Saturday, August 31, 2013

குறுந்தொகை - தெரியாமல் பேசும் ஊர்

குறுந்தொகை - தெரியாமல் பேசும் ஊர் 


அவர்களுக்குள்  காதல். அவர்கள் காதலிப்பதை ஊரே  அறியும். திருமணத்திற்கு பொருள் சேர்க்க வேண்டாமா ? அவன் திரும்பி வருவதாகச் சொல்லி, பொருள் தேட சென்று  .விட்டான். நாள் ஆகிக் கொண்டே  இருக்கிறது.அவன் வந்தபாடில்லை. ஊர் எல்லாம் ஒரு மாதிரி பேசத் தொடங்கி  விட்டது. "இனிமேல் எங்கே வரப் போகிறான்....இவளை ஏமாற்றிவிட்டுப் போய்விட்டான்...பாவம் இவ...இனிமேல் இவளை யார் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறார்கள்" என்று கண்டமேனிக்கு ஊர் பேசுகிறது.

அவளுக்கோ, அவன் வரவில்லையே என்று ஒரு புறம்  கவலை. இன்னொருபுறம் அவனுக்கு என்ன ஆயிற்றோ என்று கவலை. போன வழியோ பாலை  வனம். நல்ல ரோடு  கிடையாது. கொதிக்கும் பாலை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நீர்ச் சுனைகள்  இருக்கும்.வழிப் பறி கொள்ளைகாரர்கள் வேறு. அவனுக்கு ஏதும் ஆகி இருக்குமோ என்று கவலை. 
இன்னொரு புறம், இந்த ஊரைப் பற்றி  எரிச்சல்...அவளுடைய வருத்தத்தைப் புரிந்து கொள்ளாமல் இப்படி வாய்க்கு வந்த மாதிரி பேசுகிறதே என்று....

பாடல்


எறும்பி அளையின் குறும்பல் சுனைய
உலைக் கல் அன்ன பாறை ஏறிக்
கொடு வில் எயினர் பகழி மாய்க்கும்
கவலைத்து என்பவர் தேர் சென்ற ஆறே
அது மற்ற அவலம் கொள்ளாது
நொதுமல் கழறும் இவ் அழுங்கல் ஊரே.

பொருள்


எறும்பி அளையின் = எறும்பு ஊர்ந்து சென்ற தடம் போன்ற சின்ன பாதைகள் உள்ள

குறும்பல் சுனைய = சின்ன , பல குட்டைகளை  கொண்ட

உலைக் கல் அன்ன பாறை ஏறிக் = உலை போல் கொதிக்கும் பாறையின் மேல் ஏறி


கொடு வில் எயினர் = கொடிய வில்லை ஏந்திய வேடர்கள்

 பகழி மாய்க்கும் = அம்புகளை எய்து ஆட்களை கொல்லும்

கவலைத்து = கவலை தரக் கூடியது

என்பவர் தேர் சென்ற ஆறே = அவர் தேர் சென்ற வழி

அது மற்ற அவலம் கொள்ளாது = அப்படி அவர் சென்ற துன்பத்தை நினைக்காது

நொதுமல் கழறும் = பழிச் சொற்களை கூறும் 

இவ் அழுங்கல் ஊரே. = இந்த ஆரவாரமான, சத்தம் போடும் ஊரே



2 comments:

  1. தமிழில் எப்படி இத்தனை variations? சில பாடல்கள் புரியும் படி இருக்கிறது. சில பாடல்கள் ரொம்ப கரடு முரடாக வேறு மொழி போல் இருக்கிறது.

    ReplyDelete
  2. இந்த மாதிரி சாதாரண மனிதர்களின் உணர்ச்சி நிறைந்த பாடல்களைப் படித்தால் மிக இனிமையாக இருக்கிறது. நன்றி.

    ReplyDelete