Monday, July 7, 2014

கந்த புராணம் - மேன்மை கொள் சைவ நீதி விளங்குக

கந்த புராணம் - மேன்மை கொள் சைவ நீதி விளங்குக 


கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிச் செய்தது கந்த புராணம். அதில் வரும் வாழ்த்துப் பாடல் இது.


மழை எப்போதும் குறைவில்லாமல் பெய்ய வேண்டும். எல்லா வளங்களும் சுரக்க வேண்டும். மன்னன் முறையாக அரசு செலுத்த வேண்டும். உயிர்கள் எல்லாம் குறை இன்றி வாழ வேண்டும். வேதங்களில் சொல்லப் பட்ட அறங்கள் ஓங்க வேண்டும். தவ வேள்விகள் நிகழ வேண்டும். மேன்மையான சைவ நீதி உலகம் எல்லாம் விளங்க வேண்டும்.

எவ்வளவு ஒரு உயர்ந்த மனம்.

பாடல்


வான் முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் 
கோன் முறை அரசு செய்க குறைவு இலாது உயிர்கள் 
                                       வாழ்க 
நான் மறை அறங்கள் ஓங்க நல்தவம் வேள்வி மல்க 
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்.

பொருள்


வான் முகில் = வானில் உள்ள மேகங்கள்

வழாது பெய்க = குற்றம் இல்லாமல் பெய்க. அதிகமாகவும் பெய்யக் கூடாது. குறைவாகவும் பெய்யக் கூடாது. காலம் அல்லாத நேரத்தில் பெய்யக் கூடாது. வழுவாமல் பெய்க.

மலிவளம் சுரக்க = மலி என்ற சொல்லுக்கு பல பொருள் உண்டு.

மிகுதல். நிறைதல். நெருங்குதல். புணர்ச்சியின் மகிழ்தல். செருக்குதல். விம்முதல். பரத்தல். விரைதல்.

நிறைய வளங்கள் வேண்டும். அது எல்லோருக்கும் வேண்டும். அதுவும் விரைவாக வேண்டும். மிகுதியாக வேண்டும். வளங்களினால் பெருமை பட வேண்டும்.

மன்னன் கோன் முறை அரசு செய்க = மன்னன் நல்லாட்சி செய்ய வேண்டும். கொடுங்கோலனாக இருக்கக் கூடாது.


குறைவு இலாது உயிர்கள் வாழ்க = அனைத்து உயிர்களும் ஒரு குறைவும் இன்றி வாழ வேண்டும்.

நான் மறை அறங்கள் ஓங்க = நான்கு வேதங்களில் சொல்லப் பட்ட தர்மங்கள் ஓங்கி வளர வேண்டும்.

நல்தவம் வேள்வி மல்க = நல்ல தவமும், வேள்விகளும் நிறைய வேண்டும்

மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம் = சிறந்த சைவ நீதி உலகெல்லாம் பரவ வேண்டும்

அது என்ன சைவ நீதி ? அதை அறிந்து கொள்ள ஒரு ஆயுட்காலம் போதும் என்று தோன்றவில்லை. கடல் போல விரிந்து கிடக்கிறது அது. மிக மிக ஆழமாக சிந்தித்து இருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.


எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். மழை பெய்ய வேண்டும். வளங்கள் பெருக வேண்டும். நல்லாட்சி வேண்டும்...எவ்வளவு பெரிய மனம். எவ்வளவு உயர்ந்த மனம்.

இதை தினம் ஒரு முறை வாசியுங்கள்.

மனம் விரிந்து மகிழ்ச்சி பொங்குகிறதா இல்லையா என்று பாருங்கள்.




11 comments:

  1. அது என்ன சைவ நீதி? வைஷ்ணவ நீதி கூடாதா? புத்த நீதி கூடாதா? கிருத்துவ நீதி கூடாதா?

    ஆனாலும், முதல் மூன்று வரிகள் தூள்!

    ReplyDelete
    Replies
    1. @Dilip சைவ சித்தாந்த நூல்கள் பற்றிய ஆய்வு செய்தால் விளங்கும் சைவ நீதி என்ன என்று...

      Delete
    2. இயற்றியவர் சைவ நெறியை பின் பற்றுபவர்... ஆகவே அவர் அதைதான் உயர்த்தி நிற்பார்

      Delete
    3. 'மேன்மைகொள்' என்ற வார்த்தை மிகவும் நுட்பமாக நுண்ணறிய வேண்டியது.
      உலகத்தில் உள்ள அனைத்து நெறிகளினும், சைவ நெறியானது முடிந்த முடிவாக இருப்பதினாலும், மற்ற சமயங்களின் நெறி எங்கு முடிவடைந்தது விடுகிறதோ அங்கே இருந்துதான் சைவம் தொடங்குகிறது.
      இதனை சைவ நெறியினில் சென்று கற்று கொண்டால் விளங்க வரும்.

      Delete
    4. ராகவன் அவர்கள் கருத்து மிக அருமை. மற்ற சமயங்களை விட உயர்ந்ததாகவும் அதே நேரத்தில் மிக உயர்ந்த உண்மைக்கு மனிதனை அழைத்து செல்வதாகவும் விளங்குவதால் சைவ நெறி மேன்மை பொருந்தியது.

      Delete
    5. Saivam is above all that's the meaning mongoose mandaya

      Delete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. சைவம் என்பது மதம் அன்று. அது ஒரு மார்க்கம் அல்லது நெறி. அதனுடைய சிறப்பை சொல்ல இயலாது. தேனின் சுவை பருகினால் அன்றி தெரியாததை போல, பொதுவாக பேசுவதும் ஓப்பிடுவது தவறு

    ReplyDelete
  4. Replies
    1. அப்ப சைவ சமயம் என்பது என்ன

      Delete
    2. சைவ நீதி என்பது பொதுமறை திருக்குறள் பகவத் கீதை திருகுர்ஆன் பைபிள் விவிலியம் அனைத்தும் சொல்வது அன்பு அறம் உண்மை துய்மை எளிமை பசிப்பிணி அகற்றுவது எல்லா உயிர்க்கும் தம் உயிர் போல இறைவா அனைத்தும் நீ

      Delete