திருக்குறள் - புதல்வரைப் பெறுதல் - ஒரு முன்னோட்டம்
இல்லறம் என்பது வீடு பேற்றை நோக்கிய ஒரு படி. அதுவே முடிவு அல்ல.
வீடு பேறு வேண்டும் என்றால் துறவு வேண்டும்.
துறவு வேண்டும் என்றால் அருள் வேண்டும்.
அருள் வேண்டும் என்றால் அன்பு வேண்டும்.
அன்பு வேண்டும் என்றால் அன்பு செய்ய ஆள் வேண்டும்.
முதலில் கணவன், மனைவி. அவர்களுக்குள் அன்புப் பரிமாற்றம் நிகழும்தானே. என்னதான் சண்டை சச்சரவு என்றாலும் என் மனைவி, என் கணவன் என்ற உரிமையும், அதனால் பிறக்கும் அன்பும் இருக்கும் தானே?
அந்த மேலும் தொடர குழந்தைகள் அவசியம்.
கணவன் மனைவிக்கு இடையே உள்ள அன்பு எவ்வளவு அன்யோன்யமாக இருந்தாலும், அதில் ஒரு பிரதி பலன் இல்லாமல் இல்லை. ஒன்றை நோக்கிய அன்பு அது.
பிள்ளையின் பால் செலுத்தும் அன்பு என்பது, அதற்கு அடுத்த கட்டம். ஒரு பிரதி பலனும் எதிர்பாராமல் செய்யும் அன்பு. தன் பிள்ளை என்ற ஒன்றைத் தவிர அதில் ஒரு பிரதி பலன் இல்லை.
எனவே, வாழ்க்கைத் துணை நலம் என்ற அதிகாரத்தின் பின் புதல்வர்களை பெறுதல் என்ற அதிகாரத்தை வைத்ததார்.
அதற்கு பரிமேலழகர் செய்திருக்கும் உரைப் பாயிரம் மிக ஆழமானது.
உரைப் பாயிரத்தை இன்று காண்போம்.
உரைப் பாயிரம்
https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_5.html
(Please click the above link to continue reading)
"அஃதாவது, இருபிறப்பாளர் மூவரானும் இயல்பாக இறுக்கப்படுங் கடன் மூன்றனுள் முனிவர் கடன்கேள்வியானும், தேவர் கடன் வேள்வியானும், தென்புலத்தார் கடன் புதல்வரைப் பெறுதலானும் அல்லது இறுக்கப்படாமையின் ,அக்கடன் இறுத்தற்பொருட்டு நன்மக்களைப் பெறுதல்.அதிகார முறைமை மேலே பெறப்பட்டது."
பொருள்
தமிழ்தான். அந்தக் காலத்து தமிழ்.
"அஃதாவது, இருபிறப்பாளர் மூவரானும்": பொதுவாக இருபிறப்பாளர் என்று அந்தணர்களை குறிப்பது உண்டு.
நாம் பிறக்கும் போது, நமக்கு ஒரு நோக்கமும் கிடையாது. எதற்காக பிறந்தோம். ஏன் பிறந்தோம் என்று தெரியாது. கொஞ்சம் வளர்ந்து, அறிவு வந்த பின், நான் இன்னது செய்யப் போகிறேன் என்று முடிவு எடுக்கிறோம். ஒரு விரதம் பூணுகிறோம். அப்படி ஒரு விரதம் பூணுவதற்கு அடையாளமாக, அதை எப்போதும் நினைவு படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக அணியும் நூல் தான் பூணூல். விரதம் பூண்டதை நினைவு படுத்தும் நூல்,பூணூல்.
அந்தக் காலத்தில் அந்தணர், சத்ரியர் மற்றும் வைசியர்கள் பூணூல் அணிந்தார்கள். நான்காம் வர்ணத்தவர் அணியவில்லை.
இப்போது ஆரம்பத்தை வாசிப்போம்.
"அஃதாவது, இருபிறப்பாளர் மூவரானும்" அதாவது இருபிறப்பாளர் என்று சொல்லப் படும் பிராமண, க்ஷத்ரிய மற்றும் வைசியர் என்ற அந்த மூவாராலும்.
விளங்கி விட்டதா?
மேலே செல்வோம்.
"இயல்பாக இறுக்கப்படுங் கடன் மூன்றனுள் " நாம் மூன்று பேருக்கு எப்போதும் கடன் பட்டிருக்கிறோம். அந்தக் கடனை தீர்க்க வேண்டும். அது என்ன மூன்று பேருக்கு உள்ள கடன் என்றால் ....
"முனிவர் கடன்கேள்வியானும், தேவர் கடன் வேள்வியானும், தென்புலத்தார் கடன் புதல்வரைப் பெறுதலானும் அல்லது இறுக்கப்படாமையின் ,அக்கடன் இறுத்தற்பொருட்டு நன்மக்களைப் பெறுதல்."
நமக்கு பல அறிவு நூல்களைத் தந்தவர்கள் முனிவர்கள். அந்த முனிவர்களுக்கு நாம் கடன் பட்டிருக்கிறோம். ரொம்ப வேண்டாம், திருவள்ளுவருக்கு நாம் கடன் பட்டு இருக்கிறோமா இல்லையா? கட்டாயம் கடன் பட்டு இருக்கிறோம். அந்த கடன் எப்படி தீரும் என்றால், அந்த நூல்களை கேட்டு அறிவதால் தீரும். அவர் பாட்டுக்கு எழுதி வைத்து விட்டுப் போய் விட்டார். அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்து, நாலு மதிப்பெண் வாங்கினால் போதும் என்று இருக்கக் கூடாது. ஐயம் திரிபு அறக் கற்பதுதான் அவருக்கு நாம் செய்யும் கைம்மாறு.
முனிவர் கடன் படிப்பதால் தீரும்.
"தேவர் கடன் வேள்வியால்": நாம் தேவர்களுக்கு கடன் பட்டு இருக்கிறோம். மழை, வெயில், என்று பல தேவதைகள் இருக்கின்றன. அவை நமக்குச் செய்யும் உதவிக்கு நாம் செய்யும் கைம்மாறு வேள்விகள்.
"தென்புலத்தார் கடன் புதல்வரைப் பெறுதலானும் " நம் முன்னோர்களுக்கு நாம் பட்ட கடனை திருப்பிச் செலுத்துவது என்பது அவர்களுக்கு திவசம்/சிரார்த்தம் என்பன செய்வதன் மூலம். நாம் இன்று இருக்கிறோம் என்றால் நமக்கு முன்னால் எத்தனையோ முன்னோர்கள் வாழ்ந்து இருக்க வேண்டும்.
என் தந்தை, என் தாத்தா, அவருடைய தந்தை, தாத்தா என்று என் பரம்பரை மேல் நோக்கி போய் கொண்டே இருக்கிறது அல்லவா. அத்தனை பேருடைய கூட்டு முயற்சிதான் நான்.
அவர்களுக்கு பட்ட கடனை திருப்பிச் செய்வது என்பது நீர்க்கடன் கழிப்பது என்று சொல்லுவார்கள். அதைச் செய்ய "நல்ல" புதல்வர்கள் வேண்டும்.
பிள்ளை எதற்கு என்றால் சேர்த்து வைத்த சொத்தை அனுபவிக்க என்கிறார்கள். அதற்கு அல்ல பிள்ளைகள்.
அந்த நீர்க் கடனை கழிக்க நல்ல பிள்ளைகளை பெற வேண்டும்.
பிள்ளை வேண்டும் என்றால் மனைவி வேண்டும்.
எனவே, வாழ்கை துணை நலம் என்ற அதிகாரத்தின் பின் இந்த அதிகாரத்தை வைக்கிறார்
இனி அதிகாரத்துக்குள் நுழைவோம்.
அருமை அண்ணா ...படிக்க படிக்க இனிப்பே
ReplyDeleteதென்புலத்தார் கடன் பெண் பிள்ளைகளால் கழியுமா?
ReplyDeleteஏன் இந்தக் கேள்வி கேட்கிறேன் என்றால், தர்ப்பணம் செய்ய ஆணே தேவை என்று ஏற்றுக்கொண்டு விட்டால், பெண் குழந்தை பிறந்து விட்டால் என்ன செய்வது?