Wednesday, July 21, 2021

கம்ப இராமாயணம் - அங்கதன் தூது - மன நிலை கூறலாமோ?

கம்ப இராமாயணம் - அங்கதன் தூது - மன நிலை கூறலாமோ?



அங்கதனை தூதாக இராவணனிடம் அனுப்பவது என்று முடிவு செய்கிறார்கள். 


இராமன் அங்கதனை அழைத்து, "அங்கதா, நீ அந்த இராவணனிடம் சென்று நான் சொல்லும் இரண்டு விடயங்களைக் கூறி, அதற்கு ஒன்றைப் பதிலாக பெற்றுக் கொண்டு வா" என்கிறான். 


பாடல் 


 'நன்று' என, அவனைக் கூவி, 'நம்பி! நீ நண்ணலார்பால்

சென்று, உளது உணர ஒன்று செப்பினை திரிதி' என்றான்;

அன்று அவன் அருளப் பெற்ற ஆண்தகை அலங்கல் பொன் தோள்

குன்றினும் உயர்ந்தது என்றால், மன நிலை கூறலாமோ?


பொருள்  


https://interestingtamilpoems.blogspot.com/2021/07/blog-post_21.html


(Please click the above link to continue reading)



 'நன்று' என,  = இலக்குவன், வீடணன், அனுமன் ஆகியோர் கூறியதைக் கேட்டு, நல்லது என்று  இராமன் கூறி 


அவனைக் கூவி,  = அங்கதனை அழைத்து 


'நம்பி! = நம்பி 


நீ = நீ 


நண்ணலார்பால் = பகைவர்களிடம்  (இராவணனிடம்) 


சென்று = சென்று


உளது உணர  = மனதில் படும்படி சொல்லி 


ஒன்று  = ஒன்றை பதிலாக 


செப்பினை  திரிதி = பெற்று வா என்றான் 


அன்று = அப்போது 


அவன் = இராமனின் 


அருளப் பெற்ற = அருளைப் பெற்ற 


ஆண்தகை  = ஆண்களில்சிறந்தவனான அங்கதன் 


அலங்கல் பொன் தோள் = மாலை அணிந்த பொன் போன்ற ஒளி விடும் தோள்கள் 


குன்றினும் உயர்ந்தது என்றால் = குன்றை விட பூரித்து உயர்ந்தது என்றால் 


மன நிலை கூறலாமோ? = அவன் மன நிலை எப்படி இருந்தது என்று கூற முடியுமா?


நம்பி என்றால் நற்குணங்கள் நிறைந்தவன் என்று பொருள்.


அங்கதனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. 


ஏன்?


இராமன் , அவனை நம்பி என்று கூறிவிட்டான். இராமனே கூறினான் என்றால் மகிழ்ச்சி இருக்காதா. கம்பன் பாடம் சொல்கிறான் நமக்கு. வேலை வாங்க வேண்டுமா, வேலை செய்பவர்களை பாராட்டு. அவர்கள் உற்சாகத்தோடு வேலை செய்வார்கள். இல்லை என்றால் கடனே என்று செய்வார்கள். எப்பப் பார்த்தாலும் குறை சொல்லிக் கொண்டே இருந்தால், யாருக்குத்தான் வேலை செய்ய மனம் வரும். 



பிள்ளையிடம் வேலை சொல்வதாக இருந்தாலும் "என் இராசா இல்ல...குடிக்க கொஞ்சம் தண்ணி தருவியா" என்றால் சந்தோஷமாக ஓடிச் சென்று கொண்டு வருவான். "ஏய், இங்க வா, அந்த தண்ணி பாட்டில எடுத்துட்டு வா" ஒண்ணு செய்ய மாட்டான் இல்லேனா முணு முணுத்துக்கொண்டே  செய்வான். 


கணவன் மனைவியிடமும் அப்படித்தான். 



"ரொம்ப களைப்பா இருக்கு...கொஞ்சம் டீ போட்டுத் தர்றியா" என்று மனைவியிடம் கேட்டால், "இதோ அஞ்சு நிமிஷத்ல " என்று சுட சுட போட்டுத் தருவாள். 



"என்ன இன்னிக்கு டீ போடலியா" என்று அதட்டினால் "இல்லை" னு பதில் வரும். 



இரண்டாவது, இராமன் மற்றவர்களை எல்லாம் விட்டு விட்டு தன்னிடம் வேலை சொன்னான் என்பதில் அங்கதனுக்கு ஒரு மகிழ்ச்சி. 


அப்படி ஒரு தலைமை பண்பை வளர்த்துக் கொள்ள பழக வேண்டும். எப்படா பாஸ் வேலை சொல்லுவார் என்று கீழே இருப்பவர்கள் ஏங்க வேண்டும். 


இதனால், அவன் தோள்கள் விம்மி புடைத்தன....அப்படி என்றால் மனம் எவ்வளவு மகிழ்ந்திருக்கும் என்று கம்பர் கேட்கிறார். 



நல்லா இருக்கா ?


2 comments:

  1. ரொம்ப நல்லா இருக்கு. அருமையாக

    ReplyDelete
  2. அருமை அண்ணா ...

    ReplyDelete