Saturday, May 7, 2022

திருக்குறள் - ஆமை போல்

 திருக்குறள் - ஆமை போல் 


யானையை அதன் பாகன் அடக்கினான் என்று கூறினால் அது அந்த யானையை நகர விடாமல் செய்தான் என்று அர்த்தம் அல்ல. அடக்கினான் என்றால் தன் வழிக்கு கொண்டு வந்தான் என்று அர்த்தம். மனதை அடக்குவது என்றால் அதை நிறுத்துவது அல்ல. அதன், அதன் போக்கில் போக விடாமல், நம் போக்கில் கொண்டு செல்வது என்று கொள்ள வேண்டும்.


இங்கே, அடக்கமுடைமையில் அதைத்தான் வள்ளுவர் சொல்கிறார். "ஐம்புலன்களும் தன் வயத்து ஆதல்" என்று உரைப் பாயிரத்தில் குறிப்பிடுகிறார் பரிமேலழகர். 


புலன்களை நம் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். 


இன்பத்தை அனுபவிக்காதே என்று யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே அதை ஒரு அளவோடு, ஒரு குறிப்பிட்ட காலத்தில் , ஒரு வரைமுறைக்கு உட்பட்டு அனுபவி என்று நம் இல்லக்கியங்கள் பேசி வந்து இருக்கின்றன. 


அடுத்த குறளில் சொல்கிறார் "ஆமை போல புலன்களை அடக்கி இருந்தால் அது மிகுந்த பயனைத் தரும்" என்கிறார். 


தெரிந்தே தான் முழு குறளுக்கும் விளக்கம் சொல்லாமல் விடுகிறேன். அதை பின்னால் விரிவாகக் காண்போம். 


பாடல் 



ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப்பு உடைத்து


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_7.html


(pl click the above link to continue reading)


ஒருமையுள் = ஒருமையுள் (இதை இப்படியே வைத்துக் கொள்வோம். பின்னால் விரிவாக காண்போம்) 


ஆமைபோல் = ஆமையைப் போல 


ஐந்தடக்கல் ஆற்றின் = ஐந்து + அடக்கல் + ஆற்றின். ஆறு என்றால் வழி, நெறி. ஐந்து புலன்களை அடக்கி அவற்றை நல் வழியில் செலுத்தினால் 


எழுமையும் = எழுமையும் 


ஏமாப்பு உடைத்து = பாதுகாப்பு உடையது 


ஆமை தனக்கு துன்பம் வரும் என்று தெரிந்தால் தனது ஐந்து புலன்களையும் தன் ஓட்டுக்குள் இழுத்துக் கொள்ளும். வெளியில் விட்டால் தானே ஆபத்து? உள்ளே இழுத்துக் கொண்டால்?


ஆங்கிலத்தில் trigger அல்லது cue என்று சொல்லுவார்கள். நாம் எவ்வாறு தவறு செய்கிறோம் என்றால் சில தூண்டுதல்களால். 


உதாரணமாக, நொறுக்குத் தீனி தின்பது இல்லை என்று ஒரு முடிவு எடுத்து இருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். வீட்டில் ஒரு டப்பாவில் முறுக்கு, இன்னொன்றில் சீடை, இன்னொன்றில் அதிரசம், தட்டை, இலட்டு என்று போட்டு வைத்து அதையும் நம் கண் முன் வைத்தால் எப்படி இருக்கும்? சாப்பிட வேண்டாம் என்று நினைப்பவர்களுக்கு கூட இரண்டை எடுத்து வாயில் போட்டால் என்ன என்று தோன்றும். 


இராவணன் சும்மா தான் இருந்தான். சூர்பனகை போய் தூண்டி விடுகிறாள் "நீ இதையெல்லாம் பெற்று என்ன பயன், சீதையைப் பெறாவிட்டால்" என்று. அவனுக்குள் காமம் தலை தூக்குகிறது. அழிந்தான். 


தவறு செய்யத் தூண்டும் சூழ் நிலைகளை தவிர்த்து விட வேண்டும். அந்தச் சூழ்நிலையில் இருந்தால் தவறு நிகழ்வது தவிர்க்க முடியாதது. 


புலன்களை உள்ளே இழுத்து விட வேண்டும். வெளியே அலைய விட்டால், அது பாட்டுக்கு போய் கொண்டே இருக்கும். 


சரி, அது புரிகிறது. 


அது என்ன ஒருமை, எழுமை? 


பரிமேலழகர் ஒருமை, எழுமை என்பது பிறப்புகளைக் குறிக்கும் என்கிறார். ஒரு பிறப்பில் புலன்களை அடக்கி வாழ்ந்தால் அது பின் வரும் ஏழு பிறப்பிலும் நன்மை தரும் என்கிறார். 


நம் தமிழ் பாரம்பரியத்தில் எதையும் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்வதில்லை. மற்றவர் சொல்லுவது ஏற்புடையது இல்லை என்றால் அதை வெளிப்படையாக நிராகரித்து விடுவது என்பது நம் வழக்கம். 


வந்திருப்பது இறை என்று அறிந்தும், "நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே" என்று சொல்லும் தைரியம், ஆளுமை இருந்தது நம் மக்களுக்கு.  நீ யாரா இருந்தா என்ன, தப்புனா தப்புத்தான் என்று அடித்துச் சொன்னார்கள். 


அந்தத் தெளிவும், தைரியமும் ஏனோ குறைந்து விட்டது. எதைச் சொன்னாலும் அப்படியே ஏற்றுக் கொள்ளும் மன நிலை வந்து விட்டது. கேட்டால் 'நம்பிக்கை' என்பார்கள். 


அது ஒரு புறம் இருக்கட்டும் 


இந்த ஒரு பிறப்பு, எழு பிறப்பு என்பதை பல உரை ஆசிரியர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. 


இரண்டு காரணம் சொல்கிறார்கள் 


முதலாவது காரணம், 'அடக்கம் அமரருள் உய்க்கும்' என்று முதல் குறளில் சொன்னாரே. பின் அடக்கமாக இருந்தால ஏழு பிறப்பு எப்படி வரும் என்று ஒரு கேள்வி எழுப்புகிறார்கள் 


இரண்டாவது, அடக்கமாக இருந்தாலும் ஏழு பிறவி வரும் என்றால், பின் எதற்கு அடக்கமாக இருக்க வேண்டும். எப்படியும் பிறவி வரப் போகிறது. இருந்து அனுபவித்துவிட்டுப் போவோமே என்று சிலர் கூறுகிறார்கள். 


இதற்கு இரண்டு விதமான விளக்கம் இருக்கிறது. 


ஒன்று, இந்த ஒருமை, எழுமை என்பதெல்லாம் எண்கள் அல்ல. அது ஒன்று பல என்ற தொகுதியை குறிப்பது என்கிறார்கள். "ஊருக்குள்ள நாலு பேர் நாலுவிதமா பேசுவார்கள்", "நாலு பேர்கிட்ட நல்ல பேர் வாங்க வேண்டாமா" என்றால் எண்ணி நாலே பேர் என்று அர்த்தம் அல்ல. இங்கே நான்கு என்ற சொல் எண்ணைக் குறிக்கவில்லை. பல பேர் என்ற தொகுதியைக் குறிக்கிறது என்று நமக்குத் தெரியும். 


அது போல, ஒரு முறை நாம் அடக்கமாக இருந்தால் அது பல விதங்களில் பயன் தரும் என்று கொள்ள வேண்டும் என்று உரை செய்கிறார்கள். 


வேறு சிலரோ, பரிமேலழகர் பிழையாக உரை செய்வாரா என்று அவர் செய்த உரைக்கு விளக்கம் செய்கிறார்கள். .


இந்தப் பிறவியில் அடக்கமாக இருந்தால், அதனால் மேற்கொண்டு பிறவி வராது என்பது உண்மைதான் என்றாலும், முன் செய்த வினை இருக்கிறதே? அதன் காரணமாக மேலும் பிறவிகள் வந்தாலும், இப்போது புலன் அடக்கத்தோடு இருந்தால், இனி வரும் ஏழு பிறவிக்கும் அது உதவும் என்று கூறுவதாக கொள்ள வேண்டும் என்கிறார்கள். 


ஏற்றுக் கொல்வதும், கொள்ளாததும் உங்கள் விருப்பம். 


பொதுவான கருத்து, "புலனடக்கம் நல்லது". அது ஒரு பிறவியா, பல பிறவியா என்பதெல்லாம் ஆராய்ச்சியாளர்களிடம் விட்டு விடலாம். 


புலன்களை நம் வயப் படுத்த முயல்வோம். அவ்வளவுதான் நாம் செய்ய வேண்டியது. 


இந்தக் குறளின் மூலம் மெய்யடக்கம் கூறப் பட்டது என்கிறார் பரிமேலழகர். 


அப்படி என்றால் இனி வரும் குறள்களில் வேறு ஏதோ அடக்கம் பற்றி கூறப் போகிறார் என்று அர்த்தம். 


என்னவாக இருக்கும்?




1 comment:

  1. எண்ணிக்கை விளக்கம் மிகவும் வித்தியாசமான சிந்தனை !

    ReplyDelete