Tuesday, July 20, 2021

திருக்குறள் - வழி எஞ்சல் எஞ்ஞான்றும் இல்

 திருக்குறள் - வழி எஞ்சல் எஞ்ஞான்றும் இல்


இல்லறத்துக்கு உள்ள பதினொரு கடமைகள் சொல்லி விட்டார். அடுத்து என்ன?


இந்த பதினொரு கடமைகளை செய்ய பொருள் வேண்டுமே? பிரம்மச்சாரி, வானப்ரஸ்தம், துறவு இவற்றில் உள்ளவர்கள், தென்புலத்தார், சுற்றம், தான், விருந்து, கை விடப் பட்டவர்கள், ஏழைகள், அனாதையாக இறந்தவர்கள் என்று இவர்களுக்கு எல்லாம் உதவி செய்ய பொருளுக்கு எங்கே போவது?


நாலு பேருக்கு நல்லது செய்வது என்றால் எதுவும் தவறு இல்லைன்னு தவறான வழியில் பணம் சம்பாதித்து இந்த உதவிகளைச் செய்யலாமா? 


அது கூடாது. அற வழியில் பொருள் ஈட்டி, அதை மேற்கண்ட வழிகளில் செலவு செய்ய வேண்டும் என்கிறார். 


சரி, அப்படிச் செய்தால் என்ன கிடைக்கும் அல்லது அப்படி செய்யாவிட்டால் என்ன நிகழும்?


பாடல் 


பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை

வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/07/blog-post_20.html


(pl click the above link to continue reading)



பழியஞ்சிப் = பழிக்கு பயந்து 

பாத்தூண் = பகிர்ந்து உண்ணும் 

உடைத்தாயின் வாழ்க்கை = வாழ்கை உடைத்தாயின் 

வழியெஞ்சல் = வழியின் மிச்சம் 

எஞ்ஞான்றும் இல் = எப்போதும் இல்லை 


பழியஞ்சிப் = பழிக்கு பயந்து. தவறு செய்ய பயப்பட வேண்டும். என்னை யார் என்ன செய்து விட முடியும் என்ற தைரியம், நான் திறமையானவன், நான் செய்யும் தவறுகளை யாரும் கண்டு பிடிக்க முடியாது,  என்ற தைரியம் தான் குற்றங்களுக்கு மூலம். பழிக்கு அஞ்ச வேண்டும். 


இதற்கு உரை எழுதிய பரிமேலழகர் கூறுவார் 


"பாவத்தான் வந்த பிறன் பொருளைப் பகுத்து உண்ணின், அறம் பொருளுடையார் மேலும், பாவம் தன் மேலுமாய் நின்று வழி எஞ்சும் ஆகலின், 'பழி அஞ்சி' என்றார்."


அதாவது, ஒருவருடைய பொருளை நாம் திருடி அதில் தர்மம் செய்தால், அந்தத் தர்மத்தின் பலன் யாரிடம் இருந்து திருடினோமோ அவர்களுக்கும், திருடிய குற்றத்தின் பாவம் நமக்கும் வந்து சேரும் என்கிறார். 



"அறம் பொருளுடையார்" = நல்லறத்தின் பலன் யாருடைய பொருளோ அவர்களுக்கும் 

 "மேலும், பாவம் தன் மேலுமாய் நின்று" = பாவம் தனக்கும் வந்து சேரும் என்கிறார். 


ஊரெல்லாம் கொள்ளை அடித்து அன்ன தானம் செய்தால், புண்ணியம் வராது, பாவம்தான் வரும். 


தவறான வழியில் பணம் சேர்த்து, வள்ளுவர் சொன்னார் "தெய்வத்துக்கு" செய்ய வேண்டும் என்று கோவில் உண்டியலில் போட்டால் புண்ணியம் வராது. 


பாத்தூண் = பகிர்ந்து உண்டால். யாரோடு பகிர்ந்து உண்ண வேண்டும்? மேலே சொன்ன பதினொரு பேருடன் பகிர்ந்து உண்ண வேண்டும். அலுவலகத்தில் உள்ள மேலதிகாரி, கடை முதலாளி, அரசாங்க அதிகாரிகள் அவர்களோடு பகிர்ந்து உண்ணச் சொல்லவில்லை. 


உடைத்தாயின் வாழ்க்கை = அப்படிப்பட்ட வாழ்கை ஒருவன் வாழ்ந்தால் 


வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல் = இது கொஞ்சம் சிக்கலான இடம்.  எஞ்ஞான்றும் என்றால் எப்போதும் என்று அர்த்தம். அவன் இல்வாழ்க்கை என்ற பயணம் ஒரு போதும் தடை படாது. அவன் வழி தடை படாது. 


சிலர் நினைக்கலாம், இப்படி எல்லோருக்கும் செய்து கொண்டிருந்தால் நாம் பொருள் எல்லாம் இழந்து ஒன்றும் இல்லாமல் போய் விடுவோம். அப்புறம் ஒரு அறமும் செய்ய முடியாது. அது எல்லாம் நின்று போகும் என்று நினைக்கலாம். வள்ளுவர் சொல்கிறார், "பயப்படாதே. ஒரு போதும் தடை வராது. எங்கிருந்தாவது வரும்" என்கிறார். 


"எங்காயிணும் வரும் ஏற்பவருக்கு இட்டது" என்று அருணகிரி நாதர் கூறியது போல. 


எப்படி இல் வாழ்கை வாழ வேண்டும் என்று ஒவ்வொரு படியாக கையை பிடித்து நம்மை அழைத்துச் செல்கிறார். 


எவ்வளவு பெரிய வழிகாட்டி நூல். 


வாழ்கையை இந்த அளவுக்கு ஆழமாய், ஆராய்ந்து, ஒரு சமுதாய பொறுப்பு உணர்வுடன் சொல்ல யாரால் முடியும்? 


படிப்போம், அறிவோம். வாழ்வில் கடை பிடிப்போம். 








1 comment:

  1. இதுவரை நான் இந்த அளவு திருக்குறள் படித்ததில்லை - இந்த BLOG மூலம் இப்போது படிக்கும் வாய்ப்புக்கு கிடைக்கிறது. நன்றி.

    ReplyDelete