Sunday, July 4, 2021

சிலப்பதிகாரம் - ஒள் எரி உண்ணும் இவ் ஊர்

சிலப்பதிகாரம் - ஒள் எரி உண்ணும் இவ் ஊர் 


"என் கணவன் கள்வனா ?" என்று சூரியனைப் பார்த்து கேட்கிறாள் கண்ணகி. 


கற்புடைய பெண்கள் கேட்டால், அவர்கள் ஆணையிட்டால் இயற்கையும் அடங்கும், பஞ்ச பூதங்களும் அடங்கும் என்று நம் இலக்கியங்களில் பல இடங்களில் வருகிறது. 


அவள் அப்படி கேட்டவுடன் , வானில் இருந்து ஒரு அசரீரி வருகிறது 


"உன் கணவன் கள்வன் அல்லன். உன் கணவனை கொன்று அறம் தவறிய இந்த ஊரை தீ உண்ணும்" 


என்கிறது. 


பாடல்  


கள்வனோ அல்லன் கருங்கயற்கண் மாதராய் 

ஒள்ளெரி யுண்ணுமிவ் வூரென்ற தொருகுரல்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/07/blog-post_4.html


(please click the above link to continue reading)



கள்வனோ அல்லன் = கள்வன் அல்லன் 


கருங்கயற்கண் = கரிய மீனைப் போன்ற கண்களை உடைய 


மாதராய்  = பெண்ணே 


ஒள்ளெரி = ஒளி வீசும் எரி (தீ) 


யுண்ணுமிவ் வூரென்ற தொருகுரல். = உண்ணும் இந்த ஊரை என்றதொரு குரல்.



இது முக்கியமான இடம். 


பாண்டிய மன்னன் தவறாக தீர்ப்புச் சொல்ல அதனால் கோவலன் மாண்டான். 


அது பாண்டிய மன்னனுக்கும், கண்ணகிக்கும் இடையே உள்ள வழக்கு. ஊர் என்ன செய்யும்? அதற்கு எதற்கு ஊரை எரிப்பானேன். 


கண்ணகி செய்தது சரி என்றால், நாளை யார் யாருக்கெல்லாம் அநீதி நடக்கிறதோ, அவர்கள் எல்லாம் ஊரை எரிக்க புறப்பட்டு விடுவார்கள். கண்ணகியே செய்தாள், அது தமிழர் பண்பாடு என்று. 


அது ஒரு புறம் இருக்க, இந்தப் பழங்கதை எல்லாம் எதுக்கு நாம் படிக்க வேண்டும். அந்த நேரத்துக்கு வேறு ஏதாவது உருப்படியாக படிக்கக் கூடாதா  என்றும்  ஒரு கேள்வி எழலாம். 


எல்லாவற்றிற்கும் பதில் இருக்கிறது. 


முதலாவது, ஒரு தலைவன் தவறு செய்தால் அது அவனை மட்டும் பாதிக்காது. அவன் நிர்வகிக்கும் நிறுவனத்தைப் பாதிக்கும். அரசன் என்றால் நாட்டை, ஒரு நிறுவனத்தின் தலைவர் (CEO) என்றால், அந்த நிறுவனத்தை, ஒரு குடும்பத் தலைவன் என்றால் அந்தக் குடும்பத்தை அது பாதிக்கும்.  


கணவன் இலஞ்சம் வாங்கி சிறை சென்றால், அது மனைவியை, பிள்ளைகளை, அண்ணன் தம்பியை, பெற்றோரை பாதிக்காதா?  


பொறுப்பில் இருப்பவர்கள் தவறு செய்யக் கூடாது. தவறு செய்ய அஞ்ச வேண்டும். 


பாண்டிய மன்னன் வேண்டும் என்றே செய்த குற்றம் இல்லை. தெரியாமல் நிகழ்ந்த குற்றம். இருந்தும், அவன் நாடே அந்த குற்றத்துக்கு பலி ஆனது. 


அது மன்னனுக்கு மட்டும் அல்ல, குடும்பத் தலைவன்,குடும்பத் தலைவி என்று எல்லோருக்கும் பொருந்தும். 


இரண்டாவது, இந்த அறத்தை சொல்வது இந்த இலக்கியம். இது தெரிய வேண்டுமா இல்லையா. நான் தவறு செய்தால் அது என்னைத் தானே பாதிக்கும். பரவாயில்லை, என் பெண்டாட்டி பிள்ளைகள் நல்லா இருப்பார்கள் என்றால் நான் தவறு செய்கிறேன் என்று நினைக்கக் கூடாது. 


ஈன்றாள் பசிக் காண்பானாயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை. 


மூன்றாவது, கண்ணகி எப்படி ஊரை எரிக்கலாம் என்ற கேள்விக்கு விடை, அவள் எரிக்கவில்லை. மன்னன் அறம் தவறியதால் இந்த ஊரை தீ தின்னும் என்று அசரீரி கூறுகிறது. ஊர் எரியப் போகிறது என்பது முன்பே முடிவாகிவிட்டது. எப்போது பாண்டியன் தவறு செய்தானோ, அப்போதே அந்த ஊரின் அழிவு முடிவாகிவிட்டது.  


கண்ணகி எரித்தால் என்பது ஒரு குறியீடு. ஊர் எரியப் போகிறது என்று முன்னமேயே முடிவாகிவிட்ட ஒன்று. 


நான்காவது, அறத்துக்கு, நீதிக்கு, எந்த அளவுக்கு நம் முன்னவர்கள் முக்கியத்வம் கொடுத்து இருக்கிறார்கள் என்று நாம் புரிந்து கொள்ள முடிகிறது. சரி, ஏதோ தவறு நிகழ்ந்து விட்டது. அதற்கு உரிய நட்ட ஈடை கொடுத்து காரியத்தை முடிப்போம் என்று நினைக்கவில்லை. 


பாண்டியன் தன் உயிரை கொடுத்தது மட்டும் அல்ல, அந்த நகரமே அந்த அநீதிக்கு பதில் சொல்ல வேண்டி இருந்தது. 


ஏதேனும் தவறு செய்யுமுன், இதை நினைத்தால் தவறு நிகழுமா? 



1 comment:

  1. சிலம்பு இனிக்கிறது ....
    குறள் படிக்க காத்துள்ளோமண்ணா ....

    ReplyDelete