திருக்குறள் - இல்வாழ்க்கை - பாகம் 2
(இதன் முதல் பகுதியை கீழே உள்ள தளத்தில் காணலாம்
)
பாடல்
இல்வாழ்வான் என்பான் இயல்பு உடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.
நல்லாற்றின் நின்ற துணை.
பொருள்
(please click the above link to continue reading)
இல்வாழ்வான் என்பான் = இல் வாழ்க்கையில் வாழ்பவன் என்பவன்
இயல்பு உடைய மூவர்க்கும் = இயல்பான மூன்று பேருக்கு
நல்லாற்றின் = அவர்கள் நல்ல வழியில் போக
நின்ற துணை = துணையாக
"இயல்பு உடைய மூவர்க்கும்" என்றால் யார் யார் அந்த மூவர்?
நாம் முன்பே சிந்தித்தபடி தனி மனித வாழ்கையை நம்மவர்கள் நான்கு கூறுகளாக பிரித்துக் கொள்கிறார்கள்.
பிரமச்சரியம்
இல்லறம்
வானப்ரஸ்தம்
துறவறம்
இது பற்றி முன்பு பலதடவை சிந்தித்து விட்டபடியால், மேலே செல்வோம்.
இதில் இல்லறத்தில் வாழ்பவன் ஏனைய மூவருக்கும் உதவி செய்ய வேண்டும் என்கிறார்.
யார் அந்த மூவர் ?
பிரம்மச்சாரி
வானப்ரஸ்தத்தில் இருப்பவன்
துறவறம் கொண்டவன்
இந்த மூவருக்கும் உதவி செய்வது ஒரு இல்லறத்தானுக்கு கடமை.
நீங்கள் இல்லறத்தில் ஈடு பட்டு இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் வீட்டுக்கு வந்து ஒரு ஏழை மாணவன் உதவி கேட்க்கிறான். பள்ளிக்கு பணம் கட்ட வேண்டும், பரிட்சைக்கு பணம் செலுத்த வேண்டும், புத்தகம் வாங்க வேண்டும் என்று உதவி கேட்கிறான்.
அவனுக்கு உதவி செய்வது என்பது உங்கள் சௌகரியத்தைப் பொறுத்தது அல்ல. அது உங்கள் கடமை. செய்தே ஆக வேண்டும்.
அதே போல ஒரு துறவி பசி என்று கேட்டால், அவனுக்கு உதவி செய்ய வேண்டியது இல்லறத்தானின் கடமை.
இதெல்லாம் கேட்க நல்லா இருக்கு....யாரை நம்ப முடிகிறது இந்த உலகில்...பரிட்சைக்கு பணம் என்று வாங்கிக் கொண்டு போய் தண்ணி அடித்து விட்டு வருவான், சாமியார் என்ற பெயரில் பணம் கேட்டு அதை தவறான வழியில் செலவு செய்வான்...எப்படி இவர்களை நம்பி உதவி செய்வது என்ற கேள்வி எழலாம்.
இந்தச் சிக்கல் இன்றல்ல, அன்றே இருந்திருக்க வேண்டும். வள்ளுவர் அதற்கும் விடை தருகிறார்.
"இயல்பு உடைய மூவர்க்கும்" - இந்த மூன்று நிலைகளும் (பிரமச்சாரி போன்ற நிலைகள்) அவர்களுக்கு இயல்பாக அமைந்து இருக்க வேண்டும் என்பது முதல் நிபந்தனை. அதாவது, நாற்பது வயது வரையிலும் திருமணம் செய்து கொள்ளாமல், நான் பிரம்மச்சாரி, எனக்கு மற்றவர்கள் உதவி செய்ய வேண்டும் என்றால் அது சரி அல்ல. கல்வி கற்கும் காலம் வரைதான் பிரம்மச்சாரி. அது இயல்பான நிலை. அதற்கு மேல் காதல் தோல்வி அது இது திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தால், அவனும் பிரம்மச்சாரிதான், ஆனால் அது இயல்பான ஒன்று அல்ல.
அது போல, துறவறம் என்பது இயல்பாக அமைய வேண்டும். மூத்த மடாதிபதி அடுத்தவரை தேர்ந்து எடுப்பது இயல்பான துறவறம் அல்ல.
பட்டினத்தார் போனாரே "காதற்ற ஊசியும் வாராது காண் நும் கடை வழிக்கே" என்ற வரியை படித்தவுடன், அது துறவறம்.
இயல்பான துறவிக்கு உதவி செய்ய வேண்டும். செயற்கை துறவிகளுக்கு அல்ல.
இன்றெலாம் துறந்தவனிடம் அதிகம் இருக்கிறது.
சரி, இந்த மூவருக்கும் உதவி செய்யலாம்....எவ்வளவு செய்வது? ஒரு கல்லூரி மாணவன் பைக் வாங்க வேண்டும் என்று உதவி கேட்கிறான், நண்பர்களோடு உல்லாசமாக உணவு உண்ண, கேளிகைகளில் ஈடுபட பணம் கேட்கிறான்...கொடுக்க வேண்டுமா?
சாமியார் கார் கேட்கிறார், சொத்து பத்துகளை கேட்கிறார்...கொடுக்க வேண்டுமா?
"நல்லாற்றின் நின்ற துணை"
என்கிறார் வள்ளுவர்.
அப்படி என்றால்,
ஆறு என்றால் வழி. நல் + ஆறு = நல்ல வழி.
நல்ல வழியில் அவர்கள் செல்ல உதவ வேண்டும்.
ஊதாரித்தனமாக செலவழிக்க, கூத்தடிக்க அல்ல.
இதற்கு அற்புதமாக பரிமேலழகர் உரை எழுதி இருக்கிறார்.
"இவர் இவ்வொழுக்க நெறிகளை முடியச் செல்லுமளவும், அச்செலவிற்குப் பசி நோய், குளிர் முதலியவற்றான் இடையூறுவாராமல், உண்டியும் மருந்தும் உறையுளும் முதலிய உதவி, அவ்வந்நெறிகளின் வழுவாமல் செலுத்துதலான் 'நல் ஆற்றின் நின்ற துணை' என்றார்"
"பசி, நோய், குளிர் முதலிய"...அதாவது மிகக் குறைந்த அளவு ....bare minimum என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே, அது போல.
பசி வந்தால் - உணவு கொடு
நோய் வந்தால் மருந்து கொடு
குளிர் வந்தால் - நல்ல உடை கொடு
அது போல குறைந்தபட்ச உதவியை செய்யச் சொல்கிறார். பைக் வாங்கவும், சினிமாவுக்குப் போகவும் உதவி செய்யச் சொல்லவில்லை.
அதுவும் எதற்காக ?
"அவ்வந்நெறிகளின் வழுவாமல் செலுத்துதலான்"
அவர்கள் அந்த ஒழுக்கங்களை தவறில்லாமல் கடைபிடிக்க உதவ வேண்டும்.
யாருக்குக் கொடுக்க வேண்டும், எவ்வளவு கொடுக்க வேண்டும், எதற்கு கொடுக்க வேண்டும், ஏன் கொடுக்க வேண்டும் என்று அனைத்தையும் ஒரு குறளுக்குள் அடக்கி விடுகிறார்.
சரி, இப்போது குறளை விட்டு வெளியே வருவோம்.
இன்று student loan என்பது எவ்வளவு பெரிய சுமையாக இளைய சமுதாயத்தின் மேல் அழுத்திக் கொண்டு இருக்கிறது. அமெரிக்காவில், இந்த கடனின் சுமை கிட்டத்தட்ட 1.7 ட்ரில்லியன் டாலர் அளவு.
இந்தியாவில் எத்தனையோ அறிவுள்ள குழந்தைகள் பணம் இல்லாத காரணத்தால் மேலே படிக்க முடியாமல், படிப்பை விட்டு விட்டு ஏதோ சில்லறை வேலை செய்யப் போகின்றன. அதில் எத்தனை மருத்துவ மேதைகள் இருப்பார்களோ, எத்தனை துன்பங்களை அவர்கள் தீர்த்து இருப்பார்களோ தெரியாது.
இந்த சிக்கலுக்கு அன்றே விடை கண்டவர்கள் நம்மவர்கள்.
வயதான காலம் என்பது எவ்வளவு கொடுமையான காலம். முதியோர் இல்லங்கள் எத்தனை வந்து விட்டன. காரணம் என்ன?
இதற்கும் விடை இந்த குறளுக்குள் இருக்கிறது.
ஒரு பக்கம் இளைஞர்கள் , மறு புறம் முதியவர்கள் இருவரையும் அணைத்துக் கொண்டு செல்லும் பொறுப்பு இல்லறத்தில் இருப்பவனுக்கு இருக்கிறது.
இல்லற தர்மத்தின் முதல் மூன்று பொறுப்புகளை சொல்லி விட்டார்.
இதுக்கு மேல என்ன இருக்கும்? இன்னும் எட்டு இருக்கா? அப்படி என்னதான் இருக்கும்?
அருமை ....நல்ல உதாரணங்கள் ...
ReplyDeleteஇவ்விளக்கம் நான் சொன்னாலும் குட்டிப்பிள்ளைகள் ஐயா சொல்லட்டும் என்கிறார்கள் ...
அதுவே சிறப்பு ..வணக்கம்.