Thursday, July 29, 2021

திருக்குறள் - அறன் எனப்பட்டதே இல் வாழ்க்கை

திருக்குறள் - அறன் எனப்பட்டதே இல் வாழ்க்கை 


இல்லறம், துறவறம் என்று இரண்டு அறங்கள் இருக்கின்றன. இதில் துறவறம் என்பது மிகக் கடினமான ஒன்று. புலன்களை அடக்க வேண்டும். மனதை அடக்க வேண்டும். விரதம், தவம் எல்லாம் செய்ய வேண்டும். 


இல்லறம் அப்படி அல்ல. அனைத்து இன்பங்களையும் துயித்துக் கொள்ளலாம். ஒன்றும் முரண்பட வேண்டாம். 


இதில் எது சிறந்த அறம் என்ற கேள்வி நம் முன் நிற்கிறது. 


இந்தக் குறளில் அறம் என்றாலே அது இல்லறம் தான் என்று வள்ளுவர் கூறுகிறார். 


பாடல் 


அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/07/blog-post_29.html



(pl click the above link to continue reading)



அறன் = அறம் 


எனப்  = என்று 


பட்டதே = சிறப்பித்து சொல்லப் பட்டதே 


இல்வாழ்க்கை = இல்வாழ்க்கை 


அஃதும் = அதுவும் 


பிறன் = மற்றவர்கள் 


பழிப்பது இல்லாயின் = பழிக்காமல் 


 நன்று = நல்லது 


இந்தக் குறளில் கொஞ்சம் குழப்பம் வரும். 



பிறர் பழிக்காத இல்லறமே சிறந்தது என்று நாம் பொருள் கொண்டு விடுவோம். 


அது சரி அல்ல என்று பரிமேலழகர் கூறுகிறார். 


அறன் எனப்பட்டது இல்வாழ்க்கை என்று கூறி இருக்கலாம்.  அதை விட்டுவிட்டு 


அறன் எனப்பட்ட"தே" இல்வாழ்கை என்று ஒரு ஏகாரம் போடுகிறார் வள்ளுவர். 


ஏகாரம் பிரிநிலை என்கிறார் பரிமேலழகர். 


கொஞ்சம் இலக்கணம் படிப்போமா? (இலக்கணம் வேண்டாம் என்பவர்கள் கீழே உள்ளதை விட்டு விடலாம்.). 


தமிழ் இலக்கணத்தில் இடைச் சொல் ஒன்று உண்டு.

தனித்து நின்று பொருள் தராது. இரண்டு சொற்களுக்கு இடையில் வந்து அவற்றிற்கு இடையில் உள்ள உறவு, அல்லது அர்த்தத் தெளிவை தரும்.

இடை எனப்படுவ
பெயரொடும் வினையொடும்
நடைபெற்று இயலும் : தமக்கு இயல்பு இலவே


என்பது தொல்காப்பியம்.

இடை எனப்படுவது பெயரோடும் (பெயர் சொல்லோடும் ), வினையோடும் (வினைச் சொல்லோடும் ) சேர்ந்து வரும். தனக்கென்று தனி இயல்பு இல்லாதது என்பது தொல்காப்பியம் தரும் இலக்கணம். 


நிறைய இடைச் சொற்கள் இருக்கின்றன.

அதில் ஏகார (ஏ ) இடைச் சொல்லை மட்டும் பார்ப்போம்.

இந்த ஏகார இடைச் சொல் பல 7 விதமாக வரும்.

ஏகார வினைச்சொல், தேற்றமும், வினாவும், எண்ணும், பிரிநிலையும் எதிர்மறையும், இசைநிறையும் ஈற்றசைவுமாகிய ஏழு பொருளைத்தரும்.

எப்படி என்று பார்ப்போமா ?

1. தேற்றம் என்றால் உறுதி, தெளிவு.

நான் நேற்று வந்தேன் என்று சொல்லலாம்

நான் நேற்றே வந்தேன் என்றும் சொல்லலாம்.

இரண்டுக்கும் என்ன வேறுபாடு ? நேற்றே வந்தேன் என்பது நேற்று வந்தேன் என்பதே அழுத்தமாக , உறுதியாகச் சொல்கிறது.

நான் இதைச் செய்தேன்
நானே இதைச் செய்தேன்

நான் செய்தேன் என்றால் வேறு யாரோ கூட என்னோடு சேர்ந்து செய்திருக்கலாம்.

நானே செய்தேன் என்பது நான் செய்தேன் என்பதே தெளிவாக்குகிறது அல்லவா.

2. வினா

வீட்டுக்குப் போகிறாய்
வீட்டுக்குத் தானே போகிறாய் ?

முதலில் உள்ள வாக்கியம் வீட்டுக்குப் போவதை குறிக்கிறது.
இரண்டாவது உள்ள வாக்கியம் வீட்டுக்குப் போகிறாயா அல்லது வேறு எங்காவது போகிறாயா என்ற வினாவை எழுப்புகிறது. "தானே" வில் உள்ள ஏகாரம் அந்த வாக்கியத்தை வினாவாக மாற்றுகிறது.

3. எண்

வீடு, நிலம், நகை
வீடே, நிலமே, நகையே

இரண்டாவது உள்ள வாக்கியம் வீடு, நிலம் , நகை என்ற மூன்று இருக்கிறது என்று எண்ணிக்கையை சொல்ல வருகிறது.

வீடே , நிலமே, நகையே என்று சொல்லும் போது நம்மை அறியாமலேயே நாம் அவற்றை எண்ணத் தொடங்கி விடுகிறோம். சொல்லிப் பாருங்கள்.


4. பிரிநிலை

அனைத்து மாணவர்களில் அவனே சிறந்த மாணவன்

இதில் , அந்த ஒரு மாணவனை பிரித்து காட்டுகிறது.

இராமாயணத்தில் உள்ள பாத்திரங்களில் பரதனே சிறந்த பாத்திரம்.

பரதனை பிரித்துக் காட்டுவதால், இது பிரிநிலை ஏகாரம்.


5. எதிர்மறை

நீயே கொண்டாய் என்ற வாக்கியத்தில் நீயா கொண்டாய் என்ற கேள்வி நிற்கிறது.

6. இசை நிறை

’ஏயே யிவலொருத்தி பேடியோ வென்றார்.’’


இதை இவள் ஒருத்தி என்று ஆரம்பித்து இருக்கலாம். ஏயே என்று ஆரம்பித்தது  இசை நயம் கருதி.

7. ஈற்று அசை

அசைச் சொல் என்றால் அர்த்தம் இல்லாமல், இலக்கணத்தை நிறைவு செய்யும் பொருட்டு  சேர்க்கப்படும் சொற்கள்.  Filler , buffer , மாதிரி.

 என்றுமேத்தித் தொழுவோ மியாமே

 என்றும் ஏத்தி தொழுவோம் யாம் என்று நிறுத்தி இருக்கலாம். யாமே என்பதில் உள்ள  ஏ காரம் அர்த்தம் ஏதும் இன்றி நின்றது. அசைச் சொல்.


அறன் எனப்பட்டதே என்பதில் உள்ள ஏகாரம் பிரிநிலை. 


எதைப் பிரிக்கிறது?


இல்லறத்தை, துறவறத்தில் இருந்து பிரிக்கிறது. 


இரண்டையும் பிரித்து விட்டதால், 


"அஃதும் பிறன்பழிப்பது இல்லாயின் நன்று"


என்பதில் வரும் "அஃது" என்பது துறவறத்தை சுட்டுகிறது என்கிறார் பரிமேலழகர். 


இல்லறமே சிறந்தது. 


துறவறமும் சிறந்ததுதான் பிறர் அதை பழிக்காமல் இருந்தால் என்கிறார். 


ஏன் பழிக்கப் போகிறார்கள் என்பதற்கும் விளக்கம் தருகிறார். 


துறவறம் என்பது ஆசைகளை அடக்கி, புலன்களை அடக்கி, மனதை ஒருமுகப் படுத்தி, தவம், விரதம் எல்லாம் செய்ய வேண்டும். இவை மனித இயல்புக்கு எதிரானவை. இன்பம் துயிப்பது என்பது உயிர்களின் அடிப்படைக் குணம். துறவு அதை மறுத்து நிற்கிறது. 


எவ்வளவு நாள் நிற்க முடியும்? எங்கேனும் ஒரு கணத்தில் சறுக்கி விழ வாய்ப்பு இருக்கிறது. 


பெரிய பெரிய தவ முனிவர்கள் எல்லாம் சறுக்கி இருக்கிறார்கள். சறுக்கி தவ வலிமையை இழந்து இருக்கிரார்கள். அப்படி என்றால சாதாரண துறவிகளை என்னென்று சொல்லுவது. 


ஒரு துறவி சறுக்கினால் உலகம் அவனைப் பழிக்கும். தூற்றும். 


எனவே, பழி வராமல் துறவு இருந்தால் அதுவும் நல்லதுதான் என்ற பொருள் பட கூறினார். 


இல்லறமே சிறந்தது, பழி இல்லாமல் இருந்தால் துறவறமும்  சிறந்தது தான் என்கிறார். 


மேலும் படிப்போம்.



1 comment:

  1. பரிமேலழகர் சொல்லி விட்டார், ஆனால் வள்ளுவர் என்ன பொருளுடன் "அஃது" என்று சொன்னார் என்பது இன்னும் எனக்குச் சரியாகாது தெரியவில்லை. மு.வ. முதலானோரின் உரைகளில் அஃது என்பது இல்வாழ்க்கையையே குறிப்பிடுவதாக எழுதப் பட்டிருக்கிறது.

    ReplyDelete