திருக்குறள் - நாகாக்க
முந்தைய குறளில் மெய் அடக்கம் கூறினார். ஆமை போல் புலன்கள் தவறான வழியில் செல்ல நினைக்கும் போது உள்ளே இழுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
அடுத்து,இந்தக் குறளில், பேச்சைக் கட்டுப் படுத்த வேண்டும். மெய் சொல்லியாகிவிட்டது, அடுத்து வாக்கு பற்றி சொல்கிறார்.
புலன்களை எல்லாம் என் வசம் கொண்டு வந்து விட்டேன் என்று சொல்லிக் கொண்டு வாய்க்கு வந்தபடி பேசித் திரியக் கூடாது. சொல்லினால் வரும் குற்றங்கள் மிகப் பெரிதானவை. ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்.
பாடல்
யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_8.html
(please click the above link to continue reading)
யாகாவார் ஆயினும் = வேறு எதையும் காக்க முடியாதவராயினும்
நாகாக்க = நாவைக் கட்டுப் படுத்தி வைக்க
காவாக்கால் = கட்டுப் படுத்தா விட்டால்
சோகாப்பர் = துன்பத்துக்கு துணையாவார்
சொல்லிழுக்குப் பட்டு = சொல்லில் குற்றம் ஏற்பட்டு
மிக முக்கியமான குறள். நம் வாழ்வை திசை திருப்பக் கூடிய குறள்.
எல்லா புலன்களையும் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். ஆனால், அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. சொல்லி விடலாம். புலன்கள் கேட்குமா? யானைப் பாகன் யானையை ஒரு வழியில் கொண்டு செல்ல நினைப்பான். ஆனால் யானை வேறு திசையில் செல்ல நினைத்தால் என்ன செய்ய முடியும்? நீ பாட்டுக்கு நினைத்துக் கொண்டு இரு என்று சொல்லிவிட்டு யானை தன் பாட்டுக்கு எங்கோ போகும்.
வள்ளுவருக்கு அது தெரிந்து இருக்கிறது. எல்லா புலன்களையும் கட்டுக்குள் வை. முடியாவிட்டால் நாக்க ஒன்றையாவது கட்டுப் படுத்து என்கிறார்.
"யாகாவாராயினும்" என்பதில் உள்ள மகர மெய், காக்க முடியாவிட்டாலும் என்ற பொருள் தரும். காக்க வேண்டும், காக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை என்ற தொனியில்.
நாக்கைக் கட்டுக்குள் கொண்டு வராவிட்டால் என்ன ஆகும்? இங்கே நாவை கட்டுப் படுத்துதல் என்பது கண்டதையும் உண்பதை கட்டுப் படுத்துவது அல்ல. அதுவும் வேண்டும் தான் என்றாலும், இங்கே சொல்ல வந்தது நாவினால் பேசுவதைக் கட்டுப் படுத்த வேண்டும் என்பதை.
கண், வாய், செவி, மூக்கு, உடல் என்ற இந்த ஐந்தில் நாவை மட்டும் இங்கே தனியே சொல்லக் காரணம் என்ன?
எதைக் கட்டுப் படுத்தாவிட்டால் மிகப் பெரிய துன்பம் வரும் என்று ஆராய்ந்து நாக்கு தான் பெரிய துன்பங்களுக்கு காரணம் என்று கண்டு, அதைக் கட்டுப் படுத்த வேண்டும் என்கிறார்.
ஏன்? நாக்கை கட்டுப் படுத்தாவிட்டால் என்ன பெரிய துன்பம் வந்து விடும்?
'சொல் இழுக்குப் பட்டு சோகாப்பர்' என்கிறார். சொல்லில் குற்றம் வந்து துன்பத்தில் அழுந்துவார்கள் என்கிறார்.
சொல்லில் குற்றமா? அது என்ன? ஒரு வேளை சரியாக உச்சரிக்காத குற்றமா ? இல்லை.
நான்கு விதமான சொற் குற்றங்கள் இருக்கின்றன.
தீயன பேசுதல், பொய் சொல்லுதல், புறம் சொல்லுதல், பயனில சொல்லுதல்.
இந்த நான்கு விதமான சொற் குற்றங்களால் துன்பம் வந்து சேரும் என்கிறார். இது பற்றி பின்னால் மிக விரிவாக வள்ளுவர் சொல்லப் போகிறார். அங்கே அவற்றை சிந்திப்போம்.
தமிழில் முற்றும்மை என்று ஒன்று இருக்கிறது.
பரிமேலழகர் உரையில் அதை விளக்குகிறார்.
'தம்மால் காக்கப்படுவன எல்லாவற்றையும் காக்க மாட்டாராயினும் நாவொன்றனையும் காக்க'
என்றும்
'முற்று உம்மை விகாரத்தால் தொக்கது. '
என்றும் உரையிலும், குறிப்பிலும் குறிப்பிடுகிறார்.
அது என்ன முற்றும்மை?
அதாவது, யாதொன்றையு'ம்' காக்காமல் விட்டாலும் பரவாயில்லை, நாக்கை மட்டுமாவது காப்பாற்று.
கல்யாண வீட்டுச் சாப்பாட்டில் அப்பளம் போட்டார்கள், கூட்டு போட்டார்கள், பொறியல் போட்டார்கள், பழம் போடார்ர்கள், ஊறுகாயும் போட்டார்கள் என்று கூறும் போது ஊறுகாயில் உள்ள உம்மை முற்றும்மை. அதற்கு மேல் ஒன்றும் கிடையாது.
ஊறுகாயும் போட்டார்கள், அவியல் போட்டார்கள் என்று சொல்லக் கூடாது.
முற்றுமை வந்து விட்டால் முடித்து விட வேண்டும். .
அது போல 'யாது ஒன்றையும்' என்பதில் எல்லாவறையும் காக்க முடியாவிட்டாலும் , நாக்கு ஒன்றை மட்டுமாவது காத்துக் கொள் என்கிறார்.
சொல் வெளியில் போய் விட்டால் அது நம் கட்டுப்பாட்டில் இருந்து போய் விடும். என்ன செய்தாலும் அதைத் திரும்பப் பெற முடியாது. அது எப்படி காயப் படுத்தும் என்று பின்னால் சொல்லுவார். "தீயினர் சுட்ட வடு" என்று.
இரண்டு விதத்தில் கட்டுப் படுத்தலாம் ....
ஒன்று, பேசாமல் இருப்பது. மௌனம் ஞான வரம்பு என்பார்கள்.
இரண்டாவது, அளந்து பேசுவது. என்ன பேசுகிறோம், எதைப் பற்றிப் பேசுகிறோம், எப்படி பேசுகிறோம், யாரிடம் பேசுகிறோம், எந்த சூழ்நிலையில் பேசுகிறோம் என்று அறிந்து உணர்ந்து பேசுவது.
சிந்தியுங்கள். இந்த ஒரு குறளை முழுமையாக கடைபிடித்தால் வாழ்வில் பாதிக் துன்பம் குறைந்து விடும்.
No comments:
Post a Comment