Tuesday, May 14, 2013

அபிராமி அந்தாதி -உந்தன் விழியின் கடை உண்டு


அபிராமி அந்தாதி -உந்தன் விழியின் கடை உண்டு 


உடம்பு சரி இல்லை. அதை குணமாக்க மருந்து சொல்ல மருத்துவர் உண்டு. கடையில் மருந்து உண்டு. மருத்துவரையும் பார்க்காமால், மருந்தும் வாங்காமல் சும்மா வீட்டில் உட்கார்ந்திருந்தால் நோய் குணமாகுமா ? நோய் குணமாகாவிட்டால் யார் காரணம் ?


பாடல்



ஆளுகைக்கு, உன்தன் அடித்தாமரைகள் உண்டு, அந்தகன்பால் 
மீளுகைக்கு, உன்தன் விழியின் கடை உண்டு, மேல் இவற்றின் 
மூளுகைக்கு, என் குறை, நின் குறையே அன்று,-முப்புரங்கள். 
மாளுகைக்கு, அம்பு தொடுத்த வில்லான், பங்கில் வாணுதலே.

பொருள்






ஆளுகைக்கு = என்னை ஆட்கொள்ள

உன்தன் அடித்தாமரைகள் உண்டு = உந்தன் திருவடித் தாமரைகள் உண்டு

அந்தகன்பால் = எமனிடம் இருந்து ( அந்தியில் வருவதால் அவன் அந்தகன். குறித்த காலத்தில் வருவதால் அவன் காலன். நல்லவர் கெட்டவர் என்று பார்க்காததால் அவன் அந்தகன்  (குருடன்), உடலையும் உயிரையும் கூறு போடுவதால் அவன்  கூற்றுவன்)

மீளுகைக்கு = தப்பிப்பதற்கு

உன்தன் விழியின் கடை உண்டு = உன் விழியின் கடை உண்டு

மேல் இவற்றின் மூளுகைக்கு = இவை எல்லாம் (உன் திருவடி, உன் கடைக்கண்) இருந்தும் எனக்கு துன்பம் மூண்டால்

என் குறை = அது என்னுடைய குறைதான்

நின் குறையே அன்று = உன் குறை அல்ல

முப்புரங்கள் = முப்புரங்கள்

மாளுகைக்கு = அழிவதற்கு

அம்பு தொடுத்த வில்லான் = அம்பு தொடுத்த வில்லை உடையவன் (சிவன்)


பங்கில் = அவன் உடலில் சரி பங்கு உள்ளவளே

 வாணுதலே = வாள் போல் ஒளி வீசும் நெற்றியை உடையவளே

 இறைவன் என்று  ஒருவன் இருந்தால் உலகில் ஏன் இத்தனை துன்பங்கள்,
கொலை, கொள்ளை, போன்ற கொடிய செயல்கள் இருக்கின்றன என்று கேட்போருக்கு பட்டர்  பதில் தருகிறார்....நான் உன் அருளை பெறாததுதான், உன் அருளை பெரும் தகுதி இல்லாமல் இருப்பதுதான் என்று பழியை தன் மேல் ஏற்றுக் கொண்டு ....அபிராமி, நீ ரொம்ப நல்லவ, தப்பு எல்லாம் என் பேர்ல தான் என்கிறார்.

நாமா இருந்தால் கொஞ்சம் கஷ்டம் வந்தாலும் கடவுளை திட்டி தீர்ப்போம்....எவ்வளவு பூஜை பண்ணி இருப்பேன், எவ்வளவு காணிக்கை செலுத்தி இருப்பேன் ...இந்த கடவுளுக்கு கண்ணே இல்லை, இரக்கமே இல்லை என்று வசை மாறி பொழிந்திருப்போம்....

பட்டர் அப்படி செய்யவில்லை..தவறெல்லாம் தன் பேரில் என்று ஏற்றுக் கொள்கிறார் ...அது பக்தி...







2 comments:

  1. ஆரோபுதமான பக்திப் பாடல். எனக்கு பக்தி இல்லாவிட்டாலும், பட்டரின் பக்தி உணர்வை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

    ReplyDelete
  2. Excellent meaning.

    ReplyDelete