Sunday, August 11, 2013

இராமாயணம் - வரம்பு இலான் மறுமொழி

இராமாயணம் - வரம்பு இலான் மறுமொழி 


இராவணன் கபட சந்நியாசி  வேடத்தில் வந்து சீதையிடம் தான் இலங்கையில் இருந்து வருவதாகவும் அங்கு ஆட்சி செய்யும் இராவணன் மிகச் சிறந்த பலசாலி என்று  கூறியதோடு அல்லாமல் அவன் சிறப்புகளை மேலும் மேலும் எடுத்துக்  கூறினான்.

சீதை கொஞ்சமும் அதைப் பற்றிக் கவலைப் படவில்லை. அவள் இராவணனிடம் திருப்பி " நீங்கள் இந்த தவ முனிவர்கள் இருக்கும் கானகத்திலோ அல்லது புனிதர்கள்  வாழும் நகரத்திலோ இருந்து இருக்கலாமே...அதை விட்டு விட்டு ஏன் அரக்கர்கள் வாழும் இலங்கையில் போய் இருந்தீர்கள் " என்று கேட்டாள் ....

இராவணன் சொல்கிறான் 

மங்கை அஃது உரைத்தல் கேட்ட வரம்பு
     இலான், "மறுவின் தீர்ந்தார், 
வெங் கண் வாள் அரக்கர்" என்ன 
     வெருவலம்; மெய்ம்மை நோக்கின், 
திங்கள் வாள் முகத்தினாளே! 
     தேவரின் தீயர் அன்றே; 
எங்கள் போலியர்க்கு நல்லார் 
     நிருதரே போலும்' என்றான்.

" குற்றமற்ற அவர்களை கொடுமையான வாள் வீசும் அரக்கர் என்று கூறினாலும்  நான் அஞ்ச மாட்டேன்...உண்மையை  அறியப் போனால் சந்திரனைப் போல் ஒளி வீசும்   முகம் கொண்டவளே அவர்கள் (அரக்கர்கள்) தேவர்களை  விட கொடியவர்கள் அல்லரே...எம் போன்றோருக்கு அரக்கர்களே   நல்லவர்கள் "


பொருள்

மங்கை = சீதை

அஃது உரைத்தல் = அப்படி சொன்னதை

கேட்ட = கேட்ட

வரம்பு  இலான் = எல்லை  இல்லாதவன். வரம்பு என்றால் நெறி, ஒழுக்கம் என்ற உண்டு. அவன் ஆற்றலுக்கு வரம்பு இல்லை. அவன் அரசுக்கு எல்லை இல்லை. அவனும் எந்த எல்லைக்கும் உட்பட்டவன் அல்ல . கம்பனின் வார்த்தை விளையாட்டு

 "மறுவின் தீர்ந்தார் = மறு என்றால் கறை . மறுவின்  தீர்ந்தார் என்றால் குற்றமற்றவர்கள்

வெங் கண் வாள் அரக்கர் = வெம் கண் என்றால் வெம்மையான கண். அருள் இல்லாத, கருணை இல்லாத கண்கள் என்று ஒரு பொருள். வெங்கண் என்றால் பாவம். பாவம் உள்ள வாளைக்  கொண்ட அரக்கர்கள்

என்ன   வெருவலம் = அப்படி சொன்னால் அச்சப்  படமாட்டோம் அல்லது கவலைப் பட மாட்டோம்

மெய்ம்மை நோக்கின், = உண்மையை சொல்ல வேண்டும் என்றால்

திங்கள் வாள் முகத்தினாளே! = சந்திரனைப் போல் ஒளி வீசும் முகத்தை கொண்டவளே

தேவரின் தீயர் அன்றே = (அவர்கள்) தேவர்களை விட   தீயவர்கள் அல்லவே

எங்கள் போலியர்க்கு = எங்களைப் போன்றவர்களுக்கு. எங்களைப் போன்ற போலியானவர்களுக்கு என்றும்  அர்த்தம் சொல்லலாம்


 நல்லார் = நல்லவர்கள்

நிருதரே போலும்' என்றான் அரக்கர்களே என்றான்


1 comment:

  1. வரம்பு இலான் - அருமையானா சொல்.

    நன்றி.

    ReplyDelete