Sunday, August 4, 2013

இராமாயணம் - ஆணவம்

இராமாயணம் - ஆணவம் 




'ஈசன் ஆண்டு இருந்த பேர் 
     இலங்கு மால் வரை 
ஊசி-வேரொடும் பறித்து 
     எடுக்கும் ஊற்றத்தான்; 
ஆசைகள் சுமந்த பேர் 
     அளவில் யானைகள் 
பூசல் செய் மருப்பினைப் 
     பொடிசெய் தோளினான்.

ஏதோ இராவணன் என்று ஒரு அரக்கன் இருந்தான், பெரிய பலசாலி, படித்தவன், அவன் சீதையை தூக்கிக் கொண்டு போனான், இராமன் அவனை கொன்று சீதையை  சிறை மீட்டான் என்பதுதான் இராமாயண கதையின் நோக்கமா ?

இதில் என்ன பெரிய கதையோ அர்த்தமோ இருக்கிறது. ஒருவனின் மனைவியை இன்னொருவன் கவர்ந்து சென்றால், மனைவியை பறி கொடுத்தவன் சண்டையிட்டு மீட்பது ஒன்றும் பெரிய விஷயமைல்லையே.


இதுக்கு ஒரு காப்பியமா ? அது ஏன் இத்தனை ஆண்டுகள் நிலைத்து நிற்கிறது ?

கதை அதுவல்ல .

இராவணன் என்ற அரக்கன் வேறு யாரும் அல்ல. நீங்களும் நானும்தான்.

அளவுதான் வேறு, செய்யும் செயல்கள் எல்லாம் ஒன்றுதான்.

அவன் செய்ததில் எதை நாம் செய்யவில்லை ?

படித்தோம். அறிவு பெற்றோம்.

அவன் தவம் செய்து பல வரங்களை பெற்றான்.

நாமும்தான் கோவிலுக்குப் போகிறோம், தினமும் வீட்டில் பூஜை செய்கிறோம். எதற்கு ? உலக நன்மைக்காகவா ? நமக்கு செல்வம்  வேண்டும்,  
,பதவி வேண்டும், புகழ் வேண்டும், இப்படி பல வரங்களை கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.

அவன் நாடு பிடித்தான்...நாமும்  போடுகிறோம், வீடு மேல வீடு வாங்குகிறோம்.

அவன் தேவர்களை வேலை வாங்கினான் ..நாம் நம் வீட்டு வேலை காரியை, வண்டி ஓட்டுபவனை, வீட்டு காவல்காரனை என்று வேலை வாங்குகிறோம்.

 அழகான பெண்ணை கண்டால் ஆசைப் படாதவன் யார் ?

அழாகான ஆணைக் கண்டால் ஆசைப் படாத பெண் யார் ?

காப்பியங்கள் எதையும் அதீத கற்பனையோடுதான் சொல்லும். அடிப்படையில்  நமக்குள் ஒன்றல்ல பல அரக்கர்கள் ஒளிந்து கொண்டு இருக்கிறார்கள்.

இல்லை என்று சொல்ல முடியுமா உங்களால் ?

யோசித்துப் பாருங்கள்.

கபட சந்நியாசி வேடத்தில் வந்த இராவணன் சீதையிடம் இராவணின் (தன் ) பெருமையை   பற்றி சொல்லிக் கொண்டு போகிறான்.

சிவன் வாழும் கைலாய மலையை வேரோடு பிடுங்கி எடுத்த ஆற்றல் உடையவன்.

எட்டு திசைகளை சுமந்த யானைகளின் தந்தத்தை ஒடித்து பொடியாக்கியவன்   பேராற்றல்  பெற்றவன் என்று தன் பெருமைகளை  கூறுகிறான்.

ஆணவம்.

நீங்கள் என்றாவது உங்கள் திறமைகளை பெருமைகளை மற்றவர்களிடத்து  பட்டியல்  இட்டு இருக்கிறீர்களா ?

பொருள்


ஈசன் = சிவன்

ஆண்டு இருந்த = அன்று இருந்த

பேர்  இலங்கு மால் வரை = பெருமையுடன் விளங்கும் பெரிய மலையை (கைலாய மலை)

ஊசி-வேரொடும் பறித்து = ஆணி வேரோடு பறித்து 

எடுக்கும் ஊற்றத்தான் = எடுக்கும் வலிமை வாய்ந்தவன்

ஆசைகள் சுமந்த பேர் = திசைகளை சுமந்த பெரிய 

அளவில் யானைகள் = அளவிலான யானைகளின்

பூசல் செய் மருப்பினைப் = வலிய தந்தங்களை

பொடிசெய் தோளினான் = பொடிப் பொடியாக்கும் தோள் வலிமை கொண்டவன்

ஆணவம் அழிவுக்கு வழி கோலும். நாவுக்கரசர், தனது தேவாரத்தில் இராவணின்  ஆணவத்தைப் பற்றி பல பாடல்கள் எழுதி இருக்கிறார்.

நமக்குள் இருக்கும் இராவணனைப் பற்றி.



2 comments:

  1. தமிழில் உள்ள பாராட்டு சொற்களின் list எங்க கிடைக்கும்? அவ்வளவும் வேண்டும் உன்னை பாராட்ட, இவ்வளவு அருமையான விளக்கம் எழுதுவதற்கு. (அல்லது கம்பர் இன்னொருமுறை பிறந்து வர வேண்டும் )

    ReplyDelete
  2. நன்றாகச் சொன்னீர்கள். புவனா அவர்களை வழிமொழிகிறேன்!

    ReplyDelete