திருக்குறள் - அருள் கருதி
இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது தலைக் கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று ஒரு சட்டம் இருக்கிறது.
பலபேருக்கு அது பெரிய சங்கடமாக இருக்கிறது. தலைக்குள் வியர்கிறது, பின்னால் வரும் வண்டியின் சத்தம் கேட்பது இல்லை, தலை கலைகிறது, அதைத் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டி இருக்கிறது என்று அங்கலாய்ப்பார்கள்.
வேறு சிலரோ, என் தலை, என் உயிர், எனக்கு இல்லாத அக்கறை அரசாங்கத்துக்கு என்ன வேண்டி இருக்கிறது? புகை பிடிப்பதை தடை செய்யாத அரசாங்கம், தலைக் கவசம் பற்றி ஏன் இவ்வளவு அலட்டிக் கொள்ள வேண்டும் என்று கோபம் கொள்வார்கள்.
நாளையே தலைக் கவசம் கட்டாயம் இல்லை என்று அரசாங்கம் சொல்லி விட்டால், எத்தனை பேர் அணிவார்கள் என்பது சந்தேகமே.
இப்படி யோசிப்போம்.
தலைக் கவசம் அணிந்தால், விபத்து வரும் போது, அந்தக் கவசம் என் தலையைக் காக்கும், என் உயிரைக் காக்கும். நான் காப்பாற்றப் பட்டால், என் குடும்பம் கஷ்டப்படாது. எனவே, தலைக் கவசம் அணிவது எனக்கு நல்லது. அரசாங்கம் சட்டம் இயற்றினாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, என் பாதுகாப்புக்காக நான் அணிவேன் என்று சிலர் நினைக்கலாம்.
அவர்கள் அணிவது அவர்களின் நலம் கருதி.
அது போல் அறத்தை கடைபிடிப்பது புத்தகங்கள் சொல்கின்றன, பெரியவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக அல்ல, அது நல்லது என்பதால் அவர்கள் அதை கடை பிடிக்கிறார்கள்.
வள்ளுவர் சொல்கிறார்
"பிற உயிர்கள் மேல் அன்பு செய்வது மிகச் சிறந்தது என்று அறிந்து அவ்வுயிர்கள் மேல் அன்பு செய்தல் என்பது மற்றவர்களின் பொருளை தவறான வழியில் எடுத்துக் கொள்வோம் என்று நினைப்பர்களுக்கு வராது"
பாடல்
அருள்கருதி அன்புடையர் ஆதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்
பொருள்
அருள்கருதி = அருளின் பெருமையை, சிறப்பை அறிந்து
அன்புடையர் = மற்ற உயிர்கள் மேல் அன்பு செய்பவர்கள்
ஆதல் = ஆவது
பொருள்கருதிப் = மற்றவர்களின் பொருளை
பொச்சாப்புப்= அவர்களின் சோர்வை எதிர்பார்த்து
பார்ப்பார்கண் இல் = காத்து இருப்பவர்களிடம் இல்லை
மற்ற உயிர்கள் மேல் அருள் செய்வது என்பது ஏதோ சாத்திரத்தில் சொல்லி இருக்கிறது, அப்படி செய்தால் புண்ணியம், செய்யாவிட்டால் பாவம் என்றெல்லாம் யோசிக்காமல், அருள் செய்வது செய்வது நல்லது என்று அறிந்து அன்பு செய்பவர்கள் இருக்கிறார்கள். தன் பொருளையே மற்றவர்களுக்கு கொடுத்து, மற்றவர்கள் மகிழ்வது கண்டு தான் மகிழும் குணம் கொண்டவர்கள். இந்தக் குணமானது மற்றவர்கள் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் பொருளை கவர நினைப்பவர்களிடம் இருக்காது என்கிறார்.
களவுக்குக் காரணம், மனதில் பிற உயிர்கள் மேல் அன்பு இல்லாமை.
துறவிக்கு வேண்டியது அனைத்து உயிர்கள் மேலும் அன்பு. அது அருள் எனப்படும்.
பொருள் வேண்டும் பொருள் வேண்டும் என்று பொருள் சேர்த்து, அதை நிர்வகிக்க கணக்கப்பிள்ளை, மேலாளர் என்று ஆள் அமர்த்தி வாழ்பவர்கள் துறவிகள் அல்ல.
தன்னிடம் இருப்பதையும் மற்றவர்களுக்கு கொடுப்பவனே துறவி.
மற்றவர்களிடம் இருப்பதை தனதாக்கிக் கொள்ள முயற்சி செய்பவன் துறவியாக இருக்க முடியாது.
ஒருவன் ஒரு துறவியை, சாமியாரை எப்போது சென்று பார்க்கிறான்?
ஏதோ ஒரு கவலை, துன்பம் வரும் போது ஆறுதல் வேண்டி செல்வான். இதுதான் சமயம் என்று பரிகாரம், அது இது என்று அவன் சோர்ந்த நேரத்தில் அவனிடம் உள்ள பொருளை பறிப்பவன் துறவி அல்ல. அப்படி பொருளைப் பெறுவது என்பது களவு ஆகும் என்கிறார் வள்ளுவர்.
No comments:
Post a Comment