சிலப்பதிகாரம் - உண்டு கொல்?
தன் கணவன் கள்வன் அல்ல என்று அறிந்த பின், கண்ணகி எழுந்து நடக்கிறாள். அவள் கோபம் கொப்பளிக்கிறது.
"இதெல்லாம் ஒரு ஊரா? கற்புள்ள பெண்களும் இந்த ஊரில் இருக்கிறார்களா? சான்றோர்களும் இந்த ஊரில் இருக்கிறார்களா? தெய்வம் என்று ஒன்று இருக்கிறதா"' என்று கோபத்தில் கேட்கிறாள். அவளின் ஏக்கம், கோபம், வார்த்தைகளில் வெடிக்கிறது. எல்லாம் இரண்டு இரண்டு தடவை கேட்கிறாள்.
"இருக்கா, இருக்கா" என்று சந்தேகம், இருந்தும் இப்படி நடக்குமா என்ற வெறுப்பு, ஆயாசம், தனக்கு இழைக்கப்பட்ட அநீதி எல்லாம் அந்த கேள்விகளில் தொக்கி நிற்கிறது.
பாடல்
பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல்
கொண்ட கொழுந ருறுகுறை தாங்குறூஉம்
பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல்
சான்றோரும் உண்டுகொல்? சான்றோரும் உண்டுகொல்?
தெய்வமும் உண்டுகொல்? தெய்வமும் உண்டுகொல்?
வை வாளின் தப்பிய மன்னவன் கூடலில்
தெய்வமும் உண்டுகொல்? தெய்வமும் உண்டுகொல்?’
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2021/07/blog-post_19.html
(please click the above link to continue reading)
பெண்டிரும் உண்டுகொல் = பெண்களும் இருக்கிறார்களா?
பெண்டிரும் உண்டுகொல் = பெண்களும் இருக்கிறார்களா?
கொண்ட = கட்டிய
கொழுந ருறுகுறை = கொழுநருக்கு உறு குறை = கணவனுக்கு வந்த பெரிய குறையினை
தாங்குறூஉம் = பொறுத்துக் கொள்ளும், சகித்துக் கொள்ளும்
பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல் = பெண்களும் இருக்கிறார்களா? இருக்கிறார்களா?
சான்றோரும் உண்டுகொல்? சான்றோரும் உண்டுகொல்? = கற்று அறிந்து, ஒழுக்கத்தில் சிறந்த சான்றோரும் இருக்கிறார்களா?
தெய்வமும் உண்டுகொல்? தெய்வமும் உண்டுகொல்? = தெய்வம் என்று ஒன்று இருக்கிறதா?
வை வாளின் = கூரிய வாள் அறம்
தப்பிய = தவறிய
மன்னவன் கூடலில் = பாண்டிய மன்னனின் நாட்டில்
தெய்வமும் உண்டுகொல்? தெய்வமும் உண்டுகொல் ?’ = தெய்வம் என்று ஒன்று இருக்கிறதா?
என்ன சொல்ல வருகிறார் இளங்கோ அடிகள்?
ஒரு நாட்டில் அறம் நிலைக்க வேண்டும் என்றால், அது கற்புடைய பெண்கள் இருந்தால், சான்றோர் இருந்தால் தான் நடக்கும்.
கற்புடைய பெண்கள் இல்லை என்றால், அறம் நிலைக்காது.
இந்த பாண்டிய நாட்டில் அறம் தவறி விட்டது. அப்படி என்றால் இந்த நாட்டில் கற்புடைய பெண்கள் இல்லாமலா போய் விட்டார்கள்? சான்றோர் என்று யாரும் இல்லையா? தெய்வம் கூடவா இல்லாமல் போய் விட்டது?
இவ்வளவு பேர் இருந்துமா அறம் தவறி விட்டது? அப்படி என்றால் யார் தான் இந்த அறத்தை தாங்கிப் பிடிப்பது? என்று கேட்கிறாள்.
அறம் பிழைக்க வேண்டும் என்றால், சான்றோர் வேண்டும்.
சான்றோர் இருந்தும், சில சமயம் அவர்கள் வாய் மூடி மௌனமாக இருந்து விடுகிறார்கள். அவர்களின் அந்த மௌனம் எவ்வளவு பெரிய அழிவுக்கு வழி கோலுகிறது! நாடே அழிந்தது.
கௌரவர் அவையில் சான்றோர் மெளனமாக இருந்ததால் மாபாரத போர் வந்தது. எவ்வளவு அழிவு.
அறத்தைத் தாங்கிப் பிடிக்க வேண்டும். இல்லை என்றால் பேரழிவு திண்ணம்.
எவள் சேலையை எவன் பிடித்து இழுத்தால் எனக்கு என்ன என்று இருந்தால், குலம் வேர் அறுபட்டு போகும்.
கதை ஒரு பக்கம் இருக்க, நீதியை நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
அப்படி உணர்ச்சி ததும்ப எழுதியிருக்கிறார்!
ReplyDelete