Pages

Saturday, October 29, 2022

திருக்குறள் - வேண்டற்க வெஃகியாம்

      

 திருக்குறள் - வேண்டற்க வெஃகியாம் 


வாழ்க்கையை அனுபவிக்க பொருள் தேவை. பொருள், செல்வம் இருந்து விட்டால் எல்லா இன்பங்களும் வந்து விடும் என்று நினைத்து எப்படியாவது பொருள் சேர்த்துவிட வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள்.


நாய் விற்ற காசு குறைக்காது  என்று நினைத்து எந்த வழியிலாவது பணம் சேர்க்க முயல்கிறார்கள். 


எப்படியெல்லாமோ பணம் சேர்த்தவன் நன்றாகத்தானே இருக்கிறான். வாழ்கையை அனுபவிக்கிறான். சும்மா இந்த அறம், நியாயம், தர்மம் என்றெல்லாம் சொல்லி என்ன பயன்...என்று சிலர் நினைக்கலாம். 


வள்ளுவர் சொல்கிறார் 


"நீ தவறான வழியில் பணம் சேர்த்து விடலாம். ஆனால், அதை உன்னால் நிம்மதியாக அனுபவிக்க முடியாது...எனவே அப்படி சேர்க்காதே" என்கிறார்.




பாடல் 


வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற்கு அரிதாம் பயன்



பொருள் 




(Please click the above link to continue reading)


வேண்டற்க = வேண்டாம் என்று ஒதுக்கி விடு. எதை?


வெஃகியாம்  = தவறான வழியில் வரும் 


ஆக்கம்  = செல்வத்தை. ஏன் என்றால் 


விளைவயின் = அதை அனுபவிக்கும் போது 



மாண்டற்கு  = மாண்பு உடைய ஆதல், சிறப்பாக ஆதல், 



அரிதாம் பயன் = அரிதாக நடக்கும். 



வெளியில் இருந்து பார்பதற்கு தவறான வழியில் பணம் சேர்த்தவன் ஏதோ மகிழ்ச்சியாக இருப்பது போலத் தெரியும். அவன் சட்டத்தை ஏமாற்றலாம். இறுதிவரை  சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கவும் செய்யலாம். 



ஆனால், அந்த செல்வதை அவன் ஒரு நாளும் நிம்மதியாக அனுபவிக்க முடியாது. 



எப்போது, என்ன வருமோ என்று பயந்து கொண்டே இருக்க வேண்டும். தவறான வழியில் வந்த செல்வத்தை முதலீடு செய்ய முடியாது. மறைத்து மறைத்து வைக்க வேண்டும். மறைத்து வைத்தாலும் ஏதோ சில பேருக்கு தெரியத்தான் செய்யும். அவர்களை கண்டால் பயப்பட வேண்டும். அவர்களையும், மற்றவர்களையும் அடக்கி வைக்க ஆள் பலம் வேண்டும். அப்படி வைக்கும் ஆட்கள் ஏதேனும் செய்தால், எங்கே அவர்கள் தன்னை காட்டி கொடுத்துவிடுவார்களோ என்று பயப்பட வேண்டும். 


பயத்திலும், மன அழுத்தம், மற்றும் உளைச்சலில் உடல் நலம் கெடும். 



எங்கே பணத்தை பிடுங்கிக் கொண்டு போய் விடுவார்களோ என்று அவசரம் அவசரமாக அனுபவிக்கத் தோன்றும். 


தவறான வழிகளில் பணத்தை செலவழித்து அனுபவங்களைத் தேடத் தோன்றும். 


மது, போதை பொருட்கள், பெண்கள், சூது என்று மனம் ஓடும். 


எங்கே நிம்மதி வரும். 


அப்படிப்பட்ட செல்வம் தேவையா?   வேண்டாம் என்று ஒதுக்கி விடு என்கிறார்.


பொருளைத்தான் தவறான முறையில் எடுக்க நினைக்க வேண்டும் என்று இல்லை. 



வள்ளுவர் "ஆக்கம்" என்றார். ஆகி வருவது ஆக்கம். அது செல்வமாக மட்டும் இருக்க வேண்டியது இல்லை. 


பதவி, பட்டம், செல்வாக்கு, அதிகாரம், பேர், புகழ் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். 


மற்றவன் உழைப்பை திருடிக் கொள்வது, அவனுக்கு வர வேண்டிய புகழை தனதாக்கிக் கொள்வது, மற்றவனுக்கு வர வேண்டிய பதவி உயர்வை தட்டிப் பறித்துக் கொள்வது, எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். 


ஏன் மாற்றான் மனைவியை அடைய நினைப்பது கூட இதில் அடங்கும். 


தவறான வழியில் அடைந்த எதுவும் அதை நிம்மதியாக அனுபவிக்க விடாது. 



இதெல்லாம் சிறு வயதில் சொல்லிக் கொடுத்து இருந்தால் பல பேர் இலஞ்சம் போன்ற வழிகளில் செல்வது தவிர்க்கப்பட்டு இருக்கலாம். 


நல்லவற்றை எப்போது படித்தாலும் நல்லதுதான். 



[

முன்னுரை 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_21.html


நடுவின்றி நன்பொருள் வெஃகின்

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_25.html


நாணுபவர்

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post.html


வெஃகுதல் செய்யார்

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_11.html


அகன்ற அறிவுஎன்னாம்




பொல்லாத சூழக் கெடும்


]


Friday, October 28, 2022

திருவாசகம் - திரு அம்மானை - அப்பாலைக்கு அப்பாலை

            

திருவாசகம் - திரு அம்மானை  -   அப்பாலைக்கு அப்பாலை 


வாரியார் சுவாமிகளுக்கு ஒரு முறை உடல் நலக் குறைவு ஏற்பட்டது. காலில் மிக அதிகமான வலி. மருத்துவர்கள் சோதனை செய்து பார்த்துவிட்டு, காலை எடுக்க வேண்டும் என்று கூறி விட்டார்கள். காலை வெட்டி எடுப்பதற்கு எவ்வளவு செலவு ஆகும் என்றும் கூறினார்கள். 


அவர் சிந்தித்தார். இருக்கிற காலை வெட்டி எடுக்க இவ்வளவு செலவு ஆகும் என்றால், அதை பெற எவ்வளவு செலவு செய்ய வேண்டி இருக்கும் என்று.


கால் மட்டுமா?  


கால், கை, கண், மூளை, இதயம், நுரையீரல் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இத்தனையும் நமக்கு இலவசமாக கிடைத்து இருக்கிறது. விலை கொடுத்தா வாங்கினோம்?


சரி இல்லாத காலை வெட்டி எடுக்கும் மருத்துவருக்கு பணம் கொடுப்பது மட்டும் அல்ல, அவருக்கு நன்றியும் சொல்கிறோம். அப்படி என்றால் நமக்கு இவ்வளவு அவயன்களைக் கொடுத்த இறைவனுக்கு எவ்வளவு நன்றி சொல்ல வேண்டும். 



நினைத்துப் பார்க்கிறார் மணிவாசகர். 


அவர் உள்ளம் உருகுகிறது. 


உடல் மட்டுமா தந்தான் இறைவன்?  அன்பான கணவன்/மனைவி, பிள்ளைகள், சுற்றம், நட்பு, சுகமான சூழ்நிலை, ஆரோக்கியம், அறிவு என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இத்தனையும் இறைவன் அருளி இருக்கிறான். நம் மேல் எவ்வளவு அன்பு இருந்தால் இத்தனையும் இறைவன் அருளி இருப்பான் என்று நினைத்து நினைத்து உருகுகிறார். 


இதெல்லாம் இறைவன் அருளியது என்று நினைப்பவர்களுக்கு அந்த நன்றி உணர்வு பெருகும். உள்ளம் உருகும். 

அது ஒரு புறம். 


இன்னொரு புறம், மணிவாசகர் மதுரையை சுற்றி முற்றி பார்க்கிறார். 


சிவன் கோவில், திருவிளையாடல் நடந்த இடங்கள், பக்தர்கள் என்று மதுரையம்பதியே ஏதோ சிவலோகம் போல இருக்கிறது. சிவன் இருக்கும் இடம்தானே சிவ லோகம். சிவனுக்கு மதுரை மேல் ஒரு ஈர்ப்பு இருக்கும் போல இருக்கிறது. 


இறைவனின் தன்மையை நினைத்துப் பார்க்கிறார் அவர். எவ்வளவு சிந்தித்தாலும் அவர் சிந்தனைக்கு எட்ட முடியாமல் விரிந்து கொண்டே போகிறது. முடிவு இல்லாமல், விரிந்து கொண்டே போகிறது. 


பாடல் 



செப்பு ஆர் முலை பங்கன், தென்னன், பெருந்துறையான்,
தப்பாமே தாள் அடைந்தார் நெஞ்சு உருக்கும் தன்மையினான்,
அப் பாண்டி நாட்டைச் சிவலோகம் ஆக்குவித்த
அப்பு ஆர் சடை அப்பன், ஆனந்த வார் கழலே
ஒப்பு ஆக ஒப்புவித்த உள்ளத்தார் உள் இருக்கும்
அப்பாலைக்கு அப்பாலை பாடுதும் காண்; அம்மானாய்!


பொருள் 





(pl click the above link to continue reading)



செப்பு ஆர் முலை பங்கன் = செம்பால் செய்யப்பட்ட கிண்ணம் போல் தனங்களை உடைய உமா தேவியை உடலின் பாதியாகக் கொண்டவனை 


தென்னன் = தென்னாடு உடையவன் 

பெருந்துறையான், = திருப் பெருந்துறையில் உறைபவன் 


தப்பாமே = தவறாமல் 


தாள் அடைந்தார் = தன்னுடைய திருவடிகளை அடைந்தவர்களின் 


நெஞ்சு உருக்கும்  = மனதை உருக்கும் 


தன்மையினான் = தன்மை உடையவன் 


அப் பாண்டி  நாட்டைச் = பாண்டிய நாட்டை 


சிவலோகம் ஆக்குவித்த = சிவ லோகம் போல செய்த 


அப்பு = நீர், கங்கை 


ஆர் சடை அப்பன் = உடைய சடை முடி உடையவனை 


ஆனந்த= ஆனந்தத்தை அள்ளித் தருகின்ற 


வார் கழலே = சிறந்த திருவடிகளில் 


ஒப்பு ஆக ஒப்புவித்த = தங்களை ஒப்படைத்துக் கொண்ட 


உள்ளத்தார் = உள்ளம் உடையவர்களின் 


உள் இருக்கும் = உள்ளத்தில் இருப்பவனை 


அப்பாலைக்கு அப்பாலை = அனைத்துக்கும் மேலே, வெளியே இருப்பவனை 


பாடுதும் காண்; அம்மானாய்! = பாடுவோம் அம்மானாய் 


அவன் அறிவுக்கு புலப்படமட்டான். அப்பாலுக்கு அப்பால் போய்க் கொண்டே இருப்பான். ஆனால், அவன் திருவடிகளை சரண் அடைந்தவர்களின் உள்ளத்துக்குள் இருப்பான். 


இறைவனை அறிவால் அறிய முடியாது. அன்பால் அவனே நம் உள்ளத்துக்குள் வந்து இருப்பான். 


அப்படி அவன் உள்ளத்துக்குள் வந்து விட்டால், இருக்கும் இடமே சிவ லோகம். வேறு எங்கும் போக வேண்டாம். 


"உள்ளத்தார் உள் இருக்கும் அப்பாலைக்கு அப்பாலை பாடுதும் காண் அம்மானாய்"




(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:பா

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html


அறைகூவி, வீடு அருளும்


வாரா வழியருளி


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_15.html


அந்தம் இலா ஆனந்தம்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_19.html


தாய்போல் தலையளித்திட்டு


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_24.html


கல்லைப் பிசைந்து கனி ஆக்கி

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_28.html


காட்டாதன எல்லாம் காட்டி

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_18.html


தாயான தத்துவனை




பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 1


பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 2



வியப்புருமாறு 




கண்ணார் கழல்காட்டி


)


Wednesday, October 26, 2022

கந்தரனுபூதி - விடுவாய் வினையா வையுமே

        

 கந்தரனுபூதி - விடுவாய் வினையா வையுமே 


(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


சும்மா சும்மா இறைவனைப் பற்றி "நீ யார், எவ்வளவு பெரிய ஆள், என்னவெல்லாம் செஞ்சிருக்க, எனக்கு அருள் செய்ய மாட்டாயா" என்று புலம்புவதில் யாருக்கு என்ன பயன். 


இறைவன் யார் என்று அவருக்குத் தெரியாதா? அவர் என்ன செய்தார் என்று அவருக்குத் தெரியாதா? சரி, அப்படியே தெரியாது என்று வைத்துக் கொண்டாலும், ஒரு தரம் சொன்னால் போதாதா? 


அருணகிரிநாதர் அதில் இருந்து பெரிதும் வேறுபடுகிறார். மனித நேயம், வாழ்வின் நோக்கம், அதை அடையும் வழி என்பன பற்றி பேசுவார். 


"தவறான வழியில் சென்று கெடும் என் மனமே, உனக்கு சில நல்ல வழிகளை  சொல்கிறேன் கேள். மறைக்காமல் கொடு. முருகனின் திருவடிகளை நினை. உன்னுடைய நீண்ட துன்பங்களை எரித்து சாம்பலாக்கு. வினைகளை விடு"


மேலோட்டமாக இதுதான் அவர் சொல்ல வந்த செய்தி. 



பாடல் 


கெடுவாய் மனனே கதிகேள் கரவா 

திடுவாய் வடிவே லிறைதாள் நினைவாய் 

சுடுவாய் நெடுவே தனை தூள் படவே 

விடு வாய் விடுவாய் வினையா வையுமே 


சீர் பிரித்த பின் 


கெடுவாய் மனனே கதிகேள் கரவாது  

இடுவாய் வடிவேல்  இறை தாள் நினைவாய் 

சுடுவாய் நெடு வேதனை தூள் படவே 

விடுவாய் விடுவாய் வினை யாவையுமே 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


(pl click the above link to continue reading)




கெடுவாய்  = கெட்டுப் போகும் 


மனனே  = என் மனமே 


கதி = கதி என்றால் வழி. நல்ல வழியை 


கேள்  = சொல்கிறேன், கேட்டுக் கொள் 


கரவாது   = மறைக்காமல் 


இடுவாய் = ஏழை எளியவர்களுக்கு கொடு 


வடிவேல் = வடிவான, அழகான வேலை உடைய 


இறை  = இறைவன், முருகன் 


தாள்  = திருவடிகளை 


நினைவாய்  = மனதில் நினை 


சுடுவாய்  = சுட்டு எரிப்பாய் 


நெடு வேதனை  = நீண்ட வேதனை 


தூள் படவே  = தூள் தூளாகும்படி, சாம்பலாகும்படி 


விடுவாய் விடுவாய் = விட்டு விடுவாய் 


வினை யாவையுமே  = எல்லா வினைகளையும் 


இனி விரிவான பொருள் பற்றி சிந்திப்போம். 


"கரவாது இடுவாய்" - யாரோ ஒரு பிச்சைக்காரன் பிச்சை கேட்கிறான். சில்லறை இல்லை, ஒண்ணும் இல்லை வேற இடம் பாரு என்று அவனை அனுப்பி விடுகிறோம். நம்மிடம் பணம் இல்லாமல் இல்லை. வைத்துக் கொண்டே இல்லை என்கிறோம். கொடுக்கும் மனம் இல்லை. மறைக்காமல் கொடு என்கிறார். 


இதையே ஔவையும் "இயல்வது கரவேல்" என்றாள். எது முடியுமோ அதைச் மறைக்காமல் கொடு/செய். 


பசி என்று ஒருவன் வருகிறான். ஒரு வேளை உணவு அவனுக்குத் தர முடியாதா? பசி எவ்வளவு கொடுமையானது என்று அனுபவித்தால்தான் தெரியும். 


ஏன் கொடுக்கும் மனம் வருவது இல்லை? 


நான் கஷ்டப்பட்டு சம்பாதித்தது, இருக்குறதை எல்லாம் தானம் பண்ணிட்டு நான் என்ன பண்ணுவது என்ற பயம். 


அருணகிரிநாதர் சொல்கிறார், நீ ஒண்ணும் பெரிதாக சேர்த்துவிடவில்லை. இதே நீ, உன் திறமை, அறிவு எல்லாம் இருந்தும், காலம் மாறினால் எல்லாம் மாறும். கம்பெனி மூடப்படலாம், நட்டத்தில் இயங்கலாம், வேலை போகலாம், வேறு நல்ல வேலை கிடைக்காமல் போகலாம். எது வேண்டுமானாலும் நடக்கலாம். எல்லாம் என் சாமர்த்தியம் என்று நினைப்பது தவறு. 


ஏதோ, இறை அருளால் எல்லாம் வந்தது. வந்ததில் கொஞ்சம் பகிர்ந்து கொள்வோம் என்று நினைக்க வேண்டும். 


"வடிவேல்  இறை தாள் நினைவாய்"    - உனக்கு வந்த செல்வம், வாழ்வு எல்லாம் அவன் தந்தது என்று நினை. கொடுப்பது எளிதாகும். கொடுத்தால் இன்னும் அவன் தருவான் என்ற நம்பிக்கை பிறக்கும். 



"சுடுவாய் நெடு வேதனை தூள் படவே"  - எது நெடிய வேதனை? நமக்கு வரும் பெரும்பாலான வேதனைகள் சிறிது காலத்தில் போய் விடும் அல்லது நாம் அதற்கு பழகிக் கொள்வோம். தீராத வேதனை ஒன்று இருக்கிறது. பழகவும் முடியாது. அது இந்த பிறவியில் பிறந்து, இறந்து, ,பிறந்து உழல்வது. அது நீண்ட வேதனை.  அந்த வேதனையில் இருந்து விடுபட வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? அடுத்து சொல்கிறார். 


"விடுவாய் விடுவாய் வினை யாவையுமே " வினை யாவையும் விடுவாய் என்கிறார். தீவினை, நல்வினை என்று இரண்டு இருக்கிறது.  அறம் பாவம் என்று சொல்கிறார்கள். 


தீவினையை விட்டு விடலாம். நல் வினையையும் விட வேண்டுமா?  அப்புறம் ஏன் "கரவாது இடுவாய்" என்று முதல் வரியில் சொன்னார்? அது நல்வினைதானே?


"விடுவாய் விடுவாய் வினை யாவையுமே" என்பதில் விடுவாய் விடுவாய் என்று இரண்டு முறை கூறுகிறார்.  ஏன்?


தீவினைகளை விடுவாய். விட்டு விடு. செய்யாதே. 


நல்வினைகளை செய்யும் போது அதன் மேல் உள்ள பற்றினை, பலனை எதிர்பார்பதை விட்டு விடு. நல்லதைச் செய் ஆனால் அதற்கு உரிய பலனை எதிர்பார்பதை விட்டு விடு. நிஷ் காமிய கர்மம் என்று சொல்லுவார்கள். பலனை எதிர்பார்க்காத கர்மங்கள் நம்மைச் சேர்வது இல்லை. 


அதை எப்படிச் செய்வது ? 


இறைவன் இரு தாள் நினைத்து செய். பலன் அவனுக்குப் போகட்டும். எனக்கு வேண்டாம் என்று அதை விடுவாய். 


மறைக்காமல் கொடு 

அவன் தந்தது என்று நினைத்துக் கொடு 

தீ வினையை விட்டு ஒழி 

நல் வினையில் இருந்து வரும் பலனை எதிர்பார்க்காதே. 


இதுவே நற்கதி. கதி கேள். 


 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


]




Monday, October 24, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - வென்றி தரும்பத்தும்

         

நாலாயிர திவ்ய பிரபந்தம் -   வென்றி தரும்பத்தும் 


உங்களுக்கு இனி வெற்றிதான் போங்கள். நீங்கள் எடுத்த காரியம் எல்லாவற்றிலும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். 


நான் சொல்லவில்லை. நம்மாழ்வார் சொல்கிறார். 



ஒரு நிமிடம் யோசித்துப் பார்ப்போம்....



அந்தக் காலத்தில்..கண்ணன் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்திருந்தால் எப்படி இருக்கும் என்று...அதே ஆயர்பாடியில், மற்ற ஆயர் குல மக்களோடு கண்ணன் கூட ஆடிப் பாடி இருந்திருந்தால் எப்படி இருக்கும்? 



நம்மால் அதை நினைத்து பெருமூச்சுதான் விட முடியும். 


நம்மாழ்வாருக்கு அந்தப் பிரச்னை இல்லை. அவர் நினைத்துப் பார்ப்பது மட்டும் அல்ல. அங்கேயே போய்விட்டார். நான் அங்கே இருந்தேன் என்கிறார். அந்த ஆயர் குல மக்களோடு ஒன்றாக இருந்தேன் என்கிறார். 


அவர்களோடு இருந்த இந்த சடகோபன் சொல்லிய பத்துப் பாட்டையும் கற்பவர்கள் என்றும் வெற்றி அடைவார்கள் என்று இந்த நூலின் பயனை கூறுகிறார். 


பாடல் 




குன்ற மெடுத்த பிரானடி யாரொடும்,

ஒன்றிநின் றசட கோப னுரைசெயல்,

நன்றி புனைந்த ஓராயிரத் துள்ளிவை

வென்றி தரும்பத்தும் மேவிக்கற் பார்க்கே.



சீர் பிரித்த பின் 


குன்றம் எடுத்த பிரான் அடியாரோடும் 

ஒன்றி நின்ற சடகோபன் உரை செயல் 

நன்றி புனைந்த ஓராயிரத்துள் இவை 

வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே



பொருள் 



(pl click the above link to continue reading)



குன்றம் எடுத்த  = மலையை கையில் எடுத்த 


பிரான்  = பிரியாதவன் (அன்பர்களை விட்டு)  


அடியாரோடும்  = அடியார்களோடு 


ஒன்றி நின்ற  = ஒன்றாக நின்ற 


சடகோபன்  = சடகோபன் 


உரை செயல்  = உரைத்த 


நன்றி புனைந்த = சிறந்த பாடல்களுள் 


ஓராயிரத்துள் இவை  = ஆயிரம் பாடல்களில் இந்த 


வென்றி தரும்  = வெற்றியைத் தரும் 


பத்தும் = பத்துப் பாடல்களையும் 


மேவிக் கற்பார்க்கே = விரும்பி கற்பவர்க்கே 



இதுவரை விருப்பமாக இந்த வெற்றி பாசுரங்களை படித்து வந்தீர்கள்தானே ? இந்த ப்ளாக்கின் முதல் பத்தியை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். 



(முந்தைய பதிவுகள்


பாசுரம் 3594 - ஆழி எழ 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_30.html


பாசுரம் 3595 - ஒலிகள் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post.html


பாசுரம் 3596 - நான்றில 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3596.html


பாசுரம் 3597 - உலகம் உண்ட ஊண்

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3596_12.html


பாசுரம் 3598  - ஒலிகள்


பாசுரம் 3599  - மெலிந்த பொழுது 



பாசுரம் 3600  -  நீறு பட இலங்கை 



பாசுரம் 3602 - அன்று செய்தது 



பாசுரம் 3603 - குன்ற மெடுத் தானே


)


Sunday, October 23, 2022

திருக்குறள் - பொல்லாத சூழக் கெடும்

     

 திருக்குறள் - பொல்லாத சூழக் கெடும்




இன்று நாம் காண இருக்கும் குறள் மிக நீண்ட தொலை நோக்குப் பார்வை கொண்ட ஆழமான, விரிவான குறள். 



எப்படி இப்படி எல்லாம் சிந்திக்க முடிந்தது என்று நினைக்க நினைக்க ஒரு பிரமிப்புதான் மிஞ்சுகிறது. 


எதற்காக இல்லறம்? 


மனைவி மக்களோடு இன்பம் துய்கவா? பொருள் ஈட்டவா ?  எதற்காக திருமணம்?  கல்யாணம் பண்ணிக் கொள்ளாமல் இருந்தால் என்ன ஆகிவிடும்? பிள்ளை பெறாமல் இருந்தால் என்ன ஆகிவிடும்?


இன்றைய சமுதாயத்தில் இது போன்ற கேள்விகள் எழுகின்றன.  ஆணும் ஆணும் திருமணம் செய்து கொண்டால் என்ன? பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் என்ன?  திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒன்றாக இருந்தால் என்ன?  அதாவது, உடல் சார்ந்த இன்பம் அனுபவிப்போம் ஆனால் பிள்ளைகள் வேண்டாம் என்கிறார்கள். அதில் என்ன தவறு?  என் இஷ்டம்...மற்றவர் புகுந்து கருத்துச் சொல்ல இதில் இடம் இல்லை என்கிறார்கள். 


என்ன பதில் சொல்வது?  கலாச்சாரம், பண்பாடு என்று சொல்லலாம்...அதில் இருந்து ஆயிரம் கேள்வி எழும்.  


வள்ளுவர் மிகத் தெளிவாக சிந்தித்து எழுதி வைத்து இருக்கிறார். 


வாழ்வின் நோக்கம் வீடு பேறு. வீடு பேறு என்பதை வேண்டும் என்றால் தன்னைத் தான் உணர்தல் என்று வைத்துக் கொள்ளலாம் அதை அடைய வேண்டும் என்றால் பற்று விட வேண்டும். 



பற்றை விட யாருக்கு ஆசை? ஒருவரும் தயாராக இருக்க மாட்டார்கள். பின் எப்படி ?  



அன்பு பெருகினால் கொடுப்பது எளிதாகும். பிள்ளை மேல் அன்பு இருந்தால், தான் பசித்து இருந்தாலும் பிள்ளைக்கு கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் எழும்.  அது எப்படி சாத்தியமானது? அன்பினால். 



அந்த அன்பு விரியும் போது, அருளாகும். அருள் உண்டானால் பிள்ளைக்கு கொடுக்கும் அதே இன்பம் எல்லோருக்கும் கொடுக்கும் போதும் வரும். 


பிள்ளை எப்படி வரும்?  மனைவியின் மூலம் வரும். 


முதலில் மனைவி. அவள் மேல் அன்பு. அந்த அன்பில் பிறப்பது பிள்ளை. அன்பு இன்னும் விரிகிறது. பின் சுற்றம், நட்பு என்று அன்பின் எல்லைகள் விரிகிறது. 



பின் குடும்பத்தைத் தாண்டி, அது சமுதாயத்தில் படர்கிறது. அப்போது அருள் பிறக்கிறது. அருள் வரும் போது துறவு எளிதாகிறது. துறவு எளிதானால் வீடு பேறு தானே வரும். 


மனைவி மேல் அன்பு செய்யாதவன், பிள்ளை மேல் எங்கே அன்பு செய்வான். பிள்ளை மேல் அன்பு செய்யாதவன், நட்பின் மேல், சுற்றத்தின் மேல் எப்படி அன்பு செய்வான்....



அடிப்படை அன்பு. அதன் தளம்  இல்லறம். இல்லறத்தின் வழியாகத்தான் துறவை எட்டிப் பிடிக்க முடியும். 


மற்றவன் பொருளை தவறான வழியில் அடைய நினைப்பவன் மனதில் எங்கே அன்பும், அருளும் இருக்கும்? அவன் எங்கே துறவை அடைவது, வீடு பேற்றை அடைவது?


இத்தனையும் ஒண்ணே முக்கால் அடியில். 


பாடல் 


அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்


பொருள் 




(Please click the above link to continue reading)



அருள்வெஃகி  = அன்பு, அருள் இரண்டுக்கும் அடிப்படியான அறத்தை விரும்பி 


ஆற்றின்கண்  = வழியில் 


நின்றான்  = செல்பவன் 


பொருள்வெஃகிப் = மற்றவன் பொருளை  அடையக் கருதி 


பொல்லாத சூழக் = தவறான வழியில் செல்ல நினைத்தால் 


 கெடும் = கெடும் 


மேலே கூறியது எல்லாம் இந்தக் குறளில் எங்கே இருக்கிறது?


இருக்கிறது.  ஒவ்வொன்றாகப் பார்ப்போம். 


அருள்வெஃகி  = அன்பில் இருந்து அருள் வரும் என்று பார்த்தோம். இல்லறத்துக்கு அடிப்படை அன்பு. துறவுக்கு அடிப்படை அருள்.  இல்லறம், துறவறம் இரண்டின் அடிப்படை "அறம்". .இல் + அறம், துறவு + அறம். 



எனவே அருளை விரும்புதல் என்பது அறத்தை விரும்புவதுதான். 




ஆற்றின்கண் நின்றான்  = ஆறு என்றால் வழி. ஆற்றின்கண் நின்றான் என்றால் அந்த வழியில் நின்றவன், செல்பவன். எந்த வழி  துறவுக்குப் போகும் இல்லறத்தின் வழியில் நின்றவன். இல்லறத்தில் உள்ளவன் என்று பொருள். 




பொருள்வெஃகிப் = இல்லறத்துக்குப் பொருள் வேண்டும். கட்டாயம் வேண்டும். 



பொல்லாத சூழக் கெடும் = அதை நேர்மையான வழியில் அடைய வேண்டும். பொல்லாத என்ற தீய வழியில். 



சூழ என்றால் நினைக்க. நினைத்தாலே போதும். செய்ய வேண்டும் என்று இல்லை. 


கெடும் = எது கெடும்?  எல்லாம் கெடும். இல்லறம் கெடும். துறவறம் கெடும். அதனால் வீடு பேறு அடைவது கெடும். 



ஒரு சில நாள் கழித்து மீண்டும் இதைப் படித்துப் பாருங்கள். 


அடிக்கடி நினைவு படுத்திக் கொள்ள வேண்டிய குறள்களில் ஒன்று. 


[

முன்னுரை 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_21.html


நடுவின்றி நன்பொருள் வெஃகின்

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_25.html


நாணுபவர்

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post.html


வெஃகுதல் செய்யார்

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_11.html


அகன்ற அறிவுஎன்னாம்







]


Saturday, October 22, 2022

திருவாசகம் - திரு அம்மானை - கண்ணார் கழல்காட்டி

           

திருவாசகம் - திரு அம்மானை  -   கண்ணார் கழல்காட்டி




விண்ணாளுந் தேவர்க்கு மேலாய வேதியனை
மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத்
தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்டானைப்
பெண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையிற்
கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட
அண்ணா மலையானைப் பாடுதுங்காண் அம்மானாய்



மிக எளிமையான, இனிமையான பாடல். 


"விண்ணாளுந் தேவர்க்கு மேலாய வேதியனை"

வேதியன் என்றால் உயர்ந்தவன்,சிறந்தவன் என்று பொருள். விண்ணில் உள்ள அனைத்து தேவர்களையும் விட உயர்வானவன். 


"மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத்"


மாண்பு என்றால் பெருமை, சிறப்பு, மதிப்பு, மரியாதை.  மாண்புமிகு மந்திரி என்று சொல்கிறோம் அல்லவா? சரி, "மன்னவர்க்கு மாண்பு" என்றால் என்ன? அரசர்களுக்கு மதிப்பைத் தருவது எது? அவர்களுடைய கருணை, குடிகள்பால் அவர்கள் கொண்ட அக்கறை, நடுநிலை, குடிகளை பாதுகாத்தல் போன்ற நற்குணங்கள் அவர்களுக்கு சிறப்புத் தரும். அத்தகைய சிறப்பாக இருப்பவன் இறைவன். நற்குணங்களின் உறைவிடம் அவன். 


"தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்டானைப்"

தண்மை என்றால் குளிர்ச்சி. இனிமையான தமிழை அளித்த சிறந்த பாண்டி நாடு. ஏன்? சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நாடு பாண்டிய நாடு. அந்த சங்கத்தில் சிவ பெருமானும், முருகனும் இருந்தார்கள். அவர்கள் இருந்து தமிழ் வளர்த்தார்கள் என்பது புராணம். எனவே "தமிழ் அளிக்கும்" தண்பாண்டி நாட்டை உடையவன். 


"பெண்ணாளும் பாகனைப்"


தமிழ் இலக்கணத்தில் வேற்றுமை உருபு என்று ஒன்று உண்டு.....





(pl click the above link to continue reading)



இரண்டு பெயர் பொருள்களை வேற்றுமைப் படுத்துவது வேற்றுமை உருபு. மேலும், அந்த பெயர் பொருகளின் தொடர்பு, செயல்பாடு இவற்றையும் வேற்றுமைப் படுத்தும். 



எப்படி என்று பார்ப்போம். 


மரம் அறுத்தான் என்று சொல்லலாம். அதில் ஒரு வேற்றுமை உருபு தொக்கிக் (மறைந்து) இருக்கிறது. .

மரத்தை அறுத்தான் என்று நாம் உணர்ந்து கொள்கிறோம். இதில் "ஐ" என்பது இரண்டாம் வேற்றுமை உருபு. மரம் என்ற பெயர் சொல்லுக்கும், அறுத்தவன் என்ற பெயர் சொல்லுக்கும் இடையில் உள்ள அறுத்தல் என்ற வினையின் மூலம் வேறுபடுத்திக் காட்டுகிறது. 


"கண் கண்டதே காட்சி என்று இருக்கக் கூடாது. எதையும் தீர விசாரிக்க வேண்டும்"   என்று சொல்லும் போது "கண்ணைக் கண்டதே" என்று சொல்லுவது பொருந்தாது 


"கண்ணால் கண்டதே காட்சி" என்று கூறினால் பொருள் சரியாக இருக்கும். இங்கே "ஆல்" என்பது மூன்றாம் வேற்றுமை உருபு. சில சமயம் எந்த வேற்றுமை உருபைப் போடுவது என்ன்று சந்தேகம் வரும், உருபு மாறினால் பொருள் மாறிவிடும். 




இங்கே, "பெண்ணாளும் பாகனை" 


பெண்ணை ஆளும் பாகனை என்று இரண்டாம் வேற்றுமை உருபைப் போட்டால் என்றால் பார்வதியை சிவன் ஆளுகிறான் என்று பொருள் வரும். 



"பெண்ணால் ஆளப்படும் பாகன்" என்று ஆல் என்ற மூன்றாம் வேற்றுமை உருபைப் போட்டால் பார்வதியால் ஆளப்படும் சிவன் என்ற பொருள் வரும். 



இந்தக் குழப்பம் தான் கவிதையின் உயிர். படிப்பவன் சிந்தித்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான். 


முன்பு ஒரு திருஅம்மானைப் பாடலில் "பண் சுமந்த பாடல்"  என்று வந்தது. 



'பண்' ஐ சுமந்த பாடலா,'பண்'னால் சுமக்கப்பட்ட பாடலா? இரண்டாம் வேற்றுமை உருபா, மூன்றாம் வேற்றுமை உருபா? 




இலக்கணம் அறிந்தால் இலக்கியத்தை மேலும் சுவைக்க முடியும். 



இராகம் தெரிந்தால் பாடலை மேலும் இரசிக்க முடிவது போல 



"பேணு பெருந்துறையிற்" - பேணுதல் என்றால் போற்றுதல், சிறப்பித்தல். 



"தந்தை தாய் பேண்" - ஆத்திசூடி 


பெண் என்ற சொல்லே பேண் என்ற வேர்ச் சொல்லில் இருந்து வந்தது. பெருமைக்கு உரியவள், போற்றுதலுக்கு உரியவள் என்று அர்த்தம். 



"பேணு பெருந்துறையிற்" - சிறப்புக்கு உரிய திருப் பெருந்துறை என்ற திருத்தலத்தில் 



கண்ணார் கழல்காட்டி = காண்பதற்கு அழகான திருவடிகளை காட்டி 


பக்தி இலக்கியத்தில் எங்கெல்லாம் திருவடி என்று வருகிறதோ அங்கெல்லாம் அது ஞானத்தை குறிப்பதாகக் கொள்ள வேண்டும். இரண்டு திருவடிகள் - பர ஞானம், அபர ஞானம் என்ற இரண்டு ஞானங்கள். 


கழல் காட்டி ஆட்கொண்டது எவ்வாறு என்றால் ஞானத்தைத் தந்து ஆட்கொள்வது. 



நாயேனை ஆட்கொண்ட = கீழான என்னை ஆட்கொண்ட 



மணிவாசகர் அடிக்கடி தன்னை நாய் என்று சொல்லிக் கொள்வார். நாய் நன்றியுள்ள, அன்புள்ள பிராணிதானே. அதை ஏன் கீழாகச் சொல்ல வேண்டும்?



நாயிடம் ஒரு கெட்ட குணம் உண்டு.  எவ்வளவுதான் அதை சீராட்டி, பாராட்டி வளர்த்தாலும், என்றேனும் ஒரு சந்தர்பம் கிடைத்தால் அது கண்டதையும் தின்றுவிடும். ஒரு தயக்கம் இல்லாமல், அதைத் தின்னும். 


எனக்கு பாலும், சோறும் தருகிறார்களே, இதைப் போய் தின்னலாமா என்று நினைக்காது.   


மனிதரிலும் பலர் அந்த மாதிரித் தான். எவ்வளவு உயர்ந்த நூல்களைப் படித்தாலும், "அதெல்லாம் நடை முறைக்கு சரி வராது "  என்று தள்ளிவிட்டு தகாதன செய்யக் கிளம்பி விடுவார்கள். 


அது நாய்க் குணம். 



அண்ணா மலையானைப் = அண்ணாமலையில் உள்ளவனை 


பாடுதுங்காண் அம்மானாய் = பாடுவோம் அம்மானை 



திருவாசகம் படித்து அறிந்து கொள்ளக் கூடிய நூல் அல்ல. 



(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:பா

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html


அறைகூவி, வீடு அருளும்


வாரா வழியருளி


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_15.html


அந்தம் இலா ஆனந்தம்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_19.html


தாய்போல் தலையளித்திட்டு


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_24.html


கல்லைப் பிசைந்து கனி ஆக்கி

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_28.html


காட்டாதன எல்லாம் காட்டி

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_18.html


தாயான தத்துவனை




பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 1


பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 2



வியப்புருமாறு 


)


Thursday, October 20, 2022

கந்தரனுபூதி - வள்ளி பதம் பணியும்

       

 கந்தரனுபூதி - வள்ளி பதம் பணியும் 


(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


பக்தி இலக்கியம் என்றால் ஏதோ இறைவன் புகழ் பாடுவதும், எனக்கு அதைத் தா, இதைத் தா என்று வேண்டுவதும் உன்னால் முடியாதா, நீ எவ்வளவு பெரிய ஆள் என்று இறைவனுக்கு ஐஸ் வைப்பதும் என்று எண்ணி விடக் கூடாது. 


காதல், குழைவு, அன்பு, பாசம், மெய்யியல் சிந்தனைகள், மனிதாபிமானம், உலகியல் சிந்தனைகள், மனோ தத்துவம், வாழ்க்கை நெறி முறை என்று எல்லாம் அதில் உண்டு. 



நமக்குத் தெரிந்து எத்தனை கணவன்மார் மனைவியின் கால் பிடித்து விடுவார்கள்?  மனைவியின் காலைப் பிடிப்பதா? நினைத்துக் கூட பார்க்க முடியாது. 


அவளும் ஒரு உயிர்தானே. நாளெல்லாம் ஓடி ஆடி வேலை செய்கிறாள். அவளுக்கும் கால் வலிக்கும்தானே. காலை மெல்ல பிடித்துவிட்டால் சுகமாக இருக்கும்தானே. அதெல்லாம் பெரும்பாலான கணவன்மார் நினைப்பதே இல்லை. 


முருகன் அப்படி அல்ல. நாளெல்லாம் தினைப்புனம் காக்க காடு மேடெல்லாம் அலைந்து திரிந்து சோர்ந்து இருப்பவளின் பாதங்களை முருகன் பிடித்து விடுவானாம். அது மட்டும் அல்ல, "வேற என்ன செய்யணும் சொல்லு" என்று பணிவோடு கேட்பானாம். 


வீட்டில் கணவன்மார் மனைவியிடம் கேட்பார்கள். அது கூட ஒரு அதிகாரத் தோரணையில் இருக்கும். "அப்புறம், வேற என்ன வாங்கணும் சொல்லு" என்று அதட்டுவது போல இருக்கும். மென்மை என்பதே கிடையாது. 


அதெல்லாம் எதனால்?  வள்ளியின் மேல் உள்ள தணியாத அன்பினால். அன்பு வந்துவிட்டால் ஆண் என்ன, பெண் என்ன, கணவன் என்ன, மனைவி என்ன, ஒரு பாகுபாடும் கிடையாது. மற்றவரின் இன்பம் மட்டுமே முக்கியம் என்று ஆகிவிடும். 


பாடல் 


திணியான மனோசிலை மீதுனதாள் 

அணியா ரரவிந்த மரும்புமதோ 

பணியா வென வள்ளி பதம் பணியும் 

தணியா அதிமோக தயாபரனே . 



சீர் பிரித்த பின் 


திணியான மனோ சிலை மீது உனது தாள்  

அணியார் அரவிந்தம் அரும்புமதோ 

பணியாய் என வள்ளி பதம் பணியும் 

தணியா அதிமோக தயாபரனே


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html

(pl click the above link to continue reading)



திணியான = திண்ணமான, கடினமான


மனோ சிலை = கல் போன்ற மனதின் 


மீது = மேல் 


உனது தாள்   = உனது திருவடிகள் 


அணியார் = அழகான 


அரவிந்தம் = தாமரை மலர் 


அரும்புமதோ  = முளைக்குமா, அரும்பு விடுமா 


பணியாய் = எனக்கு என்ன வேலை, என்ன பணி 


என = என்று 


வள்ளி  = வள்ளியின் 


பதம் பணியும்  = பாதங்களைப் பணியும் 


தணியா = தீராத 


அதி = மிக அதிகமான 


மோக == மோகம் கொண்ட 


தயாபரனே = தயை உள்ளவனே 



நீண்ட நாள் வராத ஒருவர் நம் வீட்டுக்கு வந்தால், "எங்க வீட்டுக்கு வர்ற உங்களுக்கு வழி தெரியுமா?...இப்பவாவது வந்தீங்களே " என்று ஆச்சரியமும், மகிழ்ச்சியும் கலந்து கூறுவோம் அல்லவா, அது போல அருணகிரிநாதர் சொல்கிறார் 


"கல் போன்ற என் மனத்திலும் எப்படி தாமரை மொட்டு போன்ற உன் திருவடிகள் முளைதனவோ" என்று ஆச்சரியத்துடன் கூறுகிறார். 


"அரும்புமதோ" என்றால் அரும்புமா என்ற சந்தேகக் கேள்வி அல்ல. எப்படி அரும்பியது என்று ஆச்சரியக் கேள்வி.


இந்தப் பாடலுக்கு ஆன்மீகமாக பல உரைகள் சொல்கிறார்கள். 


அதாவது, உயிர்கள் இறைவனைத் தேடுவதைப் போல, இறைவனும் பக்குவப்பட்ட ஆன்மாகளை தேடி அலைவானாம்.  அவார்கள் மேல் அவனுக்கு அவ்வளவு அன்பாம். அவர்களுக்காக பிரம்படி படுகிறான், கால் தேய ஓலை கொண்டு நடக்கிறான், வில்லால் அடி வாங்குகிறான்....என்ன வேண்டுமானாலும் செய்வானாம். 


பாதம் பணிவதுதானா பிரமாதம்? 


அதெல்லாம் ஏதோ வலிந்து திணிக்கும் உரை போலத் தோன்றுகிறது. 


அன்பால், வள்ளியின் பதம் பணிந்து அவள் சொல்வதைக் கேட்டான் என்பதில் ஒரு சுகம் இருக்கத்தான்செய்கிறது. 


 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 



https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html





]




Wednesday, October 19, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - குன்ற மெடுத் தானே

        

நாலாயிர திவ்ய பிரபந்தம் -   குன்ற மெடுத் தானே


ஆயர்பாடியில் உள்ள ஆயர்கள் இந்திரன் முதலிய சிறு தெய்வங்களை வழிபட்டு வந்தனர். கண்ணன் அவர்களிடம் "சிறு தெய்வங்களை வழிபட வேண்டாம், இனி என்னை வழிபடுங்கள்" என்றான். அவர்களும் இந்திர வழிபாட்டை நிறுத்தினார்கள். அதனால் கோபம் கொண்ட இந்திரன் ஆயர்பாடியின் மேல் பெரு மழை பெய்ய வைத்தான். அப்போது கண்ணன் கோவர்தணகிரி என்ற மலையை குடை போல் பிடித்து அந்த மழையில் இருந்து ஆயர்பாடி மக்களை காத்தான். 


இது கதை. 



கேட்டிருக்கிறோம். வண்ண ஓவியமாக பார்த்தும் இருக்கிறோம். 



அந்தக் காட்சியை நம்மாழ்வார் போல் நம்மால் சிந்திக்கக் கூட முடியாது. 


அவர் காட்டும் அந்த பிரமாண்ட காட்சியைக் காண்போம். 


இப்போது நாம் ஆயர்பாடியில் இருக்கிறோம். 



மழை அடித்து ஊத்துகிறது. நிற்காத மழை. எங்கும் வெள்ளம். மக்கள் தவிக்கிறார்கள். ஒண்ட இடம் இல்லை. குளிர் நடுங்குகிறது. ஆடு மாடுகள் எல்லாம் நீரில் நடுங்குகின்றன. தின்ன புல் பூண்டு இல்லை. முன்பு தின்றதை அசை போடுகின்றன. 



கண்ணன் வருகிறான்.கோவர்தன மலையை தன் கைகளால் தூக்குகிறான். 



மலையை தூக்குவது என்றால் சாதரணமா?


தூக்கும் போது ஒரு பக்கம் உயர்கிறது. மறுபக்கம் தாழ்ந்து இருக்கிறது. இன்னும் கொஞ்சம் கையை உள்ளே தள்ளி மேலும் தூக்குகிறான். மலை அந்தப் பக்கம் இந்தப் பக்கம் என்று அசைகிறது. 



அப்போது அந்த மலையில் உள்ள குளங்களில் உள்ள நீர் வழிந்து ஓடுகிறது. மலையை விட்டு கீழே அருவி போல் கொட்டுகிறது. அது மலை நீரை உமிழ்வது போல இருக்கிறது. 


அந்த மலையில் உள்ள விலங்குகள் தட்டு தடுமாறி விழுந்து புரள்கின்றன. 



மலையை தூக்கிய பின், அதன் அடியில் ஆடு மாடுகள் ஓடி வந்து தங்கிக் கொள்கின்றன. 


பின் மக்களும் வந்து அதன் கீழ் நின்று கொள்கிறார்கள்.




பாடல் 




மேய்நிரை கீழ்புக மாபுர ள,சுனை

வாய்நிறை நீர்பிளி றிச்சொரி ய,இன

ஆநிரை பாடியங் கேயொடுங் க,அப்பன்

தீமழை காத்துக் குன்ற மெடுத் தானே.



பொருள் 




(pl click the above link to continue reading)




மேய் நிரை கீழ்புக = ஆடு மாடுகள் கீழே புகுந்து கொள்ள 


மாபுரள  = மலையில் உள்ள விலங்குகள் தட்டுத் தடுமாறி புரண்டு விழ 


சுனை = குளம் 


வாய் நிறை நீர்பிளிறிச் சொரிய = வாயில் நீரை கொண்டு யானை பிளிறி உமிழ்வது போல நீரை அருவி போல் கொட்ட 



இன ஆநிரை  = பசுக்களை மேய்க்கும் இனமான ஆயர்கள் 


பாடியங் கேயொடுங்க  = பாடி அங்கே ஒடுங்க 


அப்பன் = திருமால் 


தீமழை காத்துக் = தீமை தரும் பெருமழையில் இருந்து காக்க 


குன்ற மெடுத் தானே. = குன்றை கையில் எடுத்த்தானே 


வைணவர்கள் "பெருமாளை அனுபவிப்பது" என்பார்கள். 


அப்படி அணு அணுவாக இரசித்து அனுபவிக்கிறார்கள். 


தாங்கள் அனுபவித்ததை பாசுரமாக நமக்கு தந்துவிட்டு போய் இருக்கிறார்கள். 


படித்தால் புரிய வேண்டும். புரிந்த பின் அந்தக் காட்சி மனதில் ஓட வேண்டும். பின், அதை இலயித்து இரசிக்க வேண்டும். 


முடியும் என்றே நினைக்கிறேன். 




(முந்தைய பதிவுகள்

பாசுரம் 3594 - ஆழி எழ 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_30.html


பாசுரம் 3595 - ஒலிகள் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post.html


பாசுரம் 3596 - நான்றில 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3596.html


பாசுரம் 3597 - உலகம் உண்ட ஊண்

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3596_12.html


பாசுரம் 3598  - ஒலிகள்


பாசுரம் 3599  - மெலிந்த பொழுது 



பாசுரம் 3600  -  நீறு பட இலங்கை 



பாசுரம் 3602 - அன்று செய்தது 




)


Monday, October 17, 2022

திருக்குறள் - அகன்ற அறிவுஎன்னாம்

    

 திருக்குறள் - அகன்ற அறிவுஎன்னாம்



பிறன் பொருளுக்கு ஆசைப் படாதே என்று கூறினால் போதுமா? 


மற்றவர் பொருளை ஒருவன் எவ்வாறு எடுக்க நினைக்க முடியும்? அப்படி வரும் எண்ணத்தை எப்படித் தடுப்பது என்று அடுத்து கூறுகிறார். 


இன்று நாம் காணவிருக்கும் குறளுக்கு பரிமேலழகர் உரை இல்லை என்றால் நமக்கு ஒன்றும் புரிந்திருக்காது. 


குறளின் பொருள் "நுண்ணிய அறிவினால் என்ன பயன், மற்றவன் பொருளை தகாத முறையில் அடைய நினைத்தால்" என்பதுதான். 



பாடல் 



அஃகி அகன்ற அறிவுஎன்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்


பொருள் 





(Please click the above link to continue reading)


அஃகி = அஃகுதல்  என்ற சொல்லுக்கு நுணுகுதல் என்று பொருள். நுண்மையான 


அகன்ற = விரிந்த 


அறிவுஎன்னாம் = அறிவினால் என்ன பயன் 


யார்மாட்டும் = மற்றவர் இடத்து 


வெஃகி = அவர் பொருளை தவறான வழியில் அடைய எண்ணி 


வெறிய செயின் = தகாத காரியங்களை செய்தால் 




யார்மாட்டும் வெறிய செயின் என்பதற்கு பரிமேலழகர் உரை செய்யும் நுணுக்கம் அபாரம். 


"யார்மாட்டும் வெறிய செய்த'லாவது தக்கார் மாட்டும் தகாதார் மாட்டும், இழிந்தனவும், கடியனவும் முதலியன செய்தல்."


என்ன அர்த்தம்?


உலகில் உள்ள மக்களை இரண்டு கூறுகளாகப் பிரித்துக் கொள்கிறார். தக்கார், தகாதார் என்று. எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று கொள்ளலாம்.


இங்கே, நம்மை விட வலிமை மிக்கவர்கள், நம்மை விட வலிமை குறைந்தவர்கள் என்று கொள்ளலாம். 


நம்மைவிட வலிமை மிக்கவர்களிடம் இழிந்தன செய்தல்

நம்மைவிட வலிமை குன்றியவர்களிடம் கடுமையான செயல்களைச் செய்தல்.


அது என்ன இழிந்தன, கடுமையான செயல்கள்?



இழிந்தன என்றால் திருடுதல், ஏமாற்றுதல், நயவஞ்சகம் செய்தல், போன்ற செயல்கள். நம்மைவிட வலியவர்களிடம் இருந்து அவர்களுக்குத் தெரியாமல் தவறான வழியில் அவர்கள் பொருளை எடுத்துக் கொள்ளுதல்.


நம்மைவிட வலிமை குன்றியவர்களிடம் கடியன செய்தல் என்றால் மிரட்டி வாங்குதல். அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், பெரிய பதவியில், அதிகாரத்தில் இருப்பவர்கள், எளிய மக்களை மிரட்டி இலஞ்சம் பெறுவது போல. மிரட்டி சொத்தை எழுதி வாங்கிக் கொள்வது.  அலுவலகத்தில் மேலதிகாரி தனக்கு கீழே இருப்பவரை கசக்கி பிழிந்து வேலை வாங்கி, அதற்கு உரிய ஊதியத்தை தர மறுப்பது. முனைவர் (PhD) படிக்கும் மாணவனின் முயற்சியை, உழைப்பை அவனின் guide எடுத்துக் கொள்வது. இப்படி பல சொல்லிக் கொண்டே போகலாம். 



இந்த இரண்டையும் எப்போது ஒருவன் நீக்க முடியும் என்றால் "அஃகி அகன்ற அறிவு" இருந்தால்.  



நுண்ணிய, அகன்ற அறிவு இருந்தால் பொருள் என்பது இன்பம் அல்ல, தன் முயற்சி மட்டும் பொருளை தந்துவிடாது, தவறான வழியில் பொருள் ஈட்டுவது பாவம் போன்றவை தெரியவரும். எனவே, அறிவு உள்ளவன் இவற்றைச் செய்ய மாட்டான். 


"வெறிய செயின்" என்றார். செயின் என்றால் செய்தால் என்று பொருள். அறிவுள்ளவன் அப்படிச் செய்ய மாட்டான் என்பது குறிப்பு. அறிவினால் என்ன பயன் இப்படிச் செய்தால் என்றால் ஏதோ அறிவு உள்ளவன் இதைச் செய்வான் என்ற பொருள் வந்து விடும். எனவே "செயின்" என்றார். 




"நீ நாய் வாலை நேராகச் செயின் உனக்கு ஆயிரம் ரூபாய் தருகிறேன்" என்றால், அது முடியாது, நடக்காது என்று பொருள். 


ஆழ்ந்த அறிவு 
அகன்ற அறிவு 
பிறன் பொருளை வெஃகுதல் 
தக்கார்
தகவிலார் 
இழிந்தன செய்தல் 
கடியன செய்தல் 



எத்தனை செய்திகள்,ஒரு குறளுக்குள் !


[

முன்னுரை 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_21.html


நடுவின்றி நன்பொருள் வெஃகின்

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_25.html


நாணுபவர்

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post.html


வெஃகுதல் செய்யார்

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_11.html

]


Saturday, October 15, 2022

திருவாசகம் - திரு அம்மானை - வியப்புருமாறு

          

திருவாசகம் - திரு அம்மானை  -   வியப்புருமாறு 


மிக நீண்ட காலமாக ஏதோ ஒரு தீவில் வாழ்ந்த ஒரு மனிதன் ஒரு பெரிய நகரத்துக்கு வருகிறான். அவனுக்கு ஊர் சுற்றி காட்டியவர்கள் அவனை அங்குள்ள ஒரு மருத்துவமனைக்கு அவனை அழைத்துச் செல்கிறார்கள். 


அவனுக்கு ஆச்சரியமான ஆச்சரியம். ஒருவன் பேச்சு மூச்சு இல்லாமல் கிடக்கிறான். அவனை சுற்றி கொஞ்சம் பேர் முகத்தில் முக மூடி அணிந்து கொண்டு அவனை கத்தியால் குத்தி கிழிக்கிறார்கள். பின் ஊசியால் தைக்கிறார்கள். நினைவு தெளிந்த அவன் அந்த முகமூடி மனிதர்களுக்கு பணமும் கொடுத்து, அவர்கள் கையைப் பிடித்து கொண்டு நன்றியும் சொல்கிறான். துன்பம் தந்தவர்களுக்கு நன்றியா? இது என்ன அதிசயம் என்று வியக்கிறான். 



அது ஒரு புறம் இருக்கட்டும். 



ஒரு சில நாட்களுக்கு முன் மெய்யியல் பற்றி படித்தோம். அதன் அடிப்படை, உயிர்கள் (பசு) பதியை விட்டுவிட்டு பாசத்தில் அகப்பட்டு தவிக்கின்றன என்றும், இறைவன் அவ்வுயிர்கள் மேல் கருணை கொண்டு அவை மீண்டும் தன்னிடம் வர வழி செய்வான் என்றும் பார்த்தோம். 


அதுவும் ஒரு புறம் இருக்கட்டும். 


இனி பாடலுக்குள் செல்வோம். 



பாடல் 




துண்டப் பிறையான் மறையான் பெருந்துறையான்
கொண்ட புரிநூலான் கோலமா ஊர்தியான்
கண்டங் கரியான்செம் மேனியான் வெண்ணீற்றான்
அண்டமுத லாயினான் அந்தமிலா ஆனந்தம்
பண்டைப் பரிசே பழவடியார்க் கீந்தருளும்
அண்டம் வியப்புறுமா பாடுதுங்காண் அம்மானாய் 


பொருள் 




(pl click the above link to continue reading)





துண்டப் பிறையான்  = துண்டான பிறை நிலவை தலையில் சூடியவன் 


மறையான் = மறை நூல்களில் சொல்லப் பட்டவன், மறைந்து இருப்பவன் 


பெருந்துறையான் = திருப்பெருந்துறை என்ற தலத்தில் உறைபவன் 


கொண்ட புரிநூலான்  = பூணூல் அணிந்தவன் 


கோலமா = அழகான பெரிய எருதினை 


 ஊர்தியான் = வாகனமாகக் கொண்டவன் 


கண்டங் கரியான் = கரிய கழுத்தைக் கொண்டவன் 



செம் மேனியான் = சிவந்த மேனியைக் கொண்டவன் 


வெண்ணீற்றான் = உடல் எல்லாம் திரு வெண்ணீற்றை புனைந்தவன் 


அண்டமுத லாயினான்  = அனைத்து அண்டங்களுக்கும் முன்பாக உள்ளவன் 


அந்தமிலா ஆனந்தம் = முடிவற்ற ஆனந்தத்தைத் 



பண்டைப் பரிசே  = பழைய பரிசினை 


பழவடியார்க்  கீந்தருளும் = பழைய அடியார்களுக்கு கொடுத்து அருள் செய்யும் 


அண்டம் வியப்புறுமா  = உலகமே வியக்கும் படி 


பாடுதுங்காண் = பாடுவோம் 


அம்மானாய்  = அம்மானாய் 




அது என்ன "பண்டே பரிசு": முதலில் ஆன்மாக்கள் பதியிடமும் சேராமல், பாசத்திடமும் சேராமல் தனித்து நின்றன. பின், அவை ஆணவ வயப்பட்டு பாசத்தில் விழுந்தன. அப்படி பாசத்தில் சிக்கிய உயிர்களை மீண்டும் தன்னோடு சேர்த்துக் கொள்ளும் செயலே "பழைய பரிசு". 



யோக சூத்திரத்தின் எல்லை "சமாதி".  சமம் + ஆதி. ஆதியில் எப்படி சமமாக இருந்ததோ அப்படி அந்த நிலையை அடைவது சமாதி. 



"பழ அடியார்"....இறைவனால் ஆட்கொள்ளப் பட்டவர்கள். முதலில் ஆட்கொள்ளுவான். பின் "பரிசைத்" தருவான். அந்தப் பரிசு பெற்றால் 


"அந்தமில் ஆனந்தம்" தரும். 



இதில் வியப்படைய என்ன இருக்கிறது?



அந்தமில் ஆனந்தம் தருபவன், ஏன் இவ்வளவு துன்பம் தருகிறான். 



உலகில் எவ்வளவோ துன்பங்கள் நிகழ்கின்றன. அதை எல்லாம் பார்க்கும் போது, இறைவன் என்று ஒருவன் இருக்கிறானா என்ற சந்தேகம் எழுகிறது.



அத்தனை துன்பமும், "அந்தமில் ஆனந்தம்" அருளவே என்று அறியும்  போதும்  பெரிய வியப்பு ஏற்படுகிறது. 



ஆசிரியர் அந்தத் தேர்வு,இந்தத் தேர்வு என்று படுத்தி எடுக்கிறார். முடிவில் உயர்ந்த மதிப்பெண் பெற்று நல்ல வேலை கிடைக்கிறது. அத்தனை வருத்தமும் சுகமாக மாறி விடுகிறது. அப்படி பாடாய் படுத்திய ஆசிரியரைக் கண்டதும் எழுந்து நின்று வணங்குகிறான். வியப்பாக இல்லையா? 




"வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன்" போல  இறைவன் அவ்வளவு துன்பம் தந்தாலும், அது அனைத்தும் "அந்தமில்லா ஆனந்தம் காணவே"  என்ற அறிவு பிறக்கும் போது இந்த உலகே வியக்கிறது.  




"அண்டம் வியப்புருகிறது" 


திருவாசகத்துக்கு எத்தனை உரை படித்தாலும், அந்த உரைகளை எல்லாம் ஒரு புறம் தள்ளி வைத்துவிட்டு, நீங்களே நேரடியாக அதைப் படித்து "உணர்வதே" 
சாலச் சிறந்தது. 






(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 







முன்னுரை:பா

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html


அறைகூவி, வீடு அருளும்


வாரா வழியருளி


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_15.html


அந்தம் இலா ஆனந்தம்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_19.html


தாய்போல் தலையளித்திட்டு


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_24.html


கல்லைப் பிசைந்து கனி ஆக்கி

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_28.html


காட்டாதன எல்லாம் காட்டி

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_18.html


தாயான தத்துவனை




பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 1


பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 2


)


Friday, October 14, 2022

கந்தரனுபூதி - நின்று தயங்குவதே

       

 கந்தரனுபூதி - நின்று தயங்குவதே 


(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


இந்தப் பாடலுக்குத்தான் அவ்வளவு பெரிய முன்னுரை. அந்த முன்னுரை இன்னும் வர இருக்கும் பாடல்களுக்கும் தேவைப்படும்.


இரண்டுவிதமான மாயைகள் பற்றி சிந்தித்தோம். ஏதோ வாசித்து விட்டதால் புரிந்து விட்டது என்றோ, அல்லது எழுதிய எனக்கு புரிந்து எழுதினேன் என்று கொள்ளக் கூடாது. 


புராணங்கள் சொல்கின்றன அந்த மாயை என்பது நாரதருக்கும் புரியவில்லை என்றும், அவர் அதை திருமாலிடம் கேட்டார் என்றும்.. அந்தக் கதை பற்றி பின்னொருநாள் சிந்திப்போம். 


ஒன்று சுத்த மாயை, இன்னொன்று அசுத்த மாயை.


இந்த சுத்தம், அசுத்தம் என்பதெலாம் ஏதோ அழுக்கு, குப்பை என்று நினைக்கக் கூடாது. சுத்தம் என்றால் துன்பக் கலப்பு இல்லாதது. அசுத்தம் என்றால் அதில் இன்பமும் துன்பமும் கலந்து இருக்கும். 


இறைவன் இரண்டுவிதமான மாயைகளால் உயிர்கள் பாசத்தில் இருந்து விடுபட்டு தன்னைச் சேர வழி செய்வான். 


மகா மாயை, சுத்த மாயை, பிரகிருதி மாயை, சக மாயை என்றெல்லாம் அவற்றிற்கு பெயர் சொல்கிறார்கள். 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


என்னதான் படித்தாலும், எவ்வளவுதான் படித்தாலும் மனம் அதன் பாட்டுக்குப் போகிறதே தவிர படித்ததால் ஒரு பயனும் விளைவது இல்லை. 


நிறைய தூரம் போக வேண்டாம்....தினம் உடற் பயிற்சி செய்வது, கண்டதையும் உண்ணாமல் இருப்பது என்று எத்தனை தரம் முடிவு செய்து இருப்போம். செய்கிறோமா?  மனம் சோம்புகிறது, இனிப்பை நாடுகிறது. அறிவு வேலை செய்வது இல்லை. 


இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.  படித்துக் கொண்டே இருப்பதில் அர்த்தம் இல்லை. 


உடற் பயிற்சி செய்வது எப்படி, அதனால் விளையும் நன்மைகள் பற்றி ஆயிரம் நூல் படித்து என்ன பலன், உடற் பயிற்சி செய்யாவிட்டால்? 


ஆஹா என்னமா சொல்லி இருக்கிறார்கள், என்ன ஒரு ஆராய்ச்சி என்று வியந்து மகிழலாமே தவிர ஒரு பலனும் இருக்காது. 


இதை ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும். 


இந்தச் சிக்கல் நமக்கு மட்டும் அல்ல.


"மகா மாயையை களைந்திட வல்ல முருகன், தன் ஆறு முகங்களாலும் உபதேசம் செய்தும், இந்த உடல், ஆடை, பெண்கள் என்று இந்த உலக மாயையில் இருந்து வெளி வர முடியாமல் தயக்கம் அடைகிறேனே" என்கிறார் அருணகிரிநாதர். 


பாடல் 


மகமாயை களைந்திட வல்லபிரான் 

முகமாறு மொழிந்து மொழிந்திலனே 

அகமாடை மடந்தைய ரென்றயரும் 

சகமாயை யுணின்று தயங்குவதே



சீர் பிரித்த பின் 


மகமாயை களைந்திட வல்ல பிரான் 

முகம் ஆறும் மொழிந்தும்  ஒழிந்திலனே 

அகம் ஆடை மடந்தையர் என்று அயரும்  

சகமாயையுள் நின்று தயங்குவதே



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


(pl click the above link to continue reading)



மகமாயை = மகா மாயையை 


களைந்திட = விலக்க 


வல்ல பிரான்  = வலிமையுள்ள முருகன் 


முகம் ஆறும் = ஆறு முகங்களாலும் 


மொழிந்தும் = உததேசம் செய்தும் 


ஒழிந்திலனே  = விட முடியவில்லையே 


அகம் = உடம்பு 


ஆடை  = ஆடை, அணிகலன்கள் 


மடந்தையர் = பெண்கள் 


என்று அயரும்   = என்று அயரும், தளரும், தவிக்கும் 


சகமாயையுள் = இந்த உலக மாயையில் 


நின்று = மூழ்கி 


தயங்குவதே = தயங்கி நிற்கிறேனே 


விட வேண்டும் என்று தெரிகிறது. விடவும் மனம் வர மாட்டேன் என்கிறது. 


உபதேசம் அறிவுக்கு எட்டுகிறது. பாசம் மனதைப் பற்றிக் கொண்டு உலக பந்தங்களை விட முடியாமல் தவிக்கிறது. 


விட்டு விடலாமா என்று ஒரு என்னணம்.


இவ்வளவு இன்பத்தை எப்படி விடுவது என்று ஒரு தயக்கம். 


"சக மாயையுள் நின்று தயங்குவதே" என்கிறார். 


இறைவனே வந்து சொன்னாலும் மனித மனம் (பசு) பாசத்தில் இருந்து எளிதில் விடுபடுவது இல்லை. 


சிவ பெருமான் நேரில் வந்து உபதேசம் செய்தும், மணிவாசகர் புரிந்து கொள்ளவில்லை. 


கண்ணபிரான் நேரில் உபதேசம் செய்தும், அர்ஜுனன் புரிந்து கொள்ளவில்லை. 


இதுதான் மாயையின் வலை. 


உண்மையை மறைக்கும். பொய்யை, உண்மை போல் காட்டும். 


"பொய்யாயின எல்லாம் போயகல வந்தருளி"


என்பார் மணிவாசகர். 


பொய்யை மெய் என்று நம்பி அதன் பின் போய்க் கொண்டிருக்கிறோம். 


நீண்ட, ஆழமான முயற்சி வேண்டும். 







[

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html




]




Thursday, October 13, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - 3602 - அன்று செய்தது

       

நாலாயிர திவ்ய பிரபந்தம் -   3602 - அன்று செய்தது 



திருமாலின் மிகப் பெரிய செயல்களை சொல்லிக் கொண்டே வருகிறார் நம்மாழ்வார். 


பாற்கடல் கடைந்தது, இராவணனை அழித்தது,  ஈரடியால் உலகம் அளந்தது, குருஷேத்திர யுத்தம் நடத்தியது என்று சொல்லிக் கொண்டு வந்த அவர், இதெல்லாம் என்ன பெரிய விடயம், அரக்கர்களை அழிப்பது, மனிதர்களோடு (கௌரவர்கள் ) சண்டை போட்டு வெல்வது இதெல்லாம் ஒரு பெரிய காரியமா? 

மிகப் பெரிய காரியம் என்று எதைச் சொல்லலாம் என்று யோசிக்கிறார். 


இந்த உலகை எல்லாம் படைப்பது என்பது சாதாரண காரியமா? இந்த உலகம் எவ்வளவு பெரியது என்று நம்மால் கற்பனை கூட பண்ணிப் பார்க்க முடியவில்லை. அவ்வளவு பெரிய உலகை படைப்பது என்றால்?


" அன்று மண், நீர், தீ, காற்று, விண்வெளி , மலைகள் சூரியன், சந்திரன் போன்ற நட்சத்திரங்களும், கோள்களும், மழை, போன்றவற்றின் தேவர்களும், மீதி உள்ள உலகம் அனைத்தும் செய்த போது"



பாடல் 



அன்று மண்நீரெரி கால்விண் மலைமுதல்,

அன்று சுடரிரண் டும்பிற வும்,பின்னும்

அன்று மழையுயிர் தேவும்மற் றும்,அப்பன்

அன்று முதலுல கம்செய் ததுமே.



சீர் பிரித்த பின் 


அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல்,

அன்று சுடர் இரண்டும் பிறவும், பின்னும்

அன்று மழை உயிர்  தேவும் மற்றும், அப்பன்

அன்று முதல் உலகம் செய்ததுமே.




பொருள் 



(pl click the above link to continue reading)




அன்று = முன்பொருநாள் 

மண் = மண் 

நீர்  = நீர் 


எரி = தீ 

கால்  = காற்று 


விண் = விண்வெளி 


மலை = மலைகள் 

முதல் = முதலியவற்றைப் படைத்ததுவும் 


அன்று  = முன்பொருநாள் 


சுடர் = வெளிச்சம் தரும் 


இரண்டும் = சூரியன், சந்திரன் என்ற இரண்டையும் 


பிறவும் = மற்ற நட்சத்திரங்களையும், கோள்களையும் படைத்ததுவும் 


பின்னும் = மேலும் 


அன்று = முன்பொருநாள் 


மழை = மழையையும் 


உயிர்  = அனைத்து உயிர்களையும் 


தேவும் = அவற்றிற்கு உரிய தேவர்களையும்  


மற்றும் = மேலும் 


அப்பன் = திருமால் 


அன்று = முன்பொருநாள் 


முதல் உலகம் செய்ததுமே. = முதன் முதலாக உலகம் செய்ததுதும் 



இந்த உலகம் எப்படி தோன்றியது, என்று தோன்றியது என்று அறிவியல் விளக்கம் சொல்லிக் கொண்டு போகிறது. ஒவ்வொரு நாளும் அறிவியலின் பரப்பு விரிந்து கொண்டே போகிறது. 


அது ஒரு புறம் இருக்க, உலகத்தை இறைவன் தோற்றிவித்தான் என்று பக்தி இலக்கியங்கள் பேசிக் கொண்டிருக்கின்றன. 


இவற்றை எப்படி பார்ப்பது? அறிவியலின் கூற்றுப் படி பக்தி இலக்கியங்கள் சொல்வது எல்லாம் தவறு. 


பக்திமான்களை கேட்டால் "அதெல்லாம் நம்பிக்கையின் பாற்பட்டது. கேள்வி கேட்கக் கூடாது"  என்று ஒரு வரியில் சொல்லிவிட்டுப் போய் விடுகிறார்கள். 


தெரியாதவற்றை நம்பலாம். தெரிந்தவற்றை எப்படி நம்புவது? இரண்டும் இரண்டும் ஐந்து என்று நம்ப முடியுமா?


இந்தச் சிக்கல் தொடர்கிறது. 


எதற்காக இவற்றைப் படிக்க வேண்டும்?


எனக்குத் தெரிந்து சில காரணங்கள்:


முதலாவது, மனம் விரியும். கற்பனை விரியும். அப்படி ஒரு பிரமாண்டமான ஒரு விடயத்தை மனம் பற்றும். ஒவ்வொரு நாளும் அது பற்றி சிந்திக்க சிந்திக்க மனம் அதை உள்வாங்கும். அப்படி ஒரு பிரமாண்டத்தை சிந்திக்க சிந்திக்க நாம் ஒன்றும் பெரிய ஆள் இல்லை, நம் துன்பங்கள் ஒன்றும் பெரிய துன்பம் இல்லை, நம் சிக்கல்கள், பிரச்சனைகள் பெரிய விடயம் அல்ல, அதற்காக சண்டை போட்டுக் கொள்வது, போட்டி போடுவது, பொறாமை கொள்வது என்பதெல்லாம் நகைப்பு இடமானது என்ற விரிந்த நோக்கம் வரும். 


இரண்டாவது,  இந்த உலகை ஒருவன் படைத்தான் என்று நம்பும் போது, அந்த நம்பிக்கை ஒரு பலம் தரும். அப்படி ஒருவன் இருக்கிறான், அவன் நமக்கு துணை செய்வான் என்ற நம்பிக்கை ஒரு தைரியம் தரும், அதனால் பதற்றம் குறையும், மன அழுத்தம் குறையும், பயம் விலகும். "எல்லாம் அவன் பார்த்துக் கொள்வான்" என்று அவன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு வேலையை பார்க்க போது, மனம் லேசாகிவிடும். அது உண்மையோ பொய்யோ, அந்த நம்பிக்கை ஒரு நன்மை தருகிறது.  அதை ஏன் மறுக்க வேண்டும்


மூன்றாவது, அழகான தமிழ். கவிதை. சொற் சுருக்கம். சொல்லும் விதம். அதனையும் அள்ளிக் கொண்டு போய் விடுகிறது நம் மனதை. 


இறுதியாக, எவ்வளவோ இலயித்து, அனுபவித்து எழுதி இருக்கிறார்கள். அது பொய்யாக இருக்குமா? அந்தப் பாடல்களில் ஏதேனும் உண்மை இருக்குமா? இருக்கும் என்றால் அது என்ன என்ற தேடல் தொடர்கிறது. அதுவும் ஒரு சுவாரசியம்தான். 


படிப்போம். 






(முந்தைய பதிவுகள்

பாசுரம் 3594 - ஆழி எழ 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_30.html


பாசுரம் 3595 - ஒலிகள் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post.html


பாசுரம் 3596 - நான்றில 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3596.html


பாசுரம் 3597 - உலகம் உண்ட ஊண்

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3596_12.html


பாசுரம் 3598  - ஒலிகள்


பாசுரம் 3599  - மெலிந்த பொழுது 


Tuesday, October 11, 2022

திருக்குறள் - வெஃகுதல் செய்யார்

   

 திருக்குறள் - வெஃகுதல் செய்யார்



வெற்றி பெற்று விட்டால் எல்லாம் என் திறமை, என் சாமர்த்தியம், என் உழைப்பு என்று நினைப்பதும், தோல்வி வந்தால் மற்றவர்கள் செய்த சதி, விதி, நேரம் சரியில்லை என்று பழியை வேறு இடத்தில் போடுவதும் மனித இயல்பு. 



தோல்வி அடையும் போது, எல்லாம் என் முட்டாள்தனம், என் சோம்பேறித்தனம், என் கையாலாகத்தனம் என்று சொல்லக் கேட்டு இருக்கிறோமா? இல்லை. 


மனிதர்கள் நினைக்கிறார்கள் முயற்சி செய்தால் எந்த வெற்றியையும் பெற்று விடலாம் என்று. 


இரண்டாவது, வாழ்கையின் வெற்றி தோல்வி என்பது எவ்வளவு சொத்து சேர்த்தோம் என்பதில் அடங்கி இருக்கிறது என்றும் நினைகிறார்கள். எப்படியாவது நிறைய பொருள் சேர்த்து விட்டால் வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைக்கிறார்கள். 


நேர் வழியில் முடியாவிட்டால், குறுக்கு வழியில். 


பாடல் 



இலம்என்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.


பொருள் 



https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_11.html


(Please click the above link to continue reading)



இலம்என்று = நம்மிடம் பொருள் இல்லை என்று 


வெஃகுதல் = பிறர் பொருளை தவறான வழியில் அடைய நினைக்கும் செயலை 


செய்யார் = செய்ய மாட்டார்கள் 


புலம்வென்ற = புலன்களை வென்று 


புன்மையில் =  குற்றமற்ற 


காட்சி யவர். = நோக்கு உடையவர்கள் 


பிறன் பொருளை அடைய ஏன் நினைக்கிறார்கள்?


முதலாவது, ஆசை. புலன் இன்பம். கார், வீடு, டிவி என்று மேலும் மேலும் ஆசைப் படுவதால், நேரான வழியில் அவற்றை எல்லாம் அடைய முடியாத போது, பிறன் பொருளை தவறான வழியில் அடைய மனம் நினைக்கிறது. 


இரண்டாவது, பொருள் இல்லாவிட்டால் இன்பம் இல்லை என்ற ஏக்கம், பயம். இருப்பது போதும் என்ற திருப்தி இல்லாமை. 


மூன்றாவது, நமக்கு கிடைத்தது, நம் விதிப் பயன் என்று நினைக்காமல், எப்படியாவது பொருள் ஈட்ட நினைப்பது.  மற்றவனுக்கு கிடைத்தது அவன் விதிப் பயன். நமக்கு கிடைத்தது நம் விதிப் பயன் என்ற எண்ணம் வந்து விட்டால் மனம் பறக்காது. இதைத் தான் "புன்மை இல் காட்சியவர்" என்றார். குற்றமற்ற பார்வை. பொறாமை, பேராசை போன்ற குற்றங்கள் இல்லாத பார்வை. 


ஐயோ, அவனுக்கு அது கிடைத்து விட்டதே, இவனுக்கு இது கிடைத்து விட்டதே என்று அலையாமல் எல்லாம் வினைப் பயன் என்ற இருப்பது. .



வெஃகாமையின் தீமை மட்டும் அல்ல, அதை எப்படி விலக்குவது என்றும் சொல்லித் தருகிறார். 






[

முன்னுரை 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_21.html


நடுவின்றி நன்பொருள் வெஃகின்

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_25.html


நாணுபவர்

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post.html

]


Monday, October 10, 2022

திருவாசகம் - திரு அம்மானை - பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 2

         

திருவாசகம் - திரு அம்மானை  -   பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 2




பாடலுக்கு முன்னுரை சொல்வதைவிட நேரடியாக பாடலையே வாசித்து விடலாம். 


பாடல் 



பண் சுமந்த பாடல் பரிசு படைத்தருளும்
பெண் சுமந்த பாகத்தன், பெம்மான், பெருந்துறையான்,
விண் சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்து ஈசன்,
கண் சுமந்த நெற்றிக் கடவுள், கலி மதுரை
மண் சுமந்த கூலி கொண்டு, அக் கோவால் மொத்துண்டு
புண் சுமந்த பொன் மேனி பாடுதும் காண்; அம்மானாய்!



பண்கள் அமைந்த பாடல்களால் தன்னை துதிப்பவர்களுக்கு அவர்கள் வேண்டும் பரிசுகளை தந்து அருள் செய்பவன். பெண்ணை பாகமாகக் கொண்டவன். பெரியவன். திருபெருந்துறையில் உறைபவன். வானாளாவிய புகழ் கொண்டவன். நெற்றிக் கண் உடையவன். மதுரையில் மண் சுமந்து, பாண்டிய மன்னனால் அடிபட்டு உடம்பில் புண் கொண்டவன். பொன் போன்ற நிறத்தை உடையவன். 





சுமந்த என்ற வார்த்தையின் ஆழத்தை எண்ணிப் பார்ப்போம். 






(pl click the above link to continue reading)



"பண் சுமந்த பாடல்" - பாடல் தனக்குள் அர்த்தத்தை மட்டும் அல்ல, இசையையும் சேர்ந்து சுமந்து கொண்டு வருகிறது.  திருவாசகம் போன்ற பாடல்களை இசையோடு பாடும் போது உள்ளம் உருகும். சிலர், காலையில் எழுந்து வீட்டு வேலைகள் செய்து கொண்டே தேவாரம், திருவாசகம், பிரபந்தம், சுப்ரபாதம், என்று சொல்லிக் கொண்டு இருப்பார்கள். கை ஒரு வேலை பார்க்கும், கண் அடுப்பில் உள்ள சாமானை பார்க்கும், காது குக்கர் எத்தனை விசில் அடித்தது என்று கேட்டுக் கொண்டிருக்கும், கால் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்கும், இதற்கிடையில் வாய் பக்திப் பாடல்களை முணுமுணுத்துக் கொண்டிருக்கும்.  உணர்ச்சியே இல்லாமல், அது என்ன பக்தியோ?

  
பாடல்களை வசனம் போல படிக்கக் கூடாது. 


அப்படி பாடல்களை இசையோடு உள்ளம் உருகி பாடுபவர்களுக்கு வேண்டிய பரிசுகளைத் தருவான். இமய மலையின் அடியில் மாட்டிக் கொண்ட இராவணன் சாம கானம் பாட, சிவன் அதில் மயங்கி, அவனை விடுவித்தது மட்டும் அல்ல சந்ந்தரகாந்தம் என்ற தன் வாளினையும் கொடுத்தார் என்பது புராணம். 


"பெண் சுமந்த பாகத்தன்":  பெண் ஆயிரம் பாரம் சுமப்பாள். அவளை யார் சுமப்பது? அவளுக்கும் அன்பு, ஆதரவு, அரவணைப்பு எல்லாம் தேவைப்ப்படும்தானே? 


கம்ப இராமாயணத்தில், தயரதன், விழுந்து கிடக்கும் கைகேயியை ஒரு யானை, மான் குட்டியை தூக்குவது போலத் தூக்கினான் என்பான். சுமக்கத்தான் வேண்டும். சுகமான சுமை. 


"கலி மதுரை" - ஆராவாரம் மிகுந்த மதுரை.  எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் மதுரை. தூங்கா நகரம் என்று சொல்லுவார்கள். 



"மதுரை மண் சுமந்த" -  மதுரை மண்ணுக்கு அவ்வளவு பெருமை. அந்த மண்ணை சிவ பெருமான் தூக்கிச் சுமந்தார். வேறு எந்த ஊர் மண்ணையும் தூக்கிச் சுமக்கவில்லை. 


கதைகளில் சிவன் முதலில் புட்டு வாங்கி உண்டு விட்டு, வேலை செய்யாமல் நீரில் மூழ்கி விளையாடிக் கொண்டிருந்ததாகவும், பாண்டியன் வந்து அடித்ததாகவும் வரும். மாணிக்க வாசகர் அதை திருத்துகிறார். 


"மண் சுமந்த கூலி கொண்டு" - முதலில் சுமந்தார், பின் கூலி கொண்டார். சுமந்த கூலி.  கூலி கொண்டு மண் சுமந்த அல்ல, மண் சுமந்த கூலி கொண்ட.


மணிவாசகரை பாண்டிய மன்னன் இரண்டு முறை தண்டித்தான். முதலில் குதிரை வாங்க பணத்தில் கோவில் கட்டியதற்காக, அதாவது அரசாங்க பணத்தை சொன்ன விதத்தில் செலவழிக்காததால் ஒரு தண்டனை.  


பின் குதிரை வந்து விட்டது. மணி வாசகரை விடுதலை செய்து விட்டான். அன்று இரவே குதிரைகள் எல்லாம் நரிகளாகி ஓடி விட்டன. எனவே, மீண்டும் அவருக்கு தண்டனை கொடுத்தான். 


முதல் குற்றம் மணி வாசகருடையது. குதிரை வந்த பின், அதை சரி பார்த்து வாங்க வேண்டியது பாண்டிய மன்னனின் கடமை.  பெற்றுக் கொண்ட பின் இனி அது அவன் பொறுப்பு. பரிகள் நரிகளானால் அது பாண்டிய மன்னனின் நிர்வாகப் பிழை. அதற்கு மணி வாசகர் என்ன செய்வார்? அவரைத் தண்டித்தது பிழை. அதை உணர்த்த, அரசன் தவறு செய்தால் அது குடிகள் எல்லோரையும் பாதிக்கும் என்று  காட்ட வைகையில் வெள்ளம் வர வைத்தார் சிவ பெருமான். 



என்னதான் மணிவாசகர் செய்தாலும், அவருக்குள் இருந்து அப்படி பொதுப் பணத்தில் கோவில் கட்ட வைத்தது இறைவன் தானே. கோவில் கட்டியது தவறு என்றால், மணி வாசகரை மட்டும் எப்படி தண்டிப்பது? எனவே, இறைவனும் தண்டனை பெற்றுக் கொண்டான் என்று காட்டவே அந்த 


"கோலால் மொத்துண்டு புண் சுமந்த பொன் மேனி" ஆனாரோ ?


உயிர்கள் வாடினால் இறைவனும் வாடுவான் என்று உணர்த்தவோ? 


"ஆயர் தம் கொழுந்தே" என்று பேசும் பிரபந்தம்.  வேர் வாடினால் கொழுந்து வாடும். பக்தன் வாடினால், இறைவன் வாடுவான். 


சிவ பெருமான் என்ன நிறம்?


பொன் நிறம்.  படத்தில் வரைபவர்கள் கறுப்பாக வரைந்து விடுகிறார்கள். 

"பொன்னார் மேனியனே"

"பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்"

"புண் சுமந்த பொன் மேனி" 

"சோதியே, சுடரே சூழ் ஒளி விளக்கே"


திருவாசகத்தில் ஒரு பாடலை ஒரு முறை படித்துவிட்டால் மேலே போக மனம் வராது. மனம் அதிலேயே சுத்திக் கொண்டு இருக்கும். 


சொல்லிக் கொண்டே போகலாம். படிக்கப் படிக்க, ,சிந்திக்க சிந்திக்க ஊற்றெடுக்கும் பாடல்கள் திருவாசகப் பாடல்கள். 



(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:பா

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html


அறைகூவி, வீடு அருளும்


வாரா வழியருளி


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_15.html


அந்தம் இலா ஆனந்தம்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_19.html


தாய்போல் தலையளித்திட்டு


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_24.html


கல்லைப் பிசைந்து கனி ஆக்கி

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_28.html


காட்டாதன எல்லாம் காட்டி

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_18.html


தாயான தத்துவனை




பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 1


)


Friday, October 7, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - நீறு பட இலங்கை

      

நாலாயிர திவ்ய பிரபந்தம் -   நீறு பட இலங்கை 



குருஷேத்திர யுத்தத்தில் கண்ணன் பற்றிக் கூறினார். 


பின்னர் நரசிம்ம அவதாரம் பற்றிக் கூறினார். 


அடுத்து இராம அவதாரம் பற்றி கூற இருக்கிறார். 



இலங்கையில் போர் நடக்கிறது.  நாம் இப்போது அங்கே போய் விட வேண்டும். தொலைவில், ஒரு மலை மேல் நின்று அந்தப் போரைப் பார்க்கிறோம். 



இரண்டு பக்கமும் மிக உக்கிரமாக போர் புரிகிறார்கள். 



ஆயிரக்கணக்கான அம்புகள் பறக்கின்றன. அந்த அம்புகள்சில சமயம் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்கின்றன. அப்படி அவைஇடை விடாமல் மோதிக் கொள்ளும் ஒலி பயங்கரமாக ஒலிக்கிறது. 


இராம இலக்குவனர் அம்புகளால் அரக்கர்கள் கூட்டம் கூட்டமாக மடிகிறார்கள். அவர்கள் உடலில் இருந்து இரத்தம் பீறிட்டு எழுகிறது. அந்த இரத்தம் எல்லாம் ஒன்று சேர்ந்து சிறு ஓடையாகி, பின் அந்த ஓடைகள் ஒன்று சேர்ந்து பெரிய ஆறாகி கடலில் சென்று சேர்கிறது. 



ஏற்கனவே உள்ள ஆற்று நீரோடு, இந்த இரத்த ஆறும் கலப்பதால் கடல் நீர் பொங்கி எதிர் வருகிறது. 


சாதாரண ஆற்று நீரும் இரத்தம் கலந்து நிறைகிறது. 


பாடல் 



மாறு நிரைத்திரைக் கும்சரங் கள்,இன

நூறு பிணம்மலை போல்புர ள,கடல்

ஆறு மடுத்துதி ரப்புன லா,அப்பன்

நீறு படவிலங் கைசெற்ற நேரே.



சீர் பிரித்தபின் 



மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள், இன

நூறு பிணம் மலை போல் புரள, கடல்

ஆறு மடுத்து உ திரப்புனலால்,  அப்பன்

நீறுபட இலங்கை செற்ற நேரே.


பொருள் 




(pl click the above link to continue reading)







மாறு  = இரு புறமும் மாறி மாறி 

நிரைத்து =  வான் வெளியே நிறைந்து போகும் படி 

இரைக்கும் = இரைச்சல் உண்டாக்கும் 

சரங்கள் = அம்புகள் 


இன = இனம் இனமாய், கொத்து கொத்தாக 


நூறு = நூற்றுக் கணக்கில் 


பிணம் மலை போல் புரள = பிணங்கள் மலை போல் புரண்டு கிடக்க 


கடல் = கடலானது 


ஆறு மடுத்து = ஆற்று நீர் எதிர்த்து வர 


உ திரப்புனலால் = இரத்த ஆற்றால் 


அப்பன் = இராம பிரான் 


நீறுபட = சாம்பலாகும்படி  


இலங்கை  = இலங்கையை 


செற்ற நேரே  = போர் செய்த போது 




இராவணன் எவ்வளவு பெரிய பலம் பொருந்தியவன். 



முக்கோடி வாழ் நாள், எக்கோடி யாராலும் வெல்லப்படாய் என்ற வரம், திக்கோடு உலகு அனைத்தும் வென்று அடக்கிய புய வலம், சங்கரன் கொடுத்த வாள், என்று மிகுந்த பராகிரமம் உடையவன். 


அப்பேற்பட்ட இராவணனின் படைகளை கொன்று குவித்து இரத்த ஆறு ஓட விட்டவன் இராமன். 


நம் துன்பம் எல்லாம் அவனுக்கு என்ன பெரிய விடயமா?  அவனைப் பற்றினால் வெற்றி நிச்சயம் என்று இந்த வெற்றிப் பாசுரத்தில் நம்மாழ்வார் கூறுகிறார். 










பொருள் 



(முந்தைய பதிவுகள்

பாசுரம் 3594 - ஆழி எழ 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_30.html


பாசுரம் 3595 - ஒலிகள் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post.html


பாசுரம் 3596 - நான்றில 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3596.html


பாசுரம் 3597 - உலகம் உண்ட ஊண்

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3596_12.html


பாசுரம் 3598  - ஒலிகள்


பாசுரம் 3599  - மெலிந்த பொழுது