Thursday, May 26, 2022

திருக்குறள் - ஒழுக்கத்தின் ஒல்கார்

 திருக்குறள் -  ஒழுக்கத்தின் ஒல்கார்


ஏன் நிறைய பேர் ஒழுக்கத்தை கடை பிடிப்பது இல்லை?


அதற்கு முன், ஒழுக்கம் என்றால் ஏதோ பூஜை செய்வது, ஒழுங்காக கடைமைகளை செய்வது, பிற பெண்களை ஏறெடுத்து பார்க்காமல் இருப்பது என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. 


தினமும் காலையில் எழுந்தவுடன் பல் துலக்குகிரீர்களா ? அதுவும் ஒரு ஒழுக்கம் தான். நேரம் தவறாமல் எதையும் செய்வீர்களா? அதுவும் ஒழுக்கம் தான். வேளா வேளைக்கு சாப்பிடுகிறீர்களா? அதுவும் ஒரு ஒழுக்கம் தான். 


எதையும் முறையாகச் செய்தால், அது ஒழுக்கம். எதையும் என்பதை உயர்ந்தவர்களிடம் இருந்து பெற்றதை என்று கொள்ள வேண்டும். 


இருந்தும், ஏன் பெரும்பாலோனோர் ஒழுக்கத்தை கடை பிடிப்பது இல்லை? 


ஏன் என்றால் அது கடினமாக இருக்கிறது என்பதால். 


சுலபமாக இருந்தால் எல்லோரும் செய்து விட மாட்டார்களா?


தினம்தோறும் ஒரு மணி நேரம் உடற் பயிற்சி செய்வது என்பது ஒரு ஒழுக்கம்.  


எவ்வளவு கடினமான வேலை. எனவே செய்வது இல்லை. 


அப்புறம் எப்படி ஒழுக்கத்தை கடை பிடிப்பது. வள்ளுவர் மிக எளிமையான வழி ஒன்றைச் சொல்லித் தருகிறார். 


கடினமாக இருக்கிறது என்று தானே ஒழுக்கத்தை கை விடுகிறாய். கடினமான எதையும் செய்ய உனக்கு விருப்பம் இல்லை. அப்படித்தானே. நல்லது, ஒழுக்கத்தை கடைபிடிக்காமல் இருப்பது என்பது ஒழுக்கத்தை கடைப் பிடிப்பதை விட கடினமானது. 


இப்போது என்ன செய்யப் போகிறாய்? என்று கேட்கிறார். .


பாடல் 


ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்

ஏதம் படுபாக்கு அறிந்து


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_26.html


(pl click the above link to continue reading)


ஒழுக்கத்தின் = ஒழுக்கத்தை கடை பிடிப்பதில் இருந்து 


ஒல்கார்  = விலக மாட்டார், தளர மாட்டார் 


உரவோர் = உறுதி உள்ளவர்கள் 


இழுக்கத்தின் = ஒழுக்கம் தவறுவதால் வரும்


ஏதம் = குற்றம் 


படுபாக்கு = உண்டாவதை 


அறிந்து = தெரிந்து 


சாலையில் ஒரு ஒழுக்கம் இல்லாமல் கண்டபடி வண்டி ஓட்டினால் சிறிது நேரம் இன்பமாக இருக்கும். ஆனால், விபத்து நேர்ந்து விட்டால் எவ்வளவு பெரிய துன்பம்? அதை அறிந்து, நாம் ஒழுங்காக வண்டி ஓட்டுக்கிறோம் அல்லவா? 


இங்கே ஒழுக்கம் தவறுவதால் வரும் தீமை தெரிகிறது. 


இன்னொருவன் மனைவியை கொண்டு வந்து அவளை அடையலாம் என்ற இன்ப நாட்ட்டத்தால் , பின்னால் வரப் போகும் தீமையை இராவணன் அறிந்தான் இல்லை. தெரிந்து இருந்தால் ஒழுக்கம் தவறி இருப்பானா? பெற்ற பிள்ளையை பறி கொடுத்து, தலை இல்லாத அவன் உடலை கட்டிக் கொண்டு அழ வேண்டி இருக்கும் என்று உணராததால், அவன் அந்தத் தவறைச் செய்தான். 


ஒழுக்கமாக இருப்பது கடினம் என்றால், ஒழுக்கம் இல்லாமல் இருப்பது அதை விட கடினம். அப்படி என்றால் எதைத் தேர்ந்து எடுப்பது? 


காலையில் ஐந்து மணிக்கு எழுந்து வேர்க்க விறுவிறுக்க நடக்கும் ஒழுக்கம் கடினம்தான். பின்னாளில் முட்டி வலி வந்து நடக்க முடியாமல், எழுந்திருக்க முடியாமல், படுத்த படுக்கையாக இருக்கும் துன்பம் எவ்வளவு பெரியது?  கழிவறைக்கு செல்லக் கூட ஒருவர் துணை வேண்டும் என்ற அவலம் தேவையா? அதை நினைக்கும் போது இப்போது "ஒழுங்காக"  உடற் பயிற்சி செய்யத் தோன்றும் அல்லவா.


புகை பிடிக்காமல் இருப்பது கடினம்தான். புகை பிடித்து புற்று நோய் வந்தால்? 


ஒழுக்கத்தின் மேன்மை மட்டும் சொல்லவில்லை வள்ளுவர். அதை எப்படி கடைபிடிப்பது என்றும் சொல்லித் தருகிறார். 


யார் எவ்வளவு அக்கறையாக நமக்குச் சொல்லித் தருவார்கள்?


இப்படி ஒரு பாட்டன் நமக்கு கிடைக்க நாம் எவ்வளவு புண்ணியம் பண்ணி இருக்க வேண்டும். ?






No comments:

Post a Comment