Saturday, May 28, 2022

திருக்குறள் - எய்தாப் பழி

திருக்குறள் - எய்தாப் பழி


பணம் சேர்த்தால் பணம் இருக்கும். சேர்க்காவிட்டால் இருக்காது. அவ்வளவுதானே?


நிறைய படித்தால் கல்வி அறிவு வளரும். படிக்காவிட்டால் வளராது. அதற்கு மேல் அதில் ஒரு சிக்கலும் இல்லை. 


உழைத்தால் உயரலாம். உழைக்காவிட்டால் உயர முடியாது. 


ஆனால்ஒழுக்கம் அப்படிப் பட்டது அல்ல. ஒழுக்கமாக இருந்தால் உயர்வு வரும். ஒழுக்கமாக இல்லாவிட்டால் உயர்வு வராது. அப்படித்தானே நினைப்போம். 


அது தவறு என்கிறார். 


எனக்கு உயர்வு வேண்டாம் என்றால் ஒழுக்கத்தைக் கடைபிடிக்காமல் இருந்து விடலாமா? உயர்வு வராது. அவ்வளவுதானே என்றால் இல்லை. அதற்கும் மேலே இருக்கிறது என்கிறார் வள்ளுவர். 


அது என்ன? 


பாடல் 


ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்

எய்துவர் எய்தாப் பழி


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_28.html


(Please click the above link to continue reading)


ஒழுக்கத்தின் = ஒழுக்கமாய் இருப்பதால் 


எய்துவர் = அடைவர் 


மேன்மை = உயர்வு 


இழுக்கத்தின் = ஒழுக்கம் இன்றி இருப்பதால் 


எய்துவர் = அடைவர் 


எய்தாப் பழி = அடைய முடியாத அடையக் கூடாத பழிகளை 


மிக அற்புதமான குறள்.


ஒருவன் எப்படி உயர்வு அடைய முடியும்? நிறைய படித்து, பட்டங்கள் பெற்று, நிறைய பணம் சம்பாதித்து, சாதனைகள் செய்து, புகழ் அடைந்து உயர்வு அடைய முடியுமா என்றால் இல்லை என்கிறார். 


ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை. ஒழுக்கம் தான் உயர்வைத் தரும். 


சரி, ஒழுக்கம் இல்லாவிட்டால் மேன்மை அடைய முடியாது. அவ்வளவுதானே என்றால் இல்லை. 


'இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி' என்கிறார். 


அது என்ன எய்தாப் பழி?


ஒரு ஊரிலே ஒரு திருடன் இருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். இரண்டு மூன்று முறை திருடி சிறை சென்று வந்தவன். அவனுக்கு திருடன் என்ற பெயர் வந்து விட்டது. புகழ் இல்லை. மேன்மை இல்லை. 


பின்னொரு நாள், அந்த ஊரில் ஒரு திருட்டு நடந்து விட்டது. இந்தத் திருடன் திருடவில்லை. வேறு யாரோ செய்த திருட்டு. ஊர் மக்கள் இந்தத் திருடனை பிடித்து விசாரிக்கிறார்கள். அவன் தான் திருடவில்லை என்று சத்யம் செய்கிறான். யார் நம்புவார்கள்..."நீ திருட்டுப் பயதாண்டா...இதுக்கு முன்னாடி திருடிட்டு சிறைக்கு சென்றவன் தான...இத மட்டும் நீ செய்யலேன்னுசொன்னா நாங்க நம்பிருவோமா?...இவனை எல்லாம் இப்படி விசாரிக்கக் கூடாது, கட்டி வச்சு நல்லா அடி குடுத்தா உண்மை தான வெளிய வரும்" என்று ஊர் அவனை கட்டி வைத்து துன்புறுத்தும். அல்லது காவலர்கள் செய்வார்கள். 


ஒரு முறை ஒருவன் ஒழுக்கம் தவறினால், பின்னால் அவன் செய்யாத பழியை எல்லாம் ஏற்க வேண்டி வரும். 


எய்தாப் பழி - செய்யாத பழி, ஏற்க வேண்டியில்லாத பழி. ஒழுக்கம் தவறினால் செய்யாத குற்றத்துக்கு எல்லாம் தண்டனை அனுபவிக்க வேண்டி வரும்.


இந்த எய்தாப் பழி இருக்கிறதே, அது ஒரு மிகப் பெரிய பழி. 


ஒருவன் ஒரு பெரிய தவறை செய்துவிட்டு சிறை சென்று விடுதலையாகி வருகிறான் என்று வைத்துக் கொள்வோம். 


உலகம் அவனை நல்லவன் என்று ஏற்றுக் கொள்ளுமா?  தண்டனைதான் முடிந்து விட்டதே. குற்றத்துக்கும் தண்டனைக்கும் சரியாப் போச்சு என்று யாரும் நினைப்பது இல்லை. வாழ் நாள் எல்லாம் அந்தப் பழியை அவன் சுமந்து திரிய வேண்டும். "..அதோ போகிறானே அவன் பெரிய கொலைகாரன்,fraud, அயோக்கியன் ...அவன் கிட்ட கொஞ்சம் எச்சரிகையாக இரு" என்று தான் உலகம் அவனை தள்ளி வைத்து தண்டிக்கும். அவன் இப்போது ஒரு குற்றமும் செய்யவில்லை. இருந்தும், பழி ஏற்று தண்டனை அனுபவிக்கிறான். 


ஒரு கொலை செய்து தண்டனை பெற்று மீண்டு வந்தவனுக்கு யாராவது வேலை கொடுப்பார்களா? வாழ்நாள் பூராவும் அவன் தன் குற்றத்தை மறைத்து, மறைந்து திரிய வேண்டி வரும். எப்போதாவது உண்மை வெளியே வந்தால், அவன் வெறுத்து ஒதுக்கப்படுவான். 


ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை

இழுக்கத்தின் எய்தார் அது 


என்று குறள் சொல்லி இருக்கலாம். சொல்லவில்லை.  


எய்தாப் பழி என்று சொல்லி இருக்கிறார். 


எவ்வளவு ஆழமான ஒரு சொல். எவ்வளவு ஆபாத்தான ஒன்று. 


ஒழுக்கக் குறைவால் மேன்மை அடையாதது மட்டும் அல்ல, செய்யாத பழி எல்லாம் வந்து சேரும்.


எனவே,ஒழுங்கா ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று எச்சரித்துச் சொல்கிறார். 


நாம் இதை கடை பிடிப்பதோடு நின்று விடாமல், நம்மைச் சார்தவர்களுக்கும் எடுத்துச் சொல்லுவோம். அவர்களும் பயன் பெறட்டுமே.






No comments:

Post a Comment