Thursday, May 2, 2013

திருக்குறள் - காதல் பயிருக்கு நீர்


திருக்குறள் - காதல் பயிருக்கு நீர் 


வீடுகளில் செடிக்கு நீர் விடுவதை பார்த்து இருக்கிறீர்களா ? பூச் செடி, துளசி செடி என்று செடி இருக்கும்.

ஒரு சின்ன  சொம்பிலோ , குவளையிலோ மொண்டு செடிக்கு தண்ணி ஊத்துவார்கள்.

சட்டென்று குவளையை கவிழ்த்து விடமுடியாது. அப்படி மொத்தமா கொட்டினால் செடி தாங்காது. கொஞ்ச கொஞ்சமாய் ஊற்ற வேண்டும்

குவளையை சரித்து கொஞ்சம் ஊற்றனும். அப்புறம் குவளைய நிமித்தனும். அப்புறம் கொஞ்சம் சரிக்கணும்...இப்படி கொஞ்ச கொஞ்சமாய் தண்ணி ஊற்றுவார்கள்

அப்படி கொஞ்ச கொஞ்சமா ஊற்றினால்தான் செடி நன்றாக வளரும்.



அவ சில சமயம் நேருக்கு நேர் பார்ப்பாள். அட, நம்ம  ஆளு இப்படி லுக்கு விடுதேனு நானும் அவ கண்ணை பார்த்தால் உடனே பார்வையை தாழ்த்தி விடுவா.  அப்படி பார்வையை தாழ்த்தும் போது ஒரு நாணப் புன்னகை சிந்துவாள்.

அப்புறம், நான் கவனிக்காதபோது லேசா தலைய தூக்கி பார்ப்பா...அப்புறம் நாணம், தலை கவிழ்ப்பு.....

செடிக்கு தண்ணி ஊத்தும் குவளை ஞாபகம் வருகிறதா ?


பாடல்

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்


பொருள்






நோக்கினாள் = பார்த்தாள்

நோக்கி இறைஞ்சினாள் = இறைஞ்சுதல் என்றால் தலை தாழ்த்தல். இறைஞ்சுதல் என்றால் தலை வணங்கி வேண்டுதல். இங்கே பார்த்ததால் வெட்கப் பட்டு தலை தாழ்த்துவது.

 அஃதவள் = அது அவள்

யாப்பினுள் = இது ஒரு இனிமையான சொல் பிரயோகம். யாக்குதல் என்றால் கட்டுதல், பிணைத்தல். யாப்பிலக்கணம் என்பது செய்யுள் புனைதல் பற்றிய விதி முறை. இந்த உடலுக்கு யாக்கை என்று பெயர் - எலும்பு, நரம்பு, இரத்தம், சதை இவற்றால்  கட்டப் பட்டதால் இதற்கு யாக்கை என்று பெயர். கட்டுவதால்,   பிணைத்தலால் இதற்கு அன்பு என்றும் ஒரு பொருள் உண்டு. அன்பு பிணைப்பது தானே.

அட்டிய நீர் = வார்த்த நீர்.

இந்த காதல் பயிருக்கு அவள் நிமிர்ந்தும், தலை தாழ்த்தும் பார்க்கும் அந்த பார்வை  நீராகும்.

இப்படி லுக்கு விட்டா, காதல் பயிர் முப்போகம் விளையும்....

நடத்துங்க...



 


1 comment:

  1. இப்படி ஒரு கள்ளப் பார்வை பார்த்தால், சும்மா கிறக்குதுல்ல!

    ReplyDelete