Saturday, April 20, 2013

திருவாசகம் - நெஞ்சம் உருகாதால்


திருவாசகம் - நெஞ்சம் உருகாதால் 


ஒரு புரியாத பொருளை, அறியாத பொருளை புரியவைக்க ஒரு தெரிந்த பொருளை, அறிந்த பொருளை சுட்டிக்காட்டி அது இது போல இருக்கும் என்று சொல்லி விளங்க வைக்கலாம்.

அம்மாவும், சகோதரியும் போய் பெண் பார்த்துவிட்டு வருவார்கள்...பையன் கேட்பான்..."அம்மா, பொண்ணு எப்படி இருக்கானு"

அம்மா: நல்லாத்தான் இருக்கா ?

அவன்: நல்லா இருக்கானா எப்படி இருக்கா ? கருப்பா சிவப்பா ? என்ன நிறம் ?

அம்மா: ம்ம்ம்ம்...வந்து...கறுப்பு நு சொல்ல முடியாது, அதுக்காக சிவப்பும் இல்ல...ஒரு புது நிறம்டா ...

அவன்: உயரமா ? குள்ளமா ?

அம்மா: ரொம்ப உயரமும் இல்ல, குள்ளமும் இல்ல...

அவன்: என்னமா...இப்படி போட்டு படுத்துற....யாரு மாதிரி இருப்பான்னு சொல்லு ?


அம்மா: என்னத்த சொல்றது...நம்ம அக்கம் பக்கத்துல யாரு மாதிரியும் இல்ல....அடுத்த வாரம் நீ தான் பாக்க போறியே...அப்ப பாத்துக்கோ ....

என்று சொல்லிவிட்டு போய் விடுவாள்....

இந்த பொண்ணுக்கே இந்த பாடு என்றால்....இறைவனை எதை காட்டி அவன் இப்படி இருப்பான் என்று சொல்லுவது ?

இப்படி எதை காட்டியும் சுட்ட முடியாமல் இருப்பதைத் தான் "சுட்டறுத்தல்" என்று சொல்லுவார்கள்.

இறைவன் நீங்கள் அறிந்த எது மாதிரியும் இருக்க மாட்டான்....அவனுக்கு உதாரணம் சொல்ல முடியாது...

சுட்டறுத்தல் என்பதன் கீழ் மாணிக்க வாசகர் அருளிய ஒரு பாடல்

பாடல்

வெள்ளந்தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர்
பெருமானே யெனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப்
பள்ளந்தாழ் உறுபுனலிற் கீழ்மேல் ஆகப்
பதைத்துருகும் அவர்நிற்க என்னை ஆண்டாய்க்
குள்ளந்தாள் நின்றுச்சி யளவும் நெஞ்சாய்
உருகாதால் உடம்பெல்லாம் கண்ணாய் அண்ணா
வெள்ளந்தான் பாயாதால் நெஞ்சங் கல்லாம்
கண்ணிணையும் மரமாந்தீ வினையி னேற்கே.


பொருள்






வெள்ளந்தாழ் விரிசடையாய் = வெள்ளம் தாழ (வரும்) விரிந்த சடையை உடையவனே. தலையில் கங்கை என்பதால், வெள்ளம் வடியும் சடை.


விடையாய் = விடை என்றால் எருது. எருதை வாகனமாய் கொண்டவனே

விண்ணோர் பெருமானே = விண்ணவர்களுக்கு பெருமானே , தேவர்களின் தலைவனே

யெனக்கேட்டு = என்று கேட்டு

வேட்ட  நெஞ்சாய்ப் = வேட்கை கொண்ட நெஞ்சாய்

பள்ளந்தாழ் உறுபுனலிற் = பள்ளம் நோக்கி பாய்ந்து செல்லும் வெள்ளம் போல

 கீழ்மேல் ஆகப் = அடியோடு கீழே விழுந்து

பதைத்துருகும் = உள்ளம் பதைத்து உருகும்

அவர்நிற்க = அவர்கள் எல்லாம் நிற்க. இங்கு சற்று மெதுவாகப் போவோம்.  மாணிக்க வாசகர் யோசிக்கிறார்...நான் என்ன செய்துவிட்டேன்...எனக்கு எப்படி அவன் அருள் செய்கிறான்...எவ்வளவோ பக்த்தர்கள் இங்கே இருக்கிறார்கள்...நான் எந்த விதத்தில் அவர்களை விட சிறந்தவன்....எனக்கு போய் அருள் செய்கிறானே என்று உருகுகிறார்... அவரது தன்னடக்கம்...பணிவு மெய் சிலிர்க்க வைக்கும்...



என்னை ஆண்டாய்க் = என்னை ஆட் கொண்டாய்

குள்ளந்தாள் = உள்ளம் + தாள் = பாதம் முதல் மனம் வரை

நின்றுச்சி யளவும் = நின்று உச்சி அளவும்

நெஞ்சாய் உருகாதால் =நெஞ்சம் எல்லாம் உருகாமல்

உடம்பெல்லாம் கண்ணாய் = உடம்பு எல்லாம் கண்ணாக

அண்ணா = அண்ணா

வெள்ளந்தான் பாயாதால் = அப்படி உடல் எல்லாம் கண்ணாக மாறி வெள்ளமாய் கண்ணீர் பாயாததால்

நெஞ்சங் கல்லாம் = என் நெஞ்சு கல்லாக இருக்க வேண்டும். நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்து உருக என்பார் அருணகிரிநாதர்

கண்ணிணையும் மரமாந் = என் மனம் மரக் கட்டையாக இருக்க வேண்டும்

தீ வினையி னேற்கே = எல்லாம் என் தீவினை தான்


எவ்வளவோ பேர் எவ்வளவோ பக்தி செய்கிறார்கள்...அவர்களுக்கு எல்லாம் கிடைக்காத அருள் எனக்கு மட்டும் எப்படி கிடைத்தது என்று வியக்கிறார்...

பக்தி மட்டும் இருந்தால் போதாது...அவன் அருளும் வேண்டும்...அவன் அருளாலே  அவன் தாள் வணங்கி என்பதும் அவர் வாக்குதான்....

இவ்வளவு இறைவன் செய்தும், அதை நினைத்து நன்றி இல்லை, கண்ணில் நீர் இல்லை....என்ன கல் மனமோ என்கிறார் மாணிக்க வாசகர்....

படிக்கும் உங்களுக்கு உருகுகிறதா ?

3 comments:

  1. இந்த பாடலுக்கு உள்ளம் உருகாமல் இருக்குமா? எப்பேர்ப்பட்ட பணிவுடன் கூடிய பக்தி.
    நன்றி நல்ல பாடல் தந்ததுக்கு.

    ReplyDelete
  2. என்ன ஒரு உருக்கமான பாடல்!

    ஆனால், இதை ஏன் சுட்டறுத்தல் என்று வகைப்படுத்தினாய் என்று புரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. வகைப் படுத்தியது நான் அல்ல , மாணிக்க வாசகர்

      Delete