நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருமொழி - நாத் தழும்பு ஏறி
தொடர்ந்து ஒரு வேலையை செய்து கொண்டு இருந்தால், செய்யும் உறுப்பு காய்த்துப் போகும்.
சிலருக்கு பேனா பிடித்து எழுதி எழுதி விரல் காய்த்துப் போகும்.
சிலருக்கு வண்டியில் ஸ்டீரிங் வீலை பிடித்து பிடித்து கை காய்த்துப் போகும்.
குலசேகர ஆழ்வார் சொல்கிறார், கடவுள் நாமத்தைப் நாக்கு தழும்பு ஏற பாடி, கை கொண்டு மலர் தூவும் நாள் எந்நாளோ என்று உருகுகிறார்.
நாக்கில் தழுப்பு ஏறுவது என்றால் எவ்வளவு தரம் ஒரே நாமத்தை திருப்பி திருப்பி சொல்ல வேண்டி இருக்கும்.
அது பக்தி.
ஏதோ அவசரத்தில், வாயில் முணு முணு என்று சொல்லிவிட்டுப் போவதா பக்தி.
இதெல்லாம் பக்தியின் வேறு தளம். இப்படி நினைக்கக் கூட நம்மால் முடியாது.
பாடல்
மாவினைவாய் பிளந்துகந்த மாலை வேலை வண்ணணைஎன் கண்ணணைவன் குன்ற மேந்தி
ஆவினையன் றுயக்கொண்ட ஆய ரேற்றை அமரர்கள்தந் தலைவனைஅந் தமிழி னின்பப்
பாவினைஅவ் வடமொழியைப் பற்றற் றார்கள் பயிலரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்
கோவினைநா வுறவழுத்தி என்றன் கைகள் கொய்ம்மலர்தூய் என்றுகொலோ கூப்பும் நாளே
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_16.html
(Please click the above link to continue reading)
மாவினைவாய் = குதிரை வடிவில் வந்த ஒரு அரக்கனின் வாயை
பிளந்துகந்த = பிளந்து + உகந்த = பிளந்து மகிழ்ந்த
மாலை = திருமாலை
வேலை வண்ணணை = வேலை என்றால் கடல். கடல் வண்ணனை
என் கண்ணணை = என் கண்ணனை
வன் = பெரிய, கடினமான
குன்ற மேந்தி = மலையை கையில் ஏந்தி
ஆவினை = பசுக் கூட்டங்களை
யன் றுயக்கொண்ட = அன்று உய்யக் கொண்ட = அன்று காப்பாற்றிய
ஆய ரேற்றை = ஆயர்களின் தலைவனை
அமரர்கள்தந் = தேவர்களின்
தலைவனை = தலைவனை
அந் தமிழி னின்பப் = அந்த தமிழ் இன்பப்
பாவினை = பாடலை
அவ் வடமொழியைப் = அந்த வட மொழியை
பற்றற் றார்கள் = பற்று இல்லாதவர்கள்
பயிலரங்கத் தரவணையில் = இருக்கும், திருவரகத்தில் பாம்பணையில்
பள்ளி கொள்ளும் = பள்ளி கொள்ளும்
கோவினை = தலைவனை
நா வுறவழுத்தி = நாக்கு தழும்பு ஏற பாடி
என்றன் = என்னுடைய
கைகள் = கைகள்
கொய்ம்மலர்தூய் = கொய்த மலரை தூவி
என்றுகொலோ = எப்போதோ
கூப்பும் நாளே = கூப்பும் நாள் ?
இறை அனுபவம் எப்படி இருக்கும் என்று கேட்டால், ஒரு இனிமையான தமிழ் பாடலை கேட்டால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும் என்கிறார்.
தமிழின் இனிமை, வட மொழியின் இனிமை எப்படி இருக்குமோ அப்படி இருக்கும் என்கிறார்.
பாட்டின் இனிமை என்பது உணர்வு சார்ந்தது. அது இன்னது என்று சுட்டிக் காட்ட முடியாது.
இசையின் இன்பத்தைப் போல.
சிலருக்கு இசையை கேட்கும் காது வாய்த்து இருக்கும். அவர்களுக்கு இசையின் இன்பம் புரியும். இசை தெரியாதவர்களுக்கு சொன்னாலும் புரியாது.
பல பாட்டுப் போட்டியில் நடுவர்கள் "..அங்கங்கே கொஞ்சம் சுருதி விலகி இருந்தது" என்று சொல்லுவார்கள். நமக்கு எங்கே சுருதி விலகியது என்றே தெரியாது. எல்லாம் சரியாக இருப்பது போலவே தெரியும். (பெரும்பாலானவர்களுக்கு). அந்த சுருதியை அறியும் செவி வாய்க்கவில்லை.
அது போல, பக்தி இன்பம் என்கிறார்.
எல்லோருக்கும் அது வாய்ப்பதில்லை.
"வடமொழியைப் பற்றற்றார்கள்" என்றால், வடமொழியை விரும்பாதவர் என்றல்லவோ பொருள்?
ReplyDelete