Sunday, August 18, 2013

பெரிய புராணம் - தொழுது வென்றார்

பெரிய புராணம் - தொழுது வென்றார்


http://interestingtamilpoems.blogspot.in/2013/08/blog-post_17.html

இதற்கு முந்தைய ப்ளாகின் தொடர்ச்சி.

முத்தநாதன், கையில் உள்ள ஓலைச் சுவடி கட்டுக்குள் கத்தியை மறைத்து வைத்து கொண்டு வந்தான்.

மெய் பொருள் நாயனார் அவருடைய அரண்மனை காவலர்களிடம் சிவனடியார் என்று யார் வந்தாலும் அவர்களை தடுக்காமல் உள்ளே விட வேண்டும்  என்று.

முத்தநாதன், மெய் பொருள் நாயானார் இருக்கும் படுக்கை அறைக்கே வந்துவிட்டான். நாகரீகம் இல்லாதவர்கள், ஒரு வசதி இருந்தால் அதை எப்படி எல்லாம் தவறாக பயன்படுத்துவார்கள் என்பதற்கு இது ஒரு  உதாரணம்.

வந்தவன், சிவாகம இரகசியங்கள் உள்ள நூல் ஒன்று எனக்கு கிடைத்து இருக்கிறது. அதை தங்களுக்கு உணர்த்த அதை கொண்டு வந்துள்ளேன் என்றான்.

அவரும்,கண் மூடி, வாய் பொத்தி , அடக்கமாக அதை கேட்க  அமர்ந்தார்.

அந்த சமயத்தில், ஓலைச் சுவடிகள் வைத்து இருந்த கத்தியை எடுத்து மெய் பொருள் நாயனாரை கொன்றான்.

தெய்வப் புலவர் சேக்கிழார், கொன்றான் என்று  சொல்லவில்லை.கத்தியால் குத்தினான் என்று சொல்லவில்லை.

தீய செயல்களை, தவறான செயல்களை விவரித்து சொல்லக்  கூடாது. அப்படி சொன்னால், அறியாதவர்கள் கூட அதை செய்ய அது ஒரு தூண்டுதலாய் இருக்க முடியும்.

இன்றைய உலகில்  பார்க்கிறோம்,  தீமைகளும்,தவறுகளும் மிக மிக  தெளிவாக, விரிவாக செய்தித்  தாள்களிலும்,  நாவல்களிலும், சினிமாவிலும்  காட்டப்   படுகிறது.

இவற்றைப்  படிப்பவர்கள்,பார்பவர்கள் நாளடைவில் குற்றங்கள் மற்றும் தீய செயல்களைப் பற்றி அதிர்ச்சி கொள்வது  குறையும். அவை சாதாரணமான விஷயங்களாக  மாறும். செய்தால் ஒன்றும் தவறு இல்லை என்ற எண்ணம் தோன்றும்.

சேக்கிழார் சொல்கிறார் "தான் முன் நினைத்தபடி செய்தான்" . அவ்வளவு தான்.
சதக் சதக் என்று குத்தினான், குபுக் குபுக் என்று இரத்தம் வந்தது என்று அந்த குற்றத்தை விவரிக்காமல் நாசூக்காக சொல்லி  விடுகிறார்.


மெய் பொருள்

கைத்தலத்து இருந்த வஞ்சக்
     கவளிகை மடிமேல் வைத்துப்
புத்தகம் அவிழ்ப்பான் போன்று    
     புரிந்துஅவர் வணங்கும் போதில்
பத்திரம் வாங்கித் தான்முன்
     நினைந்தஅப் பரிசே செய்ய
மெய்த்தவ வேட மேமெய்ப்
     பொருள்எனத் தொழுது வென்றார் 

பொருள்

கைத்தலத்து = கையில் இருந்த

இருந்த = இருந்த

வஞ்சக் கவளிகை =  வஞ்சகமான சுவடிக் கட்டை

மடிமேல் வைத்துப் = மடிமேல் வைத்து

புத்தகம் அவிழ்ப்பான் போன்று = புத்தகம் அவிழ்ப்பான் போன்று
   
புரிந்து = செயல் புரிந்து

அவர் வணங்கும் போதில்  = அவர் வணங்கி இருந்த போது

பத்திரம் =  கத்தி, உடை வாள்

வாங்கித் = எடுத்து

தான்முன்  நினைந்த = தான் முன்பு நினைத்த

அப் பரிசே செய்ய = அந்த எண்ணத்தை செய்ய

மெய்த்தவ வேட மே = மெய் தவ வேடமே

மெய்ப் பொருள்எனத் தொழுது = மெய் பொருள் என தொழுது

வென்றார்  = வென்றார்

அவர் கத்தியால் குத்துப் பட்டு  இறந்தார். ஆனால் சேக்கிழார் சொல்கிறார் - அவர் வென்றார் என்று. 

கொண்ட கொள்கையில்  நிற்பது, அதற்காக உயிரையும் கொடுப்பது தோல்வி  ஆகாது.

அதுதான்  வெற்றி.

நம்பிக்கை - ஒரு மிகப் பெரிய  சக்தி. 

இலக்கியங்கள், நம் மனதில் நல்ல விதைகளை நாளும் விதைக்கின்றன.   என்றைய விதை  நம்பிக்கை.



2 comments:

  1. அருமையான கருத்து. அப்போது குத்துப் பட்டாலும், இறுதியில் வென்றனர் - காந்தியடிகள், மண்டேலா, மார்டின் லூதர் கிங், ...

    ReplyDelete
  2. இன்றைய ஊடகங்கங்கள் இதிலிருந்து கற்றுத் தெளிய வேண்டும்

    ReplyDelete