திருவாசகம் - உயிருண்ணிப் பத்து - வினை கேடா
இறைவன் உயிரை எடுத்து உண்டு விடுவானாம். உயிர் + உண்ணி (உண்ணுதல், சாப்பிடுதல்). அதாவது, உயிர்களை தனக்குள் அடக்கிக் கொள்வான் என்று பொருள்.
இறைவனை எங்கே தேடுவது? கோவில், குளம், மலை, குகை, என்று எங்காவது இருப்பானா? அல்லது வானத்தில், ஏதோ ஒரு கோளில், நட்சத்திரத்தில், இருப்பானா? எங்கே போய் தேடுவது?
மணிவாசகர் சொல்கிறார், "எங்கேயும் போய்த் தேட வேண்டாம். அவன் நமக்குள்ளேயே எப்போதும் பிரியாமல் இருக்கிறான்" என்கிறார். நாம் செய்யும் வினகைளை தடுத்து, மறு பிறவி வாராமல் காப்பவன் அவன்.
"நீ எனக்குள்ளே இருக்கிறாய். நான் உன்னை எவ்வாறு காண்பேன், உன்னைப் பார்த்தேன் என்று எப்படி மற்றவர்களிடம் சொல்லி பெருமிதம் கொள்வேன்" என்கிறார்.
பாடல்
பைந்நாப்பட அரவேரல்குல் உமைபாக மதாய்என்
மெய்ந்நாள்தொறும் பிரியாவினைக் கேடாவிடைப பாகா
செந்நாவலர் பரசும்புகழ்த் திருப்பெருந்துறை உறைவாய்
எந்நாட்களித் தெந்நாள்இறு மாக்கேன்இனி யானே.
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_3.html
(Please click the above link to continue reading)
பைந்நாப் = பசிய நாவினை உடைய
பட = படத்தைக் (பாம்பின் படம்) கொண்ட
அர = அரவு, பாம்பு,
ஏர் அல்குல் = அழகிய அல்குல் உடைய
உமைபாகம் அதாய் = உமை அம்மையை பாகமாக உடையவனே
என் மெய்ந் = என் உடலில்
நாள்தொறும் = எப்போதும்
பிரியா = பிரியாமல் இருப்பவனே
வினைக் கேடா = வினைகளை அறுப்பவனே
விடைப பாகா = எருதை வாகனமாகக் கொண்டவனே
செந்நாவலர் = சிறந்த புலவர்
பரசும் =போற்றும்
புகழ்த் = புகழ் கொண்ட
திருப்பெருந்துறை = திருப்பெருந்துறை என்ற திருத் தலத்தில்
உறைவாய் = எழுந்து அருளி இருப்பவனே
எந்நாட்களித்து = உன்னை கண்டு களித்து
எந்நாள் = எப்போது
இறு மாக்கேன் = பெருமிதம் கொள்வேன்
இனி யானே. =இனிமேல் நானே
நீயோ என்னுள் இருக்கிறாய். உன்னை வெளியில் கண்டதாய் சொல்லி நான் எப்படி பெருமிதம் கொள்வேன்.
"நீர் பெரிய பக்திமான் என்கிறீரே, நீர் கடவுளை கண்டதுண்டா? " என்று கேட்டால் நான் என்ன சொல்லுவேன். "ஆமாம், நான் பார்த்து இருக்கிறேன்" என்று இறுமாப்போடு சொல்ல முடியாதே.
கோவிலுக்குப் போவதும், புனித நீராடுவதும் தவறல்ல. இறைவனை தனக்குள்ளே அறிய அவை படிகள். படிகளை ஏற பயன்படுத்த வேண்டுமே அல்லாமல், படியே முடிவு என்று ஆகி விடக் கூடாது.
சாகும் வரை, கோவில் குளம் என்று அலைந்து கொண்டு இருந்தால் என்ன செய்வது?
நான்காம் வகுப்பு நன்றாக இருக்கிறது என்று ஆயுள் பூராவும் நான்காம் வகுப்பே படித்துக் கொண்டு இருக்க முடியுமா?
படிப்பவை நம்மை உயர் நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
கடவுள் தனக்குள்ளே இருப்பது, ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் இருப்பது இவை எல்லாம் எனக்குப் பழக்கம் இல்லாத எண்ணங்கள். ஆனாலும் சுவையான பாடல். தந்ததற்கு நன்றி
ReplyDelete