Tuesday, May 7, 2013

திருவாசகம் - தேனுந்து செந்தீ


திருவாசகம் - தேனுந்து செந்தீ


தீ நல்லதுதான். உணவு சமைக்க உதவும். மழை பொழிய, பயிர் விளைய, இப்படி பலப் பல நல்ல காரியங்களுக்கு தீ உதவுகிறது. இருந்தும் அதில் ஒரு சங்கடம்...சுடும். தொட்டால் பொசுக்கி விடும். கருக்கி விடும்.

திருப் பெருந்துறையில் ஒரு தீ இருக்கிறது. அதுவும் எரிக்கும். எதை தெரியுமா ? உங்கள் இரு வினைகளை. உங்கள் பாவ புண்ணியம் என்ற இரண்டு வினைகளை எரித்து சாம்பாலாக்கி விடும்.

உங்கள் வினைகளை எரிக்கும் ஆனால் உங்களுக்கு தேன் போல தித்திக்கும். உங்கள் வினைகளை எரிக்கும். உங்கள் உடலை காக்கும்.

தேனைப் பொழியும் செந்தீ அது.

வாழ்க்கையில் பொய் ஆனவற்றை எல்லாம் பொடி பொடியாக்கி விடும். பொய் போன பின் நிற்பது மெய் தானே.

இத்தனையும் நடக்கும், எப்போது என்றால் அந்த திருபெருந்துறையானை மனதால் நினைத்தால்.

அது கூட முடியவில்லையே என்று உருகுகிறார் மாணிக்க வாசகர்.

அவருக்கே அந்த நிலை என்றால்.....

பாடல்


வெய்ய வினையிரண்டும் வெந்தகல மெய்யுருகிப்
பொய்யும் பொடியாகா தென்செய்கேன் செய்ய
திருவார் பெருந்துறையான் தேனுந்து செந்தீ
மருவா திருந்தேன் மனத்து.


பொருள்







வெய்ய = வெம்மையான

வினையிரண்டும் = நல் வினை, தீ வினை என்ற இரண்டும்

வெந்தகல = வெந்து அகல

மெய்யுருகிப் = மெய் உருகி

பொய்யும் பொடியாகா தென்செய்கேன் = பொய்யும் பொடியாகாது என் செய்வேன் ?

செய்ய = செய்ய

திருவார் பெருந்துறையான் = திரு வளரும் பெருந்துறையுள் இருப்பவன்

தேனுந்து செந்தீ = தேன் சொரியும் செம்மையான தீ

மருவா திருந்தேன் மனத்து = மருவாமல் இருந்தேன் மனத்து. மருவு என்பது ஒரு அழகான  தமிழ் சொல். மருவுதல் என்றால் அணைத்தல், தழுவுதல், இணைத்தல் , அன்பால் ஒன்று படுதல்.


மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை 
        மறவா திருக்க வேண்டும் 
        மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற 
        வாழ்வுனான் வாழ வேண்டும் 


என்பார் வள்ளல் பெருமான். 

மருமகள், மருமகன் என்ற சொல்லின் அடி வேர் மருவுதல். 

மரியாதை என்ற சொல்லின் ஆதி மருவாதி. 

அந்த தீ இரு வினைகளை வெந்து போகச் செய்யும் 

அந்த தேன்  உங்கள் உடலுக்கு உறுதி தரும்.

மனதில் நினைப்பது கடினமா ?



2 comments: