Friday, August 30, 2013

வில்லி பாரதம் - வான் ஆளத் தருவேன்

வில்லி பாரதம் - வான் ஆளத் தருவேன் 


சமாதானமாக  போகலாம் என்று தருமன் சொன்னதை கேட்டு பீமன் கோபம் கொள்கிறான். துரியோதனன் கொடுமையை விட உன் அருளுக்கு அஞ்சினேன் என்றவன் மேலும் சொல்லுவான்.

நம்மை காடு ஆள விட்ட அந்த துரியோதனன் உன்னை வெறுக்காதபடி அவனுக்கு வேறு ஒரு அரசை நான் தருவேன். அது எந்த  அரசு தெரியுமா ? அந்த விண்ணரசை அவனுக்கு தருவேன். அதனால் அவனும் உன் மேல் வெறுப்பு கொள்ள  மாட்டான்.

பாடல்

கான் ஆள உனை விடுத்த கண் இலா அருளிலிதன் 
                  காதல் மைந்தன் 
தான் ஆளும் தரணி எல்லாம் ஒரு குடைக் கீழ் நீ 
                  ஆளத் தருவன், இன்றே; 
மேல்நாள், நம் உரிமை அறக் கவர்ந்த பெருந் துணைவன், 
                  உனை வெறாதவண்ணம், 
வான் ஆள, வானவர்கோன்தன் பதம் மற்று அவன்தனக்கே 
                  வழங்குவேனே.

பொருள்





கான் ஆள = கானகத்தை ஆளும்படி

உனை விடுத்த = உன்னை விட்ட

கண் இலா அருளிலிதன் = கண் இல்லாத, அருள் இல்லாத அந்த திருதராஷ்ட்ரனின்

காதல் மைந்தன் = அன்பு மைந்தன் (துரியோதனன்)

தான் ஆளும் தரணி எல்லாம் = அவன் ஆளும் இந்த அரசை எல்லாம்

ஒரு குடைக் கீழ் நீ ஆளத் தருவன் = நீ ஆளும்படித் தருவேன்

இன்றே = இப்போதே

மேல்நாள் = முன்னொருநாள்

 நம் உரிமை = நம்ம உரிமையை

அறக் கவர்ந்த = மொத்தமாக கவர்ந்த

பெருந் துணைவன் = பெரிய துணைவன்

உனை வெறாதவண்ணம் = உன்னை வெறுக்காத வண்ணம்

வான் ஆள = வானுலகை ஆளும் வண்ணம்

வானவர்கோன்தன் பதம் = இந்திரப் பதவியை 

மற்று அவன்தனக்கே வழங்குவேனே = அவனுக்கே தருவேன்



1 comment:

  1. போட்டானே ஒரு போடு, சரியான போடு!!

    மிக அருமை.

    ReplyDelete