திருக்குறள் - பிரிவும், ஏக்கமும்
அது வானம் பார்த்த பூமி. மழை வந்தால் தான் வாழ்க்கை. விவசாயம் செய்ய முடியும். பயிர் பச்சை வளரும். கிணற்றில் நீர் சுரக்கும். மழை வரவில்லை என்றால் வாழ்கையே இல்லை.
இந்த வருடம் ஏனோ மழை இன்னும் வரவில்லை. கோடை சுட்டுப் பொசுக்கிக் கொண்டு இருக்கிறது.
செடிகளும் மரங்களும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருக்கின்றன.
மக்களும், ஆடு மாடுகளும் நீர் இன்றி தளர்ந்து போகிறார்கள்.
ஒரு சொட்டு மழை விழாதா என்று எல்லோரும் வானம் பார்த்து காத்து இருக்கிறார்கள்.
இன்னும் சில தினங்களில் மழை வராவிட்டால் நிறைய உயிர்கள் போய் விடும்.செடி கொடிகள் பட்டுப் போய் விடும். ஆடு மாடுகள் தாகத்தில் உயிர் விடும். மனிதர்கள் இடம் பெயர்ந்து போவார்கள்.
அந்த மழைக்கான ஏக்கம் புரிகிறதா ? அந்த தாகத்தின் ஆழம் புரிகிறதா உங்களுக்கு ?
அந்த தாகத்தை, ஏக்கத்தை காதலனின் பிரிவின் ஏக்கத்திற்கு உவமை சொல்கிறார் வள்ளுவர்.
பாடல்
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வா ரளிக்கும் மளி.
பொருள்
வாழ்வார்க்கு = மழையை நம்பி வாழ்வார்க்கு
வானம் பயந்தற்றால் = மழை எப்படி பயன் தருமோ அதுபோல
வீழ்வார்க்கு = காதலில் விழுந்தவர்களுக்கு
வீழ்வா ரளிக்கும் மளி = அவர்களின் துணை தரும் பயன்.
அளி என்ற சொல்லுக்கு பல அர்த்தம். அவை - அன்பு, அருள், வரவேற்பு, குளிர்ச்சி,குழைதல், மிகுந்த அன்பினால் நெகிழ்தல், அறக் கனிதல் (ரொம்பவும் கனிந்து போதல், pining என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்களே அது போல) , கலத்தல் , ஒன்று சேர்த்தல்
மழை வருவதற்கு மக்கள் என்ன செய்ய முடியும் - ஒன்றும் செய்ய முடியாது.எதிர் பார்க்கலாம், வேண்டலாம் வேறு ஒன்றும் செய்ய முடியாது. அது போல அவளோ அவனோ வருவதற்கு ஒன்றும் செய்ய முடியாது. காத்திருக்க வேண்டியதுதான்.
மழை வேண்டி காத்திருப்பது எவ்வளவு கடினம் - சூடு ஒருபுறம், தாகம் ஒரு புறம். நாக்கு வரளும் . கண் எரியும் . உடல் சோர்ந்து போகும்.
மழையே வராவிட்டால் - உயிர் போகும்.
மழை வந்து விட்டால் - எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.மண் வாசனை கிளம்பும். செடி கொடிகள் துளிர்க்கும். மொட்டு வரும். மலர் மலரும். சூடு தணியும். காற்று சுகமாக வீசும்.
இதை விட பிரிவின் தவிப்பை சொல்ல முடியுமா - ஏழே வார்த்தைகளில்
காதலில் விழுந்தவருக்குக் காதலில் விழுந்தவர் துணையாகக் கிடைத்தால், மழை தரும் இன்பம் போல! என்ன இனிமையான பொருள்.
ReplyDelete