திருக்குறள் - மங்கலம், நன்கலம்
திருமணம் ஆகி விட்டது. புது மனைவி (கணவன்), புது வகை இன்பம். ஐந்து புலன்களுக்கும் இன்பம். பார்ப்பது இன்பம், தொடுவது இன்பம். பேசுவதை கேட்பது இன்பம். முத்தம் இன்பம். மணம் இன்பம்.
சரி. இது எத்தனை நாளைக்கு? எவ்வளவுதான் சிறந்த இன்பமாக இருந்தாலும், ஒரு காலத்துக்கு மேல் ஒரு அலுப்பும், சலிப்பும் வருவது இயற்கை. இது இவ்வளவுதானா, இதற்குத் தானா இந்தப் பாடு என்று ஆயாசம் வரும்.
இல்லறத்தில் சலிப்பு வரும். இதில் ஒன்றும் இல்லை. தெரியாமல் வந்து இதில் மாட்டிக் கொண்டோம். வெளியே வரவும் முடியாது. என்ன செய்வது என்று வெறுப்பாக இருக்கலாம்.
இல்லறத்தை எப்படி மேலே கொண்டு செல்வது? அதில் ஒரு பிடிப்பையும், இனிமையையும் எப்படி கொண்டு வருவது?
இல்லறம் என்பதே எதற்காக? அன்பை விரிவு செய்வதற்காக.
தான் தான் என்று இருந்த ஒரு ஆணும், பெண்ணும், "அவளுக்கு பிடிக்கும், அவருக்கு பிடிக்கும் " என்று தனக்கு விருப்பமானதை மற்றவருக்கு கொடுத்து அதில் இன்பம் காண்பது அன்பு பரிமாற்றம், அன்பின் நெகிழ்ச்சி, அன்பின் விரிவு.
காசு போட்டு வாங்கிய மல்லிகைப் பூ...அவளுக்கு எதுக்கு கொடுக்கணும், நானே வைத்துக் கொள்கிறேன் என்று எந்த கணவனாவது நினைப்பானா? இந்தப் புடவை அவளுக்கு நல்லா இருக்கும்ல? இந்தப் பாட்டு அவளுக்கு பிடிக்கும்...என்று அவள் சந்தோஷம் அவனுக்கு முக்கியமாக படுகிறது.
இன்று பாயாசம் நல்லா வந்திருக்கு. கஷ்டப்பட்டு செஞ்சது. அவருக்கு எதுக்கு கொடுக்கணும், நானே எல்லாவற்றையும் குடித்து விடுகிறேன் என்று எந்த மனைவியாவது நினைப்பாளா?
இந்த மனைவி/கணவன் உறவு என்பது உடல் சார்ந்த இன்பத்தை ஆதாரமாக கொண்டு இருந்தால், நாளடைவில் அது வெறுப்பும், சலிப்பும், ஏமாற்றமும் தரும்.
இந்த இல்லறத் தேரை மேலும் கொண்டு செல்ல இயற்கை கண்டு பிடித்த அதிசயம், "குழந்தைகள்".
குழந்தைகள் வந்து விட்டால், பெற்றோரின் அன்பு மடை மாறி பிள்ளை பால் பாய ஆரம்பிக்கும்.
குழந்தையின் மழலை மொழி, களங்கமற்ற முகம், அதை கட்டி அணைக்கும் போது வரும் சுகம், அந்த பால் மணம், அதற்கு ஈடு உண்டா?
கணவனுக்கு மனைவி மேலோ, மனைவிக்கு கணவன் மேலோ உண்டாகும் அன்புக்கு ஒரு காரணம் இருக்கிறது. எனக்கு அவள் (அவன்) இன்பம் தருகிறாள். எனக்கு உதவி செய்கிறாள் (ன்) என்ற ஒரு பரிமாற்றம் சார்ந்த அன்பு இருக்கிறது.
குழந்தைகள் அப்படி அல்ல. அவை நமக்கு ஒன்றுமே செய்வது இல்லை. இன்னும் சொல்லப் போனால் அவற்றால் நமக்கு வெளிப்படையான துன்பம் தான். தூங்க விடாது, மல ஜலம் துடைத்துக் கொண்டே இருக்க வேண்டும், ஒரு வேலையும் செய்யாமல், சும்மா சாப்பிட்டு சாப்பிட்டு, கையை காலை ஆட்டிக் கொண்டு படுத்துக் கிடக்கும். அதன் மேல் அத்தனை அன்பு பிறக்கும். அத்தனை மகிழ்ச்சி.
குழந்தைக்கு உடல் நலம் இல்லை என்றால், மனைவி மேல் கூட ஆசை வராது.
இல்லற கடமைகள் சொன்னார்.
அடுத்து வாழ்க்கைத் துணை நலம் சொல்லிக் கொண்டு இருக்கிறார்.
இதை அடுத்து என்ன வரும்? புதல்வர்களைப் பெறுதல். அடுத்த அதிகாரம். அதற்கு முன்னோடியாக இந்த கடைசிக் குறளை இந்த அதிகாரத்தில் வைக்கிறார்.
பாடல்
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post.html
(Please click the above link to continue reading)
மங்கலம் = நன்மை
என்ப = என்று சொல்லுவார்கள்
மனைமாட்சி = மனையாளின் நற்குண நற்செய்கைகள்
மற்று = அசைச் சொல்
அதன் = அதன்
நன்கலம் = நல்ல அணிகலன்
நன்மக்கட் பேறு. = நல்ல பிள்ளைகளைப் பெறுதல்
இல்லறத்தின் அழகு, நல்ல பிள்ளைகளைப் பெறுதல்.
பிள்ளைகளைப் பெறுதல் என்று சொல்லவில்லை. நல்ல பிள்ளைகளைப் பெறுதல் என்று சொல்கிறார்.
"மங்கலம் என்ப" மங்கலம் என்று சொல்லுவார்கள் என்றால் யார் சொல்லுவார்கள் என்ற கேள்வி வரும் அல்லவா? பரிமேலழகர் உரை சொல்கிறார் "அறிந்தோர் சொல்வர்" என்று.
அப்படி என்றால் என்ன அர்த்தம்?
முட்டாளிடம் கேட்டால் என்ன மற்றவரைச் சொல்லுவான்.
இல்லறத்தின் நன்மை என்ன என்றால், பொருள் சேர்ப்பது, வீடு வாசல் வாங்குவது, மனைவி மக்களை கூட்டிக் கொண்டு ஊர் சுற்றுவது, நாள் கிழமை என்றால் புது ஆடை உடுப்பது, புது புது பலகாரம் செய்து உண்பது, டிவி பார்ப்பது என்று பலவிதமாக சொல்வார்கள், முட்டாள்கள்.
அறிவுள்ளவர்கள் என்ன சொல்லுவார்கள் என்றால் "இல்லறத்தின் நன்மை என்பது நல்ல பிள்ளைகளை பெறுவது" என்று.
இல்லறக் கடமை சொல்லி ஆகிவிட்டது.
வாழ்க்கைத் துணை நலம் சொல்லி ஆகிவிட்டது.
அடுத்தது புதல்வரைப் பெறுதல் என்ற அதிகாரம்.
கணவன் மனைவி என்று ஆகிவிட்டால் அடுத்து பிள்ளைகள் தானே ? அந்த ஒழுங்கில் போகிறார்.
இதை இன்றைய கலாசாரத்தோடு பார்ப்போம்.
திருமணம் செய்து கொள்ளாமலேயே பிள்ளை பெற்றுக் கொள்ளலாம் என்ற ஒரு கலாசாரம் வந்து இருக்கிறது.
இல்லறத்தின் நலம் பிள்ளைகளைப் பெறுவது என்றால், ஒரே இனத்தில் திருமணம் செய்து கொண்டால் எவ்வாறு பிள்ளைகளைப் பெறுவது? ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளலாம் என்கிறார்கள். அதற்கான சட்ட வடிவங்களும் வந்து கொண்டு இருக்கின்றன.
சரி, அப்படி திருமணம் செய்து கொண்டு, அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு விடை என்ன.
அன்பு விரிய வேண்டாமா? கணவனும் மனைவியும் என்றால், அன்பு பிள்ளைகள் மேல் விரியும். வள்ளுவர் இன்னும் பல படிகள் சொல்லப் போகிறார். பிள்ளைகள் வந்து விட்டன, அடுத்தது என்ன என்ற கேள்விக்கும் விடை தருகிறார். அவற்றை எல்லாம் பார்க்க இருக்கிறோம்.
நான் எதையும் சரி தவறு என்று சொல்லவில்லை.
எதற்கும் ஒரு நோக்கம் இருக்க வேண்டும். பலன் இருக்க வேண்டும். அந்த நோக்கம் உயரிய நோக்கமாக இருக்க வேண்டும்.
நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது ஒரு நோக்கம் தான். அது உயர்ந்ததா?
வாய் வரை கொண்டு சென்ற ஒரு இனிப்பை, "அட, அந்தப் பிள்ளை இதை விரும்பி சாப்பிடுவானே" என்று நினைத்து, அவனுக்காக அதை எடுத்து வைப்பவதில் உள்ள சுகம் தான் உண்பதில் வருமா?
ஒரு முழு வாழ்க்கைப் பாதையை போட்டு தந்து விட்டுப் போய் இருக்கிறார்கள்.
அவற்றை விட்டு விட்டு எங்கெங்கோ போய்க் கொண்டு இருக்கிறோம்.
விதி விலக்காக யாரோ எங்கோ ஒரு மூலையில் செய்வதை பெரிய புரட்சி என்று எண்ணிக் கொண்டு, அது தான் வாழ்க்கை முறை என்று தவறாக எண்ணிக் கொண்டு இருக்கிறோம்.
நம் வாழ்கை நெறியை முதலில் சரியாக புரிந்து கொள்வோம். அப்புறம், அது சரி இல்லை என்றால் மற்றவற்றை கடை பிடிப்பதைப் பற்றி யோசிப்போம்.
சரி தானே?
அருமை அண்ணா
ReplyDelete