திருக்குறள் - ஓம்பல் தலை - பாகம் 3
பாடல்
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை
பொருள்
தென்புலத்தார் = தென் திசையை சேர்ந்தவர்கள்
தெய்வம் = தெய்வம்
விருந்தொக்கல் = விருந்து , ஒக்கல்
தானென்றாங்கு = தான் என்று ஆங்கு
ஐம்புலத்தாறு = ஐந்து இடத்துக்கும் செய்யும் அற நெறிகளை விடாமல்
ஓம்பல் தலை = கைக் கொள்ளுதல், சிறந்த அறமாகும்
https://interestingtamilpoems.blogspot.com/2021/07/3.html
(pl click the above link to continue reading)
இந்தக் குறளுக்கு விளக்கம் எழுதிய பின், "இதற்கு மேல் என்ன இருக்கிறது" என்று எழுதியிருந்தேன்.
இருக்கிறது.
இரண்டு விடயம் விடுபட்டு போய் விட்டது.
"தானென்றாங்கு " என்று குறளில் வருகிறது.
தனக்குத் தானே ஒன்றைச் செய்வது அறமாகுமா?
நான் இன்று ஒரு பெரிய அறம் செய்தேன்...அந்த உணவு விடுதியில் சென்று மூக்கு முட்ட சாப்பிட்டேன்...என்றால் அது அறமா?
பின் ஏன் வள்ளுவர் "தான்" என்பதையும் இல்லறக் கடமைகளில் சேர்கிறார்?
பரிமேலழகர் இல்லாவிட்டால் இதற்கு அர்த்தம் தெரியாமலேயே போய் இருக்கும். அல்லது தவறான அர்த்தம் புரிந்து கொண்டிருப்போம். வள்ளுவரே சொல்லி விட்டார், நமக்கு நாம் செய்வதும் அறம் தான், எனவே நான் எனக்கும் என் குடும்பத்துக்கும் நிறைய அறம் செய்யப் போகிறேன் என்று ஒரு கும்பல் கிளம்பி இருக்கும்.
பரிமேலழகர் உரை செய்கிறார்....
"எல்லா அறங்களும் தான் உளனாய் நின்று செய்ய வேண்டுதலின் தன்னை ஓம்பலும் அறனாயிற்று."
மற்ற அறங்கள் எல்லாம் செய்ய வேண்டும் என்றால், நான் இருந்தால்தானே செய்ய முடியும். நான் என்னைச் சரியாக கவனிக்கமால், சாப்பிடாமல், உறங்காமல், நோய் வந்தால் கவனிக்காமல் விட்டு விட்டால், நான் தளர்ந்து போவேன், வேலை செய்ய முடியாமல் முடங்கிப் போவேன், அல்லது இறந்து போவேன். பின் எப்படி அறம் செய்ய முடியும்?
அறங்களைச் செய்ய நான் நன்றாக இருக்க வேண்டும் அல்லவா? எனவே, அதற்காக நீ உன்னை காத்துக் கொள் என்கிறார். சந்தோஷம் அனுபவிக்க அல்ல, மற்ற அறங்களைச் செய்ய வேண்டி இருப்பதால், உன்னை நீ காத்துக் கொள் என்கிறார்.
இது விட்டுப் போன ஒரு விடயம்.
இன்னொன்று, இந்த ஐந்து பேருக்கும் அறம் செய்ய வேண்டும் என்றால் எப்படி செய்வது, எவ்வளவு செய்வது. எப்பவாவவது, மனம் தோன்றிய படி செய்யலாமா?
நன் இன்றைக்கு சிரார்த்தம் செய்யப் போகிறேன், எனவே வீட்டுக்கு வந்த விருந்தாளியை விரட்டி விடலாமா?
இல்லை. இந்த ஐந்து பேருக்கும் செய்ய வேண்டிய கடமையாக வருமானத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி வை என்கிறார்.
வீட்டுச் செலவுக்கு இவ்வளவு (தான்), தெய்வ காரியங்களுக்கு இவ்வளவு, விருந்தினர் வந்தால் போனால் அவர்களை உபசரிக்க இவ்வளவு என்று எல்லாவற்றிற்கும் பங்கு வை என்கிறார்.
அதோடு நின்றால் பரவாயில்லை.
ஒரு அரசாங்கம் எவ்வளவு வரி போடலாம் என்றும் இதற்குள் சொல்லிவிட்டுப் போகிறார்.
இந்த ஐந்து பேருக்கு ஒரு கூறு. ஆறாவதாக அரசன் அல்லது அரசாங்கம். வரி செலுத்த வேண்டும் அல்லவா? இல்லறத்தான் வரி கட்டாமல் இருக்க முடியுமா? வள்ளுவர் சொல்லவில்லை, எனவே வரி கட்ட மாட்டேன் என்று சொல்ல முடியுமா?
மறவர்களுக்கு செய்ய வேண்டியதை செய்யாமல் கூட விடலாம். வரி கட்டா விட்டால், அரசன் அல்லது அரசாங்கம் வலிந்து கொள்ளும். சொத்தை பறிமுதல் செய்யும். கட்டாதவர்களை சிறையில் போடும். எனவே, நீ தராவிட்டாலும் அரசன் எடுத்துக் கொள்வான் என்பதால் அதை சொல்லாமல் விட்டார் என்கிறார் பரிமேலழகர்.
மேலும், வருமானத்தில் ஆறில் ஒரு பங்கு அரசனுக்கு வரியாகச் செலுத்த வேண்டும் என்கிறார்.
இவர்கள் ஐவருக்கும் ஐந்து கூறு. அரசனுக்கு ஆறாவது கூறு. அதாவது, 1/6 அல்லது 16% வரி என்கிறார்.
"அரசனுக்கு இறைப்பொருள் ஆறில் ஒன்றாயிற்று, இவ்வைம்புலத்திற்கும் ஐந்து கூறு வேண்டுதலான் என்பதறிக"
என்பது பர்மேலழகர் உரை.
வருமானத்தை ஆறு பிரிவாக பிரித்துக் கொள். ஆறில் ஒரு பகுதி அரசனுக்கு வரி. மீதி ஆறில் ஐந்து பகுதி மேற் சொன்ன ஐந்து பேருக்கும் என்று பிரித்துக் கொள் என்கிறார்.
வீடு, நாடு என்று எவ்வளவு பொறுப்புணர்வோடு இல்லற கடமைகளை சொல்லித் தருகிறார்.
படிக்க படிக்க, இத்தனை நாள் இதை படிக்காமல் இருந்து விட்டோமே என்ற குற்ற உணர்வுதான் மிஞ்சுகிறது.
(இதன் முதல் பாகத்தை கீழே உள்ள வலை தளத்தில் காணலாம்.
https://interestingtamilpoems.blogspot.com/2021/07/1_15.html )
(இதன் இரண்டாம் பாகத்தை கீழே உள்ள வலை தளத்தில் காணலாம்.
https://interestingtamilpoems.blogspot.com/2021/07/2_17.html
Tamil Education News
ReplyDelete