கம்ப இராமாயணம்
இந்த ப்ளாக் எந்த ஒரு பாடலையும் பற்றி அல்ல. ஒரு பொதுவான பார்வை.
கம்ப இராமாயணத்தில் பெண் பாத்திரங்கள் பற்றி சிந்தித்து கொண்டிருந்தேன்.
கம்ப இராமாயணத்தில் அப்பா - மகள்; அம்மா - மகள் உறவு என்று இல்லை.
இராமன், இலக்குவன், பரதன், சத்ருக்கனன். ஒரு சகோதரி கிடையாது. சிந்தித்துப் பார்கிறேன்...ஒரு வேளை அவர்களுக்கு ஒரு சகோதரி இருந்து இருந்தால் எப்படி இருந்திருக்கும்?
வாலிக்கு ஒரு மகன். மகள் இல்லை.
இராவணனுக்கு மகன்கள் உண்டு. மகள் இல்லை.
https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_9.html
(click the above link to continue reading)
ஜனகனுக்கு மகள் சீதை இருந்தாள். ஆனால், அவர்கள் இருவரும் பேசிக் கொண்ட மாதிரி தெரியவில்லை. கானகம் போன மகளைப் பற்றி ஜனகன் கவலைப் பட்ட மாதிரி தெரியவில்லை.
சூர்பனகை ஒரு சகோதரி இருந்தாள். அவளும் காமம், பழி வாங்குதல் என்று போய் விட்டாள்.
இராமனும் வழி நெடுக ஆண்களை சந்திக்கிறான். எல்லோரையும் சகோதரர்கள் என்று அரவணைத்துக் கொள்கிறான். குகன், சுக்ரீவன், வீடணன் என்று. ஒரு பெண்ணைக் கூட சகோதரி என்று அவன் ஏற்றுக் கொண்டதாக இல்லை.
அகலிகையை தாயாக நினைத்து தொழுது விட்டுப் போய் விடுகிறான்.
சபரி வந்து உபசாரம் பண்ணி, வழி காட்டிவிட்டு, வானகம் போய் விடுகிறாள்.
மற்ற பெண்களைப் பார்த்தாலும், பெரிய பங்களிப்பு இல்லை.
புலம்புகிறார்கள்.
தாரை புலம்புகிறாள்.
மண்டோதரி புலம்புகிறாள்.
கைகேயி ஒரு சக்தி வாய்ந்த பாத்திரம். இன்றைய தொலைக்காட்சி சீரியல் வில்லி மாதிரி போட்டுத் தாக்கிவிட்டு காணாமல் போய் விடுகிறாள்.
கோசலையும் ரொம்ப சாதுவாக வந்துவிட்டு போகிறாள்.
சுமித்ரை ஏதோ ஒப்புக்கு, "அண்ணன் வந்தால் வா, இல்லை என்றால் முன்னம் முடி" என்று முலை பால் சோர நின்றதுடன் சரி.
சீதை, பிராதன பாத்திரம். காட்டுக்குப் போகிறாள், சிறை எடுக்கப் படுகிறாள், புலம்புகிறாள், தற்கொலை வரை போகிறாள், பின் தீ குளிக்கிறாள், கடைசியில் இராமன் அவளை தனியே கானகம் அனுப்பி விடுகிறான்.
கைகேயி - கூனி - சூர்பனகை, கதையை நகர்த்த பயன்பட்டார்கள்.
இராமனுக்கும் இரண்டு ஆண் பிள்ளைகள் தான். ஒரு பெண் பிள்ளை இல்லை.
ஒரு மகள், ஒரு சகோதரி என்று இல்லாதது ஒரு குறை போலவே தெரிகிறது.
சரி, இராமாயணம் தான் அப்படி இருக்கிறது. மற்ற காப்பியங்கள் எப்படி என்று பார்த்தால், அவையும் அப்படித்தான் இருக்கின்றன.
பாரதத்தில், பாண்டவர் ஐவர். ஒரு பெண் உடன் பிறப்பு இல்லை.
கௌரவர் நூறு பேர். ஒரு பெண் பிள்ளை இல்லை.
பாஞ்சாலி, ஒரு சகோதரியாக இருந்தாள். ஆனால், அண்ணன் தங்கை உறவு வெளிப்படவில்லை.
உப பாண்டவர்கள் பிறந்தார்கள், ஒரு பெண் பிள்ளை இல்லை.
சிலப்பதிகாரத்தில், கோவலனுக்கும், கண்ணகிக்கும் உடன் பிறப்பு இல்லை. படம் பூராவும் அமைதியாக இருந்து விட்டு, கிளைமாக்ஸ் ல் bomb போட்டுவிட்டு கண்ணகி போய் விடுகிறாள்.
மணிமேகலை, துறவியாகப் போய் விட்டாள்.
உங்களுக்கு இது பற்றி ஏதேனும் சொல்ல இருந்தால், சொல்லுங்கள். அறிந்து கொள்ள ஆவல்.
மிகச்சரியாகத்தான் சொல்கிறீர்கள் ...நான் பெண் புறக்கணிப்பாக கொள்ளவில்லை .. தேவையில்லா நிலை போலும் ..அவ்வையும் , கரைக்கால் அம்மையும் கூட துறவு நிலை தானே ...பாசமலராக காட்சியில்லை தான் ...
ReplyDeleteவள்ளுவர் கூட வாழ்க்கைத் துணை நலம் , தாய் என்ற நிலையிலேயே பெண்ணை சொல்லுகிறார்...
இலக்கியங்களில் பெண் தலைவி , தோழி நிலை தான்.
பிற்கால புதினங்களில் அக்கையை போற்றியதாக இராஜராஜனை காட்டுகிறார்கள் ...இராஜேந்திரன் தன்னைப் பெறாத சிற்றன்னைக்கு கோவில் கட்டியதாக சொல்கிறார்கள் ..
சைவ நாயன்மார்கள் வரிசையில் மங்கையற்கரசியார் பெரிதாக பேசப்படுகிறார்..
ஞானசம்பந்தர் - தாயை பெண்ணின் நல்லாளோடும் பெருந்தகை இருந்ததே என தாயை நினைவு கூர்கிறார் . பட்டினத்தடிகள் ..தாயைப் போற்றுகிறார் ...இவையன்றி வேறு நிலை காண முடியவில்லை ..
அண்ணன் - தங்கை பாசம் போற்றிய பாத்திரம் ஏதேனும் நமக்கு தெரிந்த வரை காண இல்லை அண்ணா ....
You forget Thutchalai - Thuriyothanan's Sister
Deleteஇந்த கண்ணோட்டமே புதிதாக உள்ளது. சற்று அதிசயமாக்க் கூட இருக்கிறது.
ReplyDeleteதசரதனும் புத்திர காமேஷ்டி யாகம் செய்து தான் நான்கு புதல்வர்களை பெற்றான். பெண்களை யாசித்தானா என்பது தெரியவில்லை.
ஆனால் ராமாயணத்தில் எல்லா பாத்திரங்களும் மணம் புரிந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். தசரதனுக்கு நான்கு மனைவிகள். அந்த மனைவிகள் யாருடைய பெண்ணாகவோ, சகோதரியாகவோ இருந்திருக்கிறார்கள். ஆனால் காவியங்களில் முக்கியத்துவம் பெற வில்லை. எல்லாமே ஹீரோ centric காவ்யங்களாக அமைந்து விட்டது.
யாருடைய பெண்ணோ சரி. சகோதரியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லையே. சீதை ஜனகரின் மகள். யாருடைய சகோதரி?
Deleteபெண் பாத்திரம் வருவதாக அமைந்தால் சாதாரணமாக ஏதாவது ஒரு கதா பாத்திரத்தின் மனைவியாகவோ, பெண்ணாகவோ அல்லது சகோதரியாக இருக்க வேண்டும்.
Deleteகைகேயி மனைவியாக வந்தாள். அவளால்தான் பிரச்னையே ஆரம்பித்தது.
சூர்ப்பனகை ராவணனின் சகோதரியாக வந்தாள். சின்ன role தான் ஆனால் பதிவாளர் கூறிய மாதிரி கதையை நகர்த்தி செல்ல அவசியமாக இருந்தாள்.
சீதை ஜனகரால் பூமியிலிருந்து கண்டெடுக்கப் பட்டாள்.அவளை தன் பெண்ணாக வளர்த்தார்.
கதையின் முக்கிய பாத்திரம். அவளால் தான் ராவண வதமே நடை பெற்றது.
நல்ல கேள்விகள்தான்.
ReplyDeleteதாய் - உண்டு. மனைவி - உண்டு. கடவுள் - உண்டு.
மகள் - இல்லை. சகோதரி - இல்லை.
ஒரு பாசமான மகளாகவோ, சகோதரியாகவோ எந்தப் பெரிய பாத்திரமும் வடிக்கப்படவில்லை.
ஏனோ தெரியவில்லை.