ஐந்திணை ஐம்பது - கேட்க நினைத்தது ஒன்று உண்டு
காதலை சொல்வது ஒன்றும் அத்தனை எளிதான செயலாகத் தெரியவில்லை.
அன்றிலிருந்து இன்று வரை அது வயிற்றிக்குள் அமிலம் வார்க்கும் சங்கடமாகத்தான் இருந்து வந்து இருக்கிறது.
ஆசை ஒரு புறம், பயம் ஒரு புறம், காதலை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்ன செய்வது என்ற கவலை ஒரு புறம், சொல்லாமல் இருந்தால் பின் எப்படிதான் சம்மதம் பெறுவது என்ற சந்தேகம் ஒரு புறம்...
பட்டவர்களுக்குத்தான் தெரியும் அந்த அவஸ்தை.
சங்க காலத்தில் ஒரு நிகழ்வு.
அவளும், அவளின் தோழியும் பயிரை பறவைகள் அண்டாமல் காவல் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவன் அந்தப் பக்கம் வருகிறான். பார்த்த உடன் காதல். அல்லது பல நாள் பார்த்து வந்திருக்கலாம். இன்று எப்படியாவது பேசி விடுவது என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவளிடம் சென்று கேட்டே விடுகிறான்
"மான் இந்தப் பக்கம் வந்ததா" என்று.
சொல்ல நினைத்தது அவன் காதலை.
கேட்க்க நினைத்தது அவளின் சம்மதத்தை
சொல்லி நின்றது " மான் இந்த இந்தப் பக்கம் வந்ததா " என்று.
தோழிக்கு தெரியாதா என்ன ?
தலைவியிடம் சொல்கிறாள்....அவன் கேட்டதில் இன்னொன்றும் உண்டு என்று. மானை மட்டும் அல்ல....அவன் வேறு ஒன்றையும் கேட்டான் என்று புன்னகயுடன் கூறுகிறாள்...
பாடல்
புனைபூந் தழையல்குற் பொன்னன்னாய் ! சாரற்
றினைகாத் திருந்தேம்யா மாக - வினைவாய்த்து
மாவினவு வார்போல வந்தவர் நம்மாட்டுத்
தாம்வினவ லுற்றதொன் றுண்டு.
சீர் பிரித்த பின்
புனை பூந்தழை அல்குல் பொன் அன்னாய் ! சாரற்
தினை காத்திருந்தேம் யாமாக - வினை வாய்த்து
மா வினவுவார் போல வந்தவர் நம்மாட்டுத்
தாம் வினவலுற்றது ஒன்று உண்டு
பொருள்
புனை= புனைந்த , தொடுக்கப் பட்ட
பூ = பூ
தழை = தழைகள்
அல்குல் = இடுப்பினை உடைய
பொன் அன்னாய் ! = பொன் போன்றவளே
சாரற் = மாலைச் சாரலில்
தினை காத்திருந்தேம் = தினைப் புனங்களை காத்து இருந்தோம்
யாமாக = தானாக
வினை வாய்த்து = வேலை காரணமாக (என்ன வேலை ?)
மா = மான்
வினவுவார் போல = (இந்தப் பக்கம் வந்ததா என்று ) வினவுவார் போல
வந்தவர் = வந்த தலைவன்
நம்மாட்டுத் = நம்மிடம்
தாம் வினவலுற்றது = அவன் கேட்க நினைத்தது
ஒன்று உண்டு = ஒன்று உண்டு
No comments:
Post a Comment