Friday, May 17, 2013

திருக்குறள் - தவம் என்றால் என்ன ?

திருக்குறள் - தவம் என்றால் என்ன ?


தவம் என்றால் காட்டில் சென்று, மரத்தடியில் அமர்ந்து, இறைவனின் நாமத்தை சொல்லுவது, என்று ஒரு பொதுவான எண்ணம் நிலவுகிறது.

அது தவறு.

தவத்திற்கு இரண்டு பிரிவு உண்டு.

முதலாவது - உற்ற நோய் நோன்றல். அதாவது தனக்கு வந்த துன்பங்களை தாங்கிக் கொள்வது.

இரண்டாவது - உயிர்க்கு உறுகண் செய்யாமை - மற்ற உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் இருத்தல்

இவை இரண்டும் தவத்திற்கு உரு.

கொஞ்சம் வலி பொறுத்துப் பழகுங்கள். ஜுரம் வந்தால், தலை வலி வந்தால், பசி வந்தால் கொஞ்சம் தாங்கிப் பழகுங்கள். அதுவே ஒரு தவம். வலி பொறுக்க பொறுக்க உங்கள் வலிமை வளரும்.

எடுத்ததற்கெல்லாம் pain killer வேண்டும் என்று ஓடாதீர்கள்.

வலி இல்லாமல் வாழ்க்கை இல்லை.

எந்த காரியம் செய்தாலும் வலி இருக்கும். வலி இல்லாத வேலை என்று ஒன்று இல்லை.

மற்றவர்களுக்கு உதவி செய்வதும் ஒரு வலி தான்.

படிப்பதும் வலிதான்.

இனிமையான இசை கேட்கிறோம்...வாசிப்பவனுக்குத் தெரியும் வாசிப்பின் வலி.

நோன்றல் என்றால் பொறுத்துக் கொள்ளுதல்.


பாடல்

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை

அற்றே தவத்திற் குரு.

பொருள்

உற்றநோய் = தனக்கு ஏற்பட்ட துன்பம்


நோன்றல் = பொறுத்துக் கொள்ளுதல்

உயிர்க்குறுகண் = மற்ற உயிர்களுக்கு துன்பம் 

செய்யாமை  = செய்யாமல் இருத்தல்


அற்றே தவத்திற் குரு = அதுவே தவத்திற்கு வடிவம்



No comments:

Post a Comment