Thursday, May 19, 2022

திருக்குறள் - அதுவே துணை

திருக்குறள் - அதுவே துணை 


ஒழுக்கம் விழுப்பம் தரும் என்றார் முதல் குறளில். 


சரி, நமக்கு பெருமை தருவதுதானே, ஒழுக்கமாக இருந்துவிட்டுப் போவோம் என்றால் அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்று வள்ளுவர் சொல்கிறார். 


மிக மிக கடினமான ஒன்று என்கிறார். ஒழுக்கத்தை கடை பிடிக்க மிகவும் சிரமப் பட வேண்டி இருக்கும். அது அவ்வளவு எளிதான ஒன்று அல்ல என்று எச்சரிக்கிறார். 


அப்படியா, அப்படினா, அதை விட்டு விட்டு வேறு ஏதாவது வழி இருக்கிறாதா ? பெருமை, சிறப்பு இதெல்லாம் அடைய? இருந்தால் பேசாமல் அதை  கடை பிடிப்போமே என்று என்று நினைக்கலாம். 


வள்ளுவர், எல்லாம் ஆராய்ந்து பாத்தாச்சு, வேற ஒரு வழியும் இல்லை. ஒழுக்கம் ஒன்றே வழி என்கிறார். 


பாடல் 


 பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்

தேரினும் அஃதே துணை


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_19.html


(pl click the above link to continue reading)



பரிந்தோம்பிக் = பரிந்து + ஓம்பி = பரிந்து என்றால் வருந்தி. வருந்தினாலும் அதை கடை பிடிக்க வேண்டும். 


 காக்க = போற்றி பாதுகாக்க வேண்டும் 


ஒழுக்கம் = ஒழுக்கத்தை 


தெரிந்தோம்பித் = அறங்கள் அனைத்தையும் ஒருமனதாக  


தேரினும் = ஆராய்ந்து தெளிந்தாலும் 


அஃதே துணை = அது ஒன்றேதுணை 


குறள் ஒரு பக்கம் இருக்கட்டும். 


நம்மிடம் ஒரு விலை உயர்ந்த பொருள் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதை எடுத்துக் கொண்டு பயணம் செய்கிறோம். வைர ஆபரணம் என்று வைத்துக் கொள்ளுங்களேன். 


பயணம் முழுவதும் நம் கவனம் முழுவதும் அதன் மேலேதான் இருக்கும் அல்லவா? அதை தனியே விட்டு விட்டு எங்காவது போவோமா? தூங்கும் போது கூட அந்த ஆபரணம் உள்ள பெட்டியை  தலையணையாக வைத்துக் கொண்டு உறங்குவோம் அல்லவா? 


ஒழுக்கம் என்பது நாம் வாழ்நாள் எல்லாம் சேர்த்த செல்வம். அதற்கு ஒரு குறையும் வராமால் எவ்வளவு கண்ணும் கருதுமாக நாம் காக்க வேண்டும்? ஒரு வைர நகைக்கே இந்தப் பாடு என்றால் ஒழுக்கத்துக்கு எவ்வளவு பாடு பட வேண்டும்? 


நிறைய பேர் ஆசை காட்டுவார்கள். நமக்கே சபலம் வரும். செய்தால் என்ன, ஒரு முறைதானே, யாருக்குத் தெரியப் போகிறது, ஊர் உலகில் நடக்காததா என்றெல்லாம் நமக்கு நாமே சொல்லிக் கொண்டு ஒழுக்கம் தவற நினைக்கலாம். 


அப்படி இல்லை என்றால், ஒழுக்கமாக இருப்பவனை மிரட்டி அவனை ஒழுக்கம் தவறச் செய்ய இந்த உலகம் முயலும். 


பொய் சொல்ல மாட்டேன், உண்மை மட்டும்தான் பேசுவேன் என்ற ஒரு ஒழுக்கத்தை கடை பிடிக்க அரிச்சந்திரன் எவ்வளவு பாடு பட வேண்டி இருந்தது. 


ஒழுக்கத்துக்கு வேறு ஏதாவது மாற்று இருக்கிறதா என்றால் இல்லை. கொஞ்சம் ஒழுக்கம் தவறி நடந்து விட்டு, கோவில் உண்டியலில் பணம் போட்டுவிட்டால் சரியாகி விடும் என்று சிலர் நினைக்கிறார்கள். அல்லது ஏதோ ஒரு புண்ணிய தீர்த்தத்தில் நீராடினால் செய்த ப் பாவம் எல்லாம் போய் விடும் என்று நம்புகிறார்கள். 


ஒழுக்கத்துக்கு ஒரு மாற்றே கிடையாது. 


"அதுவே துணை" என்றார். 


அது துணை என்றால் அது ஒரு துணை, வேறு ஏதும் இருக்கலாம் என்ற ஐயம் வரும். அதுவே துணை என்றால் அது மட்டும் தான் துணை. 


வள்ளுவர் சும்மா சொல்லவில்லை, 'தெரிந்து ஓம்பி தேரினும்' ஒரு மனதாக எல்லா அறங்களையும் ஆராய்ந்தாலும், அதுவே துணை என்கிறார். .


நீங்கள் ஒன்றும் ஆராய வேண்டாம். நான் ஆராய்ந்து விட்டேன். வேறு ஒரு வழியும் இல்லை என்கிறார். 


பொய்யா மொழிப் புலவர். அவர் சொல்வது தவறாக இருக்குமா? 


சரியாகத்தான் இருக்கும். 


நாம் நடைமுறையில் பார்க்கலாம். எவ்வளவோ பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் எங்கோ ஒரு சின்ன சறுக்கலில் அவர்கள் வாழ்நாள் எல்லாம் கட்டிக் காத்த பேர், பெருமை எல்லாம் காற்றில் போய் விடுவதை பார்க்கிறோம். 


ஆசை வரும், ஆணவம் வரும், புலன்கள் சுண்டி இழுக்கும்...ஒரு பொழுதேனும் கவனம் சிதற விடக் கூடாது. 


இன்னும் ஒரு முறை குறளை படித்துப் பாருங்கள். ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் என்று தெரிய வரும். 





No comments:

Post a Comment