Monday, September 6, 2021

திருவாசகம் -திருச்சதகம் - வித்தின்றி விளையச் செய்வாய்

திருவாசகம் -திருச்சதகம் -  வித்தின்றி விளையச் செய்வாய் 


இந்த பிரபஞ்சம் எப்படி உருவானது? யார் உருவாக்கினார்கள்? ஏன் உருவாக்கினார்கள் என்று பல கேள்விகள் இருக்கின்றன. 


ஒரு பானை இருக்கிறது என்றால் அந்தப் பானையை செய்த குயவன் இருப்பான் என்று நம்மால் உணர முடிகிறது அல்லவா? பானை, தன்னைத் தானே செய்து கொள்ளாது அல்லவா?


அது போல, இந்த உலகம் இருக்கிறது என்றால், அதை தோற்றுவித்தவன் ஒருவன் இருக்க வேண்டும் என்று சிந்திக்க முடியும். 


எது ஒன்று தோன்றுவதற்கும், அதை தோற்றுவித்த ஒருவன் வேண்டும். எனவே, இந்த உலகைப் படைத்தது இறைவன் என்று பக்திமான்கள் கூறுகிறார்கள். 


அவர்கள் அதோடு நின்று விடுகிறார்கள். எதை ஒன்றை தோற்றுவிப்பதற்கும் அதை உண்டாக்கிய ஒருவன் வேண்டும் என்றால், இறைவனை தோற்றுவித்தது யார் என்ற பதில் கேள்வி எழும். 


இறைவனை யாரும் தோற்றுவிக்கவில்லை, அவன் தானே தோன்றி விட்டான் என்று கூறினால், இந்த உலகமும் தானே தோன்றியது என்றும் கூறலாம். .


சரி, இறைவன் தோற்றிவித்தான் என்றால் எதில் இருந்து இந்த உலகத்தைப் படைத்தான் என்ற கேள்வி வரும். எதில் இருந்தோ என்றால் அதை யார் படைத்தார்கள் என்ற கேள்வி வரும். 


மணிவாசகர் கூறுகிறார் 


"நீ உலகை இரண்டு விதத்தில் படைப்பாய். ஒன்று விதை இல்லாமல் விளைவு செய்வாய். இன்னொன்று இருக்கின்ற உலகை வைத்துக் கொண்டு மேலும் பலப் பல செய்வாய். அப்பேற்பட்ட நீ, என்னை உன் கோவில் வாசலில் பித்தனாக நிற்க வைத்தாய். உன் அன்பர் கூட்டத்தில் என்னையும் சேர்த்துக் கொண்டாய். தாம் நட்ட மரம் விஷ மரம் என்று தெரிந்தாலும், நட்டவர்கள், அந்த மரத்தை அழிக்க மாட்டார்கள். நானும் அந்த மாதிரி ஒரு விஷ மரம்தான். என்னையும் அழித்து விடாதே "


என்று உருகுகிறார். 


பாடல்  


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_6.html


(Please click the above link to continue reading)



விச்ச தின்றியே விளைவு செய்குவாய்‌ 

விண்ணு மண்ணக முழுதும்‌ யாவையும்‌ 

வைச்சு வாங்குவாய்‌ வஞ்ச கப்பெரும்‌ 

_ புலைய னேனையுன்‌ கோவில்‌ வாயிலில்‌ 

பிச்ச னாக்கினாய்‌ பெரிய வன்பருக்‌ 

குரிய னாக்கினாய்‌ தாம்வ ளார்த்ததோர்‌ 

ரச்சு மாமர மர்யி னுங்கொலார்‌ 

நானு. மங்ஙனே யுடைய நாதனே. 


பொருள் 




விச்ச தின்றியே = விதை இன்றியே 


விளைவு செய்குவாய்‌  = விளைய வைப்பாய் 


விண்ணு மண்ணக முழுதும்‌ = விண்ணும், மண்ணும்


யாவையும்‌  = முழுவதும் 


வைச்சு வாங்குவாய்‌ = செய்வாய், பின் அவற்றை உன்னுள் அடங்கப் பண்ணுவாய் 


வஞ்ச கப் = வஞ்சக மனம் கொண்ட 


பெரும்‌  = பெரிய 


புலைய னேனை = கீழான என்னை 


யுன்‌ = உன் 


கோவில்‌ வாயிலில்‌  = கோவில் வாசலில் 


பிச்ச னாக்கினாய்‌  = பித்தனாக்கினாய் 


பெரிய = மதிப்புள்ள 


வன்பருக்‌ குரிய = அன்பருக்கு உரியவன் 


னாக்கினாய்‌ = ஆக்கினாய் 


தாம் வ ளார்த்ததோர்‌  = தாம் வளர்த்த 


ரச்சு = நச்சு 


மாமர மர்யி னுங்கொலார்‌  = மா மரமாயினும் வைத்தவர்கள் அதை கொல்ல மாட்டார்கள் 


நானு. மங்ஙனே யுடைய நாதனே.  = நானும் அப்படித்ததான், எல்லாம் உடைய நாதனே 



என்ன ஒரு பாடல். எவ்வளவு பொருள் செறிவு. 


பிள்ளை பிறந்து வளர்ந்து விட்டான். சேராத இடம் சேர்ந்து, கெட்டுப் போய் விட்டான். பெற்ற தாய், அந்தப் பிள்ளையை வெறுப்பாளா? ஊருக்கு அவன் கெட்டவனாக இருக்கலாம். ஆனால் , அவனைப் பெற்ற தாய்க்கு அவன் செல்லப் பிள்ளைத் தான். 


சிலர் மரம் வைத்து வளர்ப்பார்கள். வளர்ந்த பின்தான் தெரியும், அந்த மரம் நச்சு கனிகளை கொடுக்கும் மரம் என்று. அதற்காக அதை வெட்டி விட மாட்டார்கள். அது பாட்டுக்கு இருந்து விட்டுப் போகட்டும் என்று விட்டு விடுவார்கள். 


அப்படி இருந்தது நம் பண்பாடு. 


இப்போது என்னடா என்றால், சாலை போடுகிறேன், வீடு கட்டுகிறேன், தொழிற்சாலை கட்டப் போகிறேன் என்று நூற்றுக் கணக்கில் மரங்களை வெட்டித் தள்ளுகிறார்கள்.


நச்சு மரத்தை கூட வெட்டாமல் வளர்த்த கருணை நிறைந்த பரம்பரை நம்முடையது. 


இறைவன், ஒன்றும் இல்லாததில் இருந்து இந்த உலகை தோற்றுவித்தான். விதை இல்லாமல் செடி வளர்ப்பவன் என்கிறார் மணிவாசகர். அது எப்படி முடியும் என்றால், நமக்குத் தெரியாது. மணிவாசகருக்கு தெரிந்து இருக்கிறது. 


இல்லை என்றால் வேலை மெனக்கெட்டு "விதை இல்லாமல் விளையச் செய்வாய்" என்று சொல்லுவாரா. நம் அறிவுக்கு எட்டவில்லை. அவ்வளவுதான். 


அது மட்டும் அல்ல, பின்னால் "விண்ணையும் மண்ணையும் வைத்து வாங்குவாய்" என்கிறார். 


இதை சைவ சித்தாந்தம் முதலுர்பவம், புனருற்பவம் என்கிறது. ஆதியில் தொடங்கிய உற்பத்தி, அப்புறம் பின்னால் தோன்றிய உற்பத்தி. 


மெய்கண்டர் உரை எழுதும் போது கூறுவார் 


"பிரபஞ்சம்‌ அகாதியாகலின்‌ அம்முதற்கோடி ஈம்மனோரான்‌ அறியவாராமை 

யானும்‌"

என்றார். நம்மால் அறிய முடியாது என்கிறார். 


நட்ட மரம் நச்சு மரமாயினும் நட்டவர்கள் எப்படி வெட்ட மாட்டார்களோ, அது போல, என்னை நீ தான் படைத்தாய். நான் சரி இல்லை என்றால், அதற்கு நீ தான் பொறுப்பு. எனவே, என்னை ஏற்றுக் கொள் என்கிறார். 


இதெல்லாம் படிக்கணுமா இல்லையா? 





5 comments:

  1. ஆமாம் ...படிக்கணும் அண்ணா ....
    படித்துக்கொண்டுள்ளேன்....
    ஆசி கூறுங்கள்

    ReplyDelete
  2. படிக்கப் படிக்க இன்பம் தருவது மாணிக்கவாசகரின் திருவாசகம்,.அதனை உங்கள் சொற்கள் மூலம் அதன் ஆழமான உட்பொருளைக் கொண்டுவந்து அளிக்கிறீர்கள். நன்றி. தொடரட்டும் உங்கள் பணி!
    சித்தானந்தம், சென்னை.

    ReplyDelete
  3. கண்டிப்பாக படித்து தெரிந்து கொள்கிறோம் தங்கள் மூலமாக🙏

    ReplyDelete
  4. இந்த தளத்தை இயக்குபவர் யார் எனத் தெரியவில்லை, பொதுவாக ப்ளாக் நிர்வாகி தன்னைப் பற்றி எங்கோ குறிப்பிட்டிருப்பார், இத்தளத்தில் என்னால் அதை அறிய இயலவில்லை, இருந்தாலும் இணையத்தில் உலவும்போது, எதையோ தேடும்போது, இந்தப் பதிவு என் கண்ணில் பட்டது, பண்டை இலக்கியங்களைப் படிக்கும் போது, மேலோட்டமாகப் படிக்காமல் ஆழ்ந்து படிக்க வேண்டும். அதோடு கூட அதிலுள்ள ஆழமான கருத்தை அறிந்து கொள்ள முயலவேணும்.

    தினமும் ஒரு பத்துநிமிடமாவது, வாசிக்க வேண்டும், எதை என்றால் நமது இதிகாசங்களை, இலக்கியக் காவியங்களைக் கருத்தூன்றிப் படித்தால், இத்தளத்தின் நிர்வாகி சொன்னது போல், இதெல்லாம் படிக்கணுமா வேணாமா என்பது தெளியவரும்.

    நல்லதைப் படித்தால் நாலு வார்த்தை எழுதத் தோணும், அக்கருத்தில் கவிதை வனைவது என் வழக்கம்.

    ==================

    பிச்சை எடுக்கும் நிலைவரினும்
    ........பெரியோர் மாண்பு காப்பவரே
    நச்சு மரமே ஆனாலும்
    ........நட்ட நல்லோர் பேணுவரே
    பச்சைப் புல்லும் மண்மணலும்
    ........பாரில் அனைத்தும் பரமன்வசம்
    இச்ச கத்தில் எல்லாமே
    .........இறைவன் செயலே என்றறிவோம்

    ====================
    அறுசீர்க் கழிநெடிலடி
    ஆசிரிய விருத்தம்
    ===================-

    பெருவை பார்த்தசாரதி

    ReplyDelete
    Replies
    1. நன்றி. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நினைப்பில் நான் பெற்ற இன்பத்தை பகிர்ந்து கொண்டு இருக்கிறேன். நல்ல விடயங்களை, எளிய தமிழில் எடுத்துச் சொல்லுவோம். விதைப்பது நம் வேலை. முளைப்பது நம் கையில் இல்லை.

      Delete