Wednesday, September 8, 2021

திருக்குறள் - புதல்வரைப் பெறுதல் - பாகம் 1

திருக்குறள் - புதல்வரைப் பெறுதல் - பாகம் 1 



அது என்ன புதல்வரைப் பெறுதல் என்று வள்ளுவர் சொல்லி இருக்கிறார்? அப்படி என்றால் புதல்விகளை பெறுதல் இல்லறத்தில் வராதா? இது ஒரு ஆணாதிக்க சிந்தனை அல்லவா? வள்ளுவர் காலத்தில் அப்படி ஒரு சமுதாயம் இருந்து இருக்கலாம். ஆனால், நாங்கள் இன்று பெண்ணுரிமை, சம உரிமை, என்று போராடிக் கொண்டு இருக்கிறோம். இப்ப வந்து, இந்த மாதிரி ஆணாதிக்க சிந்தனை உள்ள நூல்களை பற்றிச் சொல்லி கொண்டிருப்பதில் ஒரு பயனும் இல்லை என்று சிலர் கொடி பிடிக்கலாம். 


இந்தத் தலைப்பு பல உரை ஆசிரியர்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி இருக்கிறது. எப்படியாவது வள்ளுவரை இந்த குற்றச் சாட்டில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று அவர்கள் முயற்சி செய்து இருக்கிறார்கள். 


புதல்வர் என்பது தவறு "மக்கட் பேறு" என்று தான் முதல் குறள் ஆரம்பிக்கிறது. அதே போல் முந்தைய அதிகாரத்தில் "நன் கலம் நன் மக்கட் பேறு " என்று தான் முடிந்தது. அங்கு, நன் புதல்வர் பேறு என்று முடியவில்லை. 


மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.



எனவே, இந்த அதிகாரத்தின் தலைப்பை "மக்களைப் பெறுதல்" என்று மாற்ற வேண்டும் என்று தமிழ் படித்த அறிஞர்கள் கூறி இருக்கிறார்கள். 


எனக்கு அதில் உடன்பாடு இல்லை. 


வள்ளுவரை நாம் காப்பாற்ற வேண்டியது இல்லை. நம்மால் முடியவும் முடியாது. 



ஒரு மரம் இருக்கிறது என்றால், அதன் வேர், கிளை, இலை, காய், கனி என்று எல்லாம் இருக்கும். "நாங்கள் மட்டும் ஏன் நிலத்துக்கு அடியிலேயே கிடந்து துன்பப் பட வேண்டும். நாங்களும் இந்த பூ மாதிரி மேலே வருவோம்" என்று வேர்கள் கொடி பிடிக்க ஆரம்பித்தால், மரம் பட்டுப் போகும். 


ஒரு கட்டிடத்தின் அஸ்திவாரம் மண்ணுள் புதைந்து தான் கிடக்கும். அது யார் கண்ணுக்கும் தெரியாது.  " முடியாது,  நாங்களும் மேலே வருவோம்" என்று அஸ்திவாரங்கள் தொடங்கினால் ?


ஒரு சமுதாயத்தில், குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு வேலை கொடுக்கப் பட்டிருக்கிறது. 


நான் அந்த வேலையை செய்ய மாட்டேன் என்று சொல்ல யாருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், மற்றவர்களை அந்த வேலையை செய்யச் சொல் முடியாது. உன்னால் முடியாது என்றால், சரி. வேறு வேலையைப் பார். அல்லது வேறு வேலை ஒன்றும் தெரியாது என்றால் என்ன செய்வது என்று அவரவர்கள் முடிவு செய்து கொள்ள வேண்டும். 



இல்லறம் நடத்தும் பொறுப்பை ஆணிடம் கொடுத்தது நம் சமுதாயம். அவனுக்கு துணை செய்ய மனைவி என்று அமைத்தது. 


அந்த முறை சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். அவர்கள் அதை மாற்றி "இல்லறப் பொறுப்பை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம்" என்று சொல்லலாம். அது வரை சரி.  அப்படி ஒரு சமுதாயத்தை அவர்கள் படைத்துக் காட்டிவிட்டு பின் வள்ளுவர் தவறு என்று சொல்லலாம். அது வரை, வள்ளுவர் காட்டியதுதான் வழி. 



மேலும், பெண் என்பவள் திருமணம் ஆன பின் கணவன் வீட்டுக்குப் போய் விடுகிறாள். ஒரு ஆணின் இல்லறக் கடமைகளில் ஒன்று "தென் புலத்தார்" பேணுதல். அதாவது, முன்னோர்களுக்கு நீர்க்கடன் செய்வது. 


ஏன் பெண்கள் செய்யக் கூடாதா ? ஆண்கள் தான் சிரார்த்தம் செய்ய வேண்டுமா? நாங்களும் மொட்டை போட்டு,  ஈமக் கிரியைகள் செய்வோம், வருடா வருடம் சிரார்த்தம் செய்வோம் என்று ஒரு கூட்டம் கிளம்பலாம். 


சொல்வது எளிது. செய்வது கடினம். 


பாடல் 



பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற



பொருள் 



(Please click the above link to continue reading)


பெறுமவற்றுள்  = ஒருவன் பெறக் கூடியவற்றில் 


யாமறிவது = யாம் அறிவது 


இல்லை = இல்லை 


அறிவறிந்த = அறிவு அறிந்த 


மக்கட்பேறு = மக்கட் பேறு 


அல்ல பிற =  மற்றவை அல்ல 


மிக ஆழ்ந்த குறள். ஏற்கனவே ப்ளாக் நீண்டு விட்டதால், இதன் விளக்கத்தை அடுத்த ப்ளாகில் காண்போம். 




No comments:

Post a Comment