Tuesday, July 6, 2021

சிலப்பதிகாரம் - வாயிலோயே வாயிலோயே

 சிலப்பதிகாரம் - வாயிலோயே வாயிலோயே


இன்று ஒரு முதல் மந்திரியையோ, பிரதம மந்திரியையோ பார்க்க வேண்டும் என்றால் எவ்வளவு கடினம். 


அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும், காத்துக் கிடக்க வேண்டும், அனுமதி கிடைக்குமோ கிடைக்காதோ தெரியாது. 


ஐந்து வருடம் ஆளும் அனுமதி பெற்ற இவர்கள் பாடே இப்படி என்றால் அந்தக் காலத்தில், ஒரு அரசனை சென்று காண்பது என்றால் எளிதான காரியமா?


சூரியனிடம் கேட்கிறாள் "என் கணவன் கள்வனா" என்று. சூரியனும் இல்லை என்று சொல்லி விட்டான். 


புறப்படுகிறாள் கண்ணகி. 


நடுவில் உள்ள கொஞ்சம் பக்கத்தை விட்டுவிட்டு அவள் பின் செல்வோம். 


அரண்மனை வாசலை அடைகிறாள். 


"வாயில் காப்போனே, வாயில் காப்போனே, அறிவு கொஞ்சம் கூட இல்லாமல், அறம் தப்பி, அரச முறை தப்பிய அரசனின் வாயில் காப்போனே, கையில் முத்து உள்ள ஒரு சிலம்பைஏந்திக் கொண்டு கணவனை இழந்த ஒரு பெண் வாயிலில் நிற்கிறாள் என்று போய் உன் அரசனிடம் சொல்" என்று ஆணையிடுகிறாள். 


பாடல் 


வாயி லோயே வாயி லோயே

அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து

இறைமுறை பிழைத்தோன் வாயி லோயே

இணையரிச் சிலம்பொன் றேந்திய கையள்

கணவனை யிழந்தாள் கடையகத் தாளென்று

அறிவிப் பாயே அறிவிப் பாயே, என


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/07/blog-post_6.html


(please click the above link to continue reading)



வாயி லோயே வாயி லோயே = வாயில் காப்பவனே வாயில் காப்பவனே 


அறிவறை போகிய = அறிவு முற்றும் இழந்த 


பொறியறு நெஞ்சத்து = அறம் இல்லாத நெஞ்சினோடு 


இறைமுறை பிழைத்தோன் = அரச தர்மம் பிழைத்தவன் 


வாயி லோயே = வாயில் காப்பவனே 


இணை = இணையான இரண்டில் ஒன்றை 


யரிச் சிலம்பொன் றேந்திய கையள் = முத்துகளை உடைய சிலம்பு ஒன்றை ஏந்திய கையோடு 


கணவனை யிழந்தாள்= கணவனை இழந்த அவள் 


கடையகத் தாளென்று = வாசலில் நிற்கிறாள் என்று சொல் 


என்கிறாள். 


வாயிலோயே வாயிலோயே என்று இரண்டு தரம் ஏன் அழைக்க வேண்டும் ?


அரசனுக்கே அறிவு இல்லை. அந்த அரசன் மாளிகை காவல் காரனுக்கு என்ன அறிவு இருக்கப் போகிறது என்று உணர்த்த அவனுக்கு இரண்டு தரம் சொல்கிறாள். எல்லாவற்றையும் இரண்டு இரண்டு தரம் சொல்கிறாள். 


சிலம்பை காலில் அணிவார்கள். இவளோ கையில் கொண்டு வந்திருக்கிறாள். அது அந்தக் காவல் காரனுக்கும் தெரியும். எங்கே அந்த மடையன் சொல்லமால் விட்டு விடுவானோ என்று நினைத்து, கையில் சிலம்போடு ஒரு பெண் வந்து இருக்கிறாள் என்று சொல் என்கிறாள்.  காலில் மற்றொரு சிலம்பு இல்லை. ஒரு சிலம்பு கையில் இருக்கிறது. 


காவலனிடம் அரசனைப் பற்றி கூறுக்கிறாள் ...."அறிவில்லாதவன், அறம் இல்லாதவன், அரச நீதி தப்பியவன்" என்று அடுக்குகிறாள். அரச குற்றமாவது மண்ணாவது என்று எல்லாவற்றையும் காலில் போட்டு மிதிக்கிறாள். 


ஒரு பெண்ணிடம் இவ்வளவு வசை வாங்கிய ஒரே அரசன் அந்தப் பாண்டியனாகத் தான் இருக்கும். 


அந்தக் காவலனுக்கு எப்படி இருந்திருக்கும் ?






3 comments:

  1. கண்ணகி கையில் இருந்தது மாணிக்கப் பரல் கொண்ட சிலம்பு. முத்துப் பரல்
    அல்ல

    ReplyDelete
  2. என்ன ஒரு உணர்ச்சி பொங்கும் பாடல்! இந்த blog இல்லாவிட்டால் இதை நான் நிச்சயமாகப் படித்திருக்க மாட்டேன். நன்றி.

    ReplyDelete