Saturday, July 31, 2021

திருக்குறள் - வாழ்வாங்கு வாழ்பவன்

 திருக்குறள் - வாழ்வாங்கு வாழ்பவன்


இல்வாழ்க்கை என்ற அதிகாரத்தின் இறுதிப் பகுதிக்கு வந்து விட்டோம். 


பதினொரு கடமைகள், அதுவும் அற வழியில் ஈட்டிய பொருளில்,  பகிர்ந்து உண்டு வாழ்ந்தால் என்ன கிடைக்கப் போகிறது? 


இதெல்லாம் எதற்குச் செய்ய வேண்டும். வள்ளுவர் சொல்கிறார், இதெல்லாம் அறம் என்பதற்காக செய்ய முடியுமா? அப்படியே செய்தாலும் நமக்கு கிடைக்கும் பலன் என்ன? 


இல்வாழ்க்கை சிறந்தது என்றார், மற்ற வழியில் போய் பெறுவது ஒன்றும் இல்லை என்றார், முயல்வாருள் எல்லாம் தலை என்றார், அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை என்றும் கூறினார். அதெல்லாம் சரி. நமக்கு என்ன பலன்?


அதைப் பற்றி இங்கே கூறுகிறார். 


மேலே சொன்ன அனைத்தும் இந்த உலகில் இல்லறத்தில் இருப்பவனின் சிறப்பு. பெருமை. இவை பற்றி பேசிற்று. 


பலன் என்றால் இரண்டு விதமான பலன்கள் இருக்கும். 


ஒன்று இம்மைப் பலன். மற்றது, மறுமைப் பலன். 


அந்த இம்மை மறுமை பலன்களை பற்றி இங்கே கூறுகிறார். 


பாடல் 


வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/07/blog-post_31.html


(Please click the above link to continue reading)



வையத்துள் = உலகில் 


வாழ்வாங்கு = வாழ்கின்ற முறைப்படி 


வாழ்பவன் = வாழ்பவன் 


வானுறையும் = வானில் இருக்கும் 


தெய்வத்துள் = தெய்வங்களில் ஒன்றாக 


வைக்கப் படும். = வைத்துப் போற்றப் படுவான் 


அதாவது, இல்லற முறைப்படி வாழ்பவன் இந்த உலகிலேயே தெய்வத்துக்கு ஒப்பாக போற்றப் படுவான் என்று கூறுகிறார். 


அப்படியா? பரவாயில்லையே...நாமும் கடவுள் மாதிரி ஆகி விடுவோமா என்று நினைக்கலாம். பரிமேலழகர் இல்லை என்றால் இந்த நுட்பம் எல்லாம் புரியாது. 


உரைக்கு போவதற்கு முன்...


இந்த உலகில் இன்பமும் துன்பமும் விரவிக் கிடப்பதை நாம் காண்கிறோம். அனுபவித்துக் கொண்டும் இருக்கிறோம். 


இது இந்த உலகில். 


இன்பம் மட்டுமே உள்ள ஒரு உலகம் இருக்குமா? துன்பம் மட்டுமே உள்ள ஒரு உலகம் இருக்குமா? 


இருக்கிறது என்று நம்சமயங்களும், இலக்கியங்களும் சொல்கின்றன. 


இன்பம் மட்டுமே உள்ள ஒரு உலகத்துக்குப் பெயர் சுவர்க்கம். 


துன்பம் மட்டுமே உள்ள ஒரு உலகத்துக்குப் பெயர் நரகம். 


நாம் செய்யும் நல்வினை தீவினைகளுக்கு ஏற்ப நாம் மறு பிறவியில் சுவர்கத்திலோ, நரகத்திலோ அல்லது இந்த பூமியிலோ வந்து பிறப்போம். 


இந்த சுவர்கத்தில் உள்ளவர்கள் தேவர்கள் என அழைக்கப் படுகிறார்கள். 


அது நிரந்தரம் அல்ல. வினைப் பயன் முடிந்தவுடன் மீண்டும் வேறு எங்காவது வந்து பிறக்கத்தான் வேண்டும். 


மறு பிறவியே இல்லாத ஒரு இடம் என்றால் அது இறைவனின் திருவடிதான். அதைத்தான் மோட்சம், வீடு பேறு என்கிறார்கள். 


சுவர்க்கம் வேறு, வீடு பேறு என்பது வேறு. 


வீடு பேறு பெற்று விட்டால் பின் மறு பிறவி கிடையாது. 


சுவர்கத்தில் இந்திரனுக்கும், பிரமனுக்கும்,  விஷ்ணுவுக்கும், உருத்திரனுக்கும் , எமனுக்கும் ஒரு காலக் கணக்கு உண்டு. அந்தக் காலம் முடிந்தால் அவர்கள் போய் விடுவார்கள். அடுத்த ஆள் வருவார். 


இறைவன் என்பவன் இவற்றை எல்லாம் கடந்தவன்.


"மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார்" 


என்று கேட்பார் மணிவாசகர். 


இறைவன், அல்லது பரம் பொருள் என்பது மும்மூர்த்திகளுக்கும் தெரியாத ஒன்று. 

இப்போது குறளுக்கு வருவோம். 


வாழ்வாங்கு வாழ்பவன், வானுறையும் தேவர்களில் ஒருவனாக வைக்கப் படுவான் என்று உரை எழுதுகிறார் பரிமேலழகர். 


தெய்வம் என்பதை தேவர் என்று குறிப்பிடுகிறார். 


தேவர்களுக்கு இறைத் தொழிலில் ஒரு பங்கு உண்டு. அக்னி, வாயு, வருணன், இந்திரன், என்று பல தேவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்று ஒரு தொழில் இருக்கும். 


அது போல, இல்லற தர்மத்தில் இருப்பவன், மற்ற உயிர்களை காக்கும் பணி செய்கிறான். அது ஒரு இறைச் செயல். படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழிலில் காத்தலும் ஒரு இறைத் தொழில். அதைச் செய்வதால், அவன் வான் உறையும் தேவர்களில் ஒருவனாக வைக்கப் படுவான், வைத்து போற்றப் படுவான் என்கிறார். 


இங்கேயே போற்றப் படுவதால், இம்மை பலன் கிடைத்து விடுகிறது. 


இப்படி சிறப்பாக வாழ்ந்ததால் கட்டாயம் சுவர்க்கம் போவான் என்பதால் மறுமை பயனும் கூறப் பட்டது. 


இப்படி அனைத்து இன்பங்களையும் தந்து, போதாக் குறைக்கு இம்மை மறுமை பலன்களையும் தருவதால் இல்லறம் சிறந்தது என்பதில் என்ன சந்தேகம் இருக்க முடியும்?


என்ன சரிதானே?



1 comment:

  1. மிகவும் சூட்சுமமான கருத்து. "தெய்வத்துள் வைக்கப் படும்" என்றால், இந்த உலகில் தேவர் போல மதிக்கப் படுவர் என்றும், அடுத்த உலகில் தேவராகவே ஆகி விடுவார் என்றும் றன்று பொருள்கள் என்று பரிமேலழகர் சொல்வது சூட்சுமமான கருத்து.

    நன்றி.

    ReplyDelete