Friday, May 24, 2013

திருக்குறள் - ஒப்புரவு அறிதல்


திருக்குறள் - ஒப்புரவு அறிதல்  


ஒப்புரவு என்றால் உலகுடன் ஒத்து வாழ்தல். உலகின் வழி அறிந்து அதன் படி வாழ்தல்.

நாம் வாழ்வில் பார்க்கலாம், நிறைய பேர் நிறைய படித்திருப்பார்கள், நிறைய நல்ல குணம் இருக்கும். இருந்தாலும் மற்றவர்கள் அவர்களோடு சேர்ந்து இருக்க சங்கடப் படுவார்கள்.

சரியாக பேசத் தெரியாது. எப்ப என்ன சொல்கிறோம் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் எதையாவது செய்து வைப்பார்கள்.

எல்லோரிடமும் சண்டை. ஏதாவது சச்சரவு.

யாருடனும் ஒத்து போக மாட்டார்கள். எதிலும் ஒரு அதீத எதிர்பார்ப்பு. அது நடக்காதபோது ஒரு கோபம், எரிச்சல்.

எதுக்கு எடுத்தாலும் ஒரு வாதம். பிடிவாதம்.

அதே சமயம் வேறு சில பேரை பார்த்தால், மிக இனிமையாக இருப்பார்கள். பேச்சில் ஒரு நளினம். பிறருக்கு உதவும் குணம். பிறர் துன்பங்களை அறிந்து உதவும் குணம். உலக இயல்போடு ஒத்து வாழ்வார்கள்.

இதை சொல்வதற்கு வள்ளுவர் ஒரு அதிகாரமே எழுதி இருக்கிறார் -  ஒப்புரவு  அறிதல்.

உலக அறிவு என்பது படிப்பு அறிவு கிடையாது. அனுபவ அறிவு. எப்படி பழக வேண்டும் , எப்படி பேச வேண்டும், எப்படி ஊரோடு ஒத்து போவது என்று சொல்கிறார் இந்த அதிகாரத்தில்.

உயிருள்ள மனிதனுக்கும், உயிரற்ற உடலுக்கும் என்ன வித்தியாசம். பிணம் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று  அறியாது. அது பாட்டுக்கு கிடக்கும். தன்னையும் பார்த்துக் கொள்ளாது, பிறரையும் பார்க்காது. தன்னால் பிறருக்கு வரும் துன்பங்களையும் (நாற்றம், சுகாதாரக் கேடு ) அது உணராது.

உலக அறிவு இல்லாதவன் அந்த பிணத்திற்கு ஒப்பானவன் என்கிறார் வள்ளுவர்.. விலங்கு கூட இல்லை, பிணம் என்கிறார்.

பாடல்

ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.


பொருள்






ஒத்த தறிவான் = ஒத்தது, உலகுக்கு எது உகந்ததோ அதை அறிபவன்

உயிர்வாழ்வான் = உயிர் வாழ்பவனாக கருதப் படுவான்

மற்றையான் = மற்றவர்கள் எல்லாம்

செத்தாருள் வைக்கப் படும் = செத்தவர்களுக்குள் வைக்கப் படும்

இதையே சுருக்கமாக அவ்வை பாட்டி "ஒப்புரவு ஒழுகு" என்று இரண்டே வார்த்தையில் சொல்லி விட்டு போய் விட்டாள்.

ஊருடன் ஒத்து வாழ் என்ற பழமொழி சொல்லுவது இதைத்தான்.

சரி, இந்த அதிகாரத்தில் உள்ள மற்ற குறள்கள் என்ன சொல்கின்றன என்று அறிய ஆவலாய் இருக்கிறீர்களா ?


 

1 comment: