Tuesday, May 10, 2022

திருக்குறள் - நாவினால் சுட்ட வடு

திருக்குறள் -  நாவினால்  சுட்ட வடு 


பாடல் 


தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு


நாம் அறிந்த தெரிந்த பாடல் தான். 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_10.html


(please click the above link to continue reading)


தீயினால் = தீயால் 


சுட்டபுண் = சுடப்பட்டதால் உண்டான புண் 


உள்ளாறும் = ஆறிவிடும் 


ஆறாதே = ஆனால், ஆறாதது ஒன்று இருக்கிறது 


நாவினால் சுட்ட வடு = அது நாவினால் சுட்ட வடு 


இதற்கு பரிமேலழகர் செய்யும் உரை நுட்பம் மிக உயர்ந்தது. 


தீயும் சுடும், சுடு சொற்களும் சுடும். ஆனால் தீயால் சுட்ட புண் ஆறிவிடும். ஆனால் நாவினால் சுட்டது ஆறாமல் வடுப் போல இருக்கும் என்று தான் பெரும்பாலானோர் பொருள் சொல்லுவார்கள். 


தீயினால் சுட்டால் வடு இருக்காதா? தீக்காயம் பட்டால் சுவடே இல்லாமல் மறைந்து விடுமா?  சின்ன தீக்காயம் பட்டால் கூட அது எளிதில் போவது இல்லை. பெரிய தீக் காயம் என்றால் போகவே போகாது. வடுப் போல இருந்து கொண்டே தானே இருக்கும். அப்படி இருக்க வள்ளுவர் ஏன் இப்படிச் சொல்லி இருக்கிறார் என்றால்...


"தீயினால் சுட்ட புண் உள்ளாறும்" என்று சொல்கிறார். அதாவது தீயால் சுட்டால் அது உடலில் இருக்கும் ஆனால் உள்ளத்தில் இருக்காது.  போய் விடும். 


வீட்டில் சமையல் செய்யும் பெண்களுக்கு இது புரியும். கையில் சில சமயம் சூடான எண்ணெய் தெறித்து தழும்பு வந்து விடும். என்ன ஆச்சு என்று கேட்டால் சமையல் செய்யும் போது எண்ணெய் தெறித்து விட்டது என்பார்கள். 


எப்ப தெறித்தது, என்ன செய்யும் போது நிகழ்ந்தது, என்ன எண்ணெய் என்றெல்லாம் கேட்டால் நினைவு இருக்காது. காரணம், அது உடலில் இருக்கிறது, மனதில் இல்லை. மறந்து போய் விட்டது. 


ஆனால், யாரவது ஒரு வார்த்தை தவறாகச் சொல்லி விட்டால், அது கணவனே ஆனாலும், ஆயுள் முழுவதும் மனதில் இருக்கும். மன்னிக்கக் கூட மன்னித்து விடுவார்கள். ஆனால், மறக்கவே மாட்டார்கள். 


அது ஒரு உதாரணம். அவ்வளவுதான். இந்த மாதிரி யாருக்கும் நிகழ்ந்து இருக்கும். 


பட்டாசு வெடிக்கும் போது நெருப்பு பட்டிருக்கலாம், பைக் silencer சுட்டிருக்கலாம், iron பண்ணும் போது தெரியாமல் கை பட்டு சுட்டு இருக்கலாம். வடு இருக்கும், தழும்பு உடலில் இருக்கும். ஆனால், மனதில் சுத்தாமாக இருக்காது. 


எனவேதான், சொற்களை மிக கவனமாக கையாள வேண்டும். ஒரு முறை சுட்டுவிட்டால் ஆயுள் வரை அந்த வடு மனதில் இருந்து போகாது. 


சொல் உடலைச் சுடாது. மனதைச் சுடும். 


இது பரிமேலழகர் செய்த நுட்பமான உரை. 


அவர் மேலும் ஒன்று சொல்கிறார். அது இலக்கண உரை. 


இந்தக் குறளில் இரண்டு செய்தி இருக்கிறது. 


தீயினால் சுட்ட புண் உள்ளாறும் - இது ஒரு செய்தி

நாவினால் சுட்ட வடு ஆறாது - இது மற்றொரு செய்தி. 


இந்த இரண்டுக்கும் ஒரு தொடர்பும் இல்லையே. இரண்டும் தனித் தனியாக நிற்கிறது.  தீயினால் சுட்ட புண்ணுக்கும், நாவினால் சுட்ட வடுவுக்கும் என்ன சம்பந்தம்? 


அது "குறிப்பான் வந்த வேற்றுமை அலங்காரம்" என்பார் அவர். 


அதாவது இரண்டு வெவ்வேறு அர்த்தம் உள்ள செய்திகள் என்றாலும், அவற்றிற்கு உள்ள தொடர்பை குறிப்பால் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். 


இராமன் நன்றாகப் படித்து தேர்வு எழுதினான். 


அதிக மதிப்பெண்கள் பெற்றான்.


என்று கூறினால், யார் அதிக மதிப்பெண் பெற்றது ? இராமன் என்று கூறவில்லை. 


சரி, படித்ததால் அதிக மதிப்பெண் பெற்றானா என்றால் அதுவும் கூறவில்லை. 


இருந்தும் நமக்கு புரிகிறது அல்லவா. இராமன் நன்றாகப் படித்து தேர்வு எழுதியதால் இராமன் அந்த முயற்சி காரணமாக நல்ல மதிப்பெண் பெற்றான் நாம் புரிந்து கொள்கிறோம் அல்லவா? 


அது தான் வேற்றுமை அலங்காரம். 


வேற்றுமை அணி பற்றி பின்னொருநாளில் விரிவாக காண்போம். வேற்றுமை அணியில் பல வகைகள் உண்டு.  ஆர்வம் இருப்பவர்கள் தேடிக் காண்க. 


இந்த கடைசி மூன்று பாட்டால் நாவடக்கம் பற்றிக் கூறுகிறார். 


அப்படி என்றால் இன்னும் ஒரு குறள் இருக்கிறது. அதில் வேறு ஏதோ ஒரு விடயம் சொல்லப் போகிறார் என்று அர்த்தம். 


அது என்னவாக இருக்கும்?




அது போல என்று எதுவும் இல்லை. 




1 comment:

  1. எப்பொழுதும் இன்சொல்லே பேசவேண்டும்

    ReplyDelete