Pages

Tuesday, December 24, 2024

கம்ப இராமாயணம் - ஜடாயு புலம்பல் - ஏன் என்னை விட்டுப் போனாய்?

கம்ப இராமாயணம் - ஜடாயு புலம்பல் - ஏன் என்னை விட்டுப் போனாய்?



தயரதன் இறந்து விட்டான் என்ற செய்தியை கேட்டதும், ஜடாயு பெரும் துயரம் அடைந்து வருந்திப் புலம்புகிரான். 


ஒருவர் இன்று ஏதோ ஒன்றில் புகழ் அடையலாம். படிப்பில், விளையாட்டில், நடிப்பில், பணம் சம்பாதிப்பதில்...அந்தப் புகழ் அவர்களிடம் எப்போதும் இருக்காது. அவர்களை விட வேறு யாராவது சிறப்பாக செய்தால் அவர்களிடம் போய் விடும். புகழுக்கு என்று ஒரு நிலையான இடம் கிடையாது. 


ஆனால், தயரதா, நீ இருக்கும் வரை, புகழுக்கு நீயே நிரந்தர புகலிடம்.....


தயரதா, உனக்கு நிரந்தர பகை என்று ஒன்று உண்டு என்றால் அது பொய். நீ பொய்க்கு நிரந்தர பகைவன். 


உண்மையும் சத்தியமும் உன்னை அணிகலனாக அணிந்து மகிழும். 


நீ யாரையெல்லாம் விட்டு விட்டுப் போனாய் தெரியுமா? 


புகழ் தரும் உன் கொடைத் திறனையும் 

நீதி மாறாத உன் வெண் கொற்றக் குடையையும் 

உன்னுடைய உயர்ந்த பொறுமை என்ற பண்பையும் 


இவற்றையெல்லாம் விட்டு விட்டுப் போய் விட்டாய். 


நீ இறந்ததில் சிலருக்கு மகிழ்ச்சி இருக்கும். அவர்கள் யார் தெரியுமா?


கற்பக மரம். கேட்டதை எல்லாம் கொடுக்கும். நீ இருந்த வரை அதுக்கு போட்டியாக இருந்தாய். இப்போது நீ இல்லை. கேட்டதை எல்லாம் கொடுப்பதற்கு இனி கற்பக மரம் மட்டும்தான் இருக்கிறது. எனவே, அது மகிழும். 


உடுபதி...விண்மீன்களின் தலைவனான நிலவு அமிர்தத்தைக் கொடுப்பது. உன் கொடை மூலம் நீ உயிர்களை காத்தாய். நீ இல்லாததால், இனி உயிர் காக்கும் அம்ரிதத்தைத் தர நிலவு மட்டும் தான். எனவே, அது மகிழும். 


கடல். உன் புகழ் கடலை விடப் பெரியது. நீ இல்லாவிட்டால், இனி உலகிலேயே பெரியது கடல் என்ற பெருமையை பெறும். எனவே அது மகிழும். 

  தயரதா, நீ போன பின், யாசகம் வேண்டுபவர்களும், நல் அறமும், நானும் இனி எங்கே போவோம். எங்களை எல்லாம் விட்டு விட்டு நீ எப்படி போனாய்....


என்று ஜடாயு புலம்புகிறார். 


பாடல்  


'பரவல் அருங்கொடைக்கும், நின்தன் பனிக்குடைக்கும்,

     பொறைக்கும், நெடும் பண்பு தோற்ற

கரவல் அருங் கற்பகமும், உடுபதியும்,

     கடல் இடமும், களித்து வாழ-

புரவலர்தம் புரவலனே! பொய்ப் பகையே!

     மெய்க்கு அணியே! புகழின் வாழ்வே!-

இரவலரும், நல் அறமும், யானும், இனி

     என் பட நீத்து ஏகினாயே?


பொருள் 


'பரவல் அருங்கொடைக்கும் = புகழ் தரும் உன் கொடை திறனுக்கும் 


நின்தன் பனிக்குடைக்கும் = உன் வெண் கொற்றக் குடைக்கும் 


பொறைக்கும் = உன் பொறுமைக்கும் 


நெடும் பண்பு தோற்ற = உயர்ந்த பண்புகள் தோற்க 


கரவல் அருங் கற்பகமும் = மறைக்காமல் கொடுக்கும் கற்பக மரமும் 


உடுபதியும் = நிலவும் 


கடல் இடமும் = கடலும் 


களித்து வாழ = மகிழ்ந்து வாழ 


புரவலர்தம் புரவலனே = அரசர்களுக்கு அரசனே 


பொய்ப் பகையே = பொய்க்கு பகையானவனே 


மெய்க்கு அணியே = உண்மைக்கு அணிகலன் போன்றவனே 


புகழின் வாழ்வே! = புகழுக்கு வாழ்வளிப்பவனே 


இரவலரும் = யாசகம் பெறுபவர்களும் 


நல் அறமும் = நல்ல அறமும் 


யானும் = நானும் 


இனி = இனிமேல் 


என் பட  = என்ன செய்வோம் என்று நினைத்து 


நீத்து ஏகினாயே? = விலகி மேலே போனாய் ?




Sunday, December 22, 2024

திருக்குறள் - களவு மயக்கம்

திருக்குறள் - களவு மயக்கம் 

https://interestingtamilpoems.blogspot.com/2024/12/blog-post_22.html

களவு செய்து பொருள் ஈட்டினால் என்ன தப்பு?  மாட்டிக் கொண்டால்தானே பிரச்சனை? மாட்டாமல் செய்தால்?


ஊருக்குள்ள நூறு சதவிகிதம் நேர்மையாக யார் இருக்கிறார்கள்? ஒவ்வொருவனும் ஏதோ ஒரு விதத்தில் சற்று நேர்மைகு விலகி பொருள் சம்பாதிக்காமலா இருக்கிறார்கள்? 


அவனவன் ஆயிரம், கோடி நு அடிக்கிறான். நான் ஒரு சின்ன தொகை அடித்தால் என்ன குறைந்து விடும்?


என்றெல்லாம் நினைக்கலாம். 


இதை அறிவு மயக்கம் என்கிறார் வள்ளுவர். 


புத்தி சரியாக வேலை செய்யவில்லை என்றால் இப்படி எல்லாம் சிந்திக்கத் தோன்றும். 


இத்த அறிவு மயக்கம் ஏன் வருகிறது ? அல்லது யாருக்கு வருகிறது?


எது சரி, எது தவறு, எது நல்லது, எது கெட்டது என்று அளந்து, அறியும் அறிவு இல்லாதவர்களுகு இப்படிப்பட்ட அறிவு மயக்கம் வரும் என்கிறார். 


பாடல் 



 களவென்னும் காரறி வாண்மை அளவுஎன்னும்

ஆற்றல் புரிந்தார்கண் இல்


பொருள்


களவென்னும் = களவு செய்வதினால் நன்மை வரும் என்ற 


காரறி வாண்மை  = கார் என்றால் கருப்பு. கார் மேகம். அறிவில் தோன்றிய மயக்கம். (இருள், கருமை) 


அளவுஎன்னும் = எதையும் ஆராய்ந்து, அளந்து அறியும் 



ஆற்றல் = அறிவு  


புரிந்தார்கண் = உள்ளவர்களிடம் 


இல் = இல்லை 


களவினால் நன்மை வரும் என்று நினைப்பது அறிவு மயக்கம். அது உண்மை இல்லை. 





Friday, December 20, 2024

மலர்ந்த தாமரை

மலர்ந்த தாமரை

https://interestingtamilpoems.blogspot.com/2024/12/blog-post_20.html


சூரிய ஒளி பட்டு தாமரை மலர்வதாகத் தான் அனைத்து இலக்கியங்களும் பேசுகின்றன. அது எவ்வளவு பெரிய தவறு !


அவள் சொல்கிறாள்...தாமரை எப்போது மலரும் தெரியுமா?  அதன் அருகில் வண்டு வந்து ரீங்காரம் இடும் போது...வண்டு வந்து விட்டால் தாமரை தானே மலர்ந்து விடும். அது தாமரைக்கும் வண்டுக்கும் உள்ள உறவு. 


 "பெண்: விம்மியது தாமரை

வண்டு தொடும் நாளிலோ?"


அன்பு மேலிடும் போது பற்றிக் கொள்ள ஒரு கை வேண்டும், சாய்ந்து கொள்ள ஒரு தோள் வேண்டும். 


அவனுக்கோ பரந்த மார்பு. அவளோ மயில் போல் மென்மையானவள். அவனுடைய பரந்த் மார்பில் அவள் சாய்ந்து கொள்கிறாள். ஈருடல், ஓருயிர். 


" பாவை மயில் சாயுதே மன்னவனின் மார்பிலோ"


https://www.facebook.com/watch/?v=872011923657766

Wednesday, December 18, 2024

கம்ப இராமாயணம் - வாய்மை காத்து

கம்ப இராமாயணம் - வாய்மை காத்து 


தயரதன் ஏன் இறந்தான் ?


அவனுக்கு புத்திர பாசத்தால் இறப்பான் என்று ஒரு சாபம் இருந்தது. எனவே இராமன் கானகம் போகப் போவதை அறிந்து இறந்தான் என்று சொல்லுவார்கள். 


அது சரியா?


காதோரம் வந்த நரை முடியை பார்த்து, இனி ஆட்ச்சியை இராமனிடம் ஒப்படைத்துவிட்டு கானகம் போவதாகத் தான் தயரதன் நினைத்து இருந்தான். இராமன் முடி சூடி, தயரதன் கானகம் போனால் பிரிவு வந்து இருக்காதா?


சரி, இப்படிப் பார்ப்போம்.


தயரதன் கானகம் போக முடிவு செய்துவிட்டான். கைகேயின் வரத்தால் இராமனும் கானகம் போக வேண்டி இருக்கிறது. நல்லதுதானே...இரண்டு பேரும் கானகம் போய் இருக்கலாமே? பிரிவு வந்து இருக்காதே. 


பின் ஏன் தயரதன் இறந்தான்?


அறம் தவறியதால், நீதி பிழைத்ததால் உயிர் விட்டான். 


அதை இராமனே சொல்கிறான். 


"தயரதன் வலிமையுடன் இருக்கிறானா" என்று ஜடாயு கேட்டவுடன், இராமன் சொல்கிறான்....


"மறக்க முடியாத தன் நீதியைக் காக்க, தயரதன் உயிர் விட்டான்" என்று.


அதைக் கேட்டதும், ஜடாயு மயங்கி விழுந்தான். பின் தெளிந்தான். 


பாடல் 


மறக்க முற்றாத தன் வாய்மை  காத்து அவன்

துறக்கம் உற்றான்' என, இராமன் சொல்லலும்,

இறக்கம் உற்றான் என ஏக்கம் எய்தினான்;

உறக்கம் உற்றான் என உணர்வு நீங்கினான்.


பொருள் 


மறக்க முற்றாத = மறக்கக் கூடாத, மறக்க முடியாத 


தன்  = தன்னுடைய 


வாய்மை = நீதியை


காத்து = காப்பாற்றி 


அவன் = தயரதன் 


துறக்கம் உற்றான் = இறந்து போனான் 


என = என்று


இராமன் சொல்லலும், = இராமன் சொன்னதும் 


இறக்கம் உற்றான் என = ஏமாற்றம் அடைந்தான் 


 ஏக்கம் எய்தினான் = ஏங்கினான் 


உறக்கம் உற்றான் என = மயக்க நிலை உற்று 


உணர்வு நீங்கினான் = பின் தெளிந்தான் 


இராமனைப் பிரிந்ததால் அல்ல, நெறி தவறி விட்டோமே என்ற கவலையில் உயிர் விட்டான் தயரதன். 


"அப்பா இறந்து போனார்" என்று சொல்லி இருக்கலாம். 


இராமன் அப்படிச் சொல்லவில்லை. மீற முடியாத, மீறக் கூடாத அறத்தை மீறியதால் உயிரை விட்டான் என்று சொன்னான். 


அந்த அதிர்ச்சி செய்தி கேட்ட ஜடாயு, மயங்கி விழுந்தான். 


பின் என்ன சொன்னான்?



Saturday, December 14, 2024

திருக்குறள் - அளவின் கண்

 திருக்குறள் - அளவின் கண் 


ஆத்துல போட்டாலும் அளந்து போடு னு ஒரு பழ மொழி உண்டு .  


எதைச் செய்தாலும் ,  ஒரு கணக்கு வேண்டும் .  ஒரு அளவு இல்லாமல் எதையும் செய்யக் கூடாது .  


வாழ்க்கைக்கு என்ன கணக்கு .  எதைச் செய்வது ,  எப்படிச் செய்வது ,  எவ்வளவு செய்வது ,  எதைச் செய்யக் கூடாது. செய்தால் என்ன ஆகும் என்றெல்லாம் ஒரு அளவு வேண்டாமா ? 


சுவையாக இருக்கிறது என்பதற்காக பத்து லட்டு தின்னலாமா ?   


தமிழ் சமுதாயம் இந்த கணக்கு வழக்கில் மிக ஆழமாக போய் இருக்கிறது .  


உண்மை என்றால் என்ன ,  அதன் அளவு என்ன ,  பாவ புண்ணியம் என்பது என்ன, நன்மை தீமை என்றால் என்ன என்றெல்லாம் ஆராய்ந்து ,  எல்லாவற்றிற்கும் ஒரு வரைவிலக்கணம் செய்து வைத்து இருக்கிறது .  


ஒருவனை நாம் அடிக்கிறோம் என்றால் அவன் திருப்பி அடிப்பான் என்ற  கணக்குத் தெரிய வேண்டும் .  மற்றவன் பொருளை எடுத்தால் எவ்வளவு நாள் சிறை செல்ல வேண்டியிருக்கும்  என்ற கணக்கு வேண்டும் .  இல்லை என்றால் மனம் போன போக்கில்  எதையாவது செய்து ,  மாட்டிக் கொண்டு முழிக்க வேண்டியதுதான் . 


வள்ளுவர் சொல்கிறார்,


"களவின் மேல் தீராக் காதல் கொண்டவர்கள் ,  இந்த கணக்கெல்லாம் பார்க்க மாட்டார்கள்"


 என்று . 


பாடல் 



அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்

கன்றிய காத லவர்


பொருள் 


அளவின்கண் = ஒரு அளவையும்  


நின்றொழுகல் =  கடைப்பிடித்து வாழ 


ஆற்றார் = மாட்டார்கள் 


களவின்கண் = களவு செய்வதில் 


கன்றிய = மிகுந்த 


காத லவர் = காதல் உள்ளவர்கள் 


இங்கே அளவு என்பதற்கு நீண்ட விளக்கம் தருகிறார் பரிமேலழகர் .  


உண்மையை எப்படி நிறுவுவது ? அதற்கு என்ன சாட்சிகள், அளவுகள் உண்டு ?   நன்மை ,  தீமை ,  பாவம் ,  புண்ணியம் ,  இன்பம் ,  துன்பம் என்று வினையும் ,  அதனால் வரும் விளைவும் என்று அடுக்கிறார் .  


கன்றிய காதல் என்றால் எப்ப யார் பொருளை எடுக்கலாம், யாரை ஏமாற்றி  ஏதாவது  அடையலாம் ,  ஒன்றையும் கொடுக்காமல் அல்லது குறைவாகக் கொடுத்து நிறைய  பெற்றுக் கொள்வது, என்று இப்படி சதா சர்வ காலமும் சிந்தித்துக் கொண்டே இருப்பவர்கள் .  இவர்களுக்கு வாழ்வில் ஒரு கணக்கும் கிடையாது ,  வழக்கும் கிடையாது .  


கொடுத்துப் பழக வேண்டும் .  எடுத்து அல்ல .  




Friday, December 13, 2024

கம்ப இராமாயணம் - சடாயு புலம்பல்

கம்ப இராமாயணம் - சடாயு புலம்பல் 


சடாயு இராம இலக்குவனர்களைப் பார்த்து "நீங்கள் யார் "  என்று கேட்டார் .  அதற்கு அவர்கள் "நாங்கள் தயாரதனின் பிள்ளைகள் "  என்று கூறினார்கள் .  


அதைக் கேட்டதும் ஒரு சிறு குன்றின் மேல் அமர்ந்து இருந்த ஜடாயு வேகமாக தத்தி தத்தி வந்து தன் பெரிய சிறகுகளால் அவர்களை அணைத்துக் கொண்டார். மேலும் ,  "தயரதன் நலமாக இருக்கிறாரா" என்று விசாரித்தார் . 



பாடல் 


உரைத்தலும், பொங்கிய உவகை வேலையன்,

தரைத்தலை இழிந்து அவர்த் தழுவு காதலன்,

'விரைத் தடந் தாரினான்,  வேந்தர் வேந்தன்தன்,

வரைத் தடந் தோள் இணை வலியவோ?' என்றான்.


பொருள் 

உரைத்தலும் = "நாங்கள் தயரதனின் பிள்ளைகள் "  என்று சொன்னவுடன் 


பொங்கிய =பொங்கி வந்த 


உவகை  = மகிழ்ச்சிக் 


வேலையன் = கடல் போல வர 


தரைத்தலை இழிந்து = குன்றின் மேல் இருந்து தரைக்கு வந்து 


அவர்த் தழுவு காதலன் = அவர்களை (இராம இலக்குவர்களை )  தழுவும் காதல் கொண்ட சடாயு 


'விரைத் = மணம் பொருந்திய 


தடந் = பெரிய 


தாரினான் = மாலை அணிந்த 


வேந்தர் வேந்தன்தன் = அரசர்களுக்கு அரசனான 



வரைத் = மலை போன்ற 


தடந் தோள் = பெரிய தோள்கள் 


இணை = இரண்டும் 


வலியவோ?' = வலிமையாக இருக்கின்றனவா  


 என்றான் = என்று கேட்டான் .


அவ்வளவு ஆர்வத்தோடு கேட்ட ஜடாயுவுக்கு இராம இலக்குவனர்கள் என்ன பதில் சொன்னார்கள் ? 


என்ன சொல்லி இருப்பார்கள் என்று தெரியும் .  எப்படி சொல்லி இருப்பார்கள் என்று தெரியாது .  


நாளை சிந்திப்போம் .  




Thursday, December 12, 2024

கம்ப இராமாயணம் - அவலச் சுவை - புலம்பல்கள்

 கம்ப இராமாயணம் - அவலச் சுவை - புலம்பல்கள் 


இன்பமான நிகழ்வுகளை எளிதில் சொல்லி விடலாம் .  பெரிய, ஆழ்ந்த வார்த்தைகள் தேவை இல்லை .  எல்லோரும் புரிந்து கொள்ள முடியும் .  


சோகத்தை ,  துன்பத்தை எழுத்தில் வடிப்பது அவ்வளவு எளிது அல்ல .  துன்பத்தில் என்ன இருக்கிறது விவரிக்க ?  வர்ணிக்க ?   


மேலும் அதை மெருகு செய்யப் போனால்  சில சமயம் அருவெறுப்பாகி விடும் .  "இறந்த அவன் முகம் அழுகிய வாழைப் பழம்  போல் இருந்தது "  என்று சொன்னால் நல்லாவா இருக்கும் .  


ஆனால் கம்பன் சோகத்தையும் மிக அழகாக படம் பிடிக்கிறான் .  


பாத்திரங்களின் சோகம் நம்மை தாக்க வேண்டும் .  அதே சமயம் அடடா என்ன அழகாக சொல்லி இருக்கிறான் என்ற நயமும் வேண்டும் .  வார்த்தைகளில் ஆழம் வேண்டும் ,  சோகத்தை பிரதிபலிக்க வேண்டும் ,  அதே சமயம் சொல்லப் பட்ட விதமும் நேர்த்தியாக இருக்க வேண்டும் .  


"இறந்தார் ,  மண்டைய போட்டார் ,  டிக்கெட் வாங்கி விட்டார்" என்றெல்லாம் சொல்லாமல்   "இறைவன் திருவடியை அடைந்தார் ,  காலமானார் "  என்றெல்லாம் சொல்லுவது போல .  


இராமாயணத்தில் பல இடங்களில் கம்பன் சோகத்தைப் பிழிகிறான் .  அது நம் நெஞ்சை அறுக்கும் படி இருக்கும் .  வலிக்கும் .  அவன் சொன்ன விதம் ,  நம்மை வியப்பில் ஆழ்த்தும் .  இப்படி கூட இதைச் சொல்ல முடியுமா என்று நினைக்க வைக்கும் .  



சோக இரசம்.


முதல் புலம்பல் ஜடாயு புலம்பல் .  தயரதன் இறந்த சேதி கேட்டு ஜடாயு புலம்புகிறான் .  


நினைத்துப் பார்ப்போம். நெருங்கிய நண்பர் இறந்து விட்டதாக அவருடைய மகன் நம்மிடம்  கூறுகிறான் .  அந்த மகனிடம் நாம் என்ன சொல்லுவோம் ? 


ஜடாயு என்ன சொன்னார் என்று பார்ப்போம் .  


  

Saturday, November 30, 2024

சினிமா - இது மாலை நேரத்து மயக்கம்

 சினிமா - இது மாலை நேரத்து மயக்கம் 


அவளோ ஒரு இளம் பெண். விதி, அவளை வயதான ஒருவனோடு சேர்த்து வைத்து வேடிக்கைப் பார்க்கிறது. மனம் ஒன்றினாலும் உடல் ஒன்ற மாட்டேன் என்கிறது. இருவர் பக்கமும் தவிப்பு. 


காமம் அவளை வாட்டுகிறது. இயலாமை அவன வருத்துகிறது.


இந்த மனப் போராட்டத்தை படம் பிடிக்கும் கவிதை, தரிசனம் படத்தில். 


பெண்: 


இது மாலை நேரத்து மயக்கம்

பூ மாலை போல் உடல் மணக்கும்

இதழ் மேலே இதழ் மோதும்

அந்த இன்பம் தேடுது எனக்கும் ம்ம்ம்ம்

இது மாலை நேரத்து மயக்கம்


மாலை நேரம் அவளை வருத்துகிறது. 


கணவனின் துணையோடுதானே காமனை வென்றாக வேண்டும். 


அவனுக்கோ இதில் எல்லாம் விருப்பம் இல்லை. 



ஆண்

இது கால தேவனின் கலக்கம்

இதை காதல் என்பது பழக்கம்

ஒரு ஆணும் ஒரு பெண்ணும்

பெற போகும் துன்பத்தின் துவக்கம் ம்ம்ம்

இது கால தேவனின் கலக்கம்


காதல் என்பது ஒரு மன மயக்கம். இதில் ஒரு இன்பமும் இல்லை. இன்பம் போல் தொடங்கும், ஆனால் முழுக்க முழுக்க துன்பமே மிஞ்சும் என்கிறான். 


அவள் விடுவதாய் இல்லை. 


பெண்:பனியும் நிலவும் பொழியும் நேரம்

மடியில் சாய்ந்தால் என்ன ?

பசும் பாலை போலே மேனி எங்கும்

பழகி பார்த்தால் என்ன?


இந்தத் தத்துவம் எல்லாம் எதுக்கு ? என் மடி மேல் படு. என்னைத் தொட்டுப் பழகு எல்லாம் சரியாகும் என்கிறாள். 


அவன் பதில் தருகிறான். 


உலகைச் சுற்றிப் பார். இளமையில் எல்லாம் இன்பமாக இருக்கும். வயது ஆக ஆக இந்த காதல் வாழ்வில் துன்பமே மிஞ்சும்.  வயதான பின்னால் வரும் அறிவை இப்போதே அடைந்து, இதை விட்டு விட்டால் என்ன என்கிறான். 




ஆண்:உடலும் உடலும் சேரும் வாழ்வை

உலகம் மறந்தால் என்ன?

தினம் ஓடி ஆடி ஓயும் முன்பே

உண்மை அறிந்தால் என்ன?


அவள் விடாமல், ஆண் பெண் உறவைத் தவிர வேறு என்ன இன்பம் இருக்கிறது இந்த உலகில்?  ஏன் தயக்கம்? வா வந்து என்னை அணைத்துக் கொள் என்கிறாள். 



பெண்:உறவுக்கு மேலே சுகம் கிடையாது

அணைக்கவே தயக்கம் என்ன?


அவன் தத்துவப் பாதையில் செல்கிறான். இந்த உடம்பு ஓட்டை உடைசலால் ஆனது. இதற்குள் என்ன ஆசை வேண்டி கிடக்கிறது என்கிறான் . 


ஆண்: இது ஓட்டை வீடு ஒன்பது வாசல்

இதற்குள்ளே ஆசை என்ன?


அவள் சொல்கிறாள், பெரிய துறவி மாதிரி பேசாதே. பெரிய பெரிய துறவிகள் எல்லாம் மயங்கிய பூமி இது. எவ்வளவு கஷ்டப்பட்டு மனதை அடைக்கினாலும், அது பியித்துக் கொண்டு ஓடுவது பெண் சுகத்துக்குத்தான் என்கிறாள். 


பெண்:முனிவன் மனமும் மயங்கும் பூமி

மோக வாசல் தானே

மனம் மூடி மூடி பார்க்கும் போதும்

தேடும் பாதை தானே


அவன் சொல்கிறான், இந்த காதல், காமம் என்பது எல்லாம் உடம்பு நன்றாக இருக்கும் வரைதான். என்னைக்கு பாயில் படுக்கிரோமோ, அன்று கட்டிய மனைவியும், கணவனும் கூட திரும்பிப் பார்க்க மாட்டார்கள். முகம் சுளிப்பார்கள். இந்த காதல் எல்லாம் கானல் நீராகி விடும். 


ஆண் :பாயில் படுத்து நோயில் வீழ்ந்தால்

காதல் கானல் நீரே

இது மேடு பள்ளம் தேடும் உள்ளம்

போகும் ஞான தேரே


அவள் சோர்ந்து போகிறாள். இல்லறத்தைக் கேட்டால், துறவறத்தைக் கூறுகிறாயே இது என்ன ஞாயம் என்று கேட்கிறாள்.

பெண்:இல்லறம் கேட்டால் துறவறம் பேசும்

இதயமே மாறி விடு



ஆண் : நான் இதை எல்லாம் பார்த்து சலித்து விட்டேன். முடிந்தால் நீ உன்னை மாற்றிக் கொள் என்கிறான். 



நான் வாழ்ந்து பார்த்து சாய்ந்த தென்னை

உன்னை நீ மாற்றி விடு



https://www.youtube.com/watch?v=TRzsSrijUec&ab_channel=CenterMicCinema


அருமையான, யதார்த்தமான வரிகள். 


காதல், காமம், இளமை, முதுமை, வாழ்வின் விசித்திரங்களை அழகாக சொல்லும் கவிதை. 


L R ஈஸ்வரியின் குரல், அவ்வளவு சுகம். 





Thursday, November 28, 2024

திருக்குறள் - அருள் கருதி

 திருக்குறள் - அருள் கருதி 


இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது தலைக் கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று ஒரு சட்டம் இருக்கிறது. 


பலபேருக்கு அது பெரிய சங்கடமாக இருக்கிறது. தலைக்குள் வியர்கிறது, பின்னால் வரும் வண்டியின் சத்தம் கேட்பது இல்லை, தலை கலைகிறது, அதைத் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டி இருக்கிறது என்று அங்கலாய்ப்பார்கள்.


வேறு சிலரோ, என் தலை, என் உயிர், எனக்கு இல்லாத அக்கறை அரசாங்கத்துக்கு என்ன வேண்டி இருக்கிறது?  புகை பிடிப்பதை தடை செய்யாத அரசாங்கம், தலைக் கவசம் பற்றி ஏன் இவ்வளவு அலட்டிக் கொள்ள வேண்டும் என்று கோபம் கொள்வார்கள். 


நாளையே தலைக் கவசம் கட்டாயம் இல்லை என்று அரசாங்கம் சொல்லி விட்டால், எத்தனை பேர் அணிவார்கள் என்பது சந்தேகமே. 


இப்படி யோசிப்போம். 


தலைக் கவசம் அணிந்தால், விபத்து வரும் போது, அந்தக் கவசம் என் தலையைக் காக்கும், என் உயிரைக் காக்கும். நான் காப்பாற்றப் பட்டால், என் குடும்பம் கஷ்டப்படாது. எனவே, தலைக் கவசம் அணிவது எனக்கு நல்லது. அரசாங்கம் சட்டம் இயற்றினாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, என் பாதுகாப்புக்காக நான் அணிவேன் என்று சிலர் நினைக்கலாம். 


அவர்கள் அணிவது அவர்களின் நலம் கருதி. 


அது போல் அறத்தை கடைபிடிப்பது புத்தகங்கள் சொல்கின்றன, பெரியவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக அல்ல, அது நல்லது என்பதால் அவர்கள் அதை கடை பிடிக்கிறார்கள். 


வள்ளுவர் சொல்கிறார் 


"பிற உயிர்கள் மேல் அன்பு செய்வது மிகச் சிறந்தது என்று அறிந்து அவ்வுயிர்கள் மேல் அன்பு செய்தல் என்பது மற்றவர்களின் பொருளை தவறான வழியில் எடுத்துக் கொள்வோம் என்று நினைப்பர்களுக்கு வராது"


பாடல் 


அருள்கருதி அன்புடையர் ஆதல் பொருள்கருதிப்

பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்


பொருள் 


அருள்கருதி = அருளின் பெருமையை, சிறப்பை அறிந்து 


அன்புடையர் = மற்ற உயிர்கள் மேல் அன்பு செய்பவர்கள் 


ஆதல் = ஆவது 


பொருள்கருதிப் = மற்றவர்களின் பொருளை 


பொச்சாப்புப்= அவர்களின் சோர்வை எதிர்பார்த்து 


பார்ப்பார்கண் இல்  = காத்து இருப்பவர்களிடம் இல்லை 


மற்ற உயிர்கள் மேல் அருள்  செய்வது என்பது ஏதோ சாத்திரத்தில் சொல்லி இருக்கிறது, அப்படி செய்தால் புண்ணியம், செய்யாவிட்டால் பாவம் என்றெல்லாம் யோசிக்காமல், அருள்  செய்வது செய்வது நல்லது என்று அறிந்து அன்பு செய்பவர்கள் இருக்கிறார்கள். தன் பொருளையே மற்றவர்களுக்கு கொடுத்து, மற்றவர்கள் மகிழ்வது கண்டு தான் மகிழும் குணம் கொண்டவர்கள். இந்தக் குணமானது மற்றவர்கள் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் பொருளை கவர நினைப்பவர்களிடம் இருக்காது என்கிறார். 


களவுக்குக் காரணம், மனதில் பிற உயிர்கள் மேல் அன்பு இல்லாமை. 


துறவிக்கு வேண்டியது அனைத்து உயிர்கள் மேலும் அன்பு. அது அருள் எனப்படும். 


பொருள் வேண்டும் பொருள் வேண்டும் என்று பொருள் சேர்த்து, அதை நிர்வகிக்க கணக்கப்பிள்ளை, மேலாளர் என்று ஆள் அமர்த்தி வாழ்பவர்கள் துறவிகள் அல்ல.  


தன்னிடம் இருப்பதையும் மற்றவர்களுக்கு கொடுப்பவனே துறவி. 


மற்றவர்களிடம் இருப்பதை தனதாக்கிக் கொள்ள முயற்சி செய்பவன் துறவியாக இருக்க முடியாது.


ஒருவன் ஒரு துறவியை, சாமியாரை எப்போது சென்று பார்க்கிறான்?


ஏதோ ஒரு கவலை, துன்பம் வரும் போது ஆறுதல் வேண்டி செல்வான். இதுதான் சமயம் என்று பரிகாரம், அது இது என்று அவன் சோர்ந்த நேரத்தில் அவனிடம் உள்ள பொருளை பறிப்பவன் துறவி அல்ல. அப்படி பொருளைப் பெறுவது என்பது களவு ஆகும் என்கிறார் வள்ளுவர். 


 


Monday, November 18, 2024

திருக்குறள் - கன்றிய காதல்

திருக்குறள் - கன்றிய காதல் 


காதல் வந்து விட்டால் மனிதன் தன் வசம் இருப்பதில்லை. ஒருவிதமான பைத்தியம் பிடித்தது மாதிரி ஆகி விடுகிறான். காதலியை விட்டு ஒரு நிமிடம் கூட பிரிந்து இருக்க முடியாது. பிரிந்தாலும், எப்படா மீண்டும் அவளை காண்போம் என்று தவிப்பாக இருக்க முடியும். பிரிந்து இருக்கும் ஒவ்வொரு நொடியும் நரகம் மாதிரி இருக்கும். 


வள்ளுவர் கூறுகிறார், களவு செய்ய பழகிவிட்டால், அது காதல் போல. விட முடியாது. எப்போதும் அதே சிந்தனையாகவே இருக்கும். அடுத்து எப்ப களவாடலாம், யாரைக் களவடலாம் எப்படி களவு செய்யலாம் என்றே மனம் சிந்தித்துக் கொண்டே இருக்கும். 


அப்படி களவில் முழு மூச்சாக இறங்கி விட்டால் அது தொலையாத துன்பத்தையே கொடுக்கும்.


பாடல் 


களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்

வீயா விழுமம் தரும்


பொருள் 


களவின்கண் = மற்றவர் பொருளை அவர் அறியாமல் கவர்ந்து கொள்ளாலாம் என்ற நினைப்பில் 


கன்றிய= மிகுந்த 


காதல் = காதல் 


விளைவின்கண் = அது பலன் தரத் தொடங்கும் போது 


வீயா = தொலையாத 


விழுமம் = துன்பத்தைத்


தரும் = தரும் 


அது என்ன வீயா விழுமம் ? தொலையாத, முடிவில்லாத துன்பத்தைத் தரும். அதற்கு பரிமேலழகர் உரையில் "இந்தப் பிறவியில் மட்டும் அல்ல, இனி வரும் பிறவிகளிலும் துன்பத்தைத் தரும்" என்று குறிக்கிறார். 


ஏன் அப்படி வீயாத விழுமம் தரும் என்றால், களவின் மேல் காதல் கொண்டு விட்டால், புத்தி எப்போதும் அதன் மேலேயே சென்று கொண்டிருக்கும். பிடிபடும் வரை பல பாவங்களை செய்ய வைக்கும். களவு என்று வந்து விட்டால், பொய் சொல்லுவது, ஏமாற்றுவது, துரோகம் செய்வது, காட்டிக் கொடுப்பது என்று வேறு பல தீய குணங்களும் வந்து ஒட்டிக் கொண்டுவிடும். அவை எல்லாம் சேர்ந்து வீயாத விழுமம் தரும். 


ஒரு தரம் ஒரு பெண் பார்த்து சிரித்துவிட்டால் போதும். மனதுக்குள் மழை அடிக்கும். அவளை நோக்கி மனம் ஓடும். 


அது போல ஒரு முறை சிறிய களவை செய்து விட்டால் போதும், அதில் சுவை வந்துவிடும். நம்மை யார் கண்டு பிடிக்கப் போகிறார்கள் என்று மனம் சிந்திக்கத் தலைப்படும். மேலும் மேலும் ஆசை வளரும். களவின் மூலம் வந்த பொருள், அது தரும் சுகம், பொருளினால் வரும் புகழ், நட்பு, அதிகாரம், செருக்கு என்று மனம் போதையில் தள்ளாடும். 


எனவே, களவை அடியோடு ஒழிக்க வேண்டும். ஒரு முறைதானே, சின்ன அளவுதானே, தெரிந்த இடம் தானே என்றெல்லாம் சாக்கு போக்குச் சொல்லக் கூடாது. 


                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                           

Friday, November 15, 2024

கம்ப இராமாயணம் - இந் நின்றாள் என்னை ஈன்றாள்

கம்ப இராமாயணம் -  இந் நின்றாள் என்னை ஈன்றாள்


பிள்ளைகளுக்கு நல்லது செய்கிறோம் என்று பெற்றோர் நிறைய காரியங்களை செய்வார்கள். பிற்காலத்தில் அந்தப் பிள்ளைகளே அவற்றை மறுதலித்து, பெற்றோர் பால் வெறுப்பு கொள்வார்கள். 


"...உனக்காகத்தானே நான் அவ்வளவு ஓடி ஓடி உழைத்தேன்...நீ நல்லா இருக்க வேண்டும் என்று தானே இதெல்லாம் செய்தேன் ..." என்று ஒரு தகப்பன் கூறுவதும்....


"...யாருக்கு வேணும் உன் பணம்...ஒரு நாளாவது என்னோடு உட்கார்ந்து அன்பா பேசி இருக்கிறாயா? கை பிடித்து நடந்து இருக்கிறாயா?  கதை சொல்லி தூங்கப் பண்ணி இருக்கிறாயா?  இப்ப வந்து பாசம் இல்லை, அன்பு இல்லை என்றால் எங்கிருந்து வரும்...நீ எனக்கு பணம் சேர்த்து வைத்தாய், இல்லை என்று சொல்லவில்லை...பதிலுக்கு நான் வேண்டுமானால் உனக்குப் பணம் தருகிறேன்..."


என்று மகன் சொல்லுவதும் நாம் காணக் கூடிய காட்சிதான். 


இது ஒரு உதாரணம். இப்படி பலப் பல சொல்லலாம். 


அன்பினால் செய்தேன் என்பதலாயே ஒன்று சரியாகி விடாது. எது சரி, எது தவறு என்று அறிவு கொண்டு சிந்திக்க வேண்டும். எது அறம், எது அறம் அல்லாதது என்ற அறிவு வேண்டும். 


பரதனுக்கு நாடு வேண்டும் என்று கைகேயி நினைத்ததில் என்ன தவறு? தன் பிள்ளைக்கு பெரிய இராஜ்யத்தை கொடுக்கிறோம். அவன் வந்து தன்னைக் கட்டிக் கொண்டு மகிழ்வான் என்று கைகேயி நினைத்து இருக்கக் கூடும். 


நடந்தது என்ன?


பரதனிடம், கைகேயைக் காட்டி குகன் கேட்கிறான் , "இவர் யார் என்று"


"பரதனுக்கு கோபமும், வெறுப்பும், அருவெறுப்பும் பொங்கி பொங்கி வருகிறது....


"உலகில் உள்ள அனைத்து துன்பங்களையும் படைத்தவள் இவள். படைத்தது மட்டும் அல்ல, அவற்றை வளர்த்து எடுப்பவளும் இவள். பாவியான என்னை மட்டும் அல்ல, இந்த உலகில் உள்ள அனைவர்க்கும் உயிர் வாழ்வதே வீண், உயிரை விட்டு விடலாம் என்று நினைக்கும் அளவுக்கு அவர்களை நடை பிணமாக்கியவள் இவள். இவ்வளவும் செய்து விட்டு ஒன்றும் செய்யாத மாதிரி எப்படி முகத்தை வைத்துக் கொண்டிருக்கிறாள் பார். இவள் யார் என்று இன்னுமா உனக்குத் தெரியவில்லை? இவள் என்னைப் பெற்ற தாய்"  


என்று கைகேயியை, பரதன் குகனிடம் அறிமுகம் செய்கிறான். 


பாடல் 



‘படர் எலாம் படைத்தாளை, பழி வளர்க்கும்

     செவிலியை, தன் பாழ்த்த பாவிக்

குடரிலே நெடுங் காலம் கிடந்தேற்கும்

     உயிர்ப் பாரம் குறைந்து தேய,

உடர் எலாம் உயிர் இலா எனத் தோன்றும்

     உலகத்தே, ஒருத்தி அன்றே,

இடர் இலா முகத்தாளை, அறிந்திலையேல்,

     இந் நின்றாள் என்னை ஈன்றாள்.’


பொருள்



‘படர் = துன்பம். பெரும் துன்பம். 


 எலாம் படைத்தாளை = அனைத்து பெரிய துன்பங்களையும் உண்டாகியவளை 


பழி வளர்க்கும் = பழியை வளர்க்கும் 


செவிலியை = செவிலித்தாயை 


தன் = தன்னுடைய 


பாழ்த்த = பாழாய்ப்போன 


பாவிக் குடரிலே = பாவம் செய்த குடலிலே 


நெடுங் காலம் = நீண்ட காலம் 


 கிடந்தேற்கும் = கிடந்த எனக்கும் 


உயிர்ப் பாரம் = உயிரே பாரமாய் ஆகும் படி. பாரத்தை எப்போது இறக்கி வைப்போம் என்று நினைப்பது போல, எப்போது இந்த உயிரை விடுவோம் என்ற என்று நினைக்கும் படி 


குறைந்து தேய = குறைந்து தேய 


உடர் எலாம் = உடல்கள் எல்லாம் 


உயிர் இலா எனத் தோன்றும் = உயிரற்றவை என்று தோன்றும் படி 


உலகத்தே = இந்த உலகத்தில் 


ஒருத்தி அன்றே = சிறந்த ஒருத்தி 


இடர் இலா முகத்தாளை = ஒன்றுமே நடக்காதது போல் முகத்தினை வைத்துக் கொண்டு 


அறிந்திலையேல் = நீ இன்னுமா அறிந்து கொள்ளவில்லை 


இந் நின்றாள் = இங்கே நிற்கிறாளே இவள் 


என்னை ஈன்றாள் = என்னை பெற்றத் தாய் 


என்று அறிமுகள் செய்கிறான். 


எல்லோரும் அருகில் இருக்கிறார்கள். ஒரு மூன்றாவது மனிதனிடம் தன் தாயைப் பற்றி பரதன் அவ்வாறு பேசுகிறான். 


கூனி அவளுடைய மனதை மாற்றும் வரை கைகேயி மிக நல்லவள். இராமனை தன் சொந்த மகனாக நினைத்தவள். தயரதனுக்கு அன்பு மனைவி. 


பரதனையும் சீரும் சிறப்புமாகவே வளர்த்து இருப்பாள். 


"சிறு வயது முதலே அவள் அப்படித்தான்" என்று பரதன் குற்றம் சாற்ற முடியாது. 


கைகேயி தவறு செய்து விட்டாள். அறம் தவறினாள். அதற்காக பெற்ற தாயை பரதன் இவ்வளவு கீழ்த்தரமாக பேசலாமா?  


இத்தனைக்கும் அவள் பரதனுக்கு ஒரு தீங்கும் செய்யவில்லை. 


ஆயிரம் இராமர், கோடி இராமர் உனக்கு ஈடாக மாட்டார்கள் என்று பாராட்டப் பெற்ற பரதன் தாயை இவ்வளவு தாழ்வாக பேசலாமா? 


ஏன் பேசினான்?


முதலாவது, அன்பு, பாசம் இவற்றிருக்கு எல்லாம் மேலானது அறம். கைகேயி நடுவு நிலை தவறினாள். தன் பிள்ளை என்பதற்காக தர்மத்தை காற்றில் பறக்க விட்டாள். அன்பு என்ற போர்வைக்குள் அவள் செய்த முதல் தவறு. 


இரண்டாவது,  இறைவனுக்கும் பக்தனுக்கும் நடுவில் அவள் வந்து நின்றாள். பரதன் என்ற பக்தனை இராமன் என்ற பரம் பொருளிடம் இருந்து பிரித்து விட்டாள். அது ஒரு மிகப் பெரிய தவறு. பக்தி செலுத்துவோரை குழப்பக் கூடாது. கணவன் மனைவி உறவு போல் அது ஒரு புனிதமான உறவு. அதன் நடுவில் சென்று குழப்பம் விழைவிக்கக் கூடாது. 


இராவணன் செய்த தவறு என்ன?  சீதைக்கும் இராமனுக்கும் இடையில் அவன் வந்தான். 


யோசித்துப் பார்த்தால், எந்த உறவுக்கும் நடுவில் செல்வது தவறு என்றே படுகிறது. மகனுக்கும், மருமகளுக்கும் உள்ளை உறவின் நடுவே மாமியார் மூக்கை நுழைப்பதும் தவறுதான். 


மூன்றாவதாக, இறைவனை விட்டு விட்டு, உலக இன்பங்களில் நாட்டம் கொல்லுவது. இராமனை காட்டுக்கு அனுப்பி விட்டு, அரசை ஆள்வது எவ்வளவு அறிவான செயல் ?  பலர் அப்படித்தான் செய்கிறார்கள். கடவுளைப் பற்றி அப்புறம் (பதினாலு வருடம்) சிந்திக்கலாம். இப்போதைக்கு வீடு, வாசல், சொத்து, பத்து என்று இருப்போம் என்று இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் கைகேயி என்றே உருவகம் செய்து கொள்ளலாம். 


உலகிலேயே தாயன்புதான் மிக உயர்ந்தது என்று சொல்லக் கேட்டு இருக்கிறோம். 


அது கூட அறத்துக்குப் பிறகுதான். அது கூட பக்திக்குப் பிறகுதான் என்று என்று சொல்கிறதோ நம் இலக்கியங்கள்....


சிந்திப்போம். 



Tuesday, November 12, 2024

குண்டலகேசி - நமக்குநாம் அழாதது என்னோ?

 குண்டலகேசி - நமக்குநாம் அழாதது என்னோ?


மற்றவர்களுக்குத் துன்பம் வந்தால் அழுகிறோம். நெருங்கிய சொந்தத்தில், உறவில், நட்பில் யாராவது இறந்து போனால் அழுகிறோம்.  

மற்றவர் துன்பத்துக்கு வருந்தும் அதே நேரத்தில் நமக்கு அந்த அளவு துன்பம் இல்லை என்ற சின்ன ஆறுதலும் இருக்கிறது. 


தினமும் செய்தித்தாள், தொலைகாட்சி போன்றவற்றைப் பார்க்கும் போது, "ஆண்டவா, என் நிலை அவ்வளவு மோசம் இல்லை" என்று ஒரு ஆறுதல் பிறக்கிறது. இல்லை என்றால் செய்தித்தாள்களும், தொலைக்காட்சிகளும் நல்ல செய்திகளை மட்டும்தான் போடும். 


எனக்கு சில சமயம் தோன்றும், மற்றவர்கள் துன்பங்களை பார்க்கும் போது நமக்குள் ஒரு சந்தோஷம் கூட பிறக்கிறதோ என்று. நம்மால் பெரிதாக ஒன்றையும் சாதிக்க முடியாது. நம் சந்தோஷம் என்பது மற்றவர்களின் நிலை நம்மைவிட கீழே இருப்பதை பார்பதில் வருகிறது. இந்த உலகில் எல்லோரும் நம்மை விட உயர்வாக இருக்கிறார்கள் என்று இருந்தால் நம்மால் சந்தோஷமாக இருக்க முடியுமா?  



குண்டலகேசி கேட்கிறது, "நீ எத்தனை முறை இறந்திருக்கிறாய். எப்பவாவது அதற்காக அழுதிருக்கிறாயா?  


கருவறையில் இருந்தாய்?  அந்த நிலை தொடர்ந்ததா? அது  மறைந்து பிள்ளையாய் பிறந்தாய். 


பிள்ளையாகவே இருந்தாயா என்றால் அதுவும் இல்லை. கொஞ்ச நாளில் அந்த பிள்ளைப் பருவம் மறைந்து விட்டது. குமாரனானாய். 


அதுவும் நீடிக்கவில்லை. 


அது இறந்து காமம் கொள்ளும் இளைஞனானாய். பின் அந்த நிலையும் மாறியது. 


வயதாகி கிழவனானாய். 


இப்படி எத்தனை முறை இறந்து இறந்து பிறப்பாய்? இப்படி ஒவ்வொன்றாக இழந்ததற்கு எப்போதாவது அழுதிருகிறாயா? எவ்வளவு அருமையான இளமை போய் விட்டதே. ஒரு வருத்தம் இருகிறதா?  


முதலில் உன்னைப் பற்றி வருத்தம் கொள். எல்லாம் போய் விடும். அதற்குள் ஏதாவது செய்ய வேண்டும் என்றால் செய்து கொள். சும்மா மற்றவர்களுக்காக துயரப் பட்டுக் கொண்டிருக்காதே. அது வெட்டி வேலை. உன் துயரே பெரும் துயராக இருக்கிறது. 


யோசித்துப் பார்த்தால் இதில் உள்ள உண்மை விளங்கும். 


வீட்டில் பல பெரியவர்களுக்கு மகன் என்ன செய்கிறாள், மருமகள் என்ன செய்கிறாள், பேரன் பேத்திகள் என்ன செய்கிறார்கள், மகள் எப்படி இருக்கிறாள் என்று எந்நேரமும் மற்றவர்களைப் பற்றியே சிந்தனை. தேவையில்லாமல் அவர்கள் வாழ்வில் மூக்கை நுழைக்க வேண்டியது. அவர்கள் கேட்க வில்லை என்றால் வருந்த வேண்டியது. 


காரணம் என்ன?


தனக்குள் ஒன்றும் இல்லை. தன்னைப் பற்றி சிந்திக்க ஒன்றும் இல்லை. அதை மறைக்க மற்றவர்களைப் பற்றியே எந்நேரமும் சிந்திக்க வேண்டியது. 


குண்டலகேசி அதை மாற்றச் சொல்கிறது. உன்னைப் பற்றி சிந்தி. என்று சொல்கிறது. 


சிந்தித்துதான் பார்ப்போமே. 


பாடல் 

பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்

காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்

மீளும் இவ் இயல்பும் இன்னே மேல்வரும் மூப்பும் ஆகி

நாளும் நாள் சாகின்றாமால் நமக்குநாம் அழாதது என்னோ


பொருள் 


பாளையாம் தன்மை செத்தும் = கருவறையில் உள்ள குழவியாய் இருந்த நிலை செத்தும் 


பாலனாம் தன்மை செத்தும் = பாலகனாய் இருந்த நிலைமை செத்தும் 


காளையாம் தன்மை செத்தும் = காளைப் பருவமும் செத்தும் 


காமுறும் இளமை செத்தும் = காமம் கொள்ளும் அந்த நிலை செத்தும் 


மீளும்  = மீண்டும் மீண்டும் 


இவ் இயல்பும் = இந்த காரியங்களே 


இன்னே = இது போலவே 


மேல்வரும் மூப்பும் ஆகி = நாள் ஆகி நாள் ஆகி மூப்பு வந்த பின் 


நாளும் நாள் சாகின்றாமால் = ஒவ்வொரு நாளும் நாம் இறந்து கொண்டே இருக்கின்றோம் 


நமக்குநாம் அழாதது என்னோ = நமக்கு நாமே அழாமல் இருப்பது எதனால் ?


மரணம் நமக்கு வராது என்றுஎப்படி நினைக்கக் கூட முடிகிறது. 


நம் நிலை நோக்கி வருந்தி, அதில் இருந்து மீள வழி பார்ப்போம். மற்றவர்கள் அவர்கள் வாழ்க்கையைப் பார்த்துக் கொள்வார்கள். 



Sunday, November 10, 2024

செம்பூவே ...பூவே...பாகம் 3

 

 செம்பூவே ...பூவே...பாகம் 3


மாலை நேரம்...சூரியன் மேற்கில் மறையும் நேரம். கொஞ்சம் கொஞ்சமாக சூரிய கீழே இறங்கிக் கொண்டே போகும் நேரத்தில், தூரத்தில் உள்ள மலை முகடுகள் நில மகள் படுத்துக் கிடக்கும் போது அவளின் மார்புகள் போலத் தெரிகிறது. அவள் மார்பை மறைக்கும் மேலாடையாக அந்த மேகங்கள் அந்த மலை முகட்டினை மூடுகின்றன. 
 

ஆண் : 

அந்திச் சூரியனும் குன்றில் சாய
மேகம் வந்து கச்சையாக


அந்த மாலை நேரத்தில், அவனுடைய காதலி புல் வெளி மேல் சாய்ந்து படுத்து இருக்கிறாள். அவளுடைய சேலை அந்தப் புல் வெளி மேல் காற்றில் அங்கும் இங்கும் அசைகிறது. 

அப்படி அசையும் அந்த சேலை ஏதோ ஒரு நதி ஓடுவது போல இருக்கிறது. அந்த நதியில் மூழ்கி நீந்தி விளையாட வரவா என்று அவளைக் கேட்கிறான். 


தேன் தெளிக்கும் தென்றலாய்
நின்னருகில் வந்து நான்
சேலை நதியோரமாய்
நீந்தி விளையாடவா

அதுவும் எப்படி, தென்றல் போல மெல்ல அருகில் வந்து, சேலை நதியில் இறங்கி நீந்தி விளையாட வரவா என்று மென்மையாகக் கேட்கிறான்.....





Tuesday, November 5, 2024

பன்னிரண்டு மாதங்கள்

பன்னிரண்டு மாதங்கள் 



பள்ளிப் பருவம். இறுதி ஆண்டு. இன்னும் ஓரிரு மாதங்கள்தான். பரீட்சை வரும், முடிவு வரும்..அப்புறம் அவரவர் வேறு வேறு திசை நோக்கி போக வேண்டியதுதான்.  


இரண்டு ஆண்டுகளாக சொல்ல வேண்டும் ...சொல்ல வேண்டும் என்று தவித்துக் கொண்டிருந்த வார்த்தைகள்... மிதந்து மிதந்து மேலே வரும் நேரம். 


இன்னும் பயம் போகவில்லை. எப்படி அவளிடம் சொல்லுவது. சொன்னால் என்ன சொல்லுவாள். பயந்து விட்டால். ஒரு வேளை பிடிக்கவில்லை என்றால்...


தயக்கம் போகவில்லை. 


இந்த ஆண்டு ஏன் பன்னிரண்டு மாதத்தில் முடிந்து போகிறது. ஒரு பதிமூணு, அல்லது பதினாலு மாதம் இருந்தால் என்ன. அல்லது இப்படியே முடியாமலேயே நீண்டு கொண்டே போனால் என்ன?


"மாதங்களை எண்ண பன்னிரண்டு வரலாம் 
உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட"

இப்படியே தினம் தினம் அவளை பார்த்துக் கொண்டே இருக்கலாம். 



(படம்: ஒருதலை இராகம், பாடல்: வாசமில்லா மலரிது) 

Sunday, November 3, 2024

30,00,000 page views

 30,00,000 page views

இந்த ப்ளாக் ன் page view இன்று 30 இலட்சத்தை தாண்டி விட்டது. 


படித்த எல்லோருக்கும் நன்றி. 



Wednesday, October 30, 2024

செம்பூவே ...பூவே...பாகம் 2

 செம்பூவே ...பூவே...பாகம் 2 


அவளிடம் நெருங்க வேண்டும், அவள் கைகளைப் பற்றிக் கொள்ள வேண்டும், அணைக்க வேண்டும், முத்தம் தர வேண்டும் என்றெல்லாம் அவனுக்கு ஆசைதான். அவளுக்கும் ஆசை உண்டு. என்ன செய்ய, பாழாய்ப்போன வெட்கம் விட மாட்டேன் என்கிறதே. 


தள்ளி நின்று அவளை இரசிக்கிறான். அவள் வெட்கத்தையும் சேர்த்து. 


இதழோடு இதழ் ஒத்திக் கொண்டால்தானா முத்தம். 


கண்களே அந்த வேலையைச் செய்கிறன. 


"ஆண்: இமைகளும் உதடுகள் ஆகுமோ"


அவளும், பரவாயில்லை என்று கொஞ்சம் வெட்கத்தை தள்ளி வைத்து விட்டு அவனை நெருங்குகிறாள்.. கொஞ்சம் அனுமதிக்கிறாள். ச்சே...இந்த வெட்கம் மீண்டும் ஓடி வந்து ஒட்டிக் கொள்கிறது. அவளுக்கும் ஆசைதான் இந்த வெட்கத்தை முழுவதுமாக தள்ளி வைத்து விட்டால் என்ன என்று...முடியணுமே..கொஞ்சம் பொறு என்று அவனை தள்ளி வைக்கிறாள். அவனுக்கோ பொறுமை இல்லை. அவள் கேட்கிறாள் "கொஞ்சம் வெட்கம் போனால் ஏதோ இனி ஆயுள் பூராவும் வெட்கம் வராது என்று நினைத்தாயா" என்று. 


பெண்: வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ


எத்தனை வயது ஆனாலும், வெட்கம், அந்தத் தயக்கம், பெண்ணோடு பிறந்த குணம். ஒரு நாளும் விட்டுப் போகாது. சில சமயம் கொஞ்சம் விடுமுறை எடுக்கும். பின் வேலையில் வந்து சேர்ந்து விடும்.....





Monday, October 28, 2024

செம்பூவே பூவே ...

 செம்பூவே பூவே ...


காதல் பாடல் எழுதுவது என்பது சாதாரண வேலை அல்ல. 


ஆண் பெண் மோகம் உடல் சார்ந்ததுதான். அந்த மோகத்தை கொண்டாட வேண்டும். அதே சமயம் கொஞ்சம் தப்பினாலும் விரசமாகி முகம் சுளிக்க வைத்து விடும். 


இந்தக் கலையின் முன்னோடி நம் தாத்தா வள்ளுவர்தான். தேன் சொட்ட சொட்ட காதலைப் பிழிந்து இன்பத்துப் பால் வடித்துத் தந்திருக்கிறார். ஒரு அப்பாவும் மகளும் ஒன்றாக அமர்ந்து படிக்கலாம். அம்மாவும், மகனும் ஒன்றாக அமர்ந்து படிக்கலாம். விரசம் துளியும் இல்லாமல், அதே சமயம் காதலின், மோகத்தின் அத்தனை இன்பத்தையும் குறளில் வடித்த பேராசான் அவர். 


தமிழ் சினிமா பாடல்களில் எத்தனையோ பாடல்கள் அது போல் உண்டு. 


என்னை மிக மிக கவர்ந்த பாடல் என்றால் சிறைச் சாலையில் வரும், பூவே செம்பூவே என்ற பாடலைச் சொல்வேன். 


காதல் மதி என்ற கவிஞர் எழுதியது. 


பூவிடம் அந்த மேகம் கேட்கிறது, நான் உன் அருகில் வரலாமா என்று. 


அதற்கு அந்த பூ சொல்கிறது, ஒரு துளி மழைத் துளிதான், அது விழுந்த சிப்பியில் விழுந்தால் அது முத்தாக மாறி விடுவது உனக்குத் தெரியாதா என்று கேட்கிறாள். 


நான் மேகம் போல், அவ்வளவு மென்மையாக உன்னை வருடிப் போவேன் என்கிறான் அவன். அவளோ, திருமணத்துக்கு முன் இதெல்லாம் வேண்டாம் என்பதை மென்மையாகச் சொல்கிறாள்.


ஆண்: செம்பூவே பூவே உன் மேகம்
நான் வந்தால் ஒரு வழியுண்டோ
பெண்: சாய்ந்தாடும் சங்கில் துளி
பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே

அவள் பேரழகி. வடித்து வைத்த சிலை மாதிரி இருக்கிறாள். அதுவும் மன்மதன் வடித்த சிலை என்றாள் கேட்கவும் வேண்டுமா?  சிலை என்றால் சும்மா இருக்கவில்லை. புருவ வில்லும், கண் என்ற ஈட்டி என்ற படைகளும் கொண்டு நடக்கும் மன்மத சிலை அவள். 

அந்த சிலையை வடித்த மன்மதன் வேறு யாரும் அல்ல, அவளின் காதலன் தான். அவளை அங்கு தொட்டு சில்மிஷம் செய்கிறான். அவள் வெட்கத்தில் நெளிகிறாள். அவன் அவளை அப்படி தொட்டு தொட்டு பேசுவது ஏதோ விரல் என்ற உளி கொண்டு பல்லவன் சிற்பம் செதுக்கிய மாதிரி இருக்கிறது. 

தூரத்தில் இருந்து பார்த்தால், அவன், அவனுடைய விரல்களால் அவள் உடம்பில் மெருகேற்றுவது போல் இருக்கிறது. 

ஆண்: படை கொண்டு நடக்கும்
மன்மதச் சிலையோ ஹோ...
பெண்: மன்னவன் விரல்கள்
பல்லவன் உளியோ ஹோ...

(தொடரும்) 

Sunday, October 27, 2024

காணாத கண்ணும் கண்ணல்ல

 காணாத கண்ணும் கண்ணல்ல 


"பெரியானை பெரும்பற்ற புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே"


என்றார் நாவுக்கரசர். 


நமக்கு அந்த அளவுக்கு பக்தி விரியுமா என்று தெரியவில்லை. 


நம் வாழ்வில், நம் துணை மேல் நாம் வைக்கும் அன்பும் காதலும் கூட அந்த நிலைக்கு நம்மை இட்டுச் செல்ல முடியும். 


பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே



உன்னைக் காணாத கண்ணும் கண் அல்ல

உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல 

நீ சொல்லாத சொல்லும் சொல் அல்ல 

நீ இல்லாமல் நானும் நான் ஆல் 

 

உன்னைப் பார்பதை விட்டு விட்டு எதை எதையோ பார்த்துக் கொண்டிருக்கிறேன். எதைப் பார்த்தாலும் மனதுக்குள் எதுவும் போவது இல்லை. ஏதோ வறுமையாக இருக்கிறது. கண் முன்னால் காட்சிகள் வந்து போகின்றன. எதுவம் மனதை எட்டுவது இல்லை. இந்தக் கண்கள் இருந்தும் ஒன்றையும் பார்ப்பது இல்லை. 


எங்கே போனாலும் கண்கள் உன்னைத் தேடுகின்றன. எது அவள் அல்ல, அது அவளாக இருக்குமோ, இல்லையே, அதுவும் அவள் இல்லையே என்று நீ இல்லாத எது ஒன்றையும் கண்கள் பார்க்க மறுக்கின்றன. நீ இல்லை என்றால், அடுத்ததுக்கு தாவி விடுகிறது. 


நீ பேசும் போது ஒவ்வொரு சொல்லும் எவ்வளவு இனிமையாக இருக்கிறது. அதே சொல்லை வேறு யாராவது சொன்னால் அது ஏதோ உயிர் இல்லாத சத்தம் மாதிரி இருக்கிறது. நீ சொன்னால் தான் அது பொருள் உள்ள சொல். மற்றவை எல்லாம் வேறு சப்தம் தான்.


உன்னை பற்றி சிந்தித்துக் கொண்டு இருக்கும் போதே மனம் வேறு எங்கோ போய் விடுகிறது. சட்டென்று விழித்துக் கொண்டு மீண்டும் உன் நினைவுகளில் கொடி போல படர்கிறது. மனம் முழுவதும் நீ தான். எங்கு சுத்தினாலும் உன்னையே வந்து சேர்ந்து விடுகிறது. தாயின் காலைக் கட்டிக் கொள்ளும் பிள்ளை போல். இந்த மனம் இருப்பதே உன்னை சிந்திக்க மட்டும் தான். உன்னை சிந்திக்காத மனம், மனமே இல்லை. 


யோசித்துப் பார்கிறேன். நீ இல்லை என்றால் நான் எதைப் பார்ப்பேன், எதைக் கேட்பேன், எதை சிந்திப்பேன்?  சிந்திக்கவும், பார்க்கவும், கேட்கவும் ஒன்றும் இல்லை. அப்படிப்பட்ட உலகில் நான் இருந்தால் என்ன, இல்லாவிட்டால்தான் என்ன?


நீ இல்லாமல் நானும் நான் அல்ல. 


நீ இல்லாவிட்டால் நான் இருப்பேன். அது நானாக இல்லை. வேறு ஒரு ஆளாக இருப்பேன். வெளி உலகுக்குக்கு என்று சிரித்துப் பேசி ஒரு இயந்திரம் போல இருப்பேன். அது நானே இல்லை. வேறு எதுவோ. 


என்ன ஒரு பெண் மேல் இவ்வளவு காதலா? 


சிற்றின்பமே பேரின்பத்துக்கு வழி. 


இதுவே புரிபடவில்லை என்றால் அது எங்கே புரியப் போகிறது. 


இரண்டாம் வாய்ப்பாடே தெரியவில்லை என்றால் இருபதாம் வாய்ப்பாடு எப்படி புரியும். 


பக்தியும், கடவுளும், ஆழ்வார்களும், நாயன்மார்களும் இருக்கட்டும். 


வாழ்வை உருகி உருகி நேசிப்போம். உடன் இருப்பவர்களை உள்ளன்போடு நேசிப்போம். 


முதல் படி அது. அதில் காலெடுத்து வைப்போம். 


இறுதிப் படி வரும் ஒரு நாள். 


 

Thursday, October 24, 2024

திருக்குறள் - ஆவது போலக் கெடும்

 திருக்குறள் - ஆவது போலக் கெடும் 


என்னதான் அறம் சொன்னாலும், ஊருக்குள்ள அயோக்கியத்தனம் செய்பவன் எல்லாம் நல்லாத்தான் இருக்கான். ஆள், அம்பு, சேனை, அதிகாரம், புகழ் என்று அனுபவிக்கிறார்கள். உண்மை, நேர்மை, அறம் என்று வாழ்பவர்கள் அப்படி ஒன்றும் பெரிதாக பலன் அடைந்த மாதிரி தெரியவில்லை. 


இதை எல்லாம் பார்க்கும் போது, என்ன பெரிய அறம், நாமும் குறுக்கு வழியில் சென்று நாலு காசு பார்த்தால் என்ன என்ற சலிப்பு யாருக்கும் வரும். 


வள்ளுவர் சொல்கிறார், 


"தீய வழியில் வரும் செல்வம், முதலில் பெரிதாக வளர்வது போல் தோன்றும். ஆனால், பின்னாளில், பெரிய கேட்டினைத் தரும்"


என்று. 


பாடல் 


களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து

ஆவது போலக் கெடும்


பொருள் 


களவினால் = களவின் மூலம் 


ஆகிய ஆக்கம் = உண்டாக்கிய செல்வம் 


அளவிறந்து = அளவில்லாமல் 


ஆவது = பெருகி வருவது  


போலக்  = போலத் தோன்றி 


கெடும் = பின்னாளில் அழியும் 


ஆமா, என்ன பெரிய கெடுதல். எல்லாம் நல்லாத்தான் இருக்கிறார்கள்....


தவறுகள், களவு செய்வதற்கு முன்னால், ஒருவனிடம் ஏதோ கொஞ்சம் பொருள் இருக்கும். மேலும் மேலும் வேண்டும் என்று ஆசைப்பட்டு தவறான வழியில் சென்று பொருள் தேட ஆரம்பித்தால், தவறான வழியில் வந்த செல்வம் மட்டும் அல்ல, முதலில் சேர்த்து வைத்து இருந்த செல்வமும் போய் விடும்.  raid வந்தால், எது எந்த பணம் என்றா பார்ப்பார்கள். எல்லாவற்றையும் கொண்டு போய் விடுவார்கள். 


அது ஒரு கெடுதல். 


தவறான வழியில் போவதன் முன் ஊருக்குள் நல்ல பேர் இல்லாவிட்டாலும், கெட்ட பேர் இருக்காது. தவறான வழியில் பொருள் தேடி, போலீஸ் பிடித்துக் கொண்டு போய் விட்டால், இருக்கும் கொஞ்ச நஞ்சம் மரியாதையும் போய் விடும். செய்பவனின் மரியாதை மட்டும் அல்ல, அவனுடைய பெற்றோர், உடன் பிறப்பு, மனைவி, பிள்ளைகள் அனைவரின் மரியாதையும் போய் விடும். 


அடுத்த கெடுதல். 


தீய வழியில் பொருள் தேட முனையும் போது சில பல பாவங்களை செய்ய நேரிடும். அந்த வழி அறத்தில் இருந்து ஒருவனை விலக்கி பாவ வழியில் செலுத்தும். புண்ணியம் குறைந்து பாவம் கூடும்.


இந்தப் பிறவியில் பழி சுமந்தது போக வரும் பிறவியில் இந்த பாவத்தை அனுபவிக்க துன்பப்பட நேரிடும்.  இந்த வாழ்க்கையையும் கெடுக்கும். இனி வரப் போகும் வாழ்க்கையையும் கெடுக்கும். 


இந்தப் பிறவியில் கார், பெரிய வீடு, என்று சொகுசாக வாழ்ந்தாலும், அடுத்த பிறவியில் என்னவாக பிறப்பானோ, யார் அறிவார். 


ஜென்ம ஜென்மத்துக்கும் துன்பத்தைத் தேடித் தரும் அந்தப் பொருள் தேவையா?  


"அளவிறந்து கெடும்"...அளவில்லாமல் கெடும். எவ்வளவு கெடுதல் என்று சொல்ல முடியாது. அவ்வளவு கெடுதல் வந்து சேரும். 


யோசிக்க வேண்டிய விடயம். 


Wednesday, October 23, 2024

என் கண்கள் இரண்டும் பல்லாண்டு பாடி...

 என் கண்கள் இரண்டும் பல்லாண்டு பாடி...


என்ன எப்ப பார்த்தாலும் அற இலக்கியங்களும், பக்தி இலக்கியங்களும் தானா என்று கேட்பவர்களுக்கு, இன்று ஒரு புதிய முயற்சி. 


தமிழ் திரைப்படப் பாடல்களிலும் மிக மிக இனிமையான, இலக்கிய தரம் உள்ள பாடல்கள் உண்டு. 


பாடல்களின் இசைப் பின்னணி, பாடுபவர்களின் குரல், அந்தப் பாடலுக்கு நடித்தவர்களின் பின்னணி, பாவங்கள், அந்தப் பாடல் எடுக்கப்பட்ட இடம் என்று பல விடயங்கள் குறுக்கிடுவதால், பாடலின் முழு அர்த்தத்தையும் நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை. 


எனக்குப் பிடித்த சில பாடல்களை,  உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆவல். 


முதல் பாடல், அந்தமான் காதலி படத்தில், கண்ணதாசன் எழுதிய "நினைவாலே சிலை செய்து" என்ற பாடல். 


நாம் கடையெழு வள்ளல்களைப் பற்றி பேசும் போது, முல்லைக்கு தேர் தந்தான், மயிலுக்கு போர்வை தந்தான் என்றெல்லாம் படிக்கிறோம். அதெல்லாம் என்ன பெரிய கொடை. என் காதலி முல்லைப் பூவுக்காக தன் கூந்தலையே தந்திருக்கிறாள். தேர் என்ன பெரிய தேர், தன் தலையையே கொடுத்தவள் என் காதலி. 


முல்லைக்கு குழல் தந்த பெண்மைக்கு பெண்மை நீ 


குழந்தையை கையில் வைத்து இருந்தால் கை வலிக்கிறது. கீழே இறக்கி விட்டால் மனம் வலிக்கிறது என்பார்கள். 


என் மனைவி குழந்தையை ஒரு கணம் கூட கீழே விட மாட்டாள். எப்போதும் கையிலேயே தூக்கிக் கொண்டு நடப்பாள். அவ்வளவு அன்பு. 


"பிள்ளைக்கு தோள் தந்த அன்னைக்கு அன்னை நீ".


பெண்களின் குரல் இயற்கையிலேயே இனிமையாக இருக்கும். அதுவும் காலையில் எழுந்து, முகம் கழுவி, பொட்டு வச்சு, ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே காப்பி போடுவது, காலை சமையல் செய்வது என்று இருக்கும் போது அந்த குரலின் இனிமை ...ஒரு பூபாள இராகம் மாதிரி வந்து என் காதில் விழுகிறது. அதைக் கேட்ட பின் தான் நான் எழுவேன்....


"அதி காலையில் நான் கேட்பது நீ பாடும் பூபாளம்"


ரொம்ப நேரம் கண் விழித்து வேலை செய்தால் கண்கள் சிவந்து போய் விடும். அயல் நாடுகளுக்கு பயணம் செய்பவர்கள் சொல்வார்கள், "red eye flight" என்று. தூங்காமல் பயணம் செய்தால் கண்கள் சிவந்து போய் விடும். 


ஒரு சில மணி நேரத்துக்கே அப்படி என்றால், நாள் கணக்கில், மாதக் கணக்கில், வருடக் கணக்கில் கண் மூடாமல் இருந்தால் எப்படி இருக்கும். 


போன காதலன் வரவில்லை. அவன் வரவை  ஒவ்வொரு நாளும் அவள் எதிர் நோக்கி இருக்கிறாள். எங்கே கண் மூடினால், அந்த நேரத்தில் அவன் வந்து விடுவான், அவன் வரும் போது அவனை பார்க்க முடியாமல் போய் விடுமோ, அந்த நொடியை இழந்து விடுவோமோ என்ற பயத்தில், கண் மூடாமல் அவன் வரும் வழி பார்த்து காத்து இருக்கிறாள். 


அப்படி இருந்ததில் அவளின் கண்கள் சிவந்து போய் விட்டன. எப்படி ? ஏதோ ஒரு ஓரத்தில் அல்ல. முழு கண்ணும் சிவந்து போய் விட்டது. 


"செவ்வானம் ஆனேன் உனைத் தேடித்  தேடி"


கோல மாவில் கோலம் போட்டால் நன்றாக பளிச்சென்று வெள்ளையாக இருக்கும். கண்ணீரில் உள்ள உப்பு காய்ந்து போனாலும், அது வெள்ளையாக காட்சி தரும். அவள் அழுது அழுது, கண்ணீர் கன்னத்தின் வழி ஓடி, காய்ந்து, அந்த உப்பு பொறிந்த கன்னம், அதில் கோலம் போட்ட மாதிரி இருக்கிறதாம். 


"கண்ணீரிலே நான் தீட்டினேன் கன்னத்தில் கோலங்கள்"


கோவில் கட்டும் போது அதில் வைக்க வேண்டிய சிலைகளும் செய்வார்கள். சிலைகள் செய்து முடித்த பின், கோவில் வேலை பாக்கி இருக்கும். சிலை வெளியே, வெயிலில், மழையில் கிடக்கும். அதை யாரும் வணங்குவது இல்லை. அதற்கு ஒரு பூஜை, அபிஷேகம் எல்லாம் கிடையாது. அதே சிலை, கோவிலுக்குள் பிரதிஷ்டை பண்ணிய பின், எல்லோரும் பக்தியோடு வணங்குவார்கள். 


அவளுடைய நினைவையே சிலையாக செய்து வைத்துக் கொண்டு அவன் காத்து இருக்கிறான். அவளோடு பேசியது, விளையாடியது, கட்டிப் பிடித்தது, என்று ஒவ்வொரு நினைவும் ஒரு சிலை போல் தத்ரூபமாக அவன் மனதில் இருக்கிறது. என்ன பலன்? அவள் இல்லாத அவளின் நினைவால் ஒரு பலனும் இல்லை. அவள் வந்து விட்டால், அவளோடு அவற்றை சொல்லி சொல்லி மகிழலாம். 


"நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்,

திருக் கோவிலே ஓடி வா"


நீ தான் கோவில். நீ இருந்தால்தான் என் நினைவுகளுக்கு, ஒரு அர்த்தம் பிறக்கும். 


ஊரை விட்டுப் போனவன் இன்னும் வரவில்லை. என்ன ஆனானோ என்று தெரியவில்லை. தெருவில் போகும் அவனைப் போன்ற சாயலில் உள்ள ஆண்களை பார்க்கும் போது அவளுக்கு மனதுக்குள் ஒரு ஆசை, அது அவனாக இருக்கக் கூடாதா என்று. அவள் மனதில், அவன் எப்போதும் நீங்காமல் இடம் பெற்று இருக்கிறான். பார்க்கும் இடம் எல்லாம் அவனாகவே தெரிகிறது. அவள் இருக்கும் வரை அவனும் இருப்பான். 


"என் கண்கள் இரண்டும் பல்லாண்டு பாடி"


அவள் கண்கள் அவன் இருக்கிறான், இருக்கிறான், அங்கே இருக்கிறான், அவனாக இருக்குமோ, இவனாக இருக்குமோ என்று அவன் உயிரோடு இருப்பதாகவே கருதிக் கொண்டு பார்த்து அலைகிறது. 


வாய் தான் பாடும். கண்களும் பாடும். 


கண் மூடி இந்தப் பாடலை ஒரு முறை கேட்டுப் பாருங்கள். 


உள்ளுக்குள் ஏதோ உருகி ஓடுவது  போல் இருக்கும்.  

Monday, October 21, 2024

கம்ப இராமாயணம் - இராமன் என்ற மானிடன் - மகன்

 கம்ப இராமாயணம் - இராமன் என்ற மானிடன் - மகன்  

https://interestingtamilpoems.blogspot.com/2024/10/blog-post_21.html



பல பணக்காரர்கள் வீடுகளில் உள்ள பிள்ளைகள் அங்கு வேலை செய்யும் ஆட்களை எப்படி நடுத்துகிறார்கள் என்று நாம் கண்டும் கேட்டும் இருக்கிறோம். தன் தந்தையின், தாத்தாவின் வயது ஒப்ப வேலையாளை வா போ என்று ஒருமையில் அழைப்பது, திட்டுவது, அவமானப்படுத்துவது என்றெல்லாம் செய்கிறார்கள். காரணம், அந்தப் பிள்ளைகளின் பெற்றோர் பெரிய பணக்காரர்கள், அல்லது அதிகாரத்தில் உள்ளவர்கள் என்பதால். 


வீட்டின் செல்வமும், அதிகாரமும் அந்த இளம் பிஞ்சுகளின் மனதில் ஏறி விடுகிறது. அதை பெற்றோரும் கண்டிப்பது இல்லை. 


இராமனை அழைத்து வரும்படி முதல் அமைச்சனான சுமந்தரனிடம் தசரதன் கூறுகிறான். சுமந்திரனும் இராமன் இருக்கும் இடம் செல்கிறான். 


"அப்பா வரச் சொன்னார் .. ஒரு வேலை இருக்கு...என் கூட வா" என்று சுமந்திரன் இராமனை அழைக்கிறான். என்ன வேலை என்று சொல்லவில்லை.  


"சரி சரி வெளியே காத்து இரு, வர்றேன்" என்று இராமன் சொல்லி இருக்கலாம். சொன்னாலும் யாரும் குறை காணப் போவது இல்லை. 


அல்லது, என்ன வேலை, இப்பவே வரணுமா, நாளைக்கு பாத்துக்க முடியாதா, என்று ஆயிரம் கேள்விகள் கேட்டு இருக்கலாம். 


அல்லது, "ஆமா, இந்த அப்பாவுக்கு ஒரு வேலை இல்லை. சும்மா பொழுது போகலைனா என்னைய கூப்பிட்டு உக்கார வச்சு பழம் கதைகள் பேசி 


அதெல்லாம் இராமன் செய்யவில்லை. 


சுமந்திரன் சொன்னதுதான் தாமதம், "இதோ வர்றேன் என்று உடனே கிளம்பி விட்டான்...மேகம் மிதந்து வருவது போல் வந்தான் " என்கிறான் கம்பன். 


உள்ளே போய் உடை மாற்றி, முகம் கழுவி, தலை கிலை சீவி, கொஞ்சம் அலங்காரம் செய்து கொண்டு வந்திருக்கலாம். அதுக்கெல்லாம் நேரம் இல்லை. அப்பா கூப்பிடுகிறார், சுமந்திரன் வந்திருக்கிறான்  என்றால் எதாவது முக்கியமான வேலையாகத்தான் இருக்கும் என்று உடனே கிளம்பி விட்டான். 


பாடல் 


கண்டு கை தொழுது “ஐய! இக்    கடல் இடைக் கிழவோன்

‘உண்டு ஒர் காரியம், வருக ‘என     உரைத்தனன்“ எனலும்

புண்டரீகக் கண் புரவலன்     பொருக்கென எழுந்து, ஓர்

கொண்டல் போல் அவன் கொடி நெடும்     தேர் மிசைக் கொண்டான்.


பொருள் 


கண்டு = சுமந்திரன், இராமனைக் கண்டு 


கை தொழுது = கை கூப்பி 


“ஐய! = ஐயனே 


இக் = இந்த 

    

கடல் இடைக் = கடல்களுக்கு நடுவில் உள்ள உலகின் 


கிழவோன் = தலைவன் (தயரதன்) 


‘உண்டு ஒர் காரியம், வருக ‘ = ஒரு வேலை இருக்கிறது, வா 


என = என்று 


உரைத்தனன்“ = கூறினான் 


எனலும் = என்று சொன்னவுடன் 


புண்டரீகக் = தாமரை போன்ற 


கண் = கண்களை உடைய 


புரவலன் = காப்பவனான இராமன் 


பொருக்கென = சட்டென்று 


எழுந்து = எழுந்து 


ஓர் = ஒரு 


கொண்டல் = மழை மேகம்  


 போல் = போல 


அவன் = சுமந்தரனின் 


கொடி நெடும் = நீண்ட கொடியை உடைய 


தேர் மிசைக் கொண்டான் = தேர் மேல் ஏறிக் கொண்டான் 


அப்பா மேல் அவ்வளவு மரியாதை. அப்பா வா ன்னு சொன்னா உடனே கிளம்பி வருகிறான் இராமன். 


இன்றுள்ள தலைமுறையை நினைத்துப் பார்த்தால்...


என்ன சொன்னாலும் ஆயிரம் கேள்வி, முடியாது, இப்ப முடியாது, என்னால் முடியாது, வேற வேலை இ இருக்கு, வேற வேலை வெட்டி இல்லையா....என்று ஆயிரம் பதில்கள் வரும். 


இந்தப் பாடல்களையெல்லாம் பிள்ளைகளுக்குச் சொல்லி கொடுக்கணும்.  

Thursday, October 17, 2024

திருக்குறள் - கள்ளாமை - உள்ளத்தால் உள்ளலும் தீதே

 திருக்குறள் - கள்ளாமை - உள்ளத்தால் உள்ளலும் தீதே 


களவு ஏன் நிகழ்கிறது?


மற்றவனிடம் உள்ள பொருள் நம்மிடம் இருந்தால் நன்றாக இருக்குமே என்ற ஆசையால் நிகழ்கிறது. அது போல நமக்கு ஒரு கார் இருந்தால் எப்படி இருக்கும், அவனிடம் உள்ளது போல் ஒரு சமீபத்திய கைபேசி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும், அவன் மனைவியைப் போல எனக்கும் ஒன்று இருந்தால் எப்படி இருக்கும் என்ற ஆசை. 


அடுத்த கட்டம், அவனுக்குத் தெரியாமல் அதை அவனிடம் இருந்து எடுத்துக் கொள்ள நினைப்பது. 


கடைசியில், எடுத்துக் கொள்வது. 


உலகியல் சட்டம் முதல் இரண்டை தவறு என்று சொல்லுவது இல்லை. அது மனதில் நிகழ்வது. ஆசைப்படுவதும், கவர்ந்து கொள்ள நினைப்பதும் குற்றம் அல்ல. கவர்ந்தால் குற்றம். 


அறம் என்பது சட்டத்துக்கு மேலானது. 


மற்றவன் பொருளை அவன் அறியாமல் எடுத்துக் கொள்வோம் என்று நினைத்தாலே அது களவுதான் என்கிறார் வள்ளுவர். 


மனதால் நினைப்பது கூடத் தவறு என்கிறார். 


பாடல் 


உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்

கள்ளத்தால் கள்வேம் எனல்


\பொருள் 


உள்ளத்தால் = மனதால் 


உள்ளலும் = நினைப்பதும் 


தீதே = தீமையானதே 


பிறன்பொருளைக் = மாற்றான் பொருள்ளை 


கள்ளத்தால் = மற்றவன் அறியா வண்ணம் 


கள்வேம் = கவர்ந்து கொள்வோம்  


எனல்  = என்று நினைத்தல் 



மனதால் நினைப்பதே குற்றம் என்றால், உண்மையிலேயே களவு செய்வது பெரும் குற்றம் என்பது சொல்லாமலேயே புரியும். 


இது துறவறத்தில் வரும் அதிகாரம், குறள். 


துறவிக்கு பிறன் பொருளை நினைப்பதும் தவறு. 


இல்லறத்தில் உள்ளவன் அபப்டி இருக்க முடியாது. 


இல்லறத்தில் உள்ள ஒருவன் ஆசைப்படுவது இயல்பு. நம் மனைவிக்கும் அது போல நல்ல சேலை வாங்கித் தர வேண்டும், நம் பிள்ளைகளும், அது மாதிரி பெரிய பள்ளியில் படிக்க வேண்டும், என்றெல்லாம் நினைத்தால் தான் இல்லறம் சிறக்கும். 


எந்தப் பொருள் மீதும் பற்று இல்லை என்றால், இல்லறம் படுத்து விடும். உன் மேல் எனக்குப் பற்று இல்லை என்று மனைவி கணவனை விட்டு விலகி விடுவாள்.  


இல்லறத்தில் இருப்பவன் ஆசைப்படலாம். ஆனால் அதை களவின் மூலம் அடைய ஆசைப் படக் கூடாது. 


துறவி ஆசையே படக் கூடாது. 


எல்லோருக்கும் ஒரே அறம் சொல்ல முடியாது. 


"உள்ளத்தால் உள்ளலும்". அது மனதால் நினைப்பதும் ? மனதால் தானே நினைக்க முடியும்?  நினைப்பதும் தீதே என்று சொல்லி இருக்கலாமே? எதற்கு உள்ளத்தால் என்று போட வேண்டும்?  பரிமேலழகர் கூறுகிறார், துறவியின் உள்ளம் மற்றவர்கள் உள்ளம் போல் அல்ல. அது சிறப்பானது. அந்த சிறந்த மனத்தால் கள்வேம் என்று நினைக்கக் கூடாது என்றார். 


"எனல்". எனல் என்றால் என்ன என்பதை அறிய சற்று இலக்கணம் படிக்க வேண்டும். 


வியங்கோள் என்று ஒரு இலக்கணக் குறிப்பு உண்டு.  


வியம் என்றால் ஏவுவது, கட்டளை இடுவது என்று பொருள். ஏவலை கொள்வது என்பதால், அது வியம் + கொள் = வியங்கோள் என்ற பெயர் பெற்றது. 


இந்த வியங்கோள் பொதுவாக நான்கு விதமான இடங்களில் பயன்படுத்தப்படும். 


வாழ்த்தல், வைதல், வேண்டல், விதித்தல் என்பவை அந்த நான்கும். 


இந்த வியங்கோள் வினைமுற்று (முற்றுப் பெற்ற வினை அல்லது செயல்) விகுதி க அல்லது ய என முடியும். 


வாழ்க

வீழ்க 

வருக

அமர்க 

உண்க 

வாழிய (பல்லாண்டு) 

இது எதிர் மறையில் வரும் போது அல் என்ற விகுதியை பெறும்.


வாரல்  (வராதே)

சேறல்  (சேராதே)


இந்தக் குறளில் "எனல்" என்பது எதிர்மறை வியங்கோள் வினைமுற்று விகுதி. 


அதாவது கள்ளத்தால் கள்வேம் எனல் என்றால் 


களவாணித்தனமாக எடுத்துக் கொள்வோம் என்று பொருள் கொள்ளக் கூடாது. 


எதிர்மறையாக பொருள் கொள்ள வேண்டும். 


கள்ளத்தால் எடுத்துக் கொள்ளக் கூடாது 


என்பது அதன் பொருள். 


இலக்கணம் தெரியாவிட்டால் பொருள் மாறிப் போய்விடும். 


துறவிகள் பிறர் பொருளுக்கு ஆசைப்படக் கூடாது. 








Tuesday, October 15, 2024

கோவில் மூத்தத் திருபதிக்கம் - புறங்காட்டில் அப்பன் ஆடும் திருவாலங்காடு

 கோவில் மூத்தத் திருபதிக்கம் - புறங்காட்டில் அப்பன் ஆடும் திருவாலங்காடு 



இறைவனை வழிபடும் இடம் எப்படி இருக்க வேண்டும்?


சுத்தமாக, வெளிச்சமாக, பூ, சந்தனம், ஊதுபத்தி, கற்பூரம் போன்ற நறுமணம் வீசும் இடமாக, பார்த்தாலே மனதில் ஒரு பரவசம் வரும்படி இருக்க வேண்டும் அல்லவா?


மாறாக, இருண்டு, கரி பிடித்துப் போய், சாம்பலும், அழுக்கும் நிறைந்து கிடந்தால் பக்தி வருமா?


வர வேண்டும். 


இறைவன் படைப்பில் எல்லாம் ஒன்று என்ற எண்ணம் வர வேண்டும். 


இது சரி, இது தவறு என்று எப்படிச் சொல்ல முடியும். நமக்கு பிடித்தது, பிடிக்காதது என்று சொல்லலாம். அது ஒன்றும் பெரிய விடயம் அல்ல. நமக்குப் பிடித்தது இறைவனுக்குப் பிடிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஒன்றும் இல்லை. 


சிவகோச்சாரியார் படைத்த பூவும், மாலையும், சந்தனமும் இறைவனுக்குப் பிடிக்கவில்லை. கண்ணப்ப நாயனார் படைத்த மாமிசம் பிடித்தது. 


அவன் உள்ளம் யாருக்குத் தெரியும்?


காரைக்கால் அம்மையார், இறைவனை சுடுகாட்டில் நடமாடும் வடிவில் கண்டு வணங்குகிறார். 


"அது ஒரு சுடுகாடு. அங்கங்கே பிணங்கள் எரித்து கொண்டிருக்கின்றன. பிணம் எரியும் போது அவற்றின் சதை உருகும். அது நெய் போல் வழியும். அந்த உருகிய சதையை எடுத்து வாயில் போட்டு தின்னுகின்றன அங்குள்ள பேய்கள். சுடுக்காட்டில் கிடக்கும் மண்டை ஓடுகளை ஒன்றாக சேர்த்துக் கட்டி பூ மாலை போல் போட்டுக் கொள்கின்றன. அப்படி அங்கே உள்ள ஒரு பேய்க்கு ஒரு குழந்தைப் இருக்கிறது. குட்டிப் பேய். அந்த குழந்தைக்கு அதன் தாய் "காளி" என்று பெயரிட்டு இருக்கிறாள். சுடுகாட்டில் பறக்கும் சாம்பல் அதன் உடல் முழுவதும் படிந்து கிடக்கிறது. காளிக்குப் பசிக்கும் போது, தன் முலையின் மேல் பதிந்த சாம்பலை சுத்தம் செய்து தாய்ப் பேய் காளிக்கு உணவு ஊட்டும். அப்படி ஊட்டும் தாய் எங்கோ போய் இருக்கிறாள். வர தாமதமாகிறது. பசியால் அழுத காளி அப்படியே சோர்ந்து உறங்கி விட்டது. அப்படிப்பட்ட பேய்கள் உலாவும் காட்டில் நடனம் புரிபவன் என் அப்பன் சிவ பெருமான்"


என்று இடுகாட்டில் நடம் புரியும் இறைவனை வணங்குகிறாள். 


பாடல் 


விழுது நிணத்தை விழுங்கி யிட்டு, வெண்தலை மாலை விரவப் பூட்டிக்

கழுதுதன் பிள்ளையைக் காளி யென்று பேரிட்டுச் சீருடைத் தாவளர்த்துப்

புழதி துடைத்து, முலைகொ டுத்துப்போயின தாயை வரவு காணா

தழுதுறங் கும்புறங் காட்டில் ஆடும் அப்ப னிடம்திரு ஆலங் கா டே


பொருள் 


விழுது நிணத்தை = நெய் பசை நிரம்பிய மாமிசம், தீயில் வெந்த உடல் 


விழுங்கி யிட்டு = வாயில் போட்டு விழுங்கி 


வெண்தலை = மண்டை ஓடுகளை 


மாலை விரவப் பூட்டிக் = மாலையாக பெரிதாக அணிந்து கொண்டு 


கழுது = பெண் பேய் 


தன் பிள்ளையைக் = அதன் பிள்ளையை 


காளி யென்று = "காளி" என்று 

 

பேரிட்டுச் = பெயர் இட்டு 


சீருடைத் = தன்னுடைய உடையை நீக்கி 


தாவளர்த்துப் = தாவளம் என்றால் உணவு பரிமாறும் இடம். தாய்ப்பால் தர பிள்ளையை எடுத்து 


புழதி துடைத்து = தன் மேல் படிந்து கிடக்கும் புழுதியை துடைத்து 


முலைகொ டுத்துப் = முலை கொடுத்து 


போயின = வெளியே சென்ற 


தாயை  = தாயின் 


வரவு காணா = வரவைக் காணாத 


தழுதுறங் கும் = அழுது உறங்கும் 


புறங் காட்டில் = சுடுகாட்டில் 


ஆடும் = திருநடனம் புரியும் 


அப்ப னிடம் = அப்பன் சிவ பெருமான் இருக்கும் இடம் 


திரு ஆலங் கா டே = திருவாலங்காடு என்ற திருத்தலம். 


மனதில் பக்தி வந்து விட்டால், எல்லாம் சிவமயம்தான். 


நோக்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்து இருப்பவன்.


மனிதனின் ஆட்டம் எல்லாம் அடங்கும் இடம் சுடுகாடு. அங்கே ஆடிக் கொண்டிருக்கிறான் அவன். 


வாழ்க்கையில் பயப்பட ஒன்றும் இல்லை. அது அப்படி ஆகி விடுமோ, இது இப்படி ஆகி விடுமோ, அது நடக்காவிட்டால் எனன் செய்வது, இது நடந்து விட்டால் என்ன செய்வது என்ற பயமே வேண்டாம். 


இடுக்காட்டில், பேய்களுக்கு மத்தியில் அமர்ந்து இருக்கும் காரைக்கால் அம்மையாருக்கு பயம் இல்லை. காரணம், சிவன் அங்கே இருக்கிறான் என்று அவள் நம்பினாள். 


கடவுள் நம்பிக்கை இருந்தால் பயம் ஏன் வருகிறது. கடவுளால் நம் துன்பத்தைப் போக்க முடியாதா? அல்லது போக்க மாட்டான் என்று நினைப்பு இருக்குமோ?


பயம் இருந்தால், இறை நம்பிக்கை இல்லை என்று அர்த்தம். 


அவன் பார்த்துக் கொள்வான் என்றால் பயம் ஏன் வருகிறது?




Thursday, October 10, 2024

திருவிளையாடற் புராணம் - மண் சுமந்த கதை

 திருவிளையாடற் புராணம் - மண் சுமந்த கதை 


மக்களுக்கும், கடவுளுக்கும் உள்ள தொடர்பு எப்படி இருக்க வேண்டும்?


ஏன் அவ்வளவு தூரம் போக வேண்டும்.


கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்?  கணவன் வீட்டை நடத்துபவனாகவும், மனைவி அவனுக்கு உதவி செய்பவளாகவும் இருக்கலாம். இருவரும் சேர்ந்து நடத்தலாம். இருவரும் ஒரு நல்ல நண்பர்கள் போல் இருக்கலாம், மனைவி எல்லாவற்றையும் எடுத்துச் செய்யலாம், கணவன் எனக்கு என்ன என்று பொறுப்பு இல்லாமல் இருக்கலாம். 


இப்படி எத்தனையோ வகைகள் இருக்கின்றன. 


அப்பா மகன் உறவு, அப்பா மகள் உறவு? அம்மா மகன்/மகள் உறவு?  


ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.


அது போல பக்தனுக்கும் கடவுளுக்கும் உள்ள உறவை ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விதத்தில் அணுகுகின்றன. 


நம் இந்து மதம் அணுகும் முறையே அலாதி. 


நம் கடவுள்கள் மிகுந்த நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள். விளையாட்டு புத்தி உள்ளவர்கள். நம்மோடு வந்து விளையாடுவார்கள். அடி வாங்குவார்கள். விறகு சுமப்பார்கள். பெண் வேடம் போட்டு வருவார்கள். காதல் கடிதம் கொண்டு போய் கொடுப்பார்கள். பன்றியாக வருவார்கள். இப்படி பல விதங்களில் நம்மோடு, நம் வீட்டில் ஒரு ஆள் போல் இருப்பார்கள். 


அல்லது அப்படித்தான் நாம் நினைக்கிறோம். 


கடவுள் என்றால் ஏதோ மலை மேல் அமர்ந்து கொண்டு, கடு கடு வென்று, கோபமாக, தவறுகளை கண்டு பிடித்து தண்டனை தரும் ஒரு போலீஸ் மாதிரி இல்லாமல், ரொம்பவும் நட்பாக நாம் சித்தரிக்கிறோம். 


"அலகிலா விளையாட்டு உடையார் அவர்" என்பார் கம்பர். 


எந்நேரமும் விளையாட்டுத்தான். 


கடவுளின் விளையாட்டை லீலை என்கிறோம். 


உலகைப் படைத்த கடவுளே அதை பெரிதாக, சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளவில்லை. நாம் ஏன் வாழ்கையை ஒரு விளையாட்டாக எடுத்துக் கொள்ளக் கூடாது?


ஏன் இவ்வளவு சண்டை, கோபம்,  சச்சரவு, எரிச்சல், பொறாமை...வெற்றி கண்டு களியாட்டம், தோல்வியில் துவண்டு விடுவது...எல்லாவற்றையும் விளையாட்டாக எடுத்துக் கொண்டு போ என்கிறது நம் சமய இலக்கியம்.


திருவிளையாடல் புராணம் முழுக்க முழுக்க சிவனின் விளையாடல்கள் தான். 


அந்த புராணத்தில் இருந்து சில பாடல்களை பற்றி சிந்திப்போம். 


முதலில் மண் சுமந்த விளையாடல். 


சிந்தித்துப் பாருங்கள், 


இந்த அண்ட சராசரங்களைப் படைத்த இறைவன், கூடை மண் சுமந்து, புட்டு தின்று, அடி வாங்கி...எவ்வளவு இனிமையான விடயம்.


வாருங்கள் கதையோடு, கவிதையையும், அந்தக் கால வாழ்க்கை நடைமுறைகைளையும் சேர்த்து அனுபவிப்போம்.


  

Saturday, September 28, 2024

திருக்குறள் - கள்ளாமை - கள்ளாமை காக்க

 திருக்குறள் - கள்ளாமை - கள்ளாமை காக்க 

https://interestingtamilpoems.blogspot.com/2024/09/blog-post_28.html



முந்தைய அதிகாரம் கூடா ஒழுக்கம். 


அதாவது, தவறான வழியில் உடல் இன்பத்தைப் பெறுவது துறவிகளுக்கு சரியான ஒழுக்க முறை அல்ல என்று கூறியது. 


உடல் இன்பத்தைத் அடுத்து, பொருள் இன்பம் பற்றி கூற இருக்கிறார் அடுத்த அதிகாரமான கள்ளாமை என்ற அதிகாரத்தில். 


பல துறவிகள் ஏன் பொய்யாக வேடம் போடுகிறார்கள்?


நிறைய காணிக்கை, தட்சணை கிடைக்கும், அதன் மூலம் பொருள் இன்பங்களை அனுபவிக்கலாம் என்ற எண்ணத்தில் துறவி, சாமியார் வேடம் போடுகிறார்கள். 


துறவு எண்ணம் இல்லாமல், துறவி போல் வேடம் இட்டு பொருள் பெறுவது என்பது களவாணித்தனம் தானே. ஏமாற்றி பொருள் கொள்வது. அது கூடாது என்று இந்த அதிகாரத்தில் கூறுகிறார். 


அதில், முதலாவது குறளில் 


பாடல் 


எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்

கள்ளாமை காக்கதன் நெஞ்சு


பொருள் 


எள்ளாமை = இகழப்படாமை 


வேண்டுவான் = விரும்புபவன் 


என்பான் = என்று சொல்லப்படுபவன் 


எனைத்தொன்றும் = எது ஒன்றையும் 


கள்ளாமை = களவின் மூலம் பெற்றுக்  கொள்ளலாம் என்ற எண்ணம் வராமல் 


காக்க = காத்துக் கொள்ள வேண்டும் 


தன் நெஞ்சு = தன் மனதை 


மேலோட்டமாக பார்த்தால், யாராலும் பழி சொல்லப்படாமல் நல்லவன் என்று பெயர் எடுக்க வேண்டும் என்றால், பிறர் பொருளை தவறான வழியில் எடுத்துக் கொள்ள நினைக்கக் கூடாது என்று அர்த்தம் தோன்றும். 


ஒரு துறவி திருடக் கூடாது என்று சொல்ல வள்ளுவர் வேண்டுமா?  


இதற்கு பரிமேலழகர் அற்புதமான உரை செய்திருக்கிறார். 



சில பேருக்கு இந்த சாமி, கோவில், சொர்க்கம், நரகம் என்பதில் எல்லாம் நம்பிக்கை இருக்காது. 


சாமி என்று ஒன்று இருக்கிறதா?  காமி. எங்க இருக்கு என்று கேட்பார்கள். அது மட்டும் அல்ல, இதெல்லாம் எப்படித்தான் நம்புராங்ஞலோ என்று மற்றவர்களை ஏளனம் செய்வார்கள். 


அவர்களுக்கு எல்லாவற்றிற்கும் நிரூபணம் வேண்டும். பார்த்து, தொட்டு உணர்ந்து, சுவைத்து, கேட்டு அறிந்தால்தான் ஒன்றை ஏற்றுக் கொள்ளவார்கள். இல்லை என்றால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 


நிரூபிக்க முடியாதது எல்லாம் பொய் , பித்தலாட்டம் என்று ஏளனம் செய்வார்கள். 


அப்படி ஏளனம் செய்யாமல், இகழாமல் அவற்றின் மேல் உண்மையிலேயே நம்பிக்கை உள்ளவன் என்று சான்றோரால் ஒருவன் சொல்லப்பட விரும்பினால் என்று "எள்ளாமை வேண்டுவான் என்பான்" என்ற சொற்களுக்கு பரிமேலழகர் உரை செய்கிறார். 


"அவன் நல்லவன். சாத்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கை உள்ளவன். இறை நம்பிக்கை உள்ளவன். பாவ புண்ணியங்களுக்கு பயந்தவன்" என்று சொல்லப்பட வேண்டினால் 


"எனைத்தொன்றும் கள்ளாமை காக்க தன் நெஞ்சு"

 


"எனைத்தொன்றும் கள்ளாமை காக்க" என்று சொல்லி நிறுத்தி இருக்கலாம். அது எதற்கு "தன் நெஞ்சு" என்ற தொடரை சேர்த்தார்?


நெஞ்சு, மனம் என்றால் நினைப்பது. பிறர் பொருளை ஏமாற்றி எடுத்துக் கொள்ளலாம் என்று மனதாலும் நினைக்கக் கூடாது என்பதற்காக தன் நெஞ்சு என்ற தொடரைச் சேர்த்தார். 


அது என்ன "எனைத்தொன்றும்" எப்பொருளும் என்று போட்டு இருக்கலாமே?


சில பேர் மற்றவர்களின் எழுத்தை,  அவர்கள் அறியாமல் எடுத்து தங்கள் பெயரில், ஏதோ தாங்களே கண்டு பிடித்ததைப் போல் போட்டுக் கொள்வார்கள். அதுவும் ஒரு வகையில் திருட்டுதான். 


அலுவலகத்தில், முழுமையான திறமையை வெளிப்படுத்தி, முழு நேரமும் வேலை செய்யாமல், டீ குடிக்கப் போவது, அரட்டை அடிப்பது, whatsapp இல் நேரம் செலவிடுவது என்று குறைவான நேரத்தை செலவிட்டு முழு சம்பளம் பெற்றுக் கொல்வதும் ஒரு விதத்தில் திருட்டுத்தான். 


வீட்டில் கூட கணவன் மனைவி இருவரின் பங்களிப்பும் ஏறக்குறைய சமமாக இருக்க வேண்டும். 


ஆசிரியரிடம் வித்தை கற்றுக் கொண்டு, அவருக்கு உரிய தொகையை கொடுக்காமல் இருப்பதும் களவு என்கிறார் பரிமேலழகர். 


எனவே, "எனைத் தொன்றும்" என்றார். எந்த விதத்திலும் களவு என்ற எண்ணமே வரக் கூடாது. 


எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், இப்படி கொடுப்பதை விட பெறுவது அதிகம் களவு என்று ஆகிவிட்டால், களவு செய்யாமல் இருக்க வேண்டும் என்றால், எப்போதும் நிறைய செய்ய வேண்டும், குறைவாக பெற்றுக் கொள்ள வேண்டும். ஒரு துறவி என்பவன் சேவை மனப்பான்மை உள்ளவனாக இருக்க இது ஒரு சிறந்த வழி. சும்மா மூன்று வேளையும் பிச்சை பெற்று உண்பதால் ஒருவன் துறவி என்று ஆகிவிட முடியாது. 


பொதுவாகவே, துறவிகளுக்கு சொல்லப்படும் அறம் மிகக் கடுமையானதாக இருக்கும். இல்லறத்தில் உள்ளவர்கள் அந்த அளவு கடுமை காட்ட முடியாது. அதற்காக, ரொம்பவும் கீழே போகவும் வேண்டாம். முடிந்த வரை, எங்கெல்லாம் முடியுமோ, எப்போதெல்லாம் முடியுமோ நிறைய கொடுப்போம், குறைவாக எடுத்துக் கொள்வோம். 


ஏன் என்றால், இல்லறம் என்பது, துறவறத்தின் முதல் படி. ஒரு பயிற்சி முகாம். இங்கே பழகினால்தான் அங்கே சிறப்பாக இருக்க முடியும். 



Thursday, September 26, 2024

கம்ப இராமாயணம் - இராமன் என்ற மானிடன் - சந்தேகம்

 கம்ப இராமாயணம் - இராமன் என்ற மானிடன் - சந்தேகம் 



மனிதர்களுக்கு சந்தேகம் வரலாம். எது சரி, எது தவறு என்று குழப்பம் வரலாம். தயக்கம் வரலாம். இறைவனுக்கு வருமா?


மனிதனாக அவதாரம் செய்த இராமன், மனிதனாகவே வாழ்ந்து காட்டுகிறான். 


ஒரு மாணவனாக விஸ்வாமித்திரன் பின் செல்கிறான். வேள்வியைக் காக்க. சின்ன பையன் மாதிரி கேள்விகள் கேட்டுக் கொண்டு செல்கிறான். இறுதியில் தாடகை வந்து நிற்கிறாள். 


விஸ்வாமித்திரன் அவளை கொல் என்று கட்டளை இடுகிறான். 


இராமன் கொள்ளவில்லை. தயங்குகிறான். குழம்புகிறான். 


வசிட்டர் சொல்லித் தந்த பாடம் "மாதரையும், தூதரையும் கொல்லக் கூடாது" என்று. விச்வாமித்ரரோ பெண்ணான தாடகையை கொல் என்கிறார். 


என்ன செய்வது ?


நான் கடவுள் அவதாரம். எனக்கு எல்லாம் தெரியும் என்று முடிவு எடுக்கவில்லை. 


அவள் மேல் அம்பு போடாமல், பெண்ணிடம் எப்படி போர் செய்வது என்று நினைக்கிறான். 


பாடல் 


அண்ணல் முனிவற்கு அது

    கருத்து எனினும், ‘ஆவி

உண் ‘என வடி கணை

    தொடுக்கிலன்; உயிர்க்கே

துண் எனும் வினைத் தொழில்

    தொடங்கி உளள் ஏனும்,

பெண் என மனத்திடை

    பெரும் தகை நினைந்தான்.


பொருள் 


அண்ணல்  = பெரியவரான 


முனிவற்கு = விஸ்வாமித்ர முனிவருக்கு 


அது = தாடகையை கொல்லும் 


கருத்து எனினும் = எண்ணம் என்றாலும் 


 ‘ஆவி உண்  = உயிரைக் குடி 


‘என -= என்று 


வடி கணை  தொடுக்கிலன்; = வடிவான அம்பை தொடுக்கவில்லை 


உயிர்க்கே = உயிர்கள் எல்லாம் 


துண் எனும் = நடுங்கும் 


வினைத் தொழில் = கொலைத் தொழில் 


தொடங்கி உளள் ஏனும் = தொடங்கி நடத்துபவள் என்றாலும் 


பெண் என  = அவளும் பெண் தானே  என்று 


மனத்திடை = மனத்தில் 


பெரும் தகை = பண்புகளில் உயர்ந்த 


நினைந்தான் = இராமன் நினைத்தான் 


ஒரு அறிவான மாணவனுக்கு வரும் குழப்பம் அவனுக்கும் வருகிறது. அவனும் நம்மைப் போல் தான் என்று காட்டுவதன் நோக்கம், அவனும் உன்னைப் போல உள்ளவன் தானே, உனக்கு உள்ள குழப்பங்கள் அவனுக்கும் இருந்தது தானே, இருந்தும் அவன் எவ்வளவு சிறப்பாக வாழ்ந்தான், அது போல் நீயும் வாழ முடியும், வாழ வேண்டும் என்று சொல்வதர்காக.


விஸ்வாமித்திரன் இராமனுக்கு எடுத்துச் சொல்லி இறுதியில் இராமன் மனம் மாறுகிறான்.


மாறிய பின் என்ன சொன்னான், செய்தான் ? 



Monday, September 23, 2024

திருக்குறள் - உலகம் பழித்தது ஒழித்து விடின்

 திருக்குறள் - உலகம் பழித்தது ஒழித்து விடின் 

https://interestingtamilpoems.blogspot.com/2024/09/blog-post_23.html


துறவறம் என்பது வேடத்தைப் பொறுத்து அல்ல. சாமியார் என்றால் ஒரு குறிப்பிட்ட நிறத்தில் உடை அணிய வேண்டும் என்று ஆகி விட்டது. ஒவ்வொரு மதமும் ஒரு நிறத்தை வைத்து இருக்கிறது. 


இந்த புற வேடங்களை வள்ளுவர் கண்டிக்கிறார். 


மொட்டை அடிப்பது, தாடி வளர்ப்பது போன்ற எதுவும் வேண்டாம், எப்போது என்றால் இந்த உலகம் தவறு என்று எதைச் சொல்கிறதோ அதை விட்டு விட்டால்.


பாடல் 


மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்தது ஒழித்து விடின்


பொருள் 


மழித்தலும் = தலையில் உள்ள முடியை நீக்குவதும் (மொட்டை போடுவதும்) 


நீட்டலும் = தாடியை நீளமாக வளர்ப்பதும் 


வேண்டா  = தேவை இல்லை 


உலகம் = உலகம் என்றால் நல்லோர், சான்றோர். உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு என்பது தொல்காப்பியம் 


பழித்தது = தவறு என்று சான்றோர் சொன்னவை 


ஒழித்து விடின் = விட்டு விட்டால் 


சாத்திரம், வேதம், ஆகமம், பூஜை, புனஸ்காரம்...எதுவும் தேவை இல்லை. அவற்றை எல்லாம் படிக்கக் கூட வேண்டாம். பெரியவர்கள் எதைச் செய்யக் கூடாது என்று கூறினார்களோ, அவற்றை விட்டு விட்டால் போதும். 


ஒரு சந்தேகம் வரும். 


இந்த தாடி வளர்ப்பது , மொட்டை அடிப்பது எல்லாம் ஆண்களுகுத்தானே பொருந்தும், பெண்களுக்கு பொருந்தாதே என்று. 


இந்து மதத்தில் பெண்கள் துறவிகளாகப் போக அனுமதி இல்லை. அவர்கள் திருமணம் செய்து க்கொண்டு இல்லறத்தில் இருக்க வேண்டும் என்பதுதான் விதி. 


மணிமேகலை இருந்தாள், அவள் சமண மதத்தைச் சேர்ந்தவள். 


வள்ளுவர் காலத்திலேயே இந்த மாதிரி மொட்டை அடித்து, தாடி வளர்த்து ஊரை ஏமாற்றும் பேர்வழிகள் இருந்திருக்கிறார்கள். அப்படி என்றால் இப்போது கேட்கவா வேண்டும். 


இதோடு கூடா ஒழுக்கம் என்ற அதிகாரம் முற்றுப் பெறுகிறது. 


துறவிகளுக்கு காமம் பற்றிய எண்ணங்கள் வரக் கூடாது. அப்படி வந்தால் துறவை துறந்து விட வேண்டும். மாறாக, துறவி வேடத்தில் காமச் செயல்களில் ஈடுபடக் கூடாது என்று கண்டிக்கிறது இந்த அதிகாரம். 


துறவிகள் காமத்தைத் தவிர்க்கச் சொன்னார். 


அதை அடுத்து என்னவாக இருக்கும்?


Friday, September 20, 2024

திரு மந்திரம் - களிம்பு அணுகாத கதிர் ஒளி காட்டி

திரு மந்திரம் - களிம்பு அணுகாத கதிர் ஒளி காட்டி 



நோய் வந்தால் மருத்துவரிடம் செல்கிறோம். அவர் அந்த நோயைப் போக்க மருந்து தருகிறார். நோய் நீங்கி சுகம் பெறுகிறோம். 


அந்த நோய் மீண்டும் வராது என்று சொல்ல முடியுமா? அல்லது, வேறு எந்த நோயுமே இனி வராது என்று எந்த மருத்துவராவது சொல்ல முடியுமா?  


நோய் வரும், குணமாகும், மீண்டும் ஒரு நோய் வரும், அது குணமாகும் என்று போய்க் கொண்டே இருந்தால் என்ன பலன். 


முந்தைய மந்திரத்தில் இறைவன் ஆன்மாக்களை ஒட்டி இருக்கும் களிம்பை (மலங்களை) நீக்கி அருள் புரிந்தான் என்று பார்த்தோம். அந்த குற்றங்கள், மலங்கள், களிம்புகள் மீண்டும் வந்து விட்டால்?


திருமூலர் சொல்கிறார், அவன் குற்றங்களை நீக்கியது மட்டும் அல்ல, அந்தக் குற்றங்கள் மீண்டும் வராமல் தடுப்பான் என்று. 



பாடல் 


களிம்பறுத் தான்எங்கள் கண்ணுதல் நந்தி

களிம்பறுத் தான்அருட் கண்விழிப் பித்துக்

களிம்பணு காத கதிரொளி காட்டிப்

பனிங்கிற் பவழம்3 பதித்தான் பதியே.


பொருள் 


களிம்பறுத் தான் = ஆன்மாக்களை பற்றியுள்ள அழுக்குகளை நீக்கினான்  


எங்கள் = எங்கள் 


கண்ணுதல் = நுதல் என்றால் நெற்றி. நெற்றியில் கண் உள்ள 


நந்தி = சிவனை நந்தி என்று குறிப்பிடுகிறார் திருமூலர் 


களிம்பறுத் தான் = களிம்பை நீக்கிய அவன் 


அருட் கண் = அருள் கண்ணை 


விழிப் பித்துக் = விழிக்கச் செய்து 


களிம்பணு காத = மீண்டும் களிம்பு அணுகாத 


கதிரொளி  காட்டிப் = ஞானமாகிய ஒளியைக் காட்டி 


பனிங்கிற் பவழம் = பளிங்கு போன்ற உள்ளத்தில் பவழம் போன்ற தன் திருவடிகளைப் 


பதித்தான் = பதியச் செய்தான் 


பதியே = தலைவனாகிய அவன்.


நம் கண்களால் உலகைக் காண்கிறோம். 


உலகில் உள்ள எல்லாவற்றையும் காண முடியுமா?


பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்ணுயிரிகளை சாதாரண கண்ணால் பார்க்க முடியாது. அதற்கு நுண்ணோக்கி (microscope ) வேண்டும். 


தூரத்தில் உள்ள பொருள்களைப் பார்க்க தொலை நோக்கி (telescope ) வேண்டும். 


அது போல உண்மையை காண இந்தக் கண்கள் போதாது. அருட் கண்கள் வேண்டும். 


அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ 


என்பார் அருணகிரிநாதர்.


அருள் இல்லாமல் அறிய முடியாது. அந்த அருள் கண்ணை திறந்து, மலங்களை கழுவி, அது மீண்டும் வரா வண்ணம் தன் திருவடிகளை நம் மனதில் பதித்து அருள் புரிவான் என்பது கருத்து. 


எங்கெல்லாம் திருவடிகள் என்று வருகிறதோ, அங்கெல்லாம் அதை ஞானம் என்று கொள்ளலாம். 


திருவடிகளை மனதில் பதித்தான் என்றால், உண்மையான ஞானத்தை தந்து அருளினான் என்று பொருள் கொள்ள வேண்டும். 




Tuesday, September 17, 2024

திரிகடுகம் - துயரம் வரும் வழி

 திரிகடுகம் - துயரம் வரும் வழி 


திரிகடுகம் என்ற நூலில், ஒவ்வொரு பாடலும் மூன்று கருத்துகளை கொண்டு இருக்கும். 


துயரம் வரும் வழி எது? மூன்று விடயங்கள் துயரம் தரும் என்கிறது. 


ஏதோ ஒரு புது ஊருக்குப் போய் இருப்போம். சுற்றுலா என்று வைத்துக் கொள்ளுங்களேன். போன இடத்தில் ஒரு அருமையான நீர் ஓடும் ஒரு இடம். அது ஓடையாக இருக்கலாம், ஆறாக இருக்கலாம், செயற்கை நீரோட்டமாக இருக்கலாம். நமக்கு பழக்கம் இல்லாத நீரோட்டம். அதில் சென்று மட மட என்று இறங்குவது துயர் தரும். ஆழம் தெரியாது, நீரின் வேகம் தெரியாது. அதில் சுழல் இருக்குமா, உள்ளே இழுக்குமா என்று தெரியாது. அதில் இறங்குவது துன்பம் தரும். 


அன்பு இல்லாத பெண்களைச் சேர்வது. பொதுவாக விலை மகளிரை குறித்தாலும், கட்டிய மனைவியாகவே இருந்தாலும், அன்பு இல்லாத பெண்ணிடம் சேர்ந்து வாழ்வது துன்பம் தரும். 


சில பேர் ஏதோ ஒரு காரணத்துக்காக வேறு ஊர் செல்வார்கள். வேலை நிமித்தம், அல்லது திருமணம் போன்ற சடங்குகளை காண என்று ஏதோ ஒரு காரணம் இருக்கும்.  அந்த ஊரில் எங்கே தங்குவது என்ற கேள்வி வரும். நமக்குத் தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்து, அவர்கள் வீட்டில் அழையா விருந்தாளியாக போய் தங்குவது. அவர்களின் சங்கடம், வீட்டுச் சிக்கல்கள் இது பற்றியெல்லாம் கவலைப் படாமல், அவர்கள் வீட்டுக்குப் போய் தங்குவது துயரம் தரும் என்கிறது திரிகடுகம். 


பாடல்   



வழங்காத் துறை இழிந்து நீர்ப் போக்கும், ஒப்ப

வீழைவு இலாப் பெண்டிர் தோள் சேர்வும், உழந்து

விருந்தினனாய் வேற்றூர் புகலும், - இம் மூன்றும்

அருந் துயரம் காட்டும் நெறி. . . . 


பொருள்


வழங்காத் = போய் வந்து பழக்க வழக்கம் இல்லாத 


துறை = நீர் துறை, ஆற்றங்கரை 


இழிந்து = இறங்கி 


நீர்ப் போக்கும் = நீர் ஓடும் இடமும் , 


ஒப்ப = ஒன்றாக, ஒரு மனதாக 


விழைவு = விருப்பம், அன்பு 


இலாப் பெண்டிர்  = இல்லாத பெண்கள் 


தோள் சேர்வும் = அவர்கள் தோளைச் சேர்வதும், கட்டி அணைப்பதும், 


உழந்து = கஷ்டப்பட்டு 


விருந்தினனாய்  = விருந்தினனாய் 


வேற்றூர் புகலும் = வெளி ஊரில் ஒருவர் வீட்டுக்குச் செல்வதும் 


இம் மூன்றும் = இந்த மூன்றும் 


அருந் துயரம் = பெரிய துன்பத்தைக் 


காட்டும் நெறி = கொடுக்கும் வழிகளாகும் 


 


Thursday, September 12, 2024

திருக்குறள் - தோற்றமும், செயலும்

திருக்குறள் - தோற்றமும், செயலும் 


நல்லவர் யார், தீயவர் யார் என்று எப்படி அடையாளம் கண்டு கொள்வது?


வெளியில் பார்த்தால் துறவிகளுக்கான உடை, நாக்கில் எப்போதும் இறைவன் நாமம், பழைய நூல்களில் இருந்து எப்போதும் மேற்கோள், ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் பாண்டித்தியம், புராண, இதிகாசங்களில் இருந்து மேற்கோள்...என்று ஒரு துறவிக்கு உண்டான அனைத்து இலட்சணங்களும் இருக்கும். 


ஆனால், செயலோ மிக மிக கீழ்த்தரமாக இருக்கும். 


நமக்குத் தெரிவது எல்லாம் வெளி வேடம் தானே. உள்ளுக்குள் போய் நாம் எப்படி ஒருவரை இனம் காண முடியும்?


வள்ளுவர் அதற்கும் ஒரு வழி சொல்கிறார். 


ஒருவன் நல்லவனா, கெட்டவனா என்பதை அவன் வெளித் தோற்றத்தை வைத்து முடிவு செய்யாதே. அவன் செய்த செயலை வைத்து முடிவு செய், என்கிறார்.


அம்பு பார்பதற்கு நேர்த்தியாக, கூறாக அழகாக இருக்கும். ஆனால், அதன் தொழில் உயிரை பறிப்பது. 


யாழ் என்பது பார்பதற்கு வளைந்து நெளிந்து ஒரு அழகான வடிவம் இல்லாமல் இருக்கும். ஆனால் அதில் இருந்து இனிமையான நாதம் வரும். 


அழகாக இருப்பது எல்லாம் நல்லதும் அல்ல. அழகு இல்லாமல் இருப்பது எல்லாம் தீமையானதும் அல்ல. 


பாடல் 

 


கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன

வினைபடு பாலால் கொளல்


பொருள் 


கணை = அம்பு 


கொடிது = கொடுமையானது (உயிர்களைப் பறிப்பதால்) 


யாழ் = யாழ் என்ற இசை வாத்தியம் 


கோடு  = வளைவு உள்ளது 


செவ்விது = செம்மையானது 


ஆங்கு அன்ன - அது போல 


வினைபடு பாலால் = வினையால் விளையும் பலனால் 


கொளல் = ஏற்றுக் கொள்க 


கலர் கலரான உடையும், நளினமான சொல்லும், உடம்பு பூராவும் சமயச் சின்னங்களும்...வெளித் தோற்றத்தை வைத்து எடை போடாதே. 


கடந்த சில வருடங்களில் அவன் என்ன செய்திருக்கிறான் என்று பார். அதில் எவ்வளவு வருமானம் நோக்கி, எவ்வளவு பொது நல சேவை நோக்கி என்று பார். 


பின் முடிவு செய். 


அவன் என்ன செய்திருக்கிறான் என்று தெரியவில்லையா, அவன் நல்லவன் என்று முடிவு செய்யாதே. அப்படி ஒரு முடிவு எடுத்தால் அது புறத் தோற்றத்தை பார்த்து எடுத்த முடிவாகவே அமையும். 





Tuesday, September 10, 2024

திருமந்திரம் - களிம்பு அறுத்தானே

 திருமந்திரம் - களிம்பு அறுத்தானே 



சில சமயம், நம் கண் கண்ணாடியில் அழுக்கு படிந்து இருக்கும். விரல் பட்டு கொஞ்சம் எண்ணெய் பிசுக்கு இருக்கும். அந்தக் கண்ணாடி மூலம் பார்த்தால் எல்லாம் மங்கலாகத் தெரியும். சரிவரத் தெரியாது. 


கண்ணாடி என்றால் சுத்தம் செய்து போட்டுக் கொள்ளலாம். கண்ணில் குறை இருந்தால்?  முதலில் குறை இருக்கிறது என்று தெரிய வேண்டும். பல பேருக்கு அவர்கள் கண்ணில் குறை இருப்பதே தெரியாது. தெரிந்த பின் அதை மருத்துவரிடம் காண்பித்து சரி செய்ய வேண்டும். 


சரி, கண்ணாடியை சரி செய்யலாம், கண்ணைக் கூட சரி செய்து விடலாம். மூளையில் கோளாறு என்றால் என்ன செய்வது?  


ஒருவருக்கு மூளையில் உள்ள ஒரு குறையினால் நீல நிறம் தெரியாது என்று வைத்துக் கொள்வோம். அவரைப் பொறுத்தவரை நீலம் என்ற ஒன்றே கிடையாது. எத்தனை பேர், எத்தனை முறை சொன்னாலும் அவரால் ஏற்றுக் கொள்ள முடியாது. 


அது போல, நம் மனதில், சித்தத்தில் சில அழுக்குகள், கறைகள் படிந்து விடுகின்றன. அவற்றின் மூலம் நாம் உலகைப் பார்க்கும் போது அது சரியாகத் தெரியாது. 


சிக்கல் என்ன என்றால், நம் அறிவில் அப்படி ஒரு குறை இருக்கிறது என்றே நமக்குத் தெரியாது. நாம் பார்பதுதான் சரி என்று நாம் நினைத்துக் கொண்டு இருப்போம். வெளியில் இருந்து ஒரு ஆள் வந்து சொன்னால் தான் அது தவறு என்று புரியும். 


ஆன்மாவானது ஆணவம், கன்மம் போன்ற கறைகளால் (மலங்களால்) சூழப் பட்டிருக்கிறது. அதற்கு அது தெரியாது. குழம்பிய அறிவின் மூலம் அது உலகை புரிந்து கொள்ள நினைக்கிறது. அது தவறான பார்வையாகத்தான் முடியும். இறைவன், உயிர்கள் மேல் அன்பு கொண்டு, கீழிறங்கி வந்து, அவற்றின் மலங்களைப் போக்கி, ஒப்பில்லாத ஆனந்தத்தைத் தருவான் என்கிறார் திருமூலர். 


பாடல் 


விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு

தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து

உண்ணின் றுருக்கயொ ரொப்பிலா ஆனந்தக்

கண்ணின்று காட்டிக் களிம்பறுத்1 தானே.


சீர் பிரித்தபின் 


விண்ணில் இருந்து இழிந்து  வினைக்கு ஈடாக மெய் கொண்டு 

தண் என்ற  தாளைத் தலைக்காவல் முன் வைத்து

உள் நின்று உருக்க ஓர் ஒப்பிலா ஆனந்தக்

கண்ணில் இன்று காட்டிக் களிம்பு அறுத்தானே.


பொருள் 


விண்ணில் இருந்து = வானில் இருந்து 


இழிந்து = இறங்கி வந்து 


வினைக்கு ஈடாக = அவரவர் செய்த வினைகளுக்கு ஈடாக 


மெய் கொண்டு = திருமேனி கொண்டு 

 

தண் என்ற = குளிர்ச்சியான 


 தாளைத் = திருவடிகளை 


தலைக்காவல் = தலையான காவலாக 


முன் வைத்து = முன்னே வைத்து 


உள் நின்று = உள்ளத்தினுள்ளே நின்று 


உருக்க = அதை உருக்கி 


ஓர் ஒப்பிலா = ஒரு ஒப்பிட முடியாத 


ஆனந்தக் = ஆனந்தத்தை 



கண்ணில் இன்று காட்டிக் = கண்முன் காட்டி 


களிம்பு அறுத்தானே. = மனதில் ஒட்டி இருக்கும் அழுக்குகளை அறவே துடைத்தானே 


புலியை பார்த்தே இல்லாத ஒருவனுக்கு புலி எப்படி இருக்கும் என்று எப்படி விளக்குவது?  அவனுக்குத் தெரிந்தது பூனை ஒன்றுதான். எனவே, அவனுக்கு "புலி எப்படி இருக்கும் தெரியுமா? பெரிய பூனை மாதிரி இருக்கும்" என்றால் அவன் புரிந்து கொள்வான். 


அவரவர் வினை, அவர்கள் பெற்ற ஞானம், அனுபவம் இவற்றிற்கு தகுந்த மாதிரி இறைவன் காட்சி தருவான். 


சின்ன பிள்ளைக்கு ஒரு பந்தைக் காட்டி சூரியன் இப்படி இருக்கும் என்று சொல்லி விளக்குவதைப் போல. 


உயிர்கள் ஆண்டவனைப் போய் அடைய முடியாது. அவன் இறங்கி வந்தால் தான் உண்டு. அவன் வருவான். உயிர்கள் மேல் அன்பு கொண்டு அவர்கள் அறிந்து கொள்ளும் வண்ணம், புரிந்து கொள்ளும் வண்ணம் வருவான். 


நமக்கு எல்லாவற்றிலும் பயம். எனக்கு பயம் ஒன்றும் கிடையாது என்று யாரும் சொல்ல முடியாது. 


அப்படி நடந்து விட்டால், இது நடக்காவிட்டால், பிள்ளைகளுக்கு ஏதும் வந்து விடுவோமோ, போட்ட பணம் நட்டமாகி விடுமோ, உடம்புக்கு ஏதாவது வந்து விடுமோ, விசா கிடைக்குமோ, வேலை கிடைக்குமோ, வரன் அமையுமோ அமையாதோ என்று ஆயிரம் கவலை. கவலையில் இருந்து பயம். 


இப்படி மனம் பயத்தில் தவிக்கும் போது, அந்த பயத்தை போக்கி, கவலைப் படாதே, நான் இருக்கிறேன் என்று தன் திருவடிகளை காவலாக வைத்து காப்பான் அவன். 


பயம் போய் விட்டால், சந்தோஷம்தானே. இருந்தாலும் ஒரு குழப்பம் இருக்கும். 


நமக்கும், நம்முடைய சந்தோஷத்துக்கும் இடையில் நிற்பது நான், எனது என்ற ஆணவ மலம், மற்றும் கன்ம மலம், மாயா மலம். 


இந்தக் களிம்புகளை நீக்கி அறிவை ஒளி பெறச் செய்து, இன்பத்தை தருபவன் இறைவன் என்கிறார் திருமூலர். 


இப்படி மூவாயிரம் பாடல் திருமந்திரத்தில் 

நாளொன்றிற்கு ஒரு பாடல் என்று வைத்துக் கொண்டால் கூட கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் ஆகும் முழுவதும் படித்து முடிக்க.