Tuesday, May 17, 2022

திருக்குறள் - ஒழுக்கமும் விழுப்பமும்

 திருக்குறள் - ஒழுக்கமும் விழுப்பமும் 


நாம் இதுவரை உள்ள அனைத்து குறள்களுக்கும் பரிமேலழகர் கூறிய உரைப் படியே சிந்தித்து வந்தோம். 


இந்தக் குறளில் ஒரு சிறு மாற்றம் செய்ய விருப்பம். 


இந்தக் குறளுக்கு பெரியவர் கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்கள் எழுதிய உரை கொண்டு சிந்திக்க இருக்கிறோம். 


வெகு நாட்களுக்கு முன் படித்த ஞாபகம். அந்த ஞாபகத்தில் இருந்து எழுதுகிறேன். 


இந்தக் குறளின் விளக்கம் முழுவதும் அவர் கூறியதின் மாற்று வடிவமே.


பாடல் 


ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்


பொருள் 



https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_79.html


(please click the above link to continue reading)


ஒழுக்கம் = ஒழுக்கம் 


விழுப்பம் = உயர்வு, சிறப்பு, பெருமை 


தரலான் = தரும் என்பதால் 


ஒழுக்கம் = அந்த ஒழுக்கம் 


உயிரினும் = உயிரை விட உயர்ந்ததாகக் கருதி 


ஓம்பப் படும் = போற்றப்படும், காக்கப் படும் 



இதில் என்ன பெரிய விரிவுரை செய் ய இருக்கிறது என்று நினைக்கலாம். 


பொறுத்து இருங்கள். 


'ஒழுக்கம்' என்று தானே சொல்லி இருர்க்கிறார். ஒழுக்கத்தில் நல்லொழுக்கம், தீயொழுக்கம் என்று இரண்டு இருக்கிறதே. இதில் எந்த ஒழுக்கத்தை வள்ளுவர் சொல்கிறார்? பின்னால்  'விழுப்பம்' தரும் என்று சொன்னதால், அது நல்லொழுக்கம் என்று கொள்ள வேண்டும். 


மேலும், உயர்ந்தவர்கள் எதைக் கூறினாலும், நல்லதையே நினைத்துக் கூறுவார்கள். 


வழியே ஏகுக வழியே மீளுக என்றாள் ஔவை. வழியில் போய், வழியில் வா என்று அர்த்தம். அதாவது, நல்ல வழியில் போய், நல்ல வழியில் வா என்று அர்த்தம். குறுக்கு வழி அல்ல அவள் சொன்னது. 


'நெறி அல்லா நெறி தன்னை நெறியாகக் கொள்வேனே" என்பார் மணிவாசகர். வழி அல்லாத வழி. 


நல்ல நெறியை, நெறி என்கிறார். 


தீய வழியை, நெறி அல்லாத நெறி என்கிறார். அதாவது நல்லது இல்லாதது கெட்டது. கெட்டது என்றே சொல்லுவது இல்லை. 


ஒருவனுக்கு எது சிறப்பை, பெருமையை, புகழைத் தரும்?


செல்வம்? படிப்பு? எழுதிய நூல்கள்? செய்த தான தர்மங்கள்? பெற்ற பிள்ளைகள்? பதவி?  


இவை எதுவுமே ஒருவனுக்கு பெருமை தராது. ஒழுக்கம் ஒன்றே ஒருவனுக்கு பெருமை தரும். 


இராவணனிடம் என்ன இல்லை? அறிவு, பதவி, வீரம், ஞானம், செல்வம், புகழ், அழகு...எல்லாம் இருந்தது. நாம் அவனை மதிக்கிறோமா? இல்லையே? ஏன்?  ஒழுக்கம் இல்லை அவனிடம். மாற்றான் மனைவியை விரும்பிய ஒழுக்கம் அற்ற செயலைச் செய்தான். 


பல்கலை கழகத்தின் துணை வேந்தரை ஏதோ தவறு செய்தார் என்று கைது பண்ணி அழைத்துக் கொண்டு போகிறார்கள். அவர் மேல் மதிப்பு இருக்குமா?


ஒழுக்கம் ஒன்றே ஒருவனுக்கு பெருமையைத் தரும். 


சரி, எனக்கு பெருமை வேண்டாம், புகழ் வேண்டாம் ...எனவே நான் ஒழுக்கம் இல்லாமல் இருக்கலாமா என்றால்....


ஒழுக்கமாக இருந்தால் பெருமை வரும் 

ஒழுக்கம் அற்றவனாக இருந்தால் சிறுமை வரும். ஊர் பார்த்து சிரிக்கும். மனைவி, மக்கள், சுற்றம் எல்லாம் ஏளனம் செய்யும். ஒருவன் இலஞ்சம் வாங்கி கைது ஆகிறான் என்று வைத்துக் கொள்வோம். பள்ளியில் அவன் பிள்ளைக்கு என்ன மரியாதை இருக்கும். அவன் மனைவி தெருவில் தலை நிமிர்ந்து நடக்க முடியுமா? 


"ஓம்பப் படும்" என்று கட்டளையாகக் கூறுகிறார்.  எதுக்கு? ஒழுக்கத்தை கடை பிடிப்பதால் எனக்கு என்ன கிடைக்கும் என்ற கேள்வி வரும் அல்லவா? பலன் இல்லாமல் ஒரு காரியத்தையும் செய்யக் கூடாது. 


"விழுப்பம் தரும்" எனவே அதை கடைப்பிடி என்கிறார். 


"உயிரினும்" என்று சொல்லுவதின் அர்த்தம் என்ன?


கி. ஆ. பெ அவர்கள் விளக்கம் மெய் சிலிர்க்க வைக்கும். 


உயிர் உயர்ந்தது தான். வரும் காலத்தில் ஏதோ ஒரு விஞ்ஞானி இறவாமல் இருக்க ஒரு மருந்து கண்டு பிடித்து விடலாம். அல்லது இறந்த உயிரை மீண்டும் கொண்டு வந்து விடலாம். ஆனால், ஒழுக்கம் போனால் வரவே வராது என்பதால் உயிரை விட அது உயர்ந்தது என்றார். 


இரண்டாவது, உயிரோடு இருக்கும் ஒருவன் ஒரு மிகப் பெரிய தவறை செய்து விடுகிறான் என்று வைத்துக் கொள்வோம். அதற்குப் பின் அவன் நடை பிணமாகத் தான் அலைய வேண்டி இருக்கும். உயிர் இருந்தாலும் அவனை ஒரு உயிருள்ள மனிதன் என்று யாரும் மதிக்க மாட்டார்கள். எனவே, அந்த உயிருக்கே சிறப்பு தருவது, ஒழுக்கம் தான். 


மூன்றாவது, ஒருவன் இறந்து போனால், அவன் செய்த குற்றங்களை நாம் பெரிதாக சொல்லுவது இல்லை. ஒரு நாகரீகம் கருதி  சரி சரி என்று விட்டு விடுகிறோம். 


போரில் அடி பட்டு இராவணன் இறந்து கிடக்கிறான். 


"மும்மடங்கு பொலிந்ததம்மா அம் முறை துறந்தான் உயிர் துறந்த முகங்கள் அம்மா" 


என்பான் கம்பன். 





சில சமயம் செய்த தவறை உணர்ந்து ஒருவன் தற்கொலை செய்து கொள்கிறான் என்றே வைத்துக் கொள்வோம். நாம் அவனை மன்னிக்கத் தயாராக இருப்போம். நல்ல மனுஷன், செஞ்ச தவறுக்காக உயிரையே விட்டு விட்டான்...அவன் மனுஷன் என்று சொல்ல்வதைக் கேட்டு இருக்கிறோம் அல்லவா?


தவறான முடிவால் கோவலனை கொன்று விட்டதை அறிந்து உயிரை விட்ட பாண்டிய மன்னனை நாம் வெறுத்து விடவில்லை. 


ஒழுக்கத் தவற்றினை உயிரைக் கொடுத்தாவது சரி செய்து விடலாம். 


உயிரை காப்பாற்றிக் கொள்ள ஒருவன் ஒழுக்கக் குறைவாக நடந்தால் அவனை என்ன சொல்லுவோம்? 


ஒருவன் உயிரை இழந்து விட்டால் அவனுக்கு அதில் துன்பம் இல்லை. அவன் தான் இறந்து விட்டானே. அவனை சுற்றி உள்ளவர்கள் அழுவார்கள். 


ஆனால், ஒருவன் ஒழுக்கத்தை இழந்தால் அவனும் அழ வேண்டும், அவன் சுற்றமும் அழும். எனவே, உயிரை விட ஒழுக்கம் உயர்ந்தது. 


உயிர் உள்ள எல்லோரும் ஒரு நிலையில் இருப்பது இல்லை. உயர்ந்தவர்கள், தாழ்ந்தவன், படித்தவன், படிக்காதவன் என்று ஆயிரம் வேற்றுமைகள் இருக்கும்.  ஆனால், ஒழுக்கம் உடைய எல்லோருமே சிறப்பித்துக் கூறப் படுவார்கள். 


சீதையை விட கண்ணகி கற்பு ஒழுக்கத்தில் உயர்ந்தவள் என்று யாரும் கூற மாட்டார்கள். 


எனவே, உயிர் எவ்வளவு நமக்கு முக்கியமோ, சிறப்போ, இன்றி அமையாததோ, அதை விட ஒரு படி மேலாக ஒழுக்கத்தைக் காக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். 


(குறிப்பு - மேலே உள்ள உரையில் உதாரணங்கள் திரு. கி. ஆ. பெ அவர்கள் சொன்னது அல்ல. பிழை இருப்பின் அது என் குறையே அன்றி அவர் பிழை அல்ல).


1 comment:

  1. சீதையை விட கண்ணகி கற்பு ஒழுக்கத்தில் உயர்ந்தவள் என்று யாரும் கூற மாட்டார்கள். ???:[

    ReplyDelete