Thursday, August 15, 2013

தாயுமானவர் - சிங்காரம்

தாயுமானவர் - சிங்காரம் 



உன்னைச் சிங்காரித்து உன்னழகைப் பாராமல் 
என்னைச் சிங்காரித்து இருந்தேன் பராபரமே 

 இறைவா,உன்னை சிங்காரித்து அழகு பார்க்காமல் என்னை சிங்காரித்து கொண்டு இருந்து விட்டேனே என்கிறார் தாயுமானவர்.

சரி.இதில் என்ன  பிரமாதம்.  இதில் என்ன பெரிய கருத்து இருக்கிறது என்று நினைக்கிறீர்களா ?

தாயுமானவர், மிக  பெரியவர். உண்மை உணர்ந்த  ஞானி.

ஏன் இறைவனை அலங்கரிக்கிறோம் ? ,கோவிலிலும் சரி, வீட்டிலும் சரி இறைவனின்   சிலையை, படத்தை  துடைத்து,அபிஷேகம்  பண்ணி,  பூவாலும்,சந்தனத்தாலும், தங்க நகைகளாலும் ஏன் அலங்காரம் பண்ணுகிறோம் ?

இறைவன்  பவனி வரும்  பல்லக்கு,தேர் போன்றவற்றையும் நாம் அலங்காரம் பண்ணுகிறோம்...ஏன் ?

இறைவன் நம்மை கேட்டானா ? என்னை அலங்காரம்  பண்ணு என்று இறைவன் கேட்டானா ? இல்லையே ...பின் எதற்கு அந்த அலங்காரம் ?

மனித மனம் அலைபாயக்  கூடியது.ஒரு  இடத்தில் நில்லாதது. அதை ஒரு இடத்தில் நிலைக்க வைக்க வேண்டும் என்றால் அதற்கு தியானம்  தேவை.

மனக் கட்டுப்பாடு அவ்வளவு எளிதில் வருவது  இல்லை.

முதலில் மனதை  ஒன்றின் மேல் படிய  , பதிய வைக்க வேண்டும். மனம் அதில் இலயிக்க வேண்டும். அதிலேயே கலக்க வேண்டும்.

அதற்கு நம் முன்னவர்கள் கண்ட வழி அலங்காரம்.

கோவில் நமது அனைத்து புலன்களுக்கும் இன்பம் தரும்படி  அமைத்தார்கள்.

காதுக்கு இனிமையாக  பாடல்கள், நாதஸ்வரம்,சொற்பொழிவுகள் என்றும்,

மூக்குக்கு இனிமையாக  கற்பூரம்,ஊதுபத்தி, மலர்கள் என்றும்,

நாவுக்கு இனிமையாக பிரசாதம் என்றும்,

உடலுக்கு இனிமையாக நந்தவனக் காற்றும்,

கண்ணுக்கு இனிமை தர கோவில்  சிற்ப்பங்கள், பெரிய  கோபுரங்கள், அழாகன மூர்த்தி  வடிவங்கள்,அந்த சிலைகளுக்கு அலங்காரம் என்று  வைத்தார்கள்.


இறைவனை எவ்வளவுக்  எவ்வளவு அலங்காரம் பண்ணுகிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நம் கண்ணுக்கு  இனிமை.

நம் குழந்தைகளுக்கு நாம் புதிது புதியதாய் ஆடை அணிகலன்கள் அணிவித்து  பார்த்து மகிழ்கிறோம் அல்லவா ...அது போல்.

குழந்தைகளுக்கு அலங்காரம் பண்ணுவது நாம் கண்டு மகிழ.

மனைவிக்கு பட்டுச் சேலை வாங்கித் தந்து அழகு  பார்க்கிறோம்,அவளுக்கு நகை அணிவித்து அழகு பார்க்கிறோம்....

அப்படி அழகை இரசிக்கும் போது மனம் இலயிக்கிறது ...மனம் ஒன்று  படுகிறது. ஆவல்  எழுகிறது.

ஒன்றை இரசிக்கும் போது,  இரசிப்பின் உச்சத்தில் கண்ணை மூடி கொள்கிறோம்...கண்ணை மூடி  இரசிக்கிறோம்...அது சிறந்த உணவாக  இருக்கட்டும், சிறந்த இசையாக இருக்கட்டும், நல்ல நறுமணமாக இருக்கட்டும்  ...இரசனையின் உச்சம் கண் மூடி உள்ளுக்குள் அதை .அனுபவிக்கிறோம்..

இறைவனை, அவன் உருவத்தை சிங்காரம் பண்ணி பார்க்கும் போது , அதில் இலயித்து அதை அப்படியே மனதில்  காண்போம்.

அது தான் தியானம். உருவத்தில் இருந்து உருவம் இல்லா அந்த சக்தியை அறிவதுதான் தியானம்.

 எனவே, உன்னை சிங்காரித்து அழகு பார்க்காமல் , அழியும் இந்த உடலை அலங்காரித்து  இருந்து விட்டேனே என்கிறார் தாயுமானவர்.  


தாயுமானவர் இது போல் 389 பராபரக் கண்ணிகளை எழுதி இருக்கிறார்.ஒவ்வொன்றும் ஆழ்ந்த கருத்துகளை  உடையது.

 மூல   நூலைப் படித்துப்  பாருங்கள்.


5 comments:

  1. அருமையான பாடல், அதைவிட அருமையான விளக்கம்.

    ReplyDelete
  2. வாவ். அருமை. உண்மை.

    (மூல நூலின் பெயர் என்னவென்று சொல்லுங்களேன், ப்ளீஸ்)

    ReplyDelete
  3. எளிமையான ஆழ்த கருத்தை அழகுற எடுத்து காட்டிய பாங்கு மனதை வருடியது.

    ReplyDelete
  4. ஐயா மேற்கண்ட செய்யுள் சொக்கநாத வெண்பா -

    உன்னைச்சிங் காரித் துனதழகு பாராமல் என்னைச்சிங் காரித் திடர்ப்பட்டேன் பொன்னை அரிவையரை யேநினையும் அன்ப...

    Read more at: https://m.dinamalar.com/temple_detail.php?id=50550

    ReplyDelete
  5. சொக்கநாதர்வெண்பாவிலும் தாயுமானவர்பாடலிலும்உண்டு.

    ReplyDelete