Tuesday, August 27, 2013

திருக்குறள் - பாலோடு தேன்

திருக்குறள் - பாலோடு தேன் 


பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயி றூறிய நீர்.

தமிழில் நிறைய காம இரசம் உள்ள புத்தகங்கள் உள்ளன. விடலைப் பருவத்தில் மாணவர்கள் அவற்றை மறைத்து மறைத்து வைத்துப் படிப்பார்கள். 

திருக்குறளிலும் காமத்துப் பால் உண்டு. ஒரு பையன் தன் தந்தையோடு அமர்ந்து படிக்கலாம். முகம் சுளிக்க வேண்டியது இல்லை. மறைத்து வைத்துப் படிக்க வேண்டியது இல்லை. 

 அதில் இல்லாத காமம் இல்லை....சைட் அடிப்பதில் இருந்து, கனவு, உண்ணாமல் மெலிவது, கண்டவுடன் கட்டி அணைப்பது, களவு, வதந்தி, புணர்ச்சி என்று எல்லாம் இருக்கிறது. 

அவை அனைத்தையும் விரசம் எங்கும் தட்டாமல் அவ்வளவு அழகாக எழுதி இருக்கிறார் ஜொல்லுவர் . 

அவள் தந்த முத்தம். 

அது எப்படி இருந்தது ? மிக மிக சுவையாக இருந்தது...

சுவை என்றால் எப்படி ? 

பால் சுவையாக இருக்கும்.  தேன் சுவையாக இருக்கும். அந்த இரண்டையும் கலந்தால்  அதன் சுவை எப்படி இருக்கும் ?

தனித்தனியாக இரண்டின் சுவையும் தெரியும். ஒன்றாகக் கலந்தால் அதன் சுவை தெரியாது. அது போல இருந்தது அவள் வாயில் ஊறிய நீர். 

அது மட்டும் அல்ல, பாலும் தேனும் கலக்கும் போது ஒவ்வொரு முறையும் ஒரு தனிச் சுவை  தோன்றும். ஏன் என்றால் பாலின் சுவையும் தேனின் சுவையும் தனித்தனியே எப்போதும் ஒன்று போல் இருக்காது.   அதுவும் அன்றி அவற்றை எந்த  விகிதத்தில் சேர்கிறோமோ அதற்க்கு தகுந்த மாதிரி சுவை  மாறும்.


அவள் முத்தமும் அப்படித்தான். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சுவை. 

பாலும் தேனும் அப்படியே எளிதாகக் கிடைப்பது இல்லை.  தேன் வேண்டும் என்றால்  கொஞ்சம் முயற்சி செய்ய  வேண்டும். 

இரண்டும் வற்றாமல் வந்து கொண்டே இருப்பது அல்ல. கொஞ்சம் கிடைத்த பின் நின்று போகும்.  இன்னும் வேண்டும் என்றால், பொறுத்து இருக்க வேண்டும். 

பொருள் 


பாலொடு = பாலோடு

தேன்கலந் தற்றே = தேன் கலந்த மாதிரி

பணிமொழி = பணிவான மொழி பேசும்

வாலெயி றூறிய நீர் = வாயில் உள்ள பல்/எயிறு ஊறிய நீர்

ஊறிய என்றால் மீண்டும் மீண்டும் சுரக்கும். ஊற்றுபோல் ஊறிக் கொண்டே இருக்கும். 

தொட்டனைதூறும் மணர்க் கேணி என்பதும் வள்ளுவம்.

இப்படி ஒரு 250 பாட்டு இருக்கு.


நேரம் கிடைத்தால் மூல நூலை படித்து நீங்களும் ஜொள்ளு விடலாம்....



1 comment:

  1. ஜொள்ளுன்னு சொன்னா அது மேலே நீ எழுதிய விளக்கம்தான்!

    ReplyDelete