Thursday, May 2, 2013

இராமாயணம் - நீர் மேயும் மேகம்


இராமாயணம் - நீர் மேயும் மேகம் 


அயோத்தியில் மேகங்கள் மழை பொழிகின்றன.

இதுதான் செய்தி

இதைச் சொல்ல வேண்டும். ஆழமாக, அழகாக சொல்ல வேண்டும்.

கம்பர் எப்படி சொல்கிறார் பாருங்கள். கம்பனின் கவிப் புலமைக்கு இது ஒரு உதாரணம்.

சிவ பெருமான். அவன் செந்நிற மேனி கொண்டவன். பொன் போன்ற நிறம்.

"பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கசைத்து" என்பது தேவாரம்.

அவன் மேனி எல்லாம் திருவெண்ணீறு பூசி இருக்கிறான். தூரத்தில் இருந்து பார்க்கும் போது ஒரே வெண்மையாகத் தெரிகிறது.

மேகங்கள் அப்படி வெண்மையாக இருந்ததாம்.

அப்படி பட்ட வெண் மேகங்களில் கொஞ்சம் நீர் இருக்கிறது. நிறைய இல்லை. அது ஏதோ ஆற்றை எடுத்து மேலே அணிந்து கொண்டது மாதிரி இருக்கிறது.

பின் அப்படியே மிதந்து போய் கடலின் மேல் பசு புல் மேய்வது மாதிரி கடல் தண்ணியை  எல்லாம் மேய்ந்ததாம். வயிறு முட்ட தண்ணி சாப்ட்டாச்சு.

திரும்பி அயோத்தி வருகிறது.

வரும்போது எப்படி இருக்கிறது ?

கருமை நிறத்தில் இருக்கிறது. எப்படி கருமை ? திருமகள் மணாளன் திருமாலின் வண்ணம் போல்  திரும்பி வந்தது.


திருமால் இங்கு வரப் போகிறான் என்று கட்டியம் கூறுவது போல இருக்கிறது அது.

பாடல்


நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்
ஆறு அணிந்து சென்று. ஆர்கலி மேய்ந்து. அகில்
சேறு அணிந்த முலைத் திருமங்கைதன் 
வீறு அணிந்தவன் மேனியின் மீண்டதே.

பொருள்






நீறு அணிந்த = திருநீறு அணிந்த

கடவுள் = சிவன்

 நிறத்த வான் = நிறமான வான் (மேகம்)

ஆறு அணிந்து சென்று = ஆற்றை (=அதில் உள்ள நீரை) ஆடையாக உடுத்திச் சென்று. அழகு படுத்திக் கொண்டு சென்று என்று பொருள் சொல்வாரும் உண்டு.

ஆர்கலி = ஆராவாரிக்கும் கடல்

மேய்ந்து = மேய்ந்து

அகில் = சந்தனம் போன்ற ஒரு நறுமணப் பொருள்

சேறு அணிந்த = சேறு போல் குழைத்த அகில், அதை பூசிக் கொண்ட 

முலைத் திருமங்கைதன்  = மார்புகளை கொண்ட திரு மங்கை (லக்ஷ்மி, திருமகள் ),

வீறு அணிந்தவன் = திருமால் லக்ஷ்மியை தன் இதயத்தில் வைத்தவன்...எனவே அவன் லக்ஷ்மியை அணிந்து கொண்டது மாதிரி இருந்ததாம்


மேனியின் மீண்டதே = அப்படிப்பட்ட திருமால் நிறத்தில் திரும்பி வந்தது

கம்ப இராமாயணத்தில் இரண்டாவது பாடல் இது.

கம்ப இராமாயணத்தில் பன்னிரண்டு ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட பாடல்கள் உள்ளன.

எப்ப மீதி பாடல்களை எல்லாம் படிக்க போறீங்க ?


2 comments:

  1. அதான், மீதி பாடல் எல்லாம் இந்த blog-ல ஒண்ணொண்னா படிச்சாப் போச்சு!

    ReplyDelete
  2. எப்பொழுது வேண்டுமானாலும் படிக்க தயாராக உள்ளோம் .நீங்கள் இருக்கும் பொழுது எங்களுக்கு என்ன கவலை.

    ReplyDelete