Saturday, July 17, 2021

திருக்குறள் - ஓம்பல் தலை - பாகம் 2

 

திருக்குறள் - ஓம்பல் தலை - பாகம் 2

(இதன் முதல் பாகத்தை கீழே உள்ள வலை தளத்தில் காணலாம். 

https://interestingtamilpoems.blogspot.com/2021/07/1_15.html )


பாடல் 


தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை


பொருள் 


தென்புலத்தார் = தென் திசையை சேர்ந்தவர்கள் 


தெய்வம் = தெய்வம் 


விருந்தொக்கல் = விருந்து , ஒக்கல் 


தானென்றாங்கு = தான் என்று ஆங்கு 


ஐம்புலத்தாறு = ஐந்து இடத்துக்கும் செய்யும் அற நெறிகளை விடாமல் 


ஓம்பல் தலை = கைக் கொள்ளுதல், சிறந்த அறமாகும் 



https://interestingtamilpoems.blogspot.com/2021/07/2_17.html


(pl click the above link to continue reading)



சில சமயம், ஒரு காரணமும் இல்லாமல் நாம் சந்தோஷமாக இருப்போம். ஏன் என்று தெரியாது. சில சமயம், நாம் நினைக்காத சில நன்மைகள் தாமே நமக்கு வந்து சேரும். முடியாது என்று நினைத்து இருப்போம், அது எளிதாக முடிந்து விடும். இது எங்க முடியப் போகிறது என்று மலைத்து இருப்போம், சட்டென்று முடிந்து விடும். 


அது எப்படி நிகழ்கிறது?


அதெல்லாம் தற்செயல் (random incident) என்று புறம் தள்ளிவிடலாம். 


நம் தமிழ் என்ன சொல்கிறது என்றால்...


நாம் இதற்கு முன் பிறந்து இறந்து இருப்போம் அல்லவா? அந்தப் பிறவியில் நம் பிள்ளைகள் நமக்கு சிரார்த்த கடன்கள் செய்தால், அந்த சிரார்த்ததின் பலன் நமக்கு இந்தப் பிறவியில் நன்மையாக வந்து சேர்கிறது.எதிர்பாராத நன்மைகளாக வந்து சேர்கிறது. 


உடல்தான் மடிகிறதே தவிர உயிர் வேறு வேறு உடலில் பயணம் செய்கிறது. அந்த உடலுக்கு, பிறவிக்கு அவர்கள் செய்யும் சிரார்த்த பலன்கள் வந்து சேர்கின்றன. 


இந்த பலன்களை யார் கொண்டு போய் சேர்ப்பது?


அங்கு தான் குறள் வருகிறது. 


"தென் புலத்தார்" ...தென் புலத்தார் என்பவர்கள் தேவர்கள். அவர்களின் வேலை சிரார்த்த பலன்களை கொண்டு சேர்ப்பது. 


இல்லறத்தில் இருப்பவன், அந்த தென் புலத்தாருக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்ய வேண்டும்.  


உங்களுக்கு இந்த கடவுள், தென் புலத்தார், சிரார்த்தம் என்பவற்றில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம்.  நீங்கள் இன்று இந்த இன்பங்களை அனுபவிக்கக் காரணமாக இருந்த உங்கள் முன்னோர்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு வாய்ப்பாக இதைக் கருதி செய்யலாம். உங்கள் முன்னோர்கள் பற்றி உங்களுக்கு சந்தேகம் இருக்காதே?


அடுத்தது, "தெய்வம்".  நம் இலக்கியங்கள் பெரும்பாலானவை தெய்வம் உண்டென்று நம்பின. எனவே, தெய்வத்திற்கு செய்ய வேண்டிய முறைமைகளை ஒரு இல்லறத்தான் செய்ய வேண்டும். 


அடுத்தது,  "விருந்து". விருந்து என்றால் புதுமை என்று பொருள். நமக்கு முன் பின் தெரியாத ஒருவர் நம் வீட்டுக்கு வந்தால் அவர் விருந்தனர். என் பெற்றோர், என் உடன் பிறப்புகள் என் வீட்டுக்கு வந்தால், அதற்கு விருந்து என்று பெயர் அல்ல. முன்ன பின்ன அறியாதவன் வந்தாலே அவனை உபசரிக்க வேண்டும் என்றால் மற்றவர்களைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ?


அடுத்து, "ஒக்கல்" என்றால் சுற்றத்தார். உறவினர். உறவினரை பேண வேண்டும் என்பதை ஒரு கடமையாக வைத்தது நம் பண்பாடு. 


அடுத்தது, "தான்". இங்கு தான் வள்ளுவர் உயர்ந்து நிற்கிறார். எல்லோரையும் பார்த்துக் கொண்டு, உன்னை நீ கவனிக்காமல் விட்டு விடாதே. உன்னையும் நீ போற்றி பாதுகாக்க வேண்டும் என்கிறார். 


எனவே, இல்வாழ்வான் என்பவன்

1. பிரமச்சாரி 

2. வானப்ரஸ்ததில் உள்ளவன் 

3. துறவி 

4. காக்கப் பட வேண்டியவர்களால் கை விடப் பட்டவர்கள் 

5. ஏழ்மையில் வாடுபவர்கள் 

6. அனாதையாக இறந்தவர்கள் 

7.  தென் புலத்தார் 

8. தெய்வம் 

9. விருந்தினர் 

10. சுற்றம் 

11. தான் 


என்ற இந்த பதினொரு பேருக்கு உதவி செய்ய வேண்டும். அது இல்லற தர்மம். கடமை. 


இந்த பதினொரு கடமைகளை செய்வதாக இருந்தால் திருமணம் செய்து கொண்டு இல்லறத்தில் ஈடுபடு. இல்லை என்றால், இல்லறம் உனக்கு அல்ல என்கிறார் வள்ளுவர். 


இல்லற கடமைகளை சொல்லியாகிவிட்டது. 


இதற்கு மேல் இல்லறத்தில் என்ன இருக்கும் ? மூன்று குறள்தான் ஆகி இருக்கிறது. இன்னும் ஏழு குறளில் என்ன சொல்லி இருப்பார்? 



2 comments:

  1. காத்திருக்கிறோம் ஆவலுடன்

    ReplyDelete
  2. இவ்வளவு நீளமான பட்டியல் இருக்கிறது என்பதே சுவாரசியமான விஷயம். நன்றி.


    ReplyDelete