ஆகுதல் அறிதி;
ஐய! நம்
கிளர் பெருந் துயரமும்
கீண்டது ஆம்' என,
பொருள்
இளவலை நோக்கினன் = இலக்குவனை நோக்கினான்
இராமன் = இராமன்
ஏழையை = ஏழையான சீதையை
உளைவு செய் = துன்பம் செய்யும்
இராவணன் உறையும் ஊரும் = இராவணன் இருக்கும் இடமும்
இவ் அளவையது = இதுதான்
ஆகுதல் அறிதி; = ஆகும் என்று அறிந்து கொள்
ஐய! = ஐயனே
நம் = நம்முடைய
கிளர் பெருந் துயரமும் = கிளர்ந்து எழும் துன்பமும்
கீண்டது ஆம்' என, = மறைந்தது என்று
போக வேண்டியது ரிஷ்ய முக மலைக்கு. அவர்கள் மலையைப் பார்க்கவே இல்லை.அதற்குள், இராவணன் இருக்கும் இடம் இதுதான் என்று இராமன் நினைக்கிறான். அவ்வளவு மனம் குழம்பிக் கிடக்கிறான்.
அது மட்டும் அல்ல
இலக்குவனை - ஐயனே என்று அழைக்கிறான்.
பாவப்பட்ட சீதை என்ற அர்த்தத்தில் "ஏழையை உளைவு செய்" என்கிறான்.
எதைப் பார்த்தாலும் , சீதை இங்குதான் இருக்கிறாள் என்று நினைக்கிறான்.
பார்க்கும் இடமெல்லாம் நந்தலாலா நின்றன் பச்சை நிறம் தோன்றுதடா நந்தலாலா என்று பாரதி உருகியதைப் போல.
அரசு கிடையாது , கானகம் போ என்று சொன்னபோது தடுமாறாமல், அப்போதுதான் மலர்ந்த தாமரையை போல மலர்ந்து இருந்த இராமன், சீதையைப் பிரிந்த பின் புத்தி தடுமாறுகிறான்.
பெண்ணின் அன்பின் வலிமை அது. வலி அது.
சீதையை அசோக வனத்தில் கண்ட அனுமன் சொல்லுவான் "பித்து நின் பிரிவில் பிறந்த வேதனை எத்தனை உள அவை இன்னும் ஈட்டவோ " என்று.
இராமன் பித்து பிடித்துவனைப் போல இருந்தான் என்பது அனுமனின் வாக்குமூலம்.
காதலின் ஆழத்தை பிரிவின் வேதனையின் ஆழத்தை வைத்து அறியலாம்.
அனுபவித்தவர்களுக்குத் தெரியும்.
ஏழை என்றால் சீதை என்று ஏன் கொள்ள வேண்டும்?
ReplyDelete