Thursday, September 2, 2021

நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெருமாள் திருமொழி - அலைக் கையால் அடி வருட

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெருமாள் திருமொழி - அலைக் கையால் அடி வருட 


பெருமாள் திருமொழி என்பது குலசேகர ஆழ்வாரால் அருளிச் செய்யப்பட்ட 105 பாடல்களின் தொகுப்பு. 


பக்தி இரசம் சொட்டும் தேனினும் இனிய பாசுரங்கள். 


பெரிய தத்துவங்கள் கிடையாது. வாழ்க்கை நெறி முறை, அறம், நீதி என்றெல்லாம் உபதேசம் கிடையாது. அவருக்கும் பெருமாளுக்கும் இடையில் உள்ள தாகத்தை சொல்லும் பாசுரங்கள். 


சரி, அது, அவர் மேல் கொண்ட காதல் பாடல். அதை அறிந்து நாம் என்ன செய்ய என்று கேட்டால் என்ன சொல்லுவது? எத்தனையோ திரைப்பட பாடல்களை கேட்கிறோம். ஏதோ ஒரு கதாநாயகனும் கதாநாயகியும் தங்கள் காதலை வெளிப்படுத்தும் பாடல்கள். அதை கேட்டு நமக்கு என்ன ஆகப் போகிறது என்று நம் கேட்காமல் இருப்பது இல்லை அல்லவா?


அந்த உணர்சிகள் நம் மனதில் எங்கோ வருடுகிறது. நம் மனத்திலும் அந்த காதலை விதைக்கிறது. அந்த அன்பு என்ற இன்பத்தை தூண்டுகிறது அல்லவா? அது போல


இது போன்ற பக்திப் பாடல்களை கேட்கும் போதோ, வாசிக்கும் போதோ "அடடா, எவ்வளவு ஆழமான காதல், பக்தி " என்று நாம் இரசிக்கும் போது நம்மை அறியாமலேயே அந்த பக்தி நம் மனதில் ஒட்டிக் கொண்டு விடுகிறது. 


நமக்குள்ளும் அந்த ஆர்வத்தை தூண்டுகிறது. 


இங்கே, முதல் பாசுரத்தில்,  திருவரங்கத்தில் உள்ள பெருமாளை நோக்கிப் பாடுகிறார். 


பாசுரத்தை படிக்கும் போது அது சொல்வதை கற்பனை பண்ணிக் கொள்ள வேண்டும். 


வாருங்கள், அவர் காட்டும் அந்த அற்புத காட்சியை காணலாம். 


ஒரு இருண்ட அறை. கரு கும்னு இருக்கும் அறை. அந்த அறையில் ஒரு பெரிய பாம்பு. பல தலைகள் உள்ள பாம்பு. அந்த தலைகள் நெளிகின்றன. கூர்ந்து பார்த்தால் தெரிகிறது அந்தப் பாம்பின் மேல் யாரோ படுத்து இருக்கிறார்கள். படுத்து இருப்பது மட்டும் அல்ல, தூங்கவும் செய்கிறார். 


அந்த பாம்பு தலையை நம் பக்கம் திருப்புகிறது. அதன் ஒவ்வொரு தலையிலும் ஒரு நவரத்தின மணி இருக்கிறது. அருகில் உள்ள விளக்கில் இருந்து ஒளி பட்டு அந்த மணிகள் ஜ்வலிகின்றன. அந்த ஒளியில் இருட்டு எங்கோ போய் விட்டது. 


ஒரே வெளிச்சம். சற்று உற்று பார்க்கிறோம். 


அந்த உருவத்தின் காலடியில் ஒரு ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த ஆற்றின் அலைகள் அந்த உருவத்தின் காலை வருடிக் கொண்டு போகிறது. 


இப்போது கண்ணை மூடிக் கொள்ளுங்கள். அந்த காட்சியை மனதில் ஓட விடுங்கள். 


குலசேகர ஆழ்வார் இந்தக் காட்சியை பார்த்து அதில் இலயித்து விட்டார்.அந்த இடத்தை விட்டு போக மனம் இல்லை. 


போய் விட்டால், இந்தக் காட்சியை இனி எப்போது காண்பேனோ என்று தவிக்கிறார். 


பாடல் 


இருளிரியச் சுடர்மணிக ளிமைக்கும் நெற்றி இனத்துத்தி யணிபணமா யிரங்க ளார்ந்த


அரவரசப் பெருஞ்சோதி யனந்த னென்னும் அணிவிளங்கு முயர்வெள்ளை யணையை மேவி


திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி திரைக்கையா லடிவருடப் பள்ளி கொள்ளும்


கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டுஎன் கண்ணிணைக ளென்றுகொலோ களிக்கும் நாளே


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_45.html


(Please click the above link to continue reading)


இருளிரியச் = இருளை விரட்டி அடிக்கும் 


சுடர்மணிகள் =  சுடர் விடும் நவ இரத்தின மணிகள் 


இமைக்கும் =  அசையும் 


நெற்றி = நெற்றி. நெற்றியில் உள்ள நவ ஒளி விடும் நவரத்தினங்கள் 


இனத்துத்தி = துத்தி என்றால் புள்ளிகள். சிறந்த புள்ளிகளை உடைய 


அணி = அழகான 


பணமா யிரங்க ளார்ந்த = படங்கள் (பாம்பின் படம்) ஆயிரம் விளங்கும் 


அரவரசப் = பாம்புகளின் அரசன் 


பெருஞ்சோதி = பெரிய ஜோதி 


யனந்த னென்னும் = அனந்த ஆழ்வான் 


அணிவிளங்கு = அழகாக விளங்கும் 


உயர் = உயர்ந்த 


வெள்ளை = வெண்மையான 


அணையை = படுக்கையில் 


மேவி = படுத்து 


திருவரங்கப்  = திருவரங்கம் என்ற 


பெருநகருள் = பெரிய நகரில் 


தெண்ணீர்ப் = தெளிந்த நீர் 


பொன்னி = காவிரி ஆறு 


திரைக்கையா லடிவருடப் = அலை என்ற கையால் அடி வருட 


பள்ளி கொள்ளும் = பள்ளி கொள்ளும் 


கருமணியைக் = கரிய மணியை 


கோமளத்தைக்  = கோமளத்தை 


கண்டு கொண்டு = கண்டு 


என் = என்னுடைய 


கண்ணிணைகள் = கண் இணைகள், இரண்டு கண்களும் 


என்று கொலோ = என்றோ? 


களிக்கும் நாளே = இன்புறும் நாளே 



அதான் பார்த்தாச்சே, அப்புறம் என்ன , "என்று கொலோ களிக்கும் நாளே" என்றால், இப்போது பார்த்து அனுபவித்து ஆகிவிட்டது.  மீண்டும் எப்போது இதை கண்டு களிக்கப் போகிறேன் என்று ஏங்குகிறார். 


அன்புடையவர்களை பிரியும் போது, "ஐயோ திருப்பி எப்போ பார்ப்போமோ" என்று மனம் ஏங்கும் அல்லவா....அது போல. 


கருமணியை, கோமளத்தை என்று கொஞ்சுகிறார். 


பக்தி புரிந்தால், பாசுரமும் புரியும். 

1 comment:

  1. சுவையான பாடல். நன்றி.

    ReplyDelete