Sunday, July 25, 2021

திருக்குறள் - பெறுவது என்ன?

 திருக்குறள் - பெறுவது என்ன? 


இல்லறம் சிறந்ததா, துறவறம் சிறந்ததா என்ற கேள்வி இன்று வரை தொடர்கிறது. பற்றினை விட்டு விட வேண்டும், ஆசை கூடாது, ஆசையே துன்பத்திற்கு எல்லாம் காரணம் என்று கேள்விப் பட்டிருக்கிறோம். 


இங்கே, இல்லறத்தின் சிறப்பை சொல்ல வந்த வள்ளுவர், இல்லறத்துக்கு வெளியே போய் கிடைப்பது என்ன இருக்கிறது என்று கேட்கிறார். 


பாடல் 


அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்

போஒய்ப் பெறுவது எவன்?


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/07/blog-post_25.html


(pl click the above link to continue reading)


அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் = ஒருவன் இல்வாழ்க்கையை அற வழியில் நடத்துபவன் ஆனால் 


 புறத்தாற்றில் = அதற்கு வெளியே 


போஒய்ப் பெறுவது எவன்? = போய் பெறுவது என்ன இருக்கிறது ? (ஒன்றும் இல்லை)



இல் வாழ்கையை அற வழியில் செலுத்தினால், அதை விட அடையப் போவது ஒன்றும் இல்லை. 


அதாவது, இல்லறத்தை விட்டு துறவறத்தில் சென்று அடையப் போவது ஒன்றும் இல்லை என்கிறார். 


அற வழி என்றால், மேலே உள்ள குறள்களில் சொன்ன பதினொரு கடமைகளும், அற வழியில் பொருள் ஈட்டுதலும், அன்பும் அன்புடன் கூடிய இல்லறமும் ஆகும். 


அது சரி, வள்ளுவர் பாட்டுக்கு சொல்லி விட்டார். அதில் உண்மை இருக்கிறதா என்று சிந்திக்க வேண்டாமா? 


இல்லறம் ஏன் சிறந்தது? 


இல்லறத்தில் உள்ள ஒருவன், தானும் இன்பம் அனுபவித்து, மற்றவர்களுக்கும் இன்பம் தருகிறான் (பதினொரு கடமைகள்). ஆனால், துறவறத்தில், தானும் இன்பம் அனுபவிக்கமால் (விரதம், தவம், போன்றவற்றால் உடலை வருத்தி) மற்றவர்களிடம் பிச்சை பெற்று அவர்களையும் துன்பப்படுத்துவதால் துறவறத்தை விட இல்லறமே சிறந்தது என்கிறார் இந்தக் குறளில். 


"அங்க ஒண்ணும் இல்ல, பேசாம் இங்கேயே இருந்து இன்பம் காண், இதுவே சிறந்தது" என்று சொல்கிறார். 


இல்லறம் அன்பைக் காட்டும், அருளுக்கு அழைத்துச் செல்லும், அருள் வீடு பேற்றைத் தரும் எனவே இந்தப் பிறவியில் இன்பமும், பின் வீடு பேறும் தருவதால், இல்லறமே சிறந்தது என்பது அவர் முடிவு.


அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். 




2 comments:

  1. மிக அருமையாகச் சொல்லியிருக்கிறார்

    ReplyDelete
  2. அண்ணாவும் அருமையாகச் சொல்கிறார் ...வணக்கம்.

    ReplyDelete