தேவாரம் - சிறு விறகால் தீமூட்டி
ஆயிரம் துன்பங்கள் இருந்தாலும் இந்த வாழ்க்கை நமக்குப் பிடித்துத்தான் இருக்கிறது. இவ்வளவு துன்பம் இருக்கிறதே, எதற்கு இந்த வாழக்கை என்று யார் நினைக்கிறார்கள்.
அப்படி என்ன பிடிப்பு இந்த வாழ்வில்?
நெருங்கிய உறவுகள் - அப்பா, அம்மா, கணவன், ,மனைவி, பிள்ளைகள். ஐயோ, இவர்களை விட்டு விட்டு எங்கே போவது. அவர்கள் தான் எனக்கு உயிர். பிள்ளையை விட உலகில் உயர்ந்த ஒன்று உண்டா? பத்து மாதம் சுமந்து பெற்று, மார் மேலும், தோள் மேலும் போட்டு வளர்த்த பிள்ளை அல்லவா? அதை பிரிய மனம் வருமா?
நாவுக்கரசர் சொல்கிறார்....அப்படித்தானே பாசம் வைக்கிறாய். நாளை நீ இறந்த பின், நீ உயிருக்கு உயிராய் நினைத்த அத்தனை சுற்றத்தாரும் உன் சிதைக்கு கொள்ளி வைத்து விட்டு அது முழுவதும் எரியும் வரை வரை கூட மயானத்தில் நிற்க மாட்டார்கள். அவர்கள் உன் மேல் வைத்த பாசம் அவ்வளவுதான். அதையா நீ பெரிய பாசம், ,அன்பு என்று எண்ணி ஏங்கிக் கொண்டு இருக்கிறாய்?
சரி, உறவு இல்லாவிட்டால் போகிறது. சேர்த்த செல்வம் இருக்கிறதே? பெரிய வீடு, தோட்டம், குளிர் சாதன வசதி, பெரிய கார், பெரிய தொலைக் காட்சி, நினைத்த போது எங்கும் செல்ல விமான வசதி, அதில் பயணச் சீட்டு வாங்க வசதி, வீட்டு வேலைக்கு ஆள்...இந்த சுகத்தை எல்லாம் விட்டு விட்டு எப்படி போவது?
நாவுக்கரசர் சொல்கிறார், "நீ எவ்வளவு வேண்டுமானாலும் சேர்த்துக் கொள். நீ தளர்ந்த போது ஒரு செல்வமும் உன்னை தாங்கிப் பிடிக்காது. ஒரு செல்வமும் உன் கூனை நேராக்காது. ஒரு செல்வமும் உன் தலை முடி உதிர்வதை தடுத்து நிறுத்தாது. படுக்கையில் கிடக்கும் போது, மருத்துவர் சொல்லி விடுவார் "சொந்தக் காரங்களுக்கு எல்லாம் சொல்லி விடுங்கள்" என்று. கட்டு கட்டாக பணம் இருந்து என்ன செய்ய. ஒரு மருந்தும் நம்மைக் காக்காது. இப்படி உனக்கு தேவையான நேரத்தில் உனக்கு உதவி செய்யாத பணத்தின் மேலா இவ்வளவு பிடிப்பு ? என்று கேட்கிறார். .
பாடல்
எத்தாயர் எத்தந்தை எச்சுற்றத்தார் எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார்
செத்தால்வந் துதவுவார் ஒருவ ரில்லை சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர்
சித்தாய வேடத்தாய் நீடு பொன்னித் திருவானைக் காவுடைய செல்வா என்றன்
அத்தாவுன் பொற்பாதம் அடையப் பெற்றால் அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_75.html
( pl click the above link to continue reading)
எத்தாயர் = எத்தனை தாயார்
எத்தந்தை = எத்தனை தந்தைமார்
எச்சுற்றத்தார் = எவ்வளவு சுற்றத்தார்கள்
எம்மாடு = மாடு என்றால் செல்வம் என்று பொருள். எவ்வளவு செல்வம்.
சும்மாடாம் = சுமை தூக்கும்? எந்தச் செல்வம் உன்னைத் தாங்கும்.
ஏவர் நல்லார் = இதில் யார் நல்லவர்கள்?
செத்தால் = இறந்து போனால்
வந்துதவுவார் ஒருவ ரில்லை = உதவிக்கு ஒருவரும் வர மாட்டார்கள்
சிறுவிறகால் தீமூட்டிச் = சிறு விறகால் தீமூட்டி
செல்லா நிற்பர் = சென்று கொண்டே இருப்பார்கள்.
சித்தாய = சித்து, சித்தம், அறிவு
வேடத்தாய் = உருவாய். ஞானமே உருவாக நின்றவனே என்று பொருள்
நீடு பொன்னித் = சிறந்த பொன்னி நதிக்கரையில் உள்ள
திருவானைக் காவுடைய செல்வா = திருவானைக்காவல் என்ற திருத் தலத்தில் எழுந்து அருளி இருப்பவனே
என்றன் அத்தாவுன் = எந்தன் தலைவனே,உன்
பொற்பாதம் அடையப் பெற்றால் = பொன் போன்ற திருவடிகளை அடையப் பெற்றால்
அல்லல் = துன்பம்
கண்டங் = கண்டு அங்கு
கொண்டடியேன் = கொண்டு அடியேன்
என்செய் கேனே. = என்ன செய்வேன்
அதாவது, உன் திருவடிகளை சரண் அடைந்தால் துன்பமான வாழ்வை நான் அடைவேனா? அடைய மாட்டேன் என்பது பொருள்
இங்கே, 'செல்லா நிற்பர்' என்றால் செல்வர் என்று பொருள்.
நிகழ் கால இடை நிலையாக் மூன்று சொற்கள் வரும்.
கிரு, கின்று, ஆநின்று.
இந்த மூன்றும் நிகழ் கால வினையை குறிப்பவை.
இதில் நம் முதல் இரண்டை பழக்கத்தில் வைத்து இருக்கிறோம். .மூன்றாவதை விட்டு விட்டோம்.
உதாரணமாக,
வருகிறான் (கிரு)
வருகின்றான் (கின்று)
வாராநின்றான் (ஆநின்று)
அதே போல் இங்கே
சிறு விறகால் தீ மூட்டி
- செல்கிறார் (கிரு)
- செல்கின்றார் (கின்று)
- செல்லா நின்றார் (ஆநின்று)
அது இடையில் கொஞ்சம் இலக்கணம்.
அது ஒரு புறம் இருக்கட்டும்.
'சிறு விறகால்'. பெரிய விறகுகளை வைத்தால் அது பற்றி எரிய நேரம் ஆகும். சின்ன சின்ன விறகுகளை வைத்தால் சீக்கிரம் முடிந்து விடும்.
'செல்லா நிற்பர்'. அந்த சின்ன விறகு கூட முழுவதும் எரிந்து முடியும் வரை கூட நிற்க மாட்டார்களாம். அது பாட்டுக்கு எரியட்டும் , நாம கிளம்புவோம் என்று கிளம்பி விடுவார்கள் என்று உலக இயற்கையை சொல்கிறார் நாவுக்கரசர்.
இது தான் உலகம்.
அன்பு வைக்க வேண்டியதுதான். பாசம் வேண்டியதுதான். ஆனால், அதெல்லாம் அப்படியே உண்மை என்று நம்பி விடக் கூடாது.
இந்த உலகில் யாருக்கும், யார் மேலும் பெரிய அன்பு கிடையாது.
நம்புவது கடினம் தான். அதெல்லாம் இல்லை, என் பிள்ளை என் மேல் உயிரையே வைத்து இருக்கிறான் என்று நினைத்தால் ஒரு முறை மயானம் சென்று பார்க்க வேண்டும்.
இந்த உண்மை தெரிந்தால், உலகப் பற்று விடும். மனம் வேறு ஒன்றைப் பற்றும்.
பற்றட்டும்.
கிரு கின்று ஆநின்று படித்தது நினைவில் வருகிறது
ReplyDelete