Tuesday, September 14, 2021

திருவாசகம் - குழந்தை கையில் பொற்கிண்ணம்

 திருவாசகம் - குழந்தை கையில் பொற்கிண்ணம் 


நமக்கு நம்மிடம் இருப்பதன் அருமை தெரிவதில்லை. அது நம்மை விட்டுப் போன பின் தான் அதன் அருமை தெரிகிறது. 


அப்பா, அம்மா, கணவன், மனைவி, ஆரோக்கியம், இளமை,  ஞாபகம், என்று பல விடயங்கள் இருக்கும் போது அதன் அருமை தெரிவதில்லை. அது நம்மை விட்டுப் போன பின், அடடா என்று ஏங்குகிறோம். 


மணிவாசகர் சொல்கிறார், 


"இறைவா, எவ்வளவு பெரிய நீ, மானிட வடிவம் கொண்டு எனக்காக வந்தாய். குழந்தையின் கையில் உள்ள பொற்கிண்ணம் போல, உன் அருமை தெரியாமல் உன்னை விட்டு விட்டேன். பொய்கள் நிறைந்த இந்த உலகில் என்னை உழல விட்டு விட்டு நீ போய் விட்டாய். உனக்கு இது சரிதானா" 


என்று உருகுகிறார். 


சின்ன பிள்ளையின் கையில் ஒரு விலை உயர்ந்த பொற்கிண்ணத்தைக் கொடுத்தால், அந்த பிள்ளைக்கு அதன் அருமை தெரியுமா? ஏதோ விளையாட்டுச் சாமான் என்று விளையாடிவிட்டு தூர போட்டுவிட்டுப் போய் விடும். 


பாடல் 


மையி லங்குநற் கண்ணி பங்கனே

வந்தெ னைப்பணி கொண்ட பின்மழக்

கையி லங்குபொற் கிண்ண மென்றலால்

அரியை என்றுனைக் கருது கின்றிலேன்

மெய்யி லங்குவெண் ணீற்று மேனியாய்

மெய்ம்மை அன்பர்உன் மெய்ம்மை மேவினார்

பொய்யி லங்கெனைப் புகுத விட்டுநீ

போவ தோசொலாய் பொருத்த மாவதே.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_14.html


(Please click the above link to continue reading)



மையி லங்கு  = மை படர்ந்த 

நற் கண்ணி = அழகிய கண்களை கொண்ட உமா தேவியை 

பங்கனே = ஒரு பாகத்தில் கொண்டவனே 

வந்தெ னைப் = வந்து என்னை 

பணி கொண்ட = ஆட்கொள்ள வந்த 

பின் = பிறகு 

மழக் = மழலையின் (குழந்தையின்) 

கையி லங்கு = கையில் விளங்கும் 

பொற் கிண்ண மென்றலால் = பொன் கிண்ணம் போல 

அரியை = அருமையானவன், கிடைத்தற்கு அரியவன் 

என்றுனைக் = என்று உன்னை 

கருது கின்றிலேன் = நினைக்காமல் 

மெய்யி லங்கு = உடல் முழுவதும் 

வெண் ணீற்று மேனியாய் = திரு வெண்ணீறு பூசியவனே 

மெய்ம்மை அன்பர் = மெய்யான உன் அடியார்கள் 

உன் = உன்னுடைய 

மெய்ம்மை மேவினார் = உண்மையை அறிந்து, உன்னை அடைந்தார்கள் 

பொய்யி லங்கெனைப் = பொய்மை மிகுந்த இந்த உலகில் என்னை 

புகுத விட்டுநீ = செல்லும் படி விட்டு விட்டு 

போவ தோ = நீ போகலாமா ?

சொலாய் = நீயே சொல் 

பொருத்த மாவதே. = இது உனக்கு பொருந்திய செயலா? 


நான் தான் சிறு பிள்ளை போல உன்னை விட்டு விட்டேன் என்றால், நீயும் அப்படி இருக்கலாமா? என்று கேட்கிறார். 


கடவுளை நேரில் பார்த்து பேசுவது போல இருக்கும் பாடல்கள். 


இவ்வளவு இனிமையான பாடல், எவ்வளவு எளிமையாக இருக்கிறது. 


என்ன தாமதம்? உடனே திருவாசகத்தை முழுவதும் படித்து விடுங்கள். எவ்வளவு பெரிய பொக்கிஷம். 



1 comment:

  1. ஆம், நேரடியான, எளிய பாடல்; மனத்தைத் தொடுகிறது. நன்றி.

    ReplyDelete